உலகத் திரைப்படம் எடுப்பது எப்படி?

அன்புள்ள சாரு,

நான் நந்தகுமார்.  உங்களின் சமீபத்திய வாசகன்.  ஜூன் 30 அன்று திருவண்ணாமலையில் நடந்த உலக சினிமா பயிலரங்கில் கலந்து கொண்டு பயன் பெற்றவன்.  சுமார் ஒன்பது மணி நேரம் நீங்கள் நிகழ்த்திய உரை, நீங்கள் காண்பித்த திரைப்படங்கள் எல்லாமுமே எனக்குப் பெரும் திறப்பை அளித்தன.  அதற்கு நான் செலுத்திய கட்டணம் ஒன்றுமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனாலும் எனக்கு ஒரு குறை உண்டு.  அதைச் சொன்னால் நீங்கள் தவறாக நினைக்க மாட்டீர்கள் என்பதால் அதை உங்களிடம் சொல்லத் துணிந்தேன்.  நீங்கள் சொன்ன விஷயங்களை என் குறிப்பேட்டிலிருந்து எடுத்து மீண்டும் மீண்டும் யோசித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.  அதேபோல் நீங்கள் அறிமுகம் செய்த திரைப்படங்கள் மற்றும் இசை.

இருந்தாலும் ஒரு நல்ல திரைப்பட்த்தை எடுப்பது எப்படி என்று நீங்கள் சொல்லவில்லையோ என்று தோன்றுகிறது.  அடுத்த பயிலரங்கிலாவது நீங்கள் அதைச் செய்ய வேண்டும் என்று உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,

நந்தகுமார். 

டியர் நந்தகுமார்,

நீங்கள் சொல்வது போலவே வேறு சில நண்பர்களும் அபிப்பிராயப்பட்டார்கள்.

நான் உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன்.  மண்ணில் தெரியுது வானம் என்று ஒரு நாவல்.  ந. சிதம்பர சுப்ரமணியன் எழுதியது.  அதில் தி.ஜ. ரங்கநாதன் என்ற நமது மூத்த எழுத்தாளரும், மகாத்மா காந்தியும் கதாபாத்திரங்களாக வருகிறார்கள்.  தி.ஜ.ர.வுக்கு நாவலில் வேறு பெயர்.  மும்பையில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடக்கிறது.  காந்தி மற்ற காங்கிரஸ் தலைவர்களுடன் முக்கியமான பேச்சு வார்த்தையில் இருக்கிறார்.  அறைக்குள்ளே யாரையும் அனுமதிக்கக் கூடாது.  அந்தப் பொறுப்பு தி.ஜ.ர.விடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.  தி.ஜ.ர. இருபது வயது இளைஞன்.  அப்போது சில குஜராத்தி பெண்கள் அங்கே வந்து காந்தியைச் சந்திக்க வேண்டும் என்கிறார்கள்.  வயதில் மூத்தவர்கள்.  காந்தியின் சுதந்திரப் போராட்டத்துக்குப் பெரிதும் பண உதவி செய்து கொண்டிருக்கும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். 

தி.ஜ.ர. உள்ளே செல்லக் கூடாது என்கிறார்.  பெண்கள் அதற்கு செவி சாய்க்காமல் உள்ளே நுழைய முயற்சிக்கும்போது தி.ஜ.ர. அவர்களின் கைகளைப் பிடித்து இழுத்து அவர்கள் உள்ளே போவதைத் தடுக்கிறார்.  அந்தப் பெண்கள் குய்யோ முறையோ என்று கத்துகிறார்கள். 

இந்த சப்தம் உள்ளே கேட்டாலும் உள்ளேயிருந்து யாரும் வெளியே வரவில்லை.  பெண்களும் அதற்கு மேல் உள்ளே போகவில்லை.

காந்தி மிகவும் கோபக்கார்ர் என்று பெயர் எடுத்தவர்.  மாலையில் தி.ஜ.ர.விடம் காந்தி சிரித்துக்கொண்டே “என்ன, காலையில் ஒரே கலவரம் போலிருக்கிறதே?” என்று விசாரிக்கிறார். 

மிகுந்த குற்றவுணர்ச்சியுடன் தி.ஜ.ர. நடந்ததை சுருக்கமாக விவரிக்கிறார்.

”என்ன இருந்தாலும் நீ அந்தப் பெண்களின் கையைப் பிடித்து இழுத்துத் தடுத்திருக்கக் கூடாது, அது அஹிம்சை வழியல்ல” என்கிறார் காந்தி.

தி.ஜ.ர.வுக்கு ஒரே குழப்பம்.  வேறு எப்படி அவர்களைத் தடுத்திருக்க முடியும்?  அங்கே அந்தப் பெண்களின் கையைப் பிடித்து இழுத்திருக்காவிட்டால் அவர்கள் அறைக்குள்ளே நுழைந்திருப்பார்களே?  அந்தக் குறைந்த பட்ச வன்முறை அங்கே அவசியமாகத்தானே இருந்தது?

தி.ஜ.ர. மிகுந்த பணிவுடன் காந்தியிடம் கேட்கிறார்.  “என் இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் அந்தப் பெண்களை எப்படித் தடுத்திருப்பீர்கள் பாபுஜீ?”

காந்தி சொல்கிறார்: “நான் உங்களுக்கு அஹிம்சை என்ற தத்துவத்தைக் கற்பித்திருக்கிறேன்.  அதைப் பின்பற்ற வேண்டியது உங்கள் கடமை.  உங்கள் பொறுப்பு.  அந்தத் தத்துவம் உங்கள் குருதியில் கலந்திருந்தால் உன் கேள்விக்கான பதில் உனக்கே தெரிந்திருக்கும்.  தெரிந்திருக்க வேண்டும்.  ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அஹிம்சையை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று நான் சொல்லிக்கொண்டிருந்தால் நீ அஹிம்சையைப் பயிலவில்லை என்று அர்த்தம்.  சரி.  உன் கேள்விக்கு நான் நேரடியாக பதில் சொல்கிறேன்.  உன் இடத்தில் நான் இருந்திருந்தால் அவர்கள் பாதங்களின் கீழே படுத்திருப்பேன்.  செல்வதாக இருந்தால் என்னைத் தாண்டிக்கொண்டு செல்லுங்கள் என்று சொல்லியிருப்பேன்.  இந்தியர் யாருக்கும் ஒருவரின் தேகத்தைத் தாண்டிக் கொண்டு செல்ல மனம் துணியாது.  இதுதான் அஹிம்சை வழி.”

காந்தி இந்த உலகத்துக்கு அஹிம்சா தர்மத்தை போதித்தார்.  அது ஒரு அரசியல் தத்துவம் மட்டுமல்லாது ஒரு வாழ்வியல் தத்துவமும் கூட.  இதை அவர் திருவள்ளுவரின் நான்கு குறள்களிலிருந்து கற்றுக்கொண்டார்.  இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்ற குறளும் அதில் ஒன்று.

காந்திக்கு அந்தக் குறள்களைச் சொன்னவர் டால்ஸ்டாய்.

டால்ஸ்டாய்க்கு ஒரு வட இந்தியப் பத்திரிகையாளர் ஒரு கடிதம் எழுதினார்.  அந்தக் கடிதத்துக்கு டால்ஸ்டாய் எழுதிய பதில் உலகப் பிரசித்தமான ஒன்று.  அந்தக் கடிதம் இணையத்தில் வாசிக்கக் கிடைக்கிறது.

டால்ஸ்டாயின் கடிதம் வட இந்தியப் பத்திரிகைகளில் பிரசுரம் ஆனது.  அதைப் படித்த காந்தி குஜராத்தியில் அதை மொழிபெயர்த்து வெளியிட்டார். 

அதேபோல்தான் நானும் உங்களுக்கு உலக சினிமா என்றால் என்ன, அது எப்படி இருக்கும், எப்படி இருக்க வேண்டும் என்று சுமார் ஐம்பது திரைப்படங்களிலிருந்து எடுத்து காட்சி காட்சியாக விளக்கினேன்.  அதிலிருந்து நீங்கள்தான் ஒரு உலகத் திரைப்படத்தை உருவாக்க வேண்டும்.  உலக சினிமாவை உருவாக்கும் தொழில்நுட்பத்தை நான் கற்பிக்க மாட்டேன்.  ஏனென்றால், தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு உலக சினிமாவை உருவாக்க முடியாது. 

ஒரு உதாரணம் சொல்கிறேன்.  சமீபத்தில் ஒரு நண்பர் தான் எடுத்த ஒரு குறும்படத்தை அனுப்பி வைத்தார்.  அவர் என் எழுத்து எதையும் படித்ததில்லை என்று புரிந்தது.  ஏனென்றால், சில நாள்களுக்கு முன்னர்தான் இப்படி நீங்கள் எடுக்கும் குறும்படங்களை எனக்கு அனுப்பினால் அதற்கு ஒரு கட்டணம் செலுத்த வேண்டும் என்று எழுதினேன்.  காரணம், என் நேரம் விலை மதிக்க முடியாதது.  இது தொடர்பாக அனுராக் காஷ்யப் எழுதியிருந்த குறிப்பையும் கொடுத்திருந்தேன்.  அதற்குப் பிறகும் அந்தக் குறும்படத்தைப் பார்த்தேன்.  சுமார் அரை மணி நேரம்.  இலக்கிய உதாரணம் சொல்ல வேண்டுமானால், மேலாண்மை செ. பொன்னுசாமியோ சு. சமுத்திரமோ எழுதிய கதை போல் இருந்தது.  அவர்களும் எழுத்தாளர்கள்தான்.  தொழில்நுட்பம் எல்லாம் பிரச்சினையே இல்லை.  அவரால் நிச்சயம் வெகு சீக்கிரத்தில் ஒரு மாற்று சினிமா செய்ய முடியும்.  வசந்த பாலன், ராஜு முருகன் தரத்தில்.  ஆனால் உலக அரங்கில் அது செல்லுபடி ஆகுமா?  தமிழ்நாட்டை விட்டே வெளியே போக முடியாதே?

நான் கற்பித்தது இம்மாதிரி அரைவேக்காட்டுப் படங்கள் அல்லவே? 

ஆகவே, உலக சினிமாவை உருவாக்க அடிப்படைத் தேவை, தொழில்நுட்பம் அல்ல.  தேவை, vision.  சரி, அதைக் கூட விட்டு விடுவோம்.  காலை பத்து மணியிலிருந்து மாலை ஆறரை வரை நான் கற்பித்தது உலக சினிமாவுக்குத் தேவையான திரை மொழி.  ஒரு புதிய திரைமொழியை உருவாக்கத் தெரியாவிட்டால் உங்களால் சர்வதேசத் தரத்துக்கு ஒரு படத்தைக் கொடுக்க முடியாது. 

காந்தியின் உதாரணத்தை நினைவு கூருங்கள்.  நல்ல திரைப்படத்தை உருவாக்குவதற்கான ஃபார்முலாவை நான் தர முடியாது.  ஆனால், அதற்குத் தேவையான திரைமொழி எப்படி இருக்க வேண்டும், அந்தத் திரைமொழியைக் கண்டு பிடிப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பதையெல்லாம் நான் கற்பித்து விட்டேன்.  இனி நீங்கள்தான் அதற்கான முன்னெடுப்பைச் செய்ய வேண்டும்.  ஒவ்வொரு படியாக நான் உங்களைக் கைப்பிடித்துச் செல்ல முடியாது.  திரைமொழியை நான் உங்கள் கரங்களில் கொடுத்து விட்டேன்.  இனி நீங்கள்தான் ஆட்டத்தை ஆட வேண்டும்.  ஒவ்வொரு தருணத்திலும் குருவிடம் சென்று ”என்ன செய்ய வேண்டும்?”, ”நீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்க?” என்று கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது. 

மட்டுமல்லாமல் என்னவெல்லாம் செய்யக் கூடாது என்றும் நான் சொல்லியிருக்கிறேன்.  குறைந்த பட்சம், என்னுடைய ஒன்பது மணி நேர உரையை நீங்கள் கேட்டால் உங்கள் வாழ்நாளில் ஒருபோதும் இந்தியன் 2 போன்ற ஒரு குப்பையை – மலத்தொட்டியைத் தர மாட்டீர்கள். அது உறுதி. 

சாரு

பின்குறிப்பு: 1. இன்னும் ஆறு மாதத்தில் சென்னையில் “ஐரோப்பிய சினிமா : ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில் ஒரு முழுநாள் வகுப்பு நடக்கும்.  பயிலரங்கு என்றால் வேறு அர்த்தம் வந்து விடுகிறது.  அதனால்தான் இந்தத் தலைப்பு. 

2. திருவண்ணாமலை பயிலரங்கில் நான் பேசிய ஒன்பது மணி நேர உரை மற்றும் நான் காண்பித்த சர்வதேசத் திரைப்படங்களிலிருந்து சில காட்சிகள் ஆகியவற்றுக்கான ஒளிப்பதிவு வந்து விட்டது.  இன்று இரவிலிருந்து கட்டணம் கட்டியவர்களுக்கு அனுப்பி வைப்பேன்.  இதை நீங்கள் ஒரு மாதம்தான் ட்ரைவில் வைத்திருக்க முடியும்.  அதற்குள் அதை டவுன்லோட் செய்து விடுங்கள்.  இது முழுக்க முழுக்க உலக சினிமாவைப் பயில்வதற்கான ஒரு முன்னெடுப்பு.  வணிக நோக்கத்திற்கானது அல்ல.  ஏற்கனவே ஒளிப்பதிவுக்கான கட்டணம்/நன்கொடை கட்டியவர்கள் தவிர வேறு யாருக்கேனும் தேவைப்பட்டால் அதற்கான குறைந்த பட்ச நன்கொடை (இந்தியாவுக்குள்) 2000 ரூ.  வெளிநாடு: 50 யுஎஸ் டாலர். 

தொடர்புக்கு: charu.nivedita.india@gmail.com