இதை எழுதலாமா வேண்டாமா என்று கொஞ்சம் தயங்கினேன். ஆனால் எப்போதும் எதற்கும் தயங்காமல் எழுதும் நான் இப்போது என் நண்பர்களுக்காகத் தயங்குதல் தவறென எண்ணி இதை எழுதத் துணிந்தேன். தயங்கியதற்குக் காரணம், என் நண்பர்களின் மனம் புண்பட்டுவிடலாகாதே என்பதுதான். இதை என் நண்பரிடம் தொலைபேசியிலேயே சொல்லியிருக்கலாம். ஆனால் எல்லோரும் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், அடுத்தவரை எக்காரணம் கொண்டும் இம்சிக்கக் கூடாது என்பதே என் மதம். என் நம்பிக்கை. என் கொள்கை. என் வாசகர்கள் அத்தனை பேரும் – குறைந்த பட்சம் இந்தக் கொள்கையைத் தங்கள் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைக்கவாவது செய்கிறார்கள். நினைப்பிலிருந்துதான் முயற்சி பிறக்கும்.
திருவண்ணாமலை பயிலரங்கத்துக்குக் கூட்டம் குறைவாக வரும் என்று நினைத்தேன். அதனால் என் நெருங்கிய நண்பர்களைக் கூட தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைத்தேன். ரமேஷ் பொதுவாக என் கூட்டங்கள் எதற்கும் வர மாட்டார். அவருடைய தொழில் அப்படி. அது தவிரவும் அவர் ஒரு இண்ட்ரோவர்ட். யாரோடும் அதிகமாகப் பழக மாட்டார். மதுப்பழக்கமும் இல்லை. அவரைத் திருவண்ணாமலைக்கு அழைத்தேன். “நீங்கள்தான் எந்தக் கூட்டத்துக்கும் வருவதில்லையே, இதற்காவது வாருங்கள்.”
நான் எதிர்பாராத விதமாக, ”வருகிறேன்” என்று சொல்லி விட்டார். வராதவர் வருகிறாரே என நானும் மகிழ்ந்தேன்.
அடுத்து, சுரேஷ். என்னுடைய சந்திப்புகள் அனைத்துக்கும் பெரும்பாலும் வந்து விடுவார். மதுப்பழக்கம் இல்லாதவர். இது எனக்கு ரொம்பவும் முக்கியம். ஏனென்றால், மது அருந்தும் என்னோடு மதுப்பழக்கம் இல்லாத ஒருவராவது இருந்தால் எனக்கு அது பலம். முதல் நாள் இரவு நான் என்ன பேசினேன் என்பதைச் சொல்வதற்கு எனக்கு ஒரு ஆள் வேண்டும். பேசும்போது தர்க்கரீதியாகவும், நிதானமாகவும்தான் பேசுவேன். ஆனால் மறுநாள் ஞாபகம் இருக்காது. அதைத் தவிர, என்னோடு ஒருவர் குடிக்காமல் இருந்தால் நண்பர்களுக்கும் எனக்கும் உதவி செய்வதற்கு வசதியாக இருக்கும். உதாரணமாக, என்னோடு குடிக்கும் நண்பர்கள் மறுநாள் மதியம்தான் எழுந்து கொள்வார்கள். நான் ஏழு மணிக்கே எழுந்து விடுவேன். கொலைப்பசி பசிக்கும். சுரேஷ் ஆறு மணிக்கே எழுந்து குளித்து கிளித்துத் தயாராக இருப்பார். கார் வைத்திருக்கிறார். அது கூடுதல் உதவி. ஓட்டுனர் இல்லாமல் தானே கார் ஓட்டுவார். அது இன்னும் கூடுதல் உதவி. வேலை செய்யவும் சுணங்க மாட்டார். இன்னொரு முக்கிய விஷயம், நமக்கு மன உளைச்சல் தருவது போல் பேச மாட்டார். ஒரே வார்த்தையில் சொன்னால், ஒரு மஹாத்மா.
மஹாத்மாவாக இருந்தால் மட்டும் எனக்குப் போதாது. இரவில் எனக்குத் தேவை, தண்ணீர். இரவில் தண்ணீர் இல்லாவிட்டால் செத்தேன். வைன் அருந்தினால் கட்டிலுக்கு அடியில் தண்ணீர் இருக்கிறதா என்பதைப் பார்க்க மறந்து விடுவேன். நள்ளிரவில் தாகத்தோடு எழுந்து பார்த்தால் தண்ணீர் இருக்காது. இதை கவனித்துக் கொள்வது சீனியும் சுரேஷும் மட்டும்தான். சீனி ஒரு இரண்டு டஜன் தண்ணீர் பாட்டில்களை வாங்கி வருவார். எதற்கு? என்னைப் பார்க்க வரும் பத்து இருபது நண்பர்களுக்கும் சேர்த்து. சமயங்களில் இரண்டு டஜன் பாட்டில்களும் தீர்ந்து போயிருக்கும். உடனே தன் காரில் ஒளித்து வைத்திருந்த இன்னொரு டஜன் பாட்டில்களை இறக்குவார். ”வக்காளி, இனிமே சாரு தண்ணி இல்லாமல் கஷ்டப்பட்டேன்னு சொல்லவே கூடாது. குடிங்கடா டேய், எல்லாரும் குடிங்கடா, என் கிட்ட இன்னும் ரெண்டு டஜன் பாட்டில் இருக்கு” என்பார். மதுவுக்குக் கூட இல்லை மக்களே, குடிநீருக்கு இப்படி. தண்ணீர் விஷயத்தில் சுரேஷும் இப்படியே. நம் தேவையறிந்து பார்த்துப் பார்த்து செய்வார்.
இப்படிப்பட்ட சுரேஷ் திருவண்ணாமலையில் முப்பதாம் தேதி மாலை ஆறு மணிக்கே காணாமல் போய் விட்டார். சொல்லாமல் கொள்ளாமல் ஆள் மறைந்து போவதை அப்படித்தானே சொல்ல வேண்டும்? பிறகுதான் ஒரு விசாரணைக் கமிஷன் வைத்து புலனாய்வு செய்ததில் ரமேஷ்தான் சுரேஷை நைஸாகக் கடத்திக்கொண்டு சென்னை போய் விட்டார் என்று தெரிய வந்தது. அதாவது, ரமேஷுக்கு மறுநாள் காலை அலுவலகம் போக வேண்டும். அதற்காக சுரேஷைக் கடத்தி விட்டார். சுரேஷ் பற்றி இதற்குள் ஒரு சித்திரம் வந்திருக்கும். சுரேஷ் ஒரு பிள்ளைப் பூச்சி. பிராமண சமூகத்தில் அப்படி ஒரு பிள்ளைப்பூச்சியைப் பார்ப்பது அரிது. ரமேஷின் நச்சரிப்பு தாங்காமல் சுரேஷ் எங்கள் யாரிடமும் சொல்லாமல் கிளம்பி விட்டார். சொன்னால் தங்க வைத்து விடுவார்கள் என்று ரமேஷுக்குத் தெரியும் என்பதால் அப்படியே யாருக்கும் தெரியாமல் சுரேஷைக் கடத்தி விட்டார்.
மை டியர் ரமேஷ், நீங்கள் இனிமேல் சென்னையிலிருந்தே செயல்படுங்கள். கூட்டங்களுக்கு வர வேண்டாம். ஏனென்றால், நானே ஒரு physically challenged ஆளைப் போல் மற்றவர்களின் உதவியில் வாழ்கிறேன். எனக்கு எந்த வாகனமும் ஓட்டத் தெரியாது. இரவில் எனக்கு ஒரு உதவி தேவைப்படுகிறது என்றால் அதைச் செய்வதற்கு எனக்கு சுரேஷ் மட்டும்தான் இருக்கிறார். மற்றவர்களெல்லாம் போதையில் அசந்து தூங்கிக்கொண்டிருப்பார்கள். உதவிக்கு அவர்களை எழுப்ப முடியாது. ஆக, என் உதவிக்கு இருக்கும் ஒரே நண்பரையும் கிளப்பிக்கொண்டு போய் விட்டீர்கள் என்றால் நான் என்ன செய்யட்டும்?
இன்னொரு விஷயம். நானும் சீனியும் ராஜாவும் திருவண்ணாமலையிலிருந்து கிருஷ்ணகிரியில் உள்ள வனத்துக்குச் சென்றோம். சுரேஷ் எங்களோடு இருந்திருந்தால் சீனிக்கு உதவியாக அவ்வப்போது சுரேஷ் கார் ஓட்டியிருப்பார். அதை விட முக்கியமாக, அந்த வனத்திலிருந்து சென்னை திரும்புவதற்கு சுரேஷின் உதவி கிடைத்திருக்கும். ஏனென்றால், சீனி, ராஜா இருவருமே சென்னைக்காரர்கள் இல்லை. சுரேஷ் சென்னைக்காரர். சுரேஷ் இல்லாததால் நான் அந்த வனத்திலிருந்து பஸ்ஸில்தான் சென்னை திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நானோ சொகுசாக வாழ்ந்து பழகியவன். பிறகு திருவண்ணாமலையில் வசிக்கும் என் நண்பரிடம் சொல்லி அவருடைய காரை வனத்துக்கு வரவழைத்து (நான்கு மணி நேர பயணம்), பிறகு வனத்திலிருந்து வேலூர் போய் (நான்கு மணி நேரம்) அங்கிருந்து சென்னை சென்றோம். என் அதிர்ஷ்டம், காரோட்டி ரொம்பப் பேசவில்லை.
எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று. சுரேஷின் ப்ளஸ் பாய்ண்ட் என்னவென்றால், அவர்தான் எனக்கு மிகவும் தோதான அறைவாசி. ஏனென்றால், இந்த உலகிலேயே குறட்டை விடாத ஒரே மனிதர் சுரேஷ்தான். அப்படி ஒரு தங்கத்தைக் கடத்திக்கொண்டு போவது மஹா பாவம் இல்லையா ரமேஷ்? இனிமேல் தாங்கள் என்னுடைய வெளியூர் சந்திப்புகளுக்கு வர வேண்டாம். அப்படி வந்தால், உங்கள் காருக்கும் மோருக்கும் நானே ஏற்பாடு செய்கிறேன். சரியா?
***
திருவண்ணாமலை பயிலரங்கத்துக்கு சிலர் ஜூன் 29, 30 தேதிகளில் பணம் அனுப்பினார்கள். கடைசி நேரம் என்பதால் அவர்களின் பெயர்களை நான் பட்டியலில் சேர்க்க முடியாமல் போய் விட்ட்து. அவர்கள் யாருமே என்னை அதற்குப் பிறகு தொடர்பு கொள்ளவில்லை. அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டால் உடனடியாக பயிலரங்கத்தின் ஒளிப்பதிவை அனுப்பி வைக்கிறேன். மற்றவர்களுக்கும் அந்தப் பதிவு தேவைப்பட்டால் 2000 ரூ. அனுப்பினால் பதிவை அனுப்புகிறேன். ஏழு மணி நேரப் பேச்சு. அதில் சில படங்களின் காட்சிகளும் இருக்கும். எனவே அதை நீங்கள் மட்டுமே பார்ப்பது நலம். மற்றவர்களிடம் பகிர வேண்டாம்.
என்னைத் தொடர்பு கொள்ள: charu.nivedita.india@gmail.com
***
மாதச் சந்தா அல்லது நன்கொடை அனுப்புங்கள். குறைந்த பட்ச நன்கொடை 300 ரூ. அதற்கு மேல் அனுப்புவது உங்கள் விருப்பம்.
ஜீபே செய்வதற்கு எண்: 92457 35566 (பெயர்: ராஜா)
வங்கி மூலம் அனுப்புவதற்கான விவரம்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai