திருவண்ணாமலையில் ஜூன் முப்பதாம் தேதி உலக சினிமா பயிலரங்கை முடித்துவிட்டு மறுநாள் நானும் சீனியும் ராஜா வெங்கடேஷும் அந்த வனத்தை நோக்கிக் கிளம்பினோம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கிறது அந்த அடர்ந்த வனம். பெயரைச் சொல்ல விரும்பவில்லை. அதை அரசாங்கமே சுற்றுலாப் பயணிகளின் பார்வையிலிருந்து மறைத்து வைத்திருப்பதாகத் தோன்றுகிறது. சீனியும் ராஜாவும் மாற்றி மாற்றி கார் ஓட்டினார்கள். வழியில் கறி விருந்துக் கடைகள் நிறைய இருந்தன. உணவு உலகத் தரம். இங்கே சென்னையில் ஈரல் வறுவல் என்று கேட்டால் இரண்டு ஸ்பூன் தருவார்கள். விலை 150 ரூ. அந்த இரண்டு ஸ்பூனில் ஒரு ஸ்பூன் வெங்காயமாக இருக்கும். அங்கே ஒரு கை அளவு அள்ளி வைக்கிறார்கள். கறியெல்லாம் அப்படியே வெண்ணெயாக வழுக்கிக் கொண்டு போனது.
மட்டுமல்லாமல் வனத்துக்குச் செல்லும் வழியெல்லாம் கேரளத்தைப் போல் பச்சைப் பசேல் என்று இருந்தது. மாடுகளின் மடிகள் தரையைத் தொட்டன. அத்தனை வளத்தை நான் தமிழ்நாட்டில் வேறு எங்கேயும் கண்டதில்லை.
நான்தான் ஒரு பெரிய தவறு செய்து விட்டேன். நான் எங்கே பயணம் சென்றாலும் எனக்குத் தேவையான அளவுக்கு மேலேயே வைன் போத்தல்களை எடுத்துக்கொண்டு போவேன். குறிப்பாக சீலே வைன். இந்த ஐட்டம் தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும்தான் கிடைக்கும். இரண்டு போத்தல் வாங்கிக்கொண்டு வருகிறேன் என்று சொல்லியிருந்தாள் ஸ்ரீ. வேண்டாம், ஒன்று போதும் என்று சொல்லி விட்டேன். காரணம், என் மண்டை பூராவும் இருந்தது உலக சினிமா. இன்னொரு காரணம், ’மற்ற நண்பர்களும் வாங்கி வருவார்கள், எண்ணிக்கை அதிகமானால் வீட்டுக்கும் கொண்டு வர முடியாது’ என்று நினைத்து விட்டேன். ஆனால் பழனிவேலும் மற்றொரு நண்பரும்தான் வாங்கி வந்தார்கள். அதனால் அந்த வனத்துக்குச் சென்ற போது எனக்கு வைன் இல்லை. இதுபோல் இதுவரை நடந்தது இல்லை.
வனத்தில் போய் அமர்ந்து கொண்டு வைன் இல்லாமல் எப்படி? வனத்துக்குச் செல்லும் வழியில் பல டாஸ்மாக் கடைகள் இருந்தன. வைனும் இருந்தது. அதெல்லாம் சர்க்கரைப் பாகு போன்றவை. போர்ட் வைன் என்று பெயர். நாக்கில் பட்டாலே வாந்தி எடுத்து விடுவேன். அதனால் போதுமான அளவுக்கு பியர் வாங்கிக் கொண்டோம்.
வனத்தில் உணவுதான் பிரச்சினை. ஒரு நாள் சப்ஜெயில் சாப்பாடு. மற்ற நாள்களில் சீனி கீழே போய் அற்புதமான சிக்கன் ஃப்ரை வாங்கி வந்தார். தமிழ்நாடு பூராவும் சிக்கன் என்றால் நார் நாராக வரும். வனத்துக்குப் பக்கத்தில் இருந்த சிற்றூரில் கிடைத்த சிக்கன் ஃப்ரை அப்படி நார் நாராக இல்லை. ஹல்வா போல் குழைந்தது. ஆனால் அதிசயம் என்னவென்றால், அதே கடையில் கோழிக் கறி வாங்கி வந்து வனத்தில் இருந்த சமையல்காரரிடம் கொடுத்தோம். அதை அவர் தமிழ்நாட்டைப் போலவே நார் நார் கோழிக்கறியாகக் குழம்பு வைத்துக் கொடுத்தார். கறியையெல்லாம் தாய்நாய்க்குப் போட்டு விட்டு நான் குழம்பை மட்டும் ஊற்றிக் கொண்டேன். அடுப்பை மிதமான பதத்தில் வைத்தால் குழம்பிலும் கறி ஹல்வாவாகக் குழையும்.
கொசுக்கள் மாலை ஆறு மணியிலிருந்து ஏழு மணி வரைதான் இருந்தன. அதற்குப் பிறகு கொசுவின் தடயமே இல்லை. அந்த அடர்ந்த வனத்தில் குளிருக்கு இதமாக ஒரு ஷெட் போட்டிருந்தார்கள். அங்கே அமர்ந்து கொண்டோம். மூன்று மணி வரை ஓடியது பேச்சு. சுற்றி வர வன ஜந்துக்களின் சப்தம் மட்டுமே. எனக்குக் கடலை விட வனமே பிடித்திருக்கிறது என்று அந்த இரவுகளிலும் ஞாபகம் வந்தது.
சீனியோடு நான் எங்கெங்கோ சென்றிருக்கிறேன். சீனத்தின் எல்லையைத் தொட்டுக் கொண்டிருந்த பாங்கோங் ஏரியில் கழித்த ஓர் இரவு ஒரு அற்புதம். ஆனால் அதை விட எனக்கு இந்த வனம் பிடித்திருந்தது. காரணம், பாங்கோங்கில் நண்பர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. அது சீனிக்கு ஒத்து வரவில்லை. இந்த வனத்தில் அந்தப் பிரச்சினை இல்லை. மட்டுமல்லாமல் பாங்கோங் ஒரு சாகசம். இந்த வனம் சாகசத்தை வேண்டவில்லை. ஒரு தாய்லாந்து பாலியல் தொழிலாளி போல் அரவணைத்துக் கொண்டது. அத்தனை இதம்.
திரும்பிப் பார்த்தால் இந்த வனத்தில் கழித்தது போன்ற இன்பமான இரவுகளை என் பயணங்களில் நான் கண்டதில்லை. இதற்கு முந்தின வாரம்தான் கேரளத்தின் அருவிக் குழியில் தங்கியிருந்தோம். அங்கே அருவி இருந்தது. அழகும் அதிகம். உணவும் அருமை. ஆனாலும் எனக்கு இந்தக் கிருஷ்ணகிரி மாவட்டத்து வனம்தான் அதி உற்சாகமாக இருந்தது. எனக்குப் பிடித்த வைன் கூட இல்லாதிருந்தும்.
அந்த இரவில் பியர் அருந்தியபடி, அவ்வப்போது வேப்பை இழுத்துக்கொண்டு இலக்கியமும் தத்துவமும் பேசிக்கொண்டிருந்த மூன்று இரவுகளை என்னால் வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாது.
ஒரே ஒரு நாள் ஒரு வனவாசி சிவனுக்குப் பிரியமான ஒரு இலையின் தூளைப் புகைத்துக்கொண்டிருந்தார். கடும் அடிக்ஷனைத் தரக் கூடிய அந்த வஸ்துவுக்கு அடிமையாகாமல் அதை அவ்வப்போது புகைக்கும் ஒரே மானுடன் நான்தான். புகைக்கிறீர்களா என்று கேட்டார். வாங்கி ஒரு ஐந்து இழு இழுத்தேன். சிவன் என் அருகே வந்து விட்டான். அப்புறம் என்ன? வாழ்வே இன்ப மயம்.