தயிர்வடை சென்ஸிபிலிட்டி

இப்போது நான் எழுதப் போவது ஒரு கணித விளையாட்டைப் போன்றது.  சென்னையில் உள்ள பிஹெச்.டி. ஆய்வு செய்யும் மாணவர்களை எடுத்துக்கொண்டால், அதில் தலித் இலக்கியத்தை ஆய்வு செய்பவர்கள் பத்து பேர் என்று வைத்துக் கொள்வோம்.  அதில் ஒன்பது பேர் பிராமணராக இருப்பார்கள்.  அதிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.  இது போன்ற ஒரு எண் ஆராய்ச்சி விளையாட்டைத்தான் இப்போது எழுதப் போகிறேன்.  இது நான் கண்ட உண்மை.  நான் கண்ட எதார்த்தம்.  நான் கண்ட அந்த எதார்த்தம் எதார்த்தத்தில் எதார்த்தமாக இல்லாமல் கூடப் போகலாம்.  அப்படியானால் நான் சொல்லும் எதார்த்தம் எதார்த்தம் இல்லை என்று நீங்கள் நிரூபிக்க வேண்டும்.  நிரூபித்தால் உடனடியாக நான் உங்கள் கட்சிக்கு மாறி விடுவேன்.  ஏனென்றால், எனக்கு எந்த விஷயத்திலும் தீவிரமான கொள்கைப் பிடிப்பெல்லாம் கிடையாது.  நான் பார்க்கிறேன்.  பார்த்ததை வைத்து ஒரு முடிவுக்கு வருகிறேன்.  அதை நீங்கள் தவறென நிரூபித்தால் நான் உங்கள் கட்சி.  கொள்கை என்பதை நான் ஒரு மதவாதியைப் போல் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்க மாட்டேன்.  அதே சமயம் இதே கொள்கையை எல்லா விஷயங்களிலும் கடைப்பிடிக்க மாட்டேன்.  நீங்கள் பார்த்த எதார்த்தம் எதார்த்தம் இல்லை என்று நிரூபித்தால் உடனே கட்சி மாறி விடுவேன் என்றும், எனக்குக் கொள்கை முக்கியம் இல்லை என்றும் சொன்னீர்களே, இப்போது மட்டும் ஏன் கொள்கையை விடாப்பிடியாய்ப் பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்கக் கூடாது.  என் எதார்த்தம் எதார்த்தம் இல்லை என்று நிரூபிக்கப்பட்டால் உடனே கட்சி மாறி விடுவேன் என்ற கொள்கையை எல்லா கொள்கைகளிலும் எல்லா சமயத்திலும் கடைப்பிடிக்கச் சொல்லி நீங்கள் என்னை வற்புறுத்தக் கூடாது.  அந்தக் கொள்கைக்கு அது.  இந்தக் கொள்கைக்கு இது.  இப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.  ஆனால் இப்போது எழுதப் போகும் கணித விளையாட்டை தவறு என நீங்கள் நிரூபித்தால் நான் உங்கள் கட்சி.

மஹா பெரியவர் என் ஆன்மீக குரு.  அவர்தான்.  அவர் மட்டும்தான்.  அவர் அளவுக்கு என்னை ஈர்த்த ஆன்மீகவாதிகள் வேறு யாரும் இலர்.   

அடுத்து மணி என்ற நண்பர்.  அவரைப் பற்றி நான் ராஸ லீலாவிலும் மற்ற இடங்களிலும் எக்கச்சக்கமாக எழுதியிருக்கிறேன்.  அவர் மட்டும் என் வாழ்வில் இருந்திராவிட்டால் என்னை என்றைக்கோ கொன்று போட்டிருப்பார்கள்.  அந்த அளவுக்கு நான் மற்றவர்களை என் எழுத்தின் மூலமும் நடவடிக்கைகளின் மூலமும் கோபப்படுத்திக்கொண்டிருந்தேன்.  அப்படிப்பட்ட மிரட்டல்கள் நிறையவே வந்தன.  ஆனால் மணியின் நண்பன் என்ற அடையாளம் இருந்ததால் ஒருவருக்கும் என் அருகில் நெருங்கும் தைரியம் இல்லை.  ஆனாலும், ஒரு நாலு பேர் கொண்ட ரவுடிக் கும்பல் ஒரு நள்ளிரவில் அவந்திகாவைக் கொலை செய்ய முயன்று, அவள் மண்டை உடைந்து ஒரு மாதம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாள்.  என் வீட்டுக்கு இரண்டு மாத காலம் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது.  ரவுடிகள் மீது கொலை வழக்கு நடந்தது.  ரவுடிகள் தொழில்முறை ரவுடிகள் இல்லை.  இது பற்றி விரிவாக ராஸ லீலாவில் எழுதியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.  கடைசியில் அவர்கள் அவந்திகாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதால் வழக்கு நீதிமன்றத்துக்கு வந்த போது அவந்திகா வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டாள்.  போலீஸார் எங்கள் மீது மிகுந்த வருத்தம் கொண்டார்கள். 

எல்லா பிரச்சினைகளுக்கும் மணி என்ற பாதுகாப்புக் கவசம் எனக்கு இருந்தது.  இல்லாவிட்டால் ஆர்ம்ஸ்ட்ராங்குக்கு நடந்ததுதான் எனக்கும் நடந்திருக்கும்.  இன்னொரு ஆச்சரியம்.  சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பகுஜன் சமாஜ் பார்ட்டியின் தமிழ்நாட்டுத் தலைவராக இருக்க எனக்கு அக்கட்சியின் மேலிட்த்திலிருந்து அழைப்பு வந்தது. காரணம், கேரளத்தில் ஒருமுறை என் பேச்சைக் கேட்க மூவாயிரம் பேர் கூடியிருந்தார்கள்.  அதைப் பார்த்து விட்டுத்தான் பி.எஸ்.பி. தலைவர் என்னை அழைத்தார்.  நான் மறுத்து விட்டேன். 

நான் சொல்லும் காலகட்டத்தில் என் நண்பர் மணி மிகவும்  வலுவுடையவராக இருந்தார்.  ஒருமுறை ஜெயலலிதாவை முதலமைச்சர் பதவியிலிருந்து அகற்றுவதற்கு மணியின் முயற்சிதான் காரணம்.  ஆரம்பத்திலிருந்து மணியின் மீது மிகுந்த புகைச்சலில் இருந்த திமுக தலைவர் கருணாநிதி அந்தச் சம்பவத்துக்குப் பிறகு மணியின் மீது மென்மனம் கொண்டவராக மாறினார். 

மணி எனக்குப் பண உதவி செய்தது இல்லை.  (ஆனால் ராஸ லீலாவை பார்க் ஷெரட்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் பாரில் வைத்து இரண்டு வருட காலம் எழுதுவதற்கான மது உதவி செய்தார்.  அதற்கு அந்தக் காலத்திலேயே இரண்டு லட்சம் ரூபாய் ஆகியிருக்கும்!)  ஆக, மணி எனக்கு நேரடியாகப் பண உதவி செய்யாவிட்டாலும் அவரது நட்பினால்தான் என் உயிர் காப்பாற்றப்பட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

மேலே குறிப்பிடப்பட்டவர்கள் பிராமணர்கள்.  தவிர, என் மனைவி அவந்திகா பிராமணர்.  என் ஆசான் அசோகமித்திரன் பிராமணர்.  என் மூத்தோர்களாகிய தி.ஜானகிராமன், கு.ப.ராஜகோபாலன், கரிச்சான் குஞ்சு, சி.சு. செல்லப்பா, க.நா.சு. எல்லோருமே பிராமணர்கள்.  இன்னும் இந்தப் பட்டியல் பெரிதாக நீளும்.  இப்போதைக்கு ஒரு உதாரணத்துக்கு இது போதும். 

இந்த வரிசையில் சீனியைச் சேர்க்கவில்லை.  ஸ்ரீவைஷ்ணவ குலத்தில் பிறந்தாலும் அவர் தன்னை முற்று முழுதாக பிராமணச் சிந்தனையிலிருந்தும் பிராமண வாழ்விலிருந்தும் விலக்கிக் கொண்டவர்.  ஒருமுறை அவரது நண்பர் ஒருவர் – சிறுவயதிலிருந்தே ஒன்றாகப் படித்தவர் – சீனியுடன் சண்டை போட்டுப் பிரிந்த போது பாப்பான் என்று திட்டி விட்டான், அது ஒன்றுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது என்றார் சீனி. 

நானும் அப்படித்தான் சீனி உங்களைத் திட்டியிருப்பேன் என்று நான் சொன்னபோது அதிர்ந்தார்.  வேறு விதமாக உங்களைத் திட்டுவதற்கு உங்களிடம் எதுவுமே இல்லையே என்று விளக்கினேன்.  தெளிந்தார். 

அவரிடம் இருக்கும் ஒரே பிராமண அடையாளம், அவர் உடம்பெல்லாம் மூளை.  அவருக்கு உலக சினிமா தெரியாது.  ஆனால் என்னோடு உலக சினிமா பற்றி மணிக்கணக்கில் பேசுவதற்கு எனக்குச் சம்மான ஆள் அவர் ஒருத்தர்தான்.  அவருக்குத் தத்துவம் தெரியாது.  ஆனால் தத்துவம் பற்றி என்னோடு சரிக்குச் சரியாக அமர்ந்து மணிக்கணக்கில் பேசக் கூடிய ஆள் அவர் ஒருத்தர்தான்.  அப்படித்தான் இசை பற்றியும்.  என் கதைகளை செப்பனிட்டுக் கொடுப்பதற்குத் தகுதி வாய்ந்த ஒரே மனிதரும் அவர்தான். 

இன்னொரு விஷயம் சீனியின் நேர்மை.  மற்ற ஆட்களாக இருந்தால் செப்பனிட்டுக் கொடுத்து விட்டு, சாருவுக்கு நான்தான் எழுதிக்கொடுத்தேன் என்று குண்டைப் போடுவார்கள். 

அடுத்ததாக, ராம்ஜி, காயத்ரி.  இருவருமே பிராமண சமூகம்தான்.  என்னுடைய அத்தனை நூல்களும் பல ஆண்டுகளாகக் கிடைக்காமல் இருந்த சூழலில் ஸீரோ டிகிரி பதிப்பகத்தைத் தொடங்கி என் நூல்களை பரந்து பட்ட அளவில் எல்லோருக்கும் கிடைக்கச் செய்தவர்கள் ராம்ஜியும் காயத்ரியும். 

இத்தனை நீண்ட முன்னுரை எதற்கு என்றால், இப்போது நான் எழுதப் போவதைப் படித்து பிராமண குலத்தில் பிறந்து, இன்னமும் அந்தக் குலத்தைச் சேர்ந்தவர்களாகவே தம்மை நினைத்துக் கொண்டிருக்கும் சிலருக்குக் கோபம் வரலாம். 

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையோரைப் போல, நான் பிராமண வெறுப்பாளன் இல்லை.  பிராமண வெறுப்பு என்பது தமிழ்நாட்டில் புரையோடிப் போயிருக்கிறது.  அதன் காரணமாகவே எனக்குக் காமெடி நடிகர் விவேக்கைப் பிடிக்காது.  அவருக்குத் தெரிந்த ஒரே காமெடி பிராமணர்களைக் கிண்டல் செய்வதும், ஹிந்து மதத்தைக் கிண்டல் செய்வதும்தான். 

நான் சாதி, இனம், மொழி, தேசம் போன்றவற்றையெல்லாம் தாண்டியவன்.  எனக்கு தாய்ப்பாசம், தந்தைப் பாசம், குடும்பப் பாசம், மனைவி பாசம், பிள்ளைப் பாசம் போன்ற எதுவும் கிடையாது.  அந்த வகையில் நான் ஒரு துறவியைப் போன்றவன். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வாக்கின் வாழும் உதாரணம் நான்.  எல்லா எழுத்தாளர்களுக்கும் ஊர்ப் பாசம் இருக்கும்.  தங்கள் ஊரைப் பற்றி ஆஹா ஓஹோ என்று எழுதுவார்கள்.  எனக்கு அந்தப் பாசமும் இல்லை.  என் ஊரைப் பற்றிக் கேட்டால், என் வாழ்விலேயே நான் கண்ட மோசமான ஊர் அதுதான் என்று சொல்வேன்.  காரணம், ஊரில் எங்கே நின்றாலும் அங்கே கொடூரமான மூத்திர நாற்றம் நாறும்.  ஆனால் என்னுடைய கனவு இல்லம் எதுவெனக் கேட்டால் எங்கள் ஊர் தர்ஹா என்றே சொல்வேன்.  எஜமான் அடங்கியிருக்கும் இல்லம்.  இல்லத்திலேயே பிடித்த இடம் குளுந்த மண்டபம்.  இரவு, பகல், கோடை, குளிர் என்று எந்தக் காலத்திலும் எந்தப் பருவத்த்திலும் குளிர்ச்சியாகவே இருக்கும் மண்டபம் அது. 

இப்போது விஷயத்துக்கு வருகிறேன்.

நான் எழுத ஆரம்பித்த காலகட்டத்திலிருந்து என்னை ஒதுக்கியவர்களும் புறக்கணித்தவர்களும் பிராமணர்களாகவே இருந்தனர்.   இது சுந்தர ராமசாமியிலிருந்து தொடங்கியது.  சு.ரா. முற்போக்குச் சிந்தனை கொண்டவர்.  தன்னை பிராமண அடையாளத்திலிருந்து விடுவித்துக் கொண்டவர்.  தான் இறக்கும்போது கூட தன் ஈமச்சடங்குகளை எந்த மத அடையாளமும் இன்றி நடத்த வேண்டும் என்று சொன்னவர்.  ஆனால் அவரது சிந்தனையும் அழகியலும் முழுக்க முழுக்க பிராமணத்துவத்தைச் சார்ந்தே இருந்த்து.  இதைத்தான் நான் அப்போது தயிர்வடை சென்ஸிபிலிட்டி என்று அழைத்தேன். 

நிறப்பிரிகை பத்திரிகை வந்து கொண்டிருந்த காலகட்டம்.  தமிழ்க் கலாச்சார சூழலில் வெகு காத்திரமான தத்துவ உரையாடல்கள் நிகழ்வதற்கு நிறப்பிரிகை ஒரு தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.  அப்போது வாஸந்தி தமிழ் இந்தியா டுடே பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார்.  தீபாவளி மலருக்காக வாஸந்தி தலைமையில் சுந்தர ராமசாமி, ரவிக்குமார் மற்றும் நான் அடங்கிய நால்வரும் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்தார்.  வாஸந்தியின் அறிமுக உரைக்குப் பிறகு கலந்துரையாடலைத் தொடங்கி வைப்பவர் சு.ரா.  அப்போது சு.ரா. நல்ல தரமான வெள்ளைக் காகித்த்தில் தட்டச்சு செய்யப்பட்ட நான்கு பக்க உரை ஒன்றைப் படித்தார்.  அதற்குப் பெயர்தான் கலந்துரையாடலாம்! அப்போது நான் அடைந்த கோபத்துக்கும் சீற்றத்துக்கும் அளவே இல்லை. 

அந்தக் கலந்துரையாடலில் படுதோல்வி அடைந்த்து நான்தான்.  அந்த நாகர்கோவில் சமத்காரத்துக்கும் குயுக்திக்கும் தந்திரத்துக்கும் என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை.  தயிர்வடை சென்ஸிபிலிட்டி என்று நான் எதைக் குறிக்கிறேன் என்று சு.ரா.வுக்குத் தெரியும்.  இருந்தாலும் அவர் திரும்பத் திரும்ப என்னை மடக்கியபோது நான் கெக்கே பிக்கே என்று உளற ஆரம்பித்து விட்டேன்.  அவரும் என்னை நாக் அவுட் செய்த திருப்தியில் மந்தகாசப் புன்னகை புரிந்தார்.

இப்போது என்றால் நானும் அதே சமத்காரத்துடன் பதில் சொல்லியிருப்பேன்.  அந்த பதில்:

”சு.ரா. அவர்களே, நீங்கள் எழுதிய நாவலில் கதாநாயகன் ஒரு கால்பந்தாட்ட மைதானத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்திருக்கிறான்.  அந்த சிமெண்ட் படிக்கட்டுகளில் ஒரு கெட்ட வார்த்தை பதிந்திருந்த்து.  படிக்கட்டு அமைத்த போது சிமெண்ட் குழைவாக இருந்த தருணத்தில் யாரோ புண்டை என்று விரலால் எழுதியிருக்கிறார்கள்.  சிமெண்ட் காய்ந்த பிறகு அது அங்கேயே நிலைத்து விட்ட்து.  புண்டை என்று எழுதாமல் கெட்ட வார்த்தை என்று எழுதியதுதான் தயிர்வடை சென்ஸிபிலிட்டி.”

இதுதான் பிராமண அழகியல். 

இதற்கான சிறந்த உதாரணம் அப்துல் கலாம்.  தற்கால உதாரணம் இளையராஜா.  இவர்கள் இருவரும் பிராமணர் அல்ல.  பிராமண அழகியலை ஒருவர் தம் வாழ்வியல் த்த்துவமாக்க் கொள்வதற்கு அவர் பிராமணராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.  இலக்கியத்தில் அதற்கு சிறந்த உதாரணம் இமையம்.  இமையத்தின் கோவேறு கழுதைகள் நாவலுக்கு ராஜ் கௌதமன் எழுதிய மதிப்புரையைப் படித்துப் பாருங்கள்.  பிராமண அழகியல் என்றால் என்ன என்று புரியும்.  எதையும் புனிதப்படுத்துவதே பிராமண அழகியல்.  புண்டை என்றால் ட்ரான்ஸ்கிரஸிவ்.  கெட்ட வார்த்தை என்றால் புனிதம். 

அசோகமித்திரன் தன் லௌகீக வாழ்வில் பிராமணராகவே வாழ்ந்தவர்.  தமிழ்நாட்டில் பிராமணர்கள் யூதர்களைப் போல் நட்த்தப்படுகிறார்கள் என்று கூட எழுதினார்.  ஆனால் அவருடைய புனைவெழுத்தில் ரத்தம் ஆறாக ஓடும். 

அவர் மட்டும் அல்ல.  தி.ஜானகிராமன், சி.சு. செல்லப்பா, க.நா.சு.,  ந. சிதம்பர சுப்ரமணியன், கரிச்சான் குஞ்சு, கு.ப.ரா. போன்ற சென்ற தலைமுறையின் பிராமண எழுத்தாளர்கள் அனைவரின் எழுத்திலுமே பிராமண அழகியலை நீங்கள் காண முடியாது.  சுந்தர ராமசாமியிடமிருந்து தோன்றிய அந்த பிராமண அழகியல் இன்று உச்சத்தில் நிற்பது இன்று பின்நவீனத்துவ எழுத்தாளராக அறியப்படும் ஒருவர்.  அவருக்கும் என் எழுத்து இலக்கியமே அல்ல.  அவர் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது ஒரு தற்செயல்தான்.  ஏனென்றால், அவரிடமும் இமையத்திடமும் செயல்படுவது ஒரே விதமான பிராமண அழகியல்தான்.

இமையத்தை உலகறியச் செய்தவர் க்ரியா ராமகிருஷ்ணன்.  அவர் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் ஒரு தற்செயலே.  ஆனால் அவரிடம் இயங்கியது பிராமண அழகியல்.  அவரும் ஊட்டியில் வசிக்கும் “சிந்தனையாள”ரும், சுந்தர ராமசாமியும் மூவர் கூட்டணி.  பிராமண அழகியலின் இரண்டு பிரதிநிதிகள் பிராமண அழகியலை முன்வைத்து எழுதிய தலித்தான இமையத்தை ஐவரி டவரில் ஏற்றினார்கள்.  இப்படி ஏற்றியதில் மூன்றாவதான சு.ரா.வும் அடக்கமா என்று தெரியவில்லை.  இந்த பிராமண அழகியல் கோஷ்டியில் அசோகமித்திரனின் நிழல் கூடப் படவில்லை என்பது முக்கியம்.