மதிப்பீடுகளின் வீழ்ச்சி: கமல்ஹாசனுடன் ஒரு பேட்டி

கமல்ஹாசனும் ஜெயமோகனும் ஹிந்து பத்திரிகைக்காக உரையாடிய ஒளிப்பதிவைப் பார்த்தேன்.  In conversation with actor Kamal Haasan and writer Jeyamohan என்பதுதான் அந்த உரையாடலின் தலைப்பு.  முதலில் இந்தத் தலைப்பே அருவருப்பானது, எழுத்தாளனை அசிங்கப்படுத்துவது. 

ஏன்?

நடிகர்கள் என்ன இருந்தாலும் கேளிக்கையாளர்கள்தான் (entertainers).  ஆனால் எழுத்தாளர்கள் அப்படி அல்ல.  நிரூபணங்கள் நிறைய உண்டு.  தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.டி. பாகவதர்.  அவர் எப்படி வாழ்ந்தார் என்பது வரலாறு.  தங்கத் தட்டில் சாப்பிட்டவர்.  அவர் பாடலைக் கேட்பதற்காக உயிரை விட்டவர் பலர்.  இப்போது அவர் பெயர் யாருக்குத் தெரியும்?  எம்ஜியாரும் அப்படியே.  சிவாஜி நடிகர் திலகம் என்று போற்றப்பட்டவர்.  ஆனால் அவர் படங்களை இன்று digitalize செய்து வெளியிடும்போது இளைஞர்கள் ஏதோ வடிவேலு காமெடி பார்த்தது போல் சிரிக்கிறார்கள்.  கமலுக்குப் பிறகு கமலின் பெயரும் அப்படியே ஆகும்.  உலகம் பூராவுமே அப்படித்தான் இருக்கிறது.  சர்வதேச அளவிலும் கூட இலக்கியவாதிகளின் பெயர்தான் நிற்கிறதே தவிர நடிகர்களின் பெயர்கள் அல்ல.  தமிழில் கபிலனும், பரணரும்தான் இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகியும் நிற்கிறார்களே தவிர அவர்கள் காலத்தில் வாழ்ந்த விறலியரோ கூத்தரோ அல்ல.  அதேபோல் சமகாலத் தமிழில் பாரதியும், புதுமைப்பித்தனும், தி. ஜானகிராமனும்தான் நிற்கிறார்களே தவிர அக்காலத்தில் உச்சத்தில் இருந்த நடிகர்கள் அல்ல. 

இந்த நிலையில் கமல்ஹாசன் உண்மையிலேயே ஒரு இலக்கிய ஆர்வலர் என்றால் அவரேதான் முன்னின்று ஜெயமோகனின் பெயரை முன்னால் போட்டு, தன்னுடைய பெயரை பின்னால் போடச் சொல்லியிருக்க வேண்டும்.  அப்படிச் செய்திருந்தால்தான் அவர் ஒரு இலக்கிய வாசகர் என்று அர்த்தமாகும்.  கமல்ஹாசன் ஏராளமாகப் படித்திருக்கிறார்.  ஆனால் அப்படிப் படித்ததெல்லாம் அவரிடம் வெறும் தகவல்களாக மட்டுமே சேகரமாகியிருக்கிறது.  அதனால்தான் அவர் ஒருமுறை இயக்குனர் ஷங்கரை எழுத்தாளர் என்று குறிப்பிட்டார்.  அதனால்தான் அவர் அவ்வப்போது கவிதை என்ற பெயரில் எழுதும் அசட்டுக் குப்பைகளை ஞானக்கூத்தன் போன்ற மேதைகளிடம் கொடுத்து, அந்த மேதைகளும் வேறு வழியில்லாமல் அந்தக் குப்பைகளைப் பாராட்டி வைக்கும் அபத்தம் நிகழ்ந்து தொலைக்கிறது. 

மட்டுமல்லாமல் இந்த உரையாடல் ஹிந்து பத்திரிகை அதன் தலைப்பில் சொல்வது போல் உரையாடலாக நிகழவில்லை.  சம்பந்தப்பட்ட உரையாடல், கமல்ஹாசன் என்ற மேதையிடம் ஜெயமோகன் என்ற ஆரம்பநிலைப் பத்திரிகையாளர் எடுக்கும் பேட்டி போல்தான் வந்துள்ளது.  அப்படித்தான் இருக்கிறது இருவரது உடல் மொழியும். 

நானாக இருந்தால் கமல்ஹாசன் அமர்ந்திருக்கும் இடத்தில் நான் அமர்ந்திருப்பேன்.  ஒரு எழுத்தாளனின் இடம் அதுதான்.  கமல்ஹாசனோ அந்த இடத்தில் தான் அமர்ந்து கொண்டு ஜெயமோகனைப் பின்னுக்குத் தள்ளி, ஜெயமோகன் கேள்விகள் கேட்க அவர் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார்.  என்ன ஒரு கீழ்த்தரமான சமூகம் இது!  எழுத்தாளன் கேள்வி கேட்க, நடிகன் பதில் சொல்வதா?  என்னய்யா கேலிக்கூத்து இது!

இந்தக் காரணத்தினால்தான் நான் திரும்பத் திரும்ப எழுதிக்கொண்டிருக்கிறேன், தமிழ்நாட்டில் சினிமாதான் மதம், சினிமா நடிகர்தான் இங்கே கடவுள் என்று.  இது போன்ற ஒரு சமூகம் – சினிமாவை மதமாகக் கொண்டிருக்கும் சமூகம் இந்த பூமிப் பந்தின் எந்த மூலையிலும் இல்லை.  இதனால்தான் இந்த சமூகம் ஒரு கேடு கெட்ட சமூகம் என்கிறேன்.  இதனால்தான் எம்ஜியார் முதல்வராக ஆக முடிந்தது.  அவரைத் தொடர்ந்து ஜெயலலிதாவும் முதல்வராக முடிந்தது.  அடுத்து விஜய்காந்த் முதல்வராகும் வாய்ப்பு ஏற்பட்டது.  கடவுளுக்கே கருணை சுரந்திருக்க வேண்டும்.  விஜய்காந்த் மனதில் புகுந்து அவரை சட்டசபைக்கோ செல்ல விடாமல் செய்து விட்டார்.  அடுத்து, கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்திருக்கிறார். இப்படியெல்லாம் சினிமா நடிகர்கள் தமிழ்நாட்டு அரசியலில் புகுந்து ”புரட்சி” செய்ய அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?  சினிமாவினால் கிடைத்த ஒளிவட்டம்தானே காரணம்?  இப்போது கமல்ஹாசனைத் தொடர்ந்து விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார்.  இதைப் போன்ற ஒரு அவலம் வேறு எந்த தேசத்திலாவது நடக்குமா?   

அரசியலை விடுவோம்.  சமூகத்தில் இலக்கியத்தின் இடம் தெரிந்த ஒருவர் எழுத்தாளனைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு தான் கேமராவின் முன்னே உட்காருவானா?

காந்தியை இந்தியா முழுவதும் தேசப் பிதா என்று அழைத்தார்கள்.  மஹாத்மா என்று அழைத்தார்கள்.  அப்படிப்பட்ட அவரே தாகூர் முன்னால் அடக்க ஒடுக்கமாக அமர்ந்திருக்கிறார்.  தாகூருக்கு அருகில் காந்தி ஒரு மாணவனைப் போல் அமர்ந்திருக்கிறார்.  இதுதான் இலக்கியம் அறிந்தவரின் ஆளுமை.  காந்திக்கு இலக்கியம் தெரியும்.  பாரதியை ராஜாஜி போன்றவர்கள் காந்திக்கு முன்னால் அவமரியாதை செய்த போது பாரதியைப் பற்றி எதுவுமே தெரியாத காந்தி “அவர் உங்கள் மொழியின் சொத்து, அவரைக் காப்பாற்றுங்கள்” என்று அறிவுறுத்தினார்.  ஏனென்றால், காந்தி என்ற ஒரு சாதாரண வக்கீலை மஹாத்மாவாக மாற்றியது ஹென்றி டேவிட் தோரோ, டால்ஸ்டாய் போன்ற இலக்கியவாதிகள். 

கமல்ஹாசனை விடுங்கள்.  நானும் உதய் பிரகாஷ் என்ற ஹிந்தி எழுத்தாளரும் ஒரிஸாவின் கிராமப்புறங்களில் பயணம் செய்து கொண்டிருந்த போது ஒரு பெட்டிக்கடையில் வெற்றிலைப் பாக்கு வாங்குவதற்காக காரை நிறுத்தினோம்.  கடையில் இருந்த ஒரு பத்து வயதுச் சிறுவன் “இந்தப் பொட்டல் காட்டில் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டான். 

அதற்கு உதய் பிரகாஷ் “நாங்கள் இருவரும் லேகக், அதனால்தான் கிராமம் கிராம்மாக அலைந்து கொண்டிருக்கிறோம்” என்றார். பையனுக்கு சுத்த ஹிந்தி புரியவில்லை.  லேகக் என்றால் கதாசிரியர்.  நான் உதய் பிரகாஷின் சுத்த ஹிந்தியை சாதா ஹிந்தியில் மொழிபெயர்த்தேன்.  ”தம்பி, நாங்கள் இருவரும் கதாகார் (கதைசொல்லிகள்).”  

புரிந்து கொண்டான்.

வெற்றிலைக்குக் காசு வாங்க மறுத்து விட்டான்.  ஏன் என்று ஆச்சரியத்துடன் கேட்ட போது, “வியாசரின் மரபில் வந்தவர்களிடம் காசு வாங்குவது பாவம்” என்றான். 

இதை நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ தெரியாது.  இப்படியேதான் நடந்தது. 

அந்தப் பெட்டிக்கடை பையனுக்கு இலக்கியவாதிகளின் மீது இருக்கும் மதிப்பு கூட உலக இலக்கியத்தில் பரிச்சயம் கொண்டிருக்கும் கமல்ஹாசனுக்கு இல்லை.  காரணம், இலக்கியம் அவருக்கு உள்ளே போகவில்லை.  இன்னொரு காரணம், அகந்தை.  மேதைகளின் முன்னே உங்கள் அகங்காரம் அற்று வீழ வேண்டும்.  கதைசொல்லிகளின் முன்னே உங்கள் சிரம் தாழ வேண்டும்.  ஜெயமோகனை கமல் தன் சினிமாவுக்கு வசனம் எழுதும் நபராகவே பார்க்கிறார் என்பது இந்த “உரையாடல்” முழுவதுமே தெரிகிறது.

ஜெயமோகனின் இடத்தில் நான் இருந்திருந்தால் நான் கால் மேல் கால் போட்டுத்தான் அமர்ந்திருப்பேன்.  கமல் என் முன்னே பணிவாகத்தான் உட்கார வேண்டும்.  இல்லாவிட்டால் கிளம்பி வந்திருப்பேன்.  ஏனென்றால், ஆசானின் முன்னே மாணவன் பணிய வேண்டுமே தவிர மாணவன் முன்னே ஆசான் பணியலாகாது.  அப்படிப் பணிந்தால் இந்த உலகம் அழிந்து விடும்.  ஆசான் பட்டினி கூடக் கிடக்கலாம்.  சிறியோர் முன்னே பணியலாகாது.  இதற்கு மறுபேச்சே கிடையாது.  எழுத்தாளனே சமூகத்தின் ஆசான்.  இதை நான் சொல்லவில்லை.  மஹா பெரியவர் சொல்கிறார்.   

“ஒரு தேசம் என்று இருந்தால் அதில் நல்லவனும் இருப்பான், கெட்டவனும் இருப்பான். திருடன், பொய்யன், மோசக்காரன் எல்லாரும் இருப்பான்.  இருந்தாலும் ‘இந்த தேசத்தில் பண்பு இருக்கிறது, இந்த தேசம் பிழைத்துக் கொள்ளும்’ என்று தெரிந்து கொள்வது எப்படி?  ஒரு நோயாளிக்குப் பல கோளாறுகள் இருந்தாலும் டாக்டர் இருதயத்தைச் சோதித்து விட்டு, இருதயம் நன்றாக இருக்கிறது; ஆகவே பயமில்லை என்கிறார் அல்லவா? அதேபோல் ஒரு தேசத்தில் கோளாறுகள் இருந்தாலும் அதன் பண்பாட்டை உரைத்துப் பார்க்க ஒரு இருதய ஸ்தானம் இருக்கிறதா? இருக்கிறது.  ஒரு தேசத்தின் பண்பு உயர்ந்திருக்கிறது; மனோபாவங்கள் உயர்ந்திருக்கின்றன; ஆங்காங்கே அழுக்குகள் இருந்தாலும் மொத்தத்தில் அது சுத்தமாக இருக்கிறது என்பதை உரைத்துப் பார்ப்பதற்கு அந்த தேசத்து மகாகவிகளின் (இலக்கியக் கர்த்தாக்களின்) வாக்கே ஆதாரமாகும்.  ஒரு தேசத்தின் பண்புக்கு இதயமாக அல்லது உரைகல்லாக இருப்பது அந்த நாட்டு மகாகவியின் வாக்குதான்.”

பாருங்கள், மகாகவி என்று சொல்லிவிட்டு நமக்கு நன்றாகப் புரிய வேண்டும் என்பதற்காக ‘இலக்கியக் கர்த்தா’ என்று வேறு சொல்கிறார் மகாப் பெரியவர்.  அடுத்து, ஒரு இலக்கியவாதி எப்படி இருப்பான் என்று வர்ணிக்கிறார்.

“தனது என்று எதையும் பிடித்துக் கொள்ளாமல் விஷயத்தை உள்ளபடி பார்த்து objective-ஆக, பேதமில்லாமல் நடுநிலையோடு, சர்வ சுதந்திரமாக, திறந்த மனதோடு உள்ளதை உள்ளபடி சொல்வான்.  உலகம் முழுவதையும் இப்படியே படம் பிடித்துக் காட்டுவான்.  அதை உலகம் எடுத்துக் கொண்டாலும் சரி, தள்ளி விட்டாலும் சரி, அதைப் பற்றியும் இலக்கியக் கர்த்தாவுக்குக் கவலை இல்லை.  பயனை எதிர்பார்க்காதவன் அவன்.  ஒரு விஷயம் ஒரு நாட்டின் பண்புக்கு உகந்ததுதான் என்று அறிய வேண்டுமானால் அந்தப் பிரமாண வாக்கு (authority) அந்தத் தேசத்தின் மகாகவியின் வாக்குதான்.”

தமிழ்நாட்டில் அப்படி ஒரு எழுத்தாளன் வாழ்ந்தான்.  அரசியல்வாதியிலிருந்து சினிமா நபர்கள் வரை அவனிடம் கைகட்டியே அமர்ந்தார்கள்.  ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவன் இலக்கியவாதி அல்ல.  இலக்கியவாதி என்று ஜனரஞ்சக சமூகம் நம்பியது.  அவரும் நம்பினார்.  ஆனால் இலக்கியவாதிகள் அவரை இலக்கியவாதியாக ஏற்கவில்லை.  அவர் ஜெயகாந்தன்.  ஆனால் அவர் இலக்கியம் படைக்கவில்லை என்றாலும் ஒரு இலக்கியவாதி எத்தனை கர்வமாக வாழ வேண்டுமோ அப்படி வாழ்ந்தார். 

ஆனால் துரதிர்ஷ்டவசமாக தமிழின் உண்மையான இலக்கியவாதிகள் சினிமா நடிகனின் முன்னே பம்ம வேண்டியிருக்கிறது. 

மேலும், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இயக்குனர் ஷங்கரை கமல்ஹாசன் “எழுத்தாளர்” என்று சொன்னதைப் போலவே பாலகுமாரனையும், சுஜாதாவையும், சுப்ரமணிய ராஜுவையும் இலக்கியவாதிகள் என்று இந்த ஹிந்து உரையாடலில் குறிப்பிடுகிறார்.  உலக இலக்கியமெல்லாம் படிக்கின்ற கமலுக்கு ஆர்த்தர் ஹெய்லிக்கும், வில்லியம் பர்ரோஸுக்கும் வித்தியாசம் தெரியவில்லை.  ஹெரால்ட் ராபின்ஸுக்கும் ஜேம்ஸ் ஜாய்ஸுக்கும் வித்தியாசம் தெரியவில்லை.  இந்த அபத்தத்தை எட்டுவதற்கா இத்தனை உலக இலக்கியத்தைப் படித்துத் தொலைக்க வேண்டும்? 

நான் சினிமா ஆள் அல்ல.  ஒரு சாதாரண ரசிகன்.  உலக சினிமா பார்த்தவன்.  எனக்கு டி. ராஜேந்தருக்கும் கமலுக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்றால் கமல் என்னைப் பற்றி என்ன சொல்லுவார்?  அப்படித்தான் இருக்கிறது கமலின் பாலகுமாரன் உதாரணம்.  ஜெயமோகன் கேட்பது, இலக்கியத்துக்கும் சினிமாவுக்குமான உறவு பற்றி.  கேரளத்தில் அது வெற்றிகரமாக நடக்கிறது.  அங்கே இலக்கியவாதிகள் சினிமாவுக்கு வஜனம் எழுதிக்கொண்டிருக்கவில்லை.  சினிமாக்காரர்கள் இலக்கியவாதிகளின் நாவல்களைப் படமாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் தமிழ்நாட்டில் நடப்பதோ வேறு.  இலக்கியவாதிகள் யாரோ எவரோ உண்டாக்கிய கதைக்கு வசனம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.  அப்படித்தான் தமிழ் சினிமா இலக்கியவாதிகளைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.  இதற்குக் காரணம், சினிமாக்காரர்களுக்கு தமிழ் எழுத்தாளர்களின் பெயரே தெரியாது.  அப்படியே பெயர் தெரிந்த வெற்றிமாறன், மிஷ்கின் போன்றவர்கள் தாங்களே வசனம் எழுதிக்கொள்கிறார்கள்.  மணி ரத்னம், பாலா போன்ற ஒருசிலர்தான் விதிவிலக்கு.  அவர்களும் இலக்கியவாதிகளின் படைப்புகளை திரைப்படமாக உருவாக்குவதில்லை.  வசனம் எழுத மட்டுமே இலக்கியவாதிகளைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அந்த வசனத்தை அந்த இயக்குனர்களின் உதவியாளர்களே செய்து விட்டுப் போய் விட முடியும்.  ஆனாலும் இலக்கியவாதிகளின் பெயர்கள் டைட்டிலில் வந்தால் ஒரு கெத்து என்ற நிலை இருப்பதால் மட்டுமே இலக்கியவாதிகள் சினிமாவில் வசனம் எழுத நேர்ந்திருக்கிறது. 

திரைப்படமாக எடுக்க வாய்ப்பு உள்ள நாவல்கள் தமிழில் நூறு தேறும்.  சி.சு. செல்லப்பாவின் ஜீவனாம்சம், சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி, அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள் மற்றும் பல நாவல்கள், குறுநாவல்கள், தி. ஜானகிராமனின் மோகமுள், அம்மா வந்தாள், மரப்பசு, செல்லப்பாவின் சுதந்திர தாகம், ஜெயமோகனின் பல நாவல்கள்… இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.  ஆனால் கமல் இதில் எதையுமே எடுக்கவில்லை.  இது குறித்த ஜெயமோகனின் நேரடியான கேள்விக்கு ஒரு சமாளிப்பு பதிலை மட்டுமே சொல்லி விட்டு நழுவி விடுகிறார். 

இந்த இடத்தில் சமீபத்தில் போகன் சங்கர் ஃபேஸ்புக்கில் எழுதியிருக்கும் இரண்டு பதிவுகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்:

”தமிழின் மிக நுட்பமான மனங்கள் எல்லாம்  ஏன் தமிழ் சினிமா என்கிற பலிபீடத்திற்குச் சென்று தங்களைத் தொடர்ந்து பலியிட்டுக் கொள்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அங்கே முதல் வரிசை வெற்றியாளர்கள் எல்லாம்  தமிழ்ப் புலத்தின் மூன்றாம் தர சிந்தனையாளர்கள். அரை நூற்றாண்டுக்கும் மேலே இங்கு இது இவ்வாறு தான் நடைபெறுகின்றது. எண்பதுகளில் மத்தியில், மலையாள சினிமாவில் நடந்தது போல ஒரு மாற்றம் நிகழ்ந்தது போல இருந்தது. அது ஒரு மாயமான் தோற்றம் என்று பிறகு தெரிந்தது. இலக்கியத்தில் நிறைய வாசிப்பு உள்ள, உலக சினிமாவை கரைத்துக் குடித்த  இளைஞர்களை பார்க்கிறேன். யாரைக் கேட்டாலும் நான் சினிமாவில்  இருக்கிறேன் என்கிறார்கள். ஒரு சினிமாவை இயக்குவதையோ ஒரு சினிமாவில் பணி புரிவதையோ கனவாகக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் காணும் போதெல்லாம் நான் தடுமாற்றத்துக்கு உள்ளாகிறேன். நான் அவர்களை எச்சரிக்க வேண்டுமா?  வாழ்த்த வேண்டுமா? அல்லது நான் ரொம்பவும்  எதிர்மறையாகச் சிந்திக்கிறேனா? தமிழ் சினிமாவை லட்சியமாகக் கொண்டிராவிட்டால் காப்பாற்றப்பட்டிருக்கக் கூடிய ஆன்மாக்கள்  என்று என் நினைவுக்கு ஒரு பத்து பேராவது வருகிறார்கள்.

தமிழ் சினிமா தமிழ் அறிவு ஜீவிகளின் மாபெரும்  கல்லறைத் தோட்டம்.”

”ஒரு இலக்கியவாதி சினிமாவுக்குள் செல்லும்போது அவனுக்கு பல்வேறு விதமான சங்கடங்கள் ஏற்படுகின்றன. அவன் சினிமாவுக்குள் சென்று விட்டால் எந்த ஒரு சினிமாக்காரரையும் பகைத்துக் கொள்ள முடியாது. விமர்சனம் செய்ய முடியாது. பிறகு அவனுக்கு வாய்ப்புகள் எதுவும் வராது. ஒரு இலக்கியவாதி சினிமாவுக்குள் சென்றுவிட்டால் பிற இலக்கியவாதிகள் மேலும் எந்த ஒரு விமர்சனத்தையும் வைக்க முடியாது. காரணம் தமிழகத்தில் முக்கால் வாசி இலக்கியவாதிகள் அவனைப்  போலவே சினிமாவுக்குள் இருப்பவர்கள் அல்லது வர முயன்றுகொண்டிருப்பவர்கள்  என்பதால் அவர்களையும் பகைத்துக் கொள்ள முடியாது. ஆகவே அவன் செய்ய முடிந்ததெல்லாம் சினிமாவிற்கு வராத  ஒன்றிரண்டு ‘கோயான்’ இலக்கியவாதிகளைச் சாடுவதுதான். ஆனால் அந்த லிஸ்ட் மிக சுருக்கமானது என்பதால்  சினிமாவிற்கு போன பிறகு இலக்கியவாதிகள் பெரும்பாலும்  மிண்டாப் பூச்சையாகதான் திரிய வேண்டி இருக்கும்.”

கமல்ஹாசனை ஜெயமோகன் எடுத்த இந்தப் பேட்டியைக் கேட்டது என் வாழ்வில் நடந்த மிக அருவருப்பான தருணங்களில் ஒன்று என நினைக்கிறேன்.  ஒரு எழுத்தாளனாக நானே அவமானப்பட்டது போல் உணர்கிறேன்.  “உரையாடலில்” கமல்ஹாசனேதான் பேசிக்கொண்டிருக்கிறார்.  ஏதோ soliloquy மாதிரிதான் இருந்தது. ஒரு மேதைக்கு முன்னே ஒன்றுமறியாத ஒரு பேதைப் பாலகன் உளறுவது போல் இருந்தது.  கார்ஸியா மார்க்கேஸும் ஃபிடல் காஸ்ட்ரோவும் உரையாடியிருந்தால் இப்படியா இருக்கும்?  இந்திரா காந்தி ஒரு தீவிர இலக்கிய வாசகர்.  ஒருமுறை அவர் ஃபிடல் காஸ்ட்ரோவிடம் அவர் இந்தியாவுக்கு வரும்போது கார்ஸியா மார்க்கேஸையும் கூட அழைத்து வரச் சொல்கிறார்.  காஸ்ட்ரோவும் மார்க்கேஸை அழைத்து வருகிறார்.  அப்போது இந்திரா ஃபிடல் காஸ்ட்ரோவை விட்டு விட்டு மார்க்கேஸைத்தான் மிகவும் அக்கறையுடன் கவனித்துக்கொண்டதாகவும் அவரோடுதான் அதிக நேரம் செலவிட்டதாகவும் மார்க்கேஸ் எழுதியிருக்கிறார். 

லத்தீன் அமெரிக்க நாடுகளில் எத்தனையோ கவிஞர்களும் எழுத்தாளர்களும் தேச அதிபர்களுக்கு நண்பர்களாக இருந்திருக்கிறார்கள்.  அப்போது அதிபர்கள்தான் எழுத்தாளர்களின் முன்னே பணிந்து இருப்பதை நான் பார்த்திருக்கிறேன், படித்திருக்கிறேன்.  உதாரணத்துக்கு, பாப்லோ நெரூதாவுக்கும் டாக்டர் அயெந்தேவுக்கும் இருந்த நெருங்கிய நட்பு.  நிகானோர் பார்ராவுடனான சந்திப்புக்காக பல தென்னமெரிக்க அதிபர்கள் தேதி கேட்டுக் காத்துக் கிடந்தார்கள் என்பது செய்தி.  இங்கே தமிழ்நாட்டில் சர்வதேசத் தரத்தில் எழுதும் ஒரு எழுத்தாளர் ஒரு நடிகரிடம் கேள்விகள் கேட்கிறார்.  நடிகரும் தான் அந்த எழுத்தாளனுக்கு முன்னே ஒரு எலிக்குஞ்சு என்பதை அறியாமல் ஏதேதோ பினாத்திக்கொண்டிருக்கிறார்.

கேரளம் இப்படி இல்லை.  ஒருமுறை தற்செயலாக மம்முட்டியை ஒரு இலக்கிய விழாவில் நான் சந்திக்க நேர்ந்த்து.  அப்போது மம்முட்டி என்னிடம் வந்து நான் அப்போது மாத்யமம் பத்திரிகையில் எழுதிக்கொண்டிருந்த தொடர் பற்றியும் அதைத் தான் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருப்பதையும் சொன்னார். அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்திருப்போம்.  அதிக நேரம் நான்தான் பேசினேன்.  நான் பேசப் பேச கைகளைக் கட்டியபடி ஒரு மாணவனைப் போல் அவர் கேட்டுக்கொண்டிருந்த தருணத்தை நான் என்றும் மறக்க மாட்டேன். 

இறுதியாக, ஹிந்து பத்திரிகைக்கு ஒரு வேண்டுகோள்:  அடுத்து நீங்கள் எஸ்.ரா.வையும் ரஜினியையும் “உரையாட” வைக்கலாம். 

ஆஹா, திருப்பதி வெங்கடாசலபதி சந்நிதியில் நடந்த அந்த வைபவம் ஞாபகம் வருகிறது.  ரஜினி வெங்கடாசலபதியைக் கும்பிடுகிறார்.  எழுத்தாளரோ ரஜினியைக் கும்பிடுகிறார்.  இத்தனைக்கும் சர்வதேசத் தரத்தில் எழுதுபவர் அந்த எழுத்துக்காரர்.

இப்போது ஹிந்து ஆசிரியர் துணை ஆசிரியரிடம் கேட்பார்.  “ஆமாம், இத்தனை எழுதுகிறாரே இந்த சாரு நிவேதிதா என்ற ஆசாமி?  இவரையும் சூரியையும் உரையாட வைக்கலாமா?”