1902 நவம்பர் 14-ஆம் தேதி. கல்கத்தாவில் உள்ள ஒரு பெரிய ஓட்டலில் இரண்டு அடுத்தடுத்த அறைகளில் ஒரு ரெடிமேட் ரெக்கார்டிங் ஸ்டுடியோ அமைக்கப்பட்டது. இந்தியாவின் முதல் ரெக்கார்டிங் அன்றுதான் நடக்கப் போகிறது. அதுவரை எந்தப் பாடலும் ஒலிப்பதிவு செய்யப்பட்டதில்லை. சினிமாப் பாட்டு அல்ல. அந்தக் காலத்து சாஸ்த்ரீய சங்கீதம். தென்னிந்தியாவின் கர்னாடக சங்கீதம் மாதிரி வடக்கில் ஹிந்துஸ்தானி. அதில் அப்போது உலகப் புகழ் பெற்று விளங்கியவர் கௌஹர் ஜான். இந்தியாவில் வேலை செய்த வில்லியம் என்ற ஆர்மீனிய யூதருக்கும் விக்டோரியா என்ற ஆங்கிலோ இந்தியப் பெண்ணுக்கும் 1873-இல் பிறந்தவர் கௌஹர்.
விக்டோரியா கதக் நடனத்திலும் இசையிலும் வல்லவர். இது வில்லியமுக்குப் பிடிக்காததால் விவாகரத்து ஆனது. ஆனால் விக்டோரியாவின் கலைத் திறமையைப் பெரிதும் பாராட்டி ரசித்த குர்ஷீத் என்பவர் அவரைத் தன் ஊரான காசிக்கு அழைத்து வந்தார். காசியில் விக்டோரியா மல்கா ஜானாக மதம் மாறி தன் மகளுக்கும் கௌஹர் ஜான் என்று பெயரிட்டார். அந்தச் சமயத்தில் வட இந்தியாவில் மூன்று பிரபலமான மல்கா ஜான்கள் இருந்தார்கள். அதில் இவர்தான் மூத்தவர் என்பதால் படி மல்கா ஜான் என்று அழைக்கப்பட்டார். படா – பெரியவர். பெண்பாலுக்கு படி. கதக் நர்த்தகி மட்டும் அல்ல. பிரபலமான தாசியும் கூட. பிறகு இவர் கல்கத்தா சென்று அங்கே மன்னராக இருந்த நவாப் வஜீத் அலி ஷாவின் அரசவை நர்த்தகி ஆனார்.
தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறு அடி என்பார்கள் இல்லையா? கௌஹர் ஜான் பல நூறு அடிகள் பாய்ந்தார். கௌஹரின் காலத்தில் அவர்தான் கதக்கிலும் டும்ரியிலும் (டும்ரி என்பது ஹிந்துஸ்தானி இசையின் பிரபலமான வடிவம்) முடிசூடா அரசியாக விளங்கினார். 20 மொழிகளில் பாடக் கூடியவர் கௌஹர். உர்தூவில் பாடல்களை இயற்றியே பாடினார். கௌஹரின் தாய் படி மல்கா ஜானும் உர்து கவிஞர்தான். அவர் இயற்றிய டும்ரி பாடல்கள் 600. இன்றைக்கும் வட இந்தியாவில் டும்ரி பாடுபவர்கள் பலருக்கு தாங்கள் பாடும் பாடலை எழுதியது படி மல்கா ஜான் என்றோ கௌஹர் ஜான் என்றோ தெரியாது.
இந்தியாவின் நம்பர் ஒன் கதக் நர்த்தகியாகவும், நம்பர் ஒன் டும்ரி பாடகியாகவும் விளங்கிய கௌஹர் ஜான் ஒரு நிகழ்ச்சிக்கு அப்போது வாங்கிய கட்டணம் 1000 ரூ. (1890-இல் இந்தப் பணத்துக்கு என்ன மதிப்பு என்று யோசித்துப் பாருங்கள். 1950-இலேயே ஒரு சவரன் தங்கத்தின் விலை 100 ரூ. அப்படியானால் 1900-இல் 10 ரூ. இருந்திருக்கலாம். தன் வீட்டுப் பூனையின் திருமண விருந்துக்கு அவர் செய்த செலவு 1200 ரூ. அது குட்டி போட்டதும் கல்கத்தா நகரம் பூராவுக்கும் அவர் கொடுத்த விருந்துக்கு செய்த செலவு 20,000 ரூ. இதெல்லாம் அந்நாளைய தினசரிகளில் தலைப்புச் செய்திகள்!)
ஆங்கிலோ இந்தியர் என்பதால் ஆங்கிலமும் அத்துப்படி. தன் கச்சேரிகளில் ஆங்கிலேய பிரபுக்கள் இருந்தால் ஆங்கிலத்திலும் பாடி அசத்துவார். கௌஹர் எந்த அளவுக்குப் பிரபலம் என்பதற்குப் பல சம்பவங்களைச் சொல்லலாம். 1898-இல் இங்கிலாந்தில் கிராமஃபோன் கம்பெனி தொடங்கப்பட்டது. இங்கிலாந்தின் காலனியான இந்தியாவிலும் கம்பெனியை விஸ்தரிக்க எண்ணி கல்கத்தா வந்தார் கைஸ்பர்க். (1911 வரை கல்கத்தாதான் இந்தியாவின் தலைநகராக இருந்தது.) தன் கிராமஃபோன் கம்பெனிக்கு பிரபலமான பாடகர்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கும்படி கைஸ்பர்க் சில உள்ளூர் ஆட்களைக் கேட்டார்.
கிராமஃபோன் கம்பெனிக்கு இரண்டு விதமான சவால்கள் இருந்தன. ஒன்று, அந்தக் காலத்து சங்கீதக் கலைஞர்கள் இது போன்ற ரெக்கார்டுகளை எதிர்த்தார்கள். ’என்னுடைய குரலை போயும் போயும் ஒரு மெஷின் காப்பி பண்ணி திரும்பப் பாடுவதா, சீ’ என்று ஒதுக்கினார்கள். அதில் நியாயமும் இருந்தது. ஆலாபனையே ஒரு மணி நேரத்துக்குப் பண்ணக் கூடியவர்களை மூன்று நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் பாட வேண்டும் என்று சொன்னால் நடக்குமா? மேலும், ரெக்கார்டிங் சமயத்தில் அந்த மகா பெரிய ஒலிவாங்கி ஸ்பீக்கரின் முன்னே (பார்க்கவும்: படம்) தொண்டையைக் கிழித்துக் கொண்டு பாட வேண்டும். தலை கொஞ்சம் அசைந்தாலும் ஒலிப்பதிவு ஒழுங்காக இருக்காது. இதனாலேயே ஒருத்தர் பாடுபவரின் தலையை இரண்டு பக்கத்திலும் ஆடாமல் அசையாமல் பிடித்துக் கொண்டு நிற்பார். இரண்டாவது சவால், ஜெர்மன், ஃப்ரெஞ்ச் கம்பெனிகளும் கிராமஃபோன் வியாபாரத்தில் இந்திய மார்க்கெட்டை நோக்கிப் படையெடுத்தன.
ரெக்கார்டுக்காகப் பாட வந்தவர்கள் மீது கைஸ்பர்குக்குத் திருப்தி இல்லை. அதனால் கல்கத்தாவில் இருந்த சில ஜமீந்தார்களிடம் சொல்லி வைத்தார். ஜமீந்தார்களின் மாளிகைகளில்தான் இது போன்ற நாட்டிய, இசை நிகழ்ச்சிகள் நடக்கும். நீங்கள் வரலாற்று சினிமாக்களில் பார்த்திருக்கலாம். அப்படி ஒருநாள் கைஸ்பர்க் பார்த்ததுதான் கௌஹர் ஜான் நிகழ்ச்சி. பாட்டும் நடனமும் நன்றாக இருந்தாலும் மொழி புரியாததால் கொஞ்ச நேரம் ஆனதும் மாடியின் பால்கனியில் வந்து நின்றார் கைஸ்பர்க். பார்த்தால் தெரு முழுவதும் மனிதத் தலைகள். மரக்கிளைகள், விளக்குக் கம்பங்கள் மீதெல்லாம் அபாயகரமாக ஏறி நின்றபடி மனிதர்கள். ஜமீன் மாளிகையில் வெள்ளைக்காரர்களுக்குமட்டுமே அனுமதி. லோக்கல் ஆட்கள் உள்ளே போய் பார்க்க முடியாது. அப்போதே முடிவு செய்து விட்டார் கைஸ்பர்க். இந்தப் பெண்தான் இந்தியாவின் முதல் கிராமஃபோன் ரெகார்டில் பாடப் போகிறார். அதற்கு கௌஹர் வாங்கிய காசு 3000 ரூ. இப்படி 600 ரெகார்டுகள் போட்டார் கௌஹர்.
1940க்குப் பிறகுதான் மகாத்மாவின் புகழ் சிறிது மங்கத் தொடங்கியது. இரண்டாம் உலக யுத்தமும் தொடங்கி விட்டது. நாம் இங்கிலாந்தின் எதிரியான ஹிட்லரோடு சேர்ந்து கொள்ளலாம் என்கிறார் நேதாஜி. அதெல்லாம் கூடவே கூடாது என்கிறார் காந்தி. 1930இலேயே கிடைத்திருக்க வேண்டிய சுதந்திரமும் கை நழுவிப் போய் விட்டது. இந்து முஸ்லீம் கலவரம் வேறு நாட்டை உலுக்கிக் கொண்டிருந்தது. காந்தியினாலேயே சமாளிக்க முடியவில்லை. தன்னுடைய அகிம்சை வழிக்கு மக்கள் தயாராக இல்லையோ, நாம்தான் சரியாகக் கற்பிக்கவில்லையோ என்றெல்லாம் அவருக்குள் கவலை. அடிக்கடி உண்ணாவிரதம் இருக்கிறார்.
ஆனால் ஆரம்ப காலத்தில் காந்தி ஒரு தீர்க்கதரிசியைப் போல், அவதாரத்தைப் போல் கருதப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் ஒரு ஆச்சரியம் நடந்தது. சுதந்திரப் போராட்டத்துக்கு எக்கச்சக்கமாக பணம் தேவைப்பட்டது. கௌஹர் ஜான் இந்தியா முழுவதும் அறியப்பட்ட ஒரு சூப்பர் ஸ்டார். காந்தி கௌஹருக்கு ஒரு செய்தி அனுப்பினார். நீங்கள் எங்கள் போராட்டத்துக்காக ஒரு நிகழ்ச்சி நடத்தி நிதி வசூல் செய்து கொடுக்க வேண்டும். அந்தக் காலத்தில் இப்படி ஒரு செய்தி கிடைத்தால் அதை கடவுளின் கடிதமாகவே நினைப்பார்கள். ஆனால் கௌஹரோ காந்திக்கு பதில் செய்தி அனுப்பினார். ”உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. என் நிகழ்ச்சிக்கு நீங்கள் வர வேண்டும்.” காந்தியும் ஒப்புக் கொண்டார். 24000 ரூபாய்க்கு டிக்கட்டுகள் விற்றதாக தினசரிகளில் செய்தி! நிகழ்ச்சி நடைபெறும் நாளும் வந்தது. நிகழ்ச்சி ஆரம்பிக்கும் வரை கௌஹர் அரங்கத்தின் வாசலிலேயே நின்று காந்தியை எதிர்பார்த்தார். ஆனால் வந்தது அப்துல் கலாம் ஆசாத். காந்தி ஏதோ ஒரு அவசரமான வேலையாகச் செல்ல வேண்டி இருந்ததால் தனக்குப் பதிலாக ஆசாதை அனுப்பியிருந்தார். கௌஹருக்குக் கடும் ஏமாற்றம். மறுநாள் நன்கொடையை வாங்குவதற்காக ஆஸாத் மீண்டும் வந்தார். 12000 ரூபாயை எடுத்துக் கொடுத்தார் கௌஹர். ஆஸாதுக்கு ஒரே அதிர்ச்சி. கௌஹர் சொன்னார், “காந்தி ஒரு சத்தியவான். ஆனால் அப்படிப்பட்ட சத்தியவானே தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை. தாசிதானே என்ற நினைப்பு இல்லையா? மகாத்மாவின் கையில் 24000 ரூபாயையும் கொடுக்கலாம் என்று இருந்தேன். ஆனால் அவர் வாக்கு தவறி விட்டதால் வசூலில் பாதியையே தருகிறேன்.”
கல்கத்தாவில் ஒருமுறை ஊரடங்கு உத்தரவு மாலை ஆறு மணியிலிருந்து காலை வரை போடப்பட்டிருந்தது. ஆனால் கௌஹர் அதற்கெல்லாம் பயப்படுகிற ஆள் இல்லை. காரை எடுத்துக் கொண்டு கிளம்பினார். அப்போது கார் வைத்திருந்த ஒரே சங்கீதக் கலைஞர் கௌஹர்தான்; அதுவும் ஒரு கார் அல்ல, பல கார்கள்! பிரிட்டிஷ் போலீஸ்காரன் ஒருவன் தூரத்தில் பார்த்து விட்டு யாரோ ஆங்கிலேயே மாது என்று நினைத்து சல்யூட் அடித்தவன், கார் கிட்டத்தில் வந்ததும் கௌஹரின் இந்திய உடையைப் பார்த்து, காரை நிறுத்தி 500 ரூ. அபராதம் என்று சொல்லியிருக்கிறான். உடனே அவனை அருகில் அழைத்து அவன் கன்னத்தில் லேசாகத் தட்டி, அவன் பேசிய அதே ஆங்கில உச்சரிப்பில், ”நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய், உன் அழகுக்காக 1000 ரூபாயே டிப்ஸ் கொடுக்கலாம்” என்று சொல்லி பர்ஸிலிருந்து 500 ரூபாயை எடுத்துக் கொடுத்து விட்டுச் சென்றாராம்.
கார்கள் மட்டும் அல்லாமல் பல சாரட் வண்டிகளும் வைத்திருந்தார் கௌஹர். அதில் ஒன்று ஆறு வெண்ணிற அரபிக் குதிரைகளைப் பூட்டக் கூடியது. அதில் ஒரு மகாராணியைப் போல் ஆடை அணிந்தபடி கல்கத்தா வீதிகளில் வலம் வருவது கௌஹரின் பொழுதுபோக்கு. ஒருநாள் அப்படி அவர் வலம் வரும்போது கல்கத்தா கவர்னரின் கார் வர, அவர் இந்த சாரட் வண்டி பிரிட்டிஷ் அரச குடும்பத்தினருடையது என்று நினைத்து தன் தொப்பியைக் கழற்றி கௌஹரை வணங்கினார். பிறகு கௌஹர் ஒரு பிரபல தாசி என்பதை அறிந்து அவர் இங்கிலாந்து அரசரின் சாரட்டைப் போல் தோற்றமளிக்கும் சாரட்டில் சவாரி செய்து போக்குவரத்துக்கு இடையூறு செய்தார் என்று 1000 ரூ. அபராதம் விதித்தார் கவர்னர். அபராதத்தைக் கட்டினாலும் கௌஹர் தினமும் அந்த நகர்வலம் வருவதை நிறுத்தியதில்லை. அதற்காகப் பலமுறை 1000 ரூ. அபராதமும் கட்டினார்.
இந்தியாவில் மட்டும் அல்ல, கௌஹரின் புகழ் உலகம் முழுதும் பரவியிருந்தது. ஆஸ்திரியா இசைக்குப் புகழ் பெற்றது. மாபெரும் சங்கீத மேதைகள் பிறந்த வாழ்ந்த நாடு. அங்கே ஒரு தீப்பெட்டி தயாரிக்கும் நிறுவனம் தன் தீப்பெட்டிகளில் கௌஹரின் படத்தைப் போட்டது.
சரி, இந்தப் பழைய கதையை எல்லாம் நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றலாம். கௌஹரின் கதையே இனிமேல்தான் இருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியில் நீதிமன்றம் என்பது மிகக் கெடுபிடியான இடமாக இருந்தது. தியாகராஜ பாகவதரின் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு ஞாபகம் இருக்கிறதா? செய்யாத குற்றத்துக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு லண்டனில் இருந்த உச்ச நீதிமன்றம் வரை கேஸ் நடத்தியதில் பாகவதரின் சொத்தே அழிந்தது. சிறைத் தண்டனையில் அவர் உடல்நலமும் கெட்டது. லண்டன் நீதிமன்றத்தில் நீதி கிடைத்து சிறையிலிருந்து வெளியே வந்து பார்த்தால் படமும் ஓடவில்லை. வற்றிய குளத்தின் பறவைகள் போல் எல்லோரும் ஓடி விட்டனர். சர்க்கரை வியாதியால் கண் பார்வையும் போயிற்று. ஒருநாள் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அமர்ந்து “என்ன தாயே, இப்படி ஆகி விட்டதே?” என்று வாய் விட்டுப் புலம்பிக் கொண்டிருந்திருக்கிறார். யாரோ ஒரு கண் பார்வையற்ற பிச்சைக்காரன் என்று எண்ணி யாரோ ஒரு தர்மவான் ஒரு நாணயத்தை எறிய அது ’நங்’கென்று தரையில் விழுந்ததைக் கேட்டார் பாகவதர்.
அந்த நங் என்ற சப்தம் என் காதில் எப்போதுமே கேட்டுக் கொண்டிருப்பதால்தான் ஏற்றமோ தாழ்வோ எதுவுமே என்னை பாதிக்காமல் இருக்கப் பழகிக் கொண்டிருக்கிறேன். அது போகட்டும். ஒரு கட்டத்தில் கௌஹரும் கையில் ஒரு பைசா இல்லாமல் சொத்தையெல்லாம் இழந்து அனாதையாகத் தெருவுக்கு வந்தார்.
***
சுதந்திரத்துக்கு முன்பாக தேவதாசி முறை வழக்கத்தில் இருந்ததை நாம் அறிவோம். இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக மரபில் இருந்த ஒரு விஷயம் இது. இதுபற்றி சங்க இலக்கியத்திலெல்லாம் பரவலாக வருகிறது. பெண்களைப் போகப் பொருளாக மதித்த ஒரு சமுதாயத்தில் இப்படி ஒரு வழக்கம் இருந்ததில் ஆச்சரியம் இல்லை. சுதந்திரத்துக்குப் பிறகு தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது. ஆனால் 1900-இலேயே தேவதாசி முறையை எதிர்த்து பலரும் வைஸ்ராயிடம் வேண்டுகோள் வைத்தனர். அதுபற்றி ஒரு பத்திரிகையாளர் கௌஹர் ஜானைக் கேட்டார். கௌஹர் ஜான் ஒரு தாசி என்று ஏற்கெனவே படித்தோம். அப்போது அந்தப் பத்திரிகையாளரிடம் கௌஹர் கேட்டார், “வைஸ்ராயின் ஒரு மாத ஊதியம் என்னுடைய ஒருநாள் ஊதியத்தை விட கம்மி. அப்படியிருக்கும்போது வைஸ்ராய் எப்படி என்னைத் தடை செய்ய முடியும்?” ஏனென்றால், ஒரு ரெக்கார்டுக்கு 3000 ரூ. வாங்கியவர் கௌஹர். ஒரு நாளில் மூன்று ரெக்கார்டுக்குப் பாடினால் 9000 ரூ. வைஸ்ராயின் மாத ஊதியம் அதை விடக் கம்மி!
ஒருமுறை பிரிட்டிஷ் அரசர் இந்தியாவுக்கு வந்திருந்தார். அவருக்குக் கொடுக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பாட கெளஹர் ஜானை ஏற்பாடு செய்திருந்தார்கள். மன்னரின் நிகழ்ச்சியில் ஒரு தாசி பாடுவதா என்று அதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் வைஸ்ராய் சம்மதித்ததால் கௌஹர் அந்த நிகழ்ச்சியில் பாடினார். மன்னரும் மிகவும் ரசித்து கௌஹருக்கு ஒரு பதக்கத்தைப் பரிசளித்தார். பின்னர் பிரிட்டிஷ் மன்னர் கொடுத்த அந்தப் பதக்கத்தை அணிந்த படியேதான் கெளஹர் தன் வாழ்நாள் முழுவதும் கச்சேரி செய்தார்.
அளப்பரிய புகழும் பணமும் கெளஹரைத் தேடி வந்தாலும் அவர் வாழ்வில் ஒரு பெரிய குறை இருந்தது. தாய் மல்கா ஜானைத் தவிர நம்பிக்கைக்குரிய யாருமே அவர் அருகில் இல்லை, முக்கியமாக ஆண் துணை. கொடும் தனிமையை அனுபவித்துக் கொண்டிருந்தார். அப்போது பம்பாயில் இருந்த ஒரு நாடகாசிரியரோடு அவருக்குக் காதல் ஏற்பட்டது. Made for each other என்று சொல்வது போல் இருவரது ரசனையும் ஒத்துப் போய் மிகவும் அந்நியோன்னியமாக வாழ்ந்தனர். ஆனால் கெளஹரின் தாய் மல்கா ஜான் கல்கத்தாவில் அரண்மனை போன்ற ஒரு பெரிய வீட்டில் தனியாக இருந்தார். பேரும் புகழுமாக வாழ்ந்த மல்கா ஜானுக்குத் தனிமையை எப்படி விரட்டுவது என்று தெரியவில்லை. மது அருந்த ஆரம்பித்து விரைவிலேயே மதுவுக்கு அடிமையாகி இறந்தும் போனார். இறந்த செய்தி கேட்டு கல்கத்தா வந்த கௌஹருக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. அவருக்கு ஆடலையும் பாடலையும் தவிர வேறு எதுவுமே தெரியாது. எல்லாமே மல்கா ஜான்தான். இப்போது அவர் இல்லாமல் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் ஆனது. அந்த வீடு 1883-இல் 40,000 ரூபாய்க்கு மல்கா ஜான் வாங்கியது. கல்கத்தாவில் தனியாக இருந்து என்ன செய்வது? தன் காதலனோடு வாழ பம்பாய் வந்தார். என்ன துரதிர்ஷ்டம்! அந்தக் காதலனும் இளம் வயதிலேயே இறந்து போனான்.
புகழின் உச்சியில் இருந்த கௌஹரின் அப்போதைய (1900) சொத்து மதிப்பு ஒரு கோடி ரூபாய். ஆனால் கொடூரமான தனிமை. துரதிர்ஷ்டம் அதோடு போகவில்லை. தாய் மல்கா ஜான் ஒரு தத்துப் பிள்ளையை வளர்த்து வந்தார். அவன் எல்லா சொத்தும் எனக்குத்தான் சொந்தம் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தான். பிரிட்டிஷ் ஆட்சியின் நீதிமுறை பற்றிக் குறிப்பிட்டேன். அதிலும் சொத்துத் தகராறு. கௌஹர் ஜான் வேறு இந்தியாவின் சூப்பர் ஸ்டார். பாதி சொத்து வழக்கிலேயே போனது. இருந்தாலும் கௌஹரே வென்றார். அப்போது தனக்கு உதவியாளனாக இருந்த அப்பாஸ் என்பவனைத் திருமணம் செய்து கொண்டார். கெளஹரை விடப் பத்து வயது சிறியவன். உதவியாளனாக இருந்த போது அடிமையைப் போல் இருந்தவன் திருமணம் ஆனதும் ஆளே மாறினான். பணத்திலும் சொத்திலும் பல கையாடல்கள். அப்பாஸை நம்பி மோசம் போனார் கெளஹர். அதனால் அப்பாஸை விவாகரத்து செய்தார். அவனோ அதற்கு இழப்பீடாகப் பெரும் தொகை கேட்டான். அம்மாவின் தத்துப்பிள்ளையால் இழந்த பாதி சொத்து போக மீதி இருந்த சொத்து பூராவும் வழக்கிலும் இழப்பீட்டிலும் போனது.
படித்த போது முதலில் இது எல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 1900-இல் ஒரு கோடிக்கு அதிபதியாக இருந்த பெண் இருபது ஆண்டுகளில் கையில் ஒரு பைசா இல்லாமல், தங்குவதற்கு ஒரு வீடு இல்லாமல் நடுத்தெருவுக்கு வருவது எப்படி சாத்தியம்? எம்.கே.டி. பாகவதருக்கு நடந்தது போலவே நடந்தது. கோர்ட் கேஸ். அவசரத் தேவைக்காக 50 லட்சம் மதிப்புள்ள (1920) கல்கத்தா வீட்டை ஒரு லட்சத்துக்கு விற்க வேண்டி வரும். அந்த ஒரு லட்சமும் வக்கீல் கட்டணமாகக் கரைந்து விடும். ஒரே நொடியில் வீடு போச்சா? இப்படித்தான் ஒவ்வொன்றாகப் போய் நடுத்தெருவுக்கு வந்தார் கௌஹர்.
அது தவிர, சுற்றிலும் நம்பிக்கைத் துரோகிகள். போதாதற்கு அவர் மேல் உயிரையே வைத்திருந்த அம்மா, காதலன் இருவரின் மரணம். விதி சுழன்றது என்றால் அது சுனாமி மாதிரிதான். அல்லது, கொரோனா மாதிரி. ஒரு வருடத்துக்கு முன்னால் நம் வாழ்க்கை 2020-இல் இப்படி ஆகும் என்று நினைத்துப் பார்த்திருப்போமா?
நூறு ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவில் வாழ்ந்த ஒரு சூப்பர் ஸ்டார் பாடகியைப் பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன என்று முதலில் யோசித்தேன். அவசியம் இருக்கிறது. கௌஹரின் வாழ்வில் நடந்த இரண்டு சம்பவங்கள்.
ஒரு ஜமீந்தாரின் மாளிகையில் கௌஹரின் கச்சேரி நடக்கிறது. கச்சேரி முடிந்து பண முடிப்பு தரவில்லை. கௌஹருக்கு ஆச்சரியம். பணம் தராத ஜமீன் இல்லையே இவர்? ஜமீந்தார், “இந்த மேடையே உங்களுக்குத்தான்,” என்றார் புதிராக. மேடையில் வெறும் ஜமுக்காளம்தானே இருக்கிறது? குழப்பமாக ஜமீனைப் பார்க்கிறார் கௌஹர். பணியாளை அழைத்து ஜமுக்காளத்தை நீக்கச் சொல்கிறார் ஜமீந்தார். மேடை பூராவும் வெள்ளிக்காசுகள். ஒரு லட்சம் ரூபாய். நடந்தது 1910.
கௌஹருக்கு வாய் ஜாஸ்தி என்பதை இதற்குள் உணர்ந்திருப்போம். மகாத்மாவிடமே மல்லுக்கு நின்றவர். இவரைத் தன் சமஸ்தானத்துக்கு அழைத்திருந்தார் ஒரு மன்னர். பத்து நாள் இசை விழா. தினமும் கௌஹரின் கட்டணமான 3000 ரூபாயும் அவருக்கு அனுப்பப்பட்டு விடுகிறது. ஆனால் கச்சேரி செய்ய அழைப்பு இல்லை. மன்னரையும் தனியாகச் சந்திக்க முடியவில்லை. ஒருநாள் ஆண் வேடமிட்டு மன்னரைச் சந்திக்கிறார் கௌஹர். காரணம் கேட்கிறார். “உனக்குக் கட்டணம் அதிகம் வேண்டுமானால் சொல், தரச் செய்கிறேன்” என்கிறார் மன்னர். ”பணம் வேண்டாம், கச்சேரி செய்யவே இங்கே வந்தேன்” என்று கௌஹர் சொல்லவும், மன்னர் அவருக்கு ஒரு அறிவுரையை வழங்கினார். “பணம் இன்று வரும், போகும். அடக்கம் வேண்டும். இப்போது பார், பணம் கிடைத்தும் உன் கலைக்கு இடம் இல்லை என்றதும் துக்கம் ஏற்படுகிறது இல்லையா? இனிமேல் அடக்கமாக இரு” என்று சொல்லி கச்சேரிக்கு ஏற்பாடு செய்கிறார்.
எல்லா சொத்தும் பறி போய், இருக்கவும் இடமில்லாத நிலையில் இருந்த கௌஹரின் கச்சேரியை பம்பாயில் கேட்ட மைசூரின் இளவரசர் அவரைத் தங்கள் அரண்மனைப் பாடகியாக இருக்க விருப்பமா, என்று கேட்டார். மைசூர் அரண்மனையில் 500 ரூ. சம்பளத்துக்கு இரண்டு ஆண்டுகள் இருந்தார் கௌஹர். ஒரு நிகழ்ச்சிக்கு 3000 வாங்கியவர்! அந்த இரண்டு ஆண்டுகளும் அவர் அனுபவித்தது நரகம். பம்பாயிலிருந்து அப்பாஸ் மாறி மாறி கேஸ் போட்டு தினமும் கோர்ட் சம்மன். சமயங்களில் பிடி வாரண்ட். அப்பாஸின் நினைப்பு என்னவென்றால், கெளஹரிடம் இன்னமும் கோடிக்கணக்கில் சொத்து இருக்கிறது. அதையெல்லாம் அபகரிக்க வேண்டும் என்பதுதான்.
கெளஹர் மைசூரில் இருந்த போது ஒரு சம்பவம் நடந்தது. வைஸ்ராய் மைசூர் ராஜாவின் மாளிகைக்கு விருந்தினராக வந்த போது கௌஹரின் கச்சேரி நடந்தது. கச்சேரி முடிந்து வைஸ்ராய் கௌஹரிடம் வந்து பாராட்டிய போது அவரது சேலையில் அணிந்திருந்த பிரிட்டிஷ் அரசரின் பதக்கத்தைப் பார்த்து நம்ப முடியாமல் அதில் தன் கையை வைத்துத் தொட்டுப் பார்க்கிறார்.
வைஸ்ராய் போனதும் ராஜா பலர் முன்னிலையில் கௌஹரிடம், ”ஒரு வெள்ளைக்காரனின் கை உன் மார்பில் பட வேண்டும் என்ற உன் ஆசை நிறைவேறிவிட்டது, ம்ஹூம்,” என்று இழிவாகச் சொல்ல, அன்றோடு கௌஹரின் மரியாதை அரண்மனையில் போய் விட்டது. ஒரு மகாராணியைப் போல் வாழ்ந்த பெண்ணுக்கு எப்பேர்ப்பட்ட அவமானம் பாருங்கள்!
மைசூரிலேயே உடல், மனம் இரண்டும் பாதிக்கப்பட்டு அநாதையாகச் செத்தார் கௌஹர். 1930. அதற்குப் பிறகு நடந்தது அதை விட அவலம். அப்பாஸும் கௌஹரின் தந்தையும் மைசூர் ராஜாவுக்குக் கிட்டத்தட்ட நூறு பெட்டிஷன்களை அனுப்பினார்கள் கௌஹரின் சொத்துக்கு நாங்கள் தான் வாரிசு என்று! பிணம் தின்னிக் கழுகுகளின் ஞாபகம் வருகிறதா? இத்தனை கதையும் சாகித்ய அகாதமி பரிசு பெற்ற விக்ரம் சம்பத்தின் ‘மை நேம் இஸ் கௌஹர்’ என்ற புத்தகத்திலும் மற்றும் இணையதளத்திலும் உள்ளது.
ஒரே மீட்சியை கௌஹர் தனது தனிமையான வாழ்க்கையில் கண்டு கொண்டிருக்கலாம். அது, இலக்கியம். தாயைப் போலவே தானும் 600 டும்ரி பாடல்களை எழுதிய கௌஹர் ஒரு நல்ல உருது கவிஞர். ஆனால் அவர் இலக்கியத்தோடு தன்னைப் பிணைத்துக் கொள்ளவில்லை. பிணைத்துக் கொண்டிருந்தால் அவர் இந்த அளவு தனிமையை அனுபவித்திருக்க மாட்டார். ஏனென்றால், இலக்கியம் காட்டுவது ஞானத்தின் பாதையை. அந்த ஞானமே அவரது இருண்ட வாழ்வில் ஒளியாகத் திகழ்ந்திருக்கும். அது எப்படி? பிறகு எப்போதாவது சொல்கிறேன்….
இது செப்டம்பர் 2020 குமுதம் இதழில் வந்தது. நன்றி: குமுதம் (சொல் தீண்டிப் பழகு)