2. குருவுக்கு வணக்கம்!

மாதா பிதா குரு தெய்வம் என்பது மூத்தோர் வாக்கு.  ஒரு குழந்தையை மனிதனாக மாற்றுவது மாதா பிதாவின் கடமை.  அதனால் அவர்கள் முன்னால் நிற்கிறார்கள்.  அடுத்தது குரு.  அதுவும் தெய்வத்துக்கு முன்னதாக.  அப்படியானால் குரு தெய்வத்தை விட முக்கியமானவரா?  அல்ல.  மாதா பிதாவினால் மனிதனாக உருவாக்கப்பட்ட ஒரு வியக்திக்கு தெய்வத்தை அடையாளம் காண்பிப்பவர் குரு.  தெய்வத்தை நோக்கி அந்த மனிதனை இட்டுச் செல்லும் பாதையையும் வழிமுறைகளையும் கற்பிப்பவர் குரு.

இங்கே தெய்வம் என்பதை நீங்கள் பின்நவீனத்துவ காலகட்டத்தின் பொருளில் புரிந்து கொள்ள வேண்டும்.  மனிதர்கள் இப்போது எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்?  பொறாமை, பேராசை, அடுத்தவர் பொருளை அபகரித்தல், அடுத்தவரை இம்சித்து அதில் ஆனந்தம் அடைதல், அதிகாரத்துக்காக என்ன வேண்டுமானால் செய்தல் – இது போன்றவைதான் மனிதரின் அடையாளங்களாக இருக்கின்றன.  ஆட்டோக்காரர் முப்பது ரூபாய் தூரத்துக்கு நூறு ரூபாய் கேட்கிறார் என்று எல்லோரும் அங்கலாய்க்கிறார்கள்.  ஆனால் அப்படி ஆட்டோக்காரரைக் குறை சொல்லும் அத்தனை பேரும் தம் வாழ்வில் அடுத்தவர் பொருளை அபகரிப்பதில் முந்திக்கொண்டு செல்கிறார்கள்.  நான் வாடகைக்கு வீடு பார்த்துக்கொண்டிருக்கிறேன்.  சொல்லி வைத்தாற்போல் எல்லோருமே சந்தை மதிப்பை விட இரண்டு மடங்கு அதிகமாகக் கேட்கிறார்கள்.  நியாயமான வாடகை நாற்பதாயிரம் என்றால் கூசாமல் அதற்கு எண்பதாயிரம் கேட்கிறார்கள்.  இவர்கள்தான் ஆட்டோக்காரரையும் அரசியல்வாதியையும் விமர்சிப்பது. 

ஏற்கனவே எழுதிய உதாரணம்தான்.  ஒரு ஆள் என் நண்பரை எழுபது ஆயிரம் ரூபாய் ஏமாற்றினார்.  அவரை அவருடைய பங்குதாரர் எழுபது லட்சம் ஏமாற்றினார்.  இது சில மாத இடைவெளியில் நடந்தது. 

அவந்திகாவின் இளம் வயதில் ஒரு சாலை விபத்து ஏற்பட்டு மண்டையில் பெருத்த காயம்.  அதனால் அவளுக்கு அதிக சப்தம் மண்டைக் குடைச்சலை ஏற்படுத்தும்.  என் பக்கத்து வீட்டுக்காரர் கீழே ஒரு கடை வைப்பதற்காக இரவு பகலாக ‘ட்ரில்லிங்’ மெஷின் போட்டுக்கொண்டிருந்தார்.  பகலில் போடுங்கள், இரவில் நாங்கள் தூங்க வேண்டும் என்று அவர் காலில் விழாத குறையாகக் கெஞ்சினோம்.  கேட்கவில்லை.  அதனால் நாங்கள் சில தினங்கள் சர்விஸ் அபார்ட்மெண்ட்டில் போய் தங்க வேண்டியிருந்தது.  கடும் செலவு. கடும் அலைச்சல்.

இப்போது இந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் மேல் வீட்டில் ஒரு இளைஞன் இரவு பகலாக சிகரட் புகைக்கிறான்.  என் பக்கத்து வீட்டுக்காரரால் மூச்சு விட முடியவில்லை.  இருதய அறுவை சிகிச்சை செய்தவர்.  புலம்போ புலம்பு என்று புலம்புகிறார்.  அவருக்கு மரண பயமே வந்து விட்டது.  பூனைக்கு உணவு கொடுக்காதீர்கள் என்று சொல்லி எனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியவர் அவர்.

இப்படிப்பட்ட கீழ்த்தரமான மனிதக் கூட்டத்தில் என் எழுத்தை வாசிக்கும் நீங்கள் ஒரு மேம்பட்ட மனிதனாக உயர்ந்து நிற்கிறீர்கள்.  உங்களால் அடுத்தவருக்கு இம்சை இல்லை.  உங்கள் மீது அடுத்த மனிதருக்குப் புகார் இல்லை.  உங்கள் இசை ரசனை உயர்ந்திருக்கிறது.  இலக்கிய ரசனை உயர்ந்திருக்கிறது.  வாழ்வை இன்னும் நுணுக்கமாகக் கண்டு ரசிக்க ஆரம்பித்திருக்கிறீர்கள்.  இப்படி எனக்கு எத்தனையோ கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன.  உதாரணத்துக்கு ஒரு கடிதம்:

Kundun படம் திரும்பத் திரும்ப பார்த்தேன்.  என்னால் அழுகையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.  எத்தனை மகத்தான ஒரு படம் இது. எப்பேர்ப்பட்ட வசனங்கள்.  இந்த படம் பார்த்த பிறகு இந்த வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அது ஒரு பொருட்டேயில்லை என்ற மனோநிலை வந்து விட்ட்து.  பயமாக இருக்கிறது.  எதன் கூடவும் ஒட்டவே முடியவில்லை.  எப்படி இம்மாதிரியெல்லாம் நடக்கலாம்…  என்ன சொல்வதென்றே தெரியவில்லை.  இந்த படத்தைப் பற்றித்தானே ரொம்ப வருஷம் முன்பு சொல்லியிருந்தீர்கள்?  நீங்களும் ஒரு இயக்குநரும் கண்ணை மூடிக்கொண்டு, தலாய்லாமா எப்போது இந்திய எல்லையை அடைகிறார் என்று அதன் இசையை வைத்து மிகச் சரியாக சொல்ல வேண்டும் என்று?  நீங்கள் அதைச் சரியாக சொன்னீர்கள்.  நீங்கள் எங்களுக்குக் கிடைத்த பரிசு.”   

மூர்த்தி.

இப்படி உங்கள் வாழ்வில் ஒரு சீரிய மாற்றத்தை என் எழுத்து கொண்டு வந்திருக்கிறது இல்லையா?  அதுதான் தெய்வம்.  அப்படித்தான் உங்களுக்கு நான் தெய்வத்தைக் காண்பித்துக்கொண்டிருக்கிறேன். 

எனக்கும் ஆசான்கள் இருந்திருக்கிறார்கள்.  பாரதி, புதுமைப்பித்தன், க.நா.சு., சி.சு. செல்லப்பா, ந. பிச்சமூர்த்தி, கரிச்சான் குஞ்சு, லா.ச.ரா., கு.ப.ரா., தி.ஜானகிராமன், தஞ்சை பிரகாஷ் – எல்லோருமே என் ஆசான்கள்தான். 

எல்லோரையும் விட முக்கியமானவர் அசோகமித்திரன்.  அவர் கணையாழியில் ஆசிரியராக இருந்த போது நான் தில்லியிலிருந்து இரண்டு மாதங்களுக்கு ஒரு சிறுகதை வீதம் கணையாழிக்கு அனுப்புவேன்.  மொகலாயத் தோட்டம், ஷங்கர்லால் இசை விழா என்று சில பெயர்கள் ஞாபகம் வருகின்றன.  அதையெல்லாம் படித்தவுடன் அசோகமித்திரன் எனக்கு ஒரு போஸ்ட்கார்ட் போடுவார்.  கார்டின் எல்லா இடங்களிலும் அவர் கையெழுத்து நிரம்பியிருக்கும்.  கடுகளவு கூட வெற்றிடம் இருக்காது. 

ஆனால் நான் அந்த இடத்திலிருந்து வேறிடம் மாறி முனியாண்டி என்ற பெயரில் மீட்சியில் கர்னாடக முரசு, ஜோக்கர் போன்ற கதைகளை எழுதிய போது அது அவருக்குக் குப்பையாகத் தோன்றியது.  குப்பை என்றெல்லாம் வாய் விட்டுச் சொல்ல மாட்டார்.  அகிலனை சுந்தர ராமசாமி மலக்கிடங்கு என்று எழுதியதையே “அப்படியெல்லாம் எழுதக் கூடாது, அகிலனும் எழுத்தாளர்தானே?  ஏதோ அவருக்குத் தெரிந்ததை எழுதறார்” என்றார் அசோகமித்திரன்.  ஆனால் என்னிடம் அடிக்கடி “நீ கெட்டுப் போய் விட்டாய் ரவி.  கணையாழியில நீ என்னமா எழுதிண்டிருந்தே?  நீ எழுதின ஒரு விஷயத்தை என்னால மறக்கவே முடியாதுப்பா. அந்தக் காலத்துல நூத்தன் ஸ்டவ்னு ஒண்ணு இருந்தது.  கெரஸின் ஸ்டவ்.  அதிலே திரியை ஏத்தறது ஒரு ஹிமாலயன் டாஸ்க்.  அதிலே உன் ஆத்துக்காரி திரியை ஏத்தி அவொ விரலெல்லாம் கொப்பளிச்சுப் போச்சுன்னு எழுதியிருந்தியே?  அப்படில்லாம் எழுதின நீ இப்போ என்ன எழுதுறே?  என்னமோ போ.  ஆனா உன் ரைவல் ஜெயமோகன் என்னமா எழுதறான் தெரியுமா?  அவனோட விஷ்ணுபுரம் இந்த செஞ்சுரிலயே பெஸ்ட் நாவல்…” என்று சொல்வார். 

ஆனாலும் என்னிடம் அவர் அந்நியோந்நியமாகப் பழகினார்.  ”நீங்கள் என் ஆசிரியர், உங்களை நான் பார்க்க வரும்போது உங்களுக்கு நான் ஏதாவது வாங்கி வர வேண்டும்” என்பேன்.  முதல் இரண்டு சந்திப்புகளில் “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்ப்பா, எனக்குத் தேவைன்னு ஒண்ணும் இல்லாமப் போயிடுத்து” என்று சொன்னவர், மூன்றாவது சந்திப்பில் “சரி, நீ வரும்போது ஒரே ஒரு மொளகா பஜ்ஜி வாங்கிண்டு வா, ஆனா ஒண்ணுக்கு மேல வேண்டாம், என்னால சாப்பிட முடியாது” என்றார்.  அதிலிருந்து அவரைச் சந்திக்கும்போதெல்லாம் ஒரே ஒரு மொளகா பஜ்ஜி வாங்கிக்கொண்டு போவேன். 

ஒருமுறை என் நச்சரிப்பு தாங்காமல் “சரி, ஒரு ட்ரான்ஸிஸ்டர் வாங்கிக் கொடு” என்றார்.  ஃபிலிப்ஸ்.  அசோகமித்திரன் தவறாமல் ட்ரான்ஸிஸ்டரில் சில பேச்சுகளைக் கேட்பார்.  என்ன என்று மறந்து விட்ட்து.  வாங்கிக்கொடுத்தேன். 

அநேகமாக அவர் தன் தேவையை வாய் விட்டுக் கேட்ட ஒரே மனிதன் நானாகத்தான் இருப்பேன்.  பிள்ளைகளிடம் கூட தன் தேவைகளைக் கேட்கக் கூடிய இயல்பு கொண்டவர் அல்ல அசோகமித்திரன்.

இலக்கியத்தில் என் ஆசான் அசோகமித்திரன் என்றாலும் லௌகீக வாழ்வில் ஒரு மனிதன் எப்படி வாழக் கூடாது என்பதை நான் இருவரிடமிருந்து கற்றுக்கொண்டேன்.  ஒன்று, என் நைனா.  இரண்டு, அசோகமித்திரன்.  (இருவரும் அசப்பிலும் உடல்வாகிலும் ஒரே ஜாடையாக இருப்பார்கள்.)

என் நைனா ஒரு சராசரி மனிதர்.  அவர்கள் அப்படி வாழலாம்.  ஆனால் ஒரு எழுத்தாளன் அசோகமித்திரனைப் போல் வாழவே கூடாது.  வாழ்ந்தால் அது பாவம்.  அசோகமித்திரன் ஒரு மத்தியதர வர்க்கக் குடும்பஸ்தனைப் போலவே வாழ்ந்தார்.  தி.நகர் பேருந்து நிலையம் எதிரில் ஒரு தனி வீடு அவருடையது.  இரண்டு க்ரவ்ண்டு நிலத்தில் நடுநாயகமாக இருக்கும் அந்தப் பழைய மாடி வீடு.  முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அவர் அங்கேதான் வாழ்ந்தார்.  அவர் தந்தை வாங்கியிருக்க வேண்டும்.  ஆஸ்துமாவுக்கு வாங்க வேண்டிய மருந்து மாத்திரைகளுக்குக் காசு இருக்காது.  தன் பிள்ளைகள் வேலைக்குப் போகும் வரை அசோகமித்திரன் ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளுக்கு மணியார்டரில் வரும் சொற்பமான சன்மானத்தில்தான் வாழ்ந்தார். 

நானாக இருந்தால் அந்தத் தனி வீட்டை விற்று விட்டு, வாடகை வீட்டில் இருந்து கொண்டு ஆஸ்துமாவுக்கு மருந்து வாங்கி சாப்பிட்டு ஜாலியாக வாழ்ந்திருப்பேன். 

கடைசியில் அந்த வீட்டை ஒரு ‘பில்டரி’டம் விற்றார்.  அந்த பில்டர் அங்கே ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டி அசோகமித்திரனுக்கு அதில் ஒரு அபார்ட்மெண்ட்டைக் கொடுத்தார்.  அதில், திருமணம் ஆன அவருடைய ஒரு மகன் வாழ்ந்தார்.  அசோகமித்திரனுக்கு அந்த வீட்டில் ஒரு அறை கிடைத்தது.  அந்த அறையில்தான் நான் அவரைச் சந்திப்பேன்.  பத்துக்குப் பத்து அறை.  ஒருநாள் நான் அவரிடம் “எங்கே சார் உங்களுடைய புத்தகங்கள்?” என்று கேட்டேன்.

என்னை ஏற இறங்கப் பார்த்தவர் – ஒரு கைப்பு உணர்வுடன் – கன்னக் கதுப்புகளை (???!!!) மேலே தூக்கி, கண்களைச் சுருக்கி – ”இந்த அறையிலெ நாம மூணு பேர் நிக்கறதே கஷ்டம், இதில புக்ஸ் வேறயா?  எல்லாத்தையும் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட தூக்கிக் குடுத்துட்டேன்” என்றார்.  மூன்றாவது நபர் அழகிய சிங்கர்.

அசோகமித்திரன் அதோடு நிறுத்தவில்லை.  ஒருமுறை தன் பேத்தியை பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்குத் தன் சைக்கிளில் அழைத்து வரும்போது கீழே விழுந்து அவருடைய இடுப்பு எலும்பு முறிந்து விட்டது.  அதன் காரணமாகத் தன் இறுதி நாள் வரை பெரும் கஷ்டத்தை அனுபவித்தார் அசோகமித்திரன்.   

என் நைனாவின் கதையை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.  இருந்தாலும் சுருக்கமாக.  பைசா பைசாவாக சேர்த்து ஒரு இரண்டு கிரவுண்டு வாங்கி அதில் ஒரு வீட்டைக் கட்டினார்கள்.  அதை என் தம்பிக்கு எழுதி வைத்தார்கள்.  தம்பி நாற்பது வயதில் இறந்து போனான்.  இப்போது அந்த வீடு ஒரு மதப் பிரச்சார ஸ்தலமாக பச்சைக் கொடியுடன் இயங்கி வருகிறது.  தம்பி திருமணம் செய்தது ஒரு மாற்று மதப் பெண்ணை.  தம்பிக்கும் அந்தப் பெண்ணுக்கும் குழந்தை இல்லை.  அந்தப் பெண் மிகக் குறைந்த விலைக்கு அந்த இடத்தையும் வீட்டையும் தன் மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விற்று விட்டு, அந்தப் பணத்தையும் வீண் செலவு செய்து விட்டு, இப்போது மீண்டும் விளிம்பு நிலைக்குப் போய் விட்டது.

இதை வாசிக்கும் நண்பர்களே, என் நைனாவும் அசோகமித்திரனும்தான் இந்த வாழ்க்கையை எப்படி வாழக் கூடாது என்று எனக்குக் கற்பித்த குருநாதர்கள்.

ஆனாலும் என் மனைவி அவந்திகா காரணமாக நானும் இம்மாதிரி சிலுவைகளை அவ்வப்போது சுமக்க வேண்டியிருக்கிறது.  நான் சில இளைஞர்களை என் கருணையினாலும் கடமையினாலும் படிக்க வைத்தேன்.  எல்லோருமே கடைசியில் என் மூஞ்சியில் குசு விட்டுவிட்டுப் போய் விட்டார்கள்.  ஒருத்தனுக்காக வங்கியில் வாங்கிய கல்விக் கடனைக் கூட அவந்திகாதான் அடைத்தாள்.  அந்த இளைஞர்கள் இப்போது லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.  எனக்கு அவர்களிடமிருந்து கிடைத்தது குசு. 

அதை விடுங்கள்.  என்னை ஆதரிக்கவும் கொண்டாடவும் நீங்கள் இருக்கிறீர்கள்.  எனவே என்னிடமிருந்து பெற்றுக்கொண்டு என் முகத்தில் குசு விட்டவர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

ஆக, இந்த குரு பூர்ணிமா அன்று நான் உங்களுக்கு சில தரிசனங்களைத் தருகிறேன்.

நீங்கள் வசதியாக வாழ்வதற்குத் தேவையான ஒரு வீட்டை வாங்குங்கள், கட்டிக் கொள்ளுங்கள்.  அதில் தவறு இல்லை.  ஆனால் ஒருபோதும் உங்கள் பிள்ளைகளுக்காக வீடு வாங்காதீர்கள்.  ஏனென்றால், நான் வீடு தேடியபோது எந்த ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பிலும் அந்த வீட்டின் முதலாளி அந்தக் குடியிருப்பில் உள்ள அத்தனை வீடுகளுக்கும் உரிமையாளராக இருந்தார்.  நான்கு அல்லது ஆறு வீடுகள்.  ஒவ்வொரு வீட்டுக்கும் வாடகை 70000 ரூ.  நான்கு வீடாக இருந்தாலும் சுமார் மூன்று லட்சம் மாத வருமானம்.  இத்தனை கோடிகளையும் வைத்துக்கொண்டு இவர்கள் எப்படி வாழ்கிறார்கள்?  உடம்பு பூராவும் வியாதி.  பார்த்தாலே வியாதியஸ்தர்கள் என்று தெரிகிறது.  பிள்ளைகள் அமெரிக்காவில் வசிக்கிறார்கள்.  அந்தப் பிள்ளைகள் இந்த வீடுகளுக்கு வந்து வசிக்கவே போவதில்லை.  இந்தப் பணமெல்லாம் பணமாகவே வங்கியில் எப்போதும் கிடக்கும். 

இவர்களைப் பார்த்தால் எனக்கு குப்பைப் பையில் ஐந்து லட்சத்தை வைத்துக்கொண்டு நடைபாதைகளில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் பிச்சைக்காரர்கள்தான் ஞாபகம் வருகிறார்கள். 

இப்படி வீடு வீடாகக் கட்டி லட்சக்கணக்கில் வாடகைக்கு விட்டு வியாதியஸ்தர்களாக வாழும் இந்தப் பேதை மனிதர்கள் தம் வாழ்வில் ஒரு புத்தகம் கூடப் படித்திருக்கவில்லை.  ஒரு நல்ல இசையைக் கேட்டதில்லை.  ஒரு நல்ல படம் பார்த்த்தில்லை.  ஒரு நல்ல குடியைக் கூட குடித்திருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது.  எல்லோருமே முற்றிய நோயாளிகளைப் போல் தோற்றமளிக்கிறார்கள். 

என் உறவுக்காரப் பையன் ஒருத்தன் இருக்கிறான்.  அமெரிக்காவில் மாதம் பத்து லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறான்.  அவன் மனைவிக்கும் அதே ஊதியம்.  பிள்ளைகள் இல்லை.  சென்னையிலும் பெங்களூரிலுமாக வீடு வீடாக வாங்கிக் குவித்துக்கொண்டேயிருக்கிறான். 

உங்கள் குழந்தைகளுக்குக் கல்வியை அளியுங்கள்.  அதற்காகப் பணம் செலவு செய்யுங்கள்.  பிச்சை எடுத்தாவது படிக்க வையுங்கள்.  ஆனால் பிள்ளைகளுக்காக வீடு கட்டாதீர்கள்.  அவர்களுக்கான வாழ்க்கையை அவர்களேதான் அமைத்துக்கொள்ள வேண்டும். 

உங்களுக்கே ஒரு வீடு இருந்தாலும் எழுபது வயதில் அதை விற்றுவிட்டு உலகம் சுற்றுங்கள்.  எழுபது வயதுக்கு மேல் வாடகை வீட்டில் இருந்து கொள்ளலாம்.  உலகம் சுற்றப் பிடிக்காவிட்டால் வீடு விற்ற பணத்தில் உங்களுக்கு விருப்பமானதைச் செய்யுங்கள்.  நிரந்தர வைப்புத் தொகையில் பணத்தைப் போட்டு விட்டு அதில் கிடைக்கும் வட்டியை வைத்து சௌக்கியமாக வாழுங்கள்.  இந்த விஷயத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையின் பேச்சைக் கேட்கவே கேட்காதீர்கள்.

இலவசமாக உங்கள் பிள்ளைக்குக் கிடைக்கும் வீட்டின் அருமை உங்கள் பிள்ளைக்குத் தெரியாது என்பதால் இதைச் சொல்கிறேன்.

பணத்துக்கும் உங்களுக்குமான உறவு ஆரோக்கியமாகவும் உங்களுடைய மகிழ்ச்சிக்கான காரணமாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் நான் சொல்லும் அடிப்படை விதி. 

என் கோடீஸ்வர நண்பர் எனக்குப் பலவிதங்களில் உதவிகரமாக இருந்தாலும் எனக்கு இதுவரை பண உதவியே செய்தது இல்லை.  ஒரு கட்டத்தில் அவர் தன் தொழிலிலிருந்து விலகிக்கொண்டு தன் பிள்ளையைத் தன் இடத்தில் அமர்த்தினார்.  சிறு வயதிலிருந்தே என்னை அறிந்த அந்த இளைஞன் தன் தந்தையின் நிறுவனத்தில் பொறுப்பு அதிகாரியாக வந்ததும் என்னை அழைத்து “உங்களுக்கு எங்கள் அலுவலகத்தில் ஒரு வேலை போட்டிருக்கிறேன், மாதம் இருபத்தைந்து ஆயிரம் சம்பளம்” என்றான். 

இது நடந்து ஏழெட்டு ஆண்டுகள் இருக்கும்.  ஐயோ, என்னால் இந்த வயதில் அலுவலகமெல்லாம் வர முடியாதே என்றேன்.  ”வர வேண்டாம், வேலையும் செய்ய வேண்டாம்.  இந்த வேலை வெறும் அலுவலகக் காகிதங்களில் மட்டுமே இருக்கும்.  நீங்கள் எதுவுமே செய்ய வேண்டாம்.  எழுதிக்கொண்டே இருங்கள். மற்றபடி சம்பளம் மட்டும் வந்து விடும்” என்றான்.

மூன்று ஆண்டுகள் அந்தப் பணம் வந்தது.  பின்னர் மோடியின் பொருளாதாரச் “சீர்திருத்தங்களால்” அந்த அலுவலகத்தில் பல சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு என் சம்பளமும் நிறுத்தப்பட்டது.   இங்கே, திருவண்ணாமலை பயிலரங்குக்கு சென்னையிலிருந்து தன் நண்பனோடு காரில் வந்த என் நண்பரின் மகன் பயிலரங்கில் கட்டணம் எதுவும் செலுத்தாமல் ஓசியில் பார்த்து விட்டு என் மூஞ்சியில் குசு விட்டுவிட்டுப் போனது பற்றி எழுதியிருந்ததை நீங்கள் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.  

இந்தப் பையனையும் எனக்கு எந்த வேலையும் இல்லாமல் சம்பளம் போட்டுக்கொண்டிருந்த இளைஞனையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். 

பயிலரங்குக்கு ஓசியில் வந்தவன் தன் தகப்பன், தாய் ஆகியோரின் முதுகில் ஏறிச் சவாரி செய்பவன்.  அதனால் தன் தகப்பனின் நண்பனான என் முதுகிலும் சவாரி செய்யலாம் என்று முடிவு செய்து விட்டான்.  ஆனால் கோடீஸ்வரரின் மகனோ தன் தந்தை செய்யாமல் விட்டதை இவன் செய்து காண்பிக்கிறான். 

***

சிறிது நேரத்துக்கு முன்னால் சீனியோடு பேசினேன். முந்நூறு ரூபாய் திட்டத்தைச் சொன்னேன். நான் எதிர்பார்த்தது போலவே விளங்காது என்றார்.  ”ஆயிரம் பேர் முந்நூறு ரூபாய் அனுப்பினால் இந்தத் திட்டம் நல்லதாகும்.  ஆனால் இங்கே நூறு பேர்கூட அனுப்ப மாட்டார்களே?” என்றார்.

இன்னொன்றும் சொன்னார்.  “உங்களுக்கு ஐந்தாயிரம் பத்தாயிரம் என்று அனுப்புபவர்களும் இனிமேல் முந்நூறு ரூபாய் அனுப்பத் தொடங்குவார்கள்.”

நான் கவலைப்படவில்லை.  நேற்றிலிருந்து நாற்பது பேர் அனுப்பியிருக்கிறார்கள்.  ஒரு முந்நூறு பேர் அனுப்பினால் அது கௌரவமான தொகையாக இருக்கும்.  சீனி சொன்னதைத் தவறென நிரூபிப்பது உங்கள் கரங்களில் இருக்கிறது.

***

பொதுவாக பிறந்த நாள் அன்று நூறு இருநூறு வாழ்த்துகள் வருகின்றன.  உங்களுக்கும் அப்படியே.  இந்த வாழ்த்துகளால் காரியார்த்தமாக ஏதாவது பயன் இருக்கிறதா?  நான் எப்போதுமே செயலில் நம்பிக்கை உள்ளவன்.  ஸீரோ டிகிரி நாவலில் வார்த்தைகளால் ஆனது வாழ்க்கை என்று ஒரு அத்தியாயம் உண்டு.  ஞாபகம் இருக்கிறதா?  அதை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள்.

அன்பு என்றால் என்ன?  வார்த்தையா?  காதல் என்றால் என்ன? வார்த்தையா? குருவே வணக்கம்.  வார்த்தை.  வார்த்தை.  வார்த்தை.  இந்த வார்த்தையை வைத்துக்கொண்டு நான் பயணம் செல்ல முடியுமா?  அன்பையும் மரியாதையையும் நன்றிக்கடனையும் வெளிப்படுத்த வார்த்தையைத் தவிர வேறு வழிகளே இல்லையா?

எனக்குத் தேவையானது ஒன்றே ஒன்றுதான்.  மற்ற எல்லாமே இருக்கிறது.  அந்த ஒன்றும்கூட நான் மேற்கொள்ளும் பயணங்களுக்காக மட்டுமே தேவைப்படுகிறது.  உங்களால் முடிந்தால் அதை அனுப்பி வையுங்கள். 

வார்த்தைகளிலேயே புழங்கும் நான் ஏன் வார்த்தைகளைக் கண்டு இத்தனை அயர்ச்சி அடைகிறேன் என்றால்…

சில மாதங்களுக்கு முன் அவந்திகா மும்பை சென்றாள்.  மூன்று மாத காலம் சென்னையில் தனியாக இருந்தேன்.  நான் ரசத்துக்கு அடிக்ட்.  ஓட்டலில் தரும் ரசம் ரசமே இல்லை.  கழிவு நீர்.  எனக்கு நன்றாக ரசம் வைக்கத் தெரியும்.  ஆனால் ஓட்டலில் பணி புரியும் ஒரு சமையல்காரரை விட, பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு பெண்மணியை விட அதிக காலம் நான் சமையல்கட்டில் செலவிட்டிருக்கிறேன். செலவிட்டுக் கொண்டிருக்கிறேன். அதனால் நானே எனக்குத் தேவையான ரசத்தை வைத்துக்கொள்ள விரும்பவில்லை.

மூன்று மாதமும் எனக்கு என் நண்பர்களிடமிருந்து ரசம் கிடைக்கவில்லை.  ரசத்தை வைத்து டன்ஸோவில் அனுப்பலாம்.  என் தாய் மட்டுமே அதைச் செய்திருக்கக் கூடும்.  குரு பூர்ணிமா அன்று என் பாதம் பணிந்து வணங்கும் வேறு எந்தப் பெண்ணுக்கும் அது தெரியவில்லை. 

அடுத்து சில மாதங்களில் அவந்திகா மீண்டும் மும்பை சென்றாள்.  ஒரு மாதம்.  அப்போதும் ரசம் கிடைக்கவில்லை.  இந்த முறை நான் வாய் விட்டுக் கேட்டும் கிடைக்கவில்லை என்பதுதான் சிறப்பு.  பாதம் பணிந்தால் போதும் என்கிறது மாணவர்களின் மனம்.  திரும்பவும் எனக்கு ஸீரோ டிகிரியில் எழுதிய வார்த்தைகளால் ஆனது வாழ்க்கை என்ற அத்தியாயம் ஞாபகம் வருகிறது. 

2001 ஜனவரி இரண்டாம் தேதி.  பெர்லினில் சுசீந்திரன் வீடு.  அவர் மனைவி இன்பாவிடம் ரசம் வேண்டும் என்று கேட்கிறேன்.  ரசம் சாப்பிட்டு இரண்டு மாதம் ஆகியிருந்தது.  அற்புதமான பூண்டு ரசம் செய்து கொடுத்தார் இன்பா.  “ஜெர்மன்காரர்கள் ஒரு மாதிரி.  வெளியே செல்வதாக இருந்தால் வாயை ப்ரஷ் பண்ணிக்கொண்டு செல்லுங்கள்” என்றார்.  அதேபோல் செய்தேன்.

***

இந்தக் கட்டுரையில் ஆங்காங்கே தென்படும் வாழ்வியல் குறிப்புகளை எடுத்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன். 

சீனியின் வார்த்தைகளைப் பொய்யாக்குங்கள்.  ஜீபே செய்வதற்கு எண்: 92457 35566 (பெயர்: ராஜா)

வங்கி மூலம் அனுப்புவதற்கான விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai