4. கல்லறையிலே உறங்கும் மனிதனைப் போல் இரு…

4.

நான்தான் ஔரங்ஸேப்… நாவலை பிஞ்ஜ் என்ற இணையதளத்துக்காக எழுதியபோது சில புதிய விஷயங்களை அனுபவம் கொண்டேன்.  ஆரம்பத்தில் வாரம் இரண்டு முறை என்ற கணக்கில் அத்தியாயங்கள் வெளிவந்தன.  ஆனால் சில தினங்களிலேயே வாசகர்கள் வாரம் மூன்று முறை வேண்டும் என்று கேட்டார்கள்.  அதனால் ஒன்று விட்டு ஒருநாள் என்ற கணக்கில் அத்தியாயங்களைக் கொடுக்க ஆரம்பித்தேன்.  ஒரு அத்தியாயம் சுமார் 1400 வார்த்தைகள்.  ஒரு அத்தியாயத்துக்குப் பத்தாயிரம் ரூபாய் தந்தார்கள்.  அந்தப் பணத்தில்தான் அவ்ட்ஸைடர் ஆவணப்படம் எடுத்தது. 

ஔரங்ஸேப் எழுதிய காலகட்டத்தில்தான் நான் அதிக நேரம் படிக்கவும் எழுதவும் வேண்டியிருந்தது.  ஒரு நாளில் ஐந்து மணி நேரம்தான் உறங்கினேன்.  நல்லவேளையாக வீட்டு வேலை செய்ய பணிப்பெண் இருந்தார். 

ஔரங்ஸேப் நாவலுக்காக நான் படித்த ஒவ்வொரு நூலும் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே எழுதப்பட்டவை.  அப்போது ஆங்கில எழுத்துக்கள் இப்போது எழுதப்படும் வடிவத்தில் இல்லை.  எஃப் என்ற எழுத்து எஸ் போல் இருக்கும்.  இப்படி ஏகப்பட்ட குளறுபடி.  ரொம்பவும் சிரமப்பட்டு எழுத்துக்கூட்டித்தான் படிக்க வேண்டியிருந்தது. 

சில நூல்கள் ஔரங்ஸேப் காலத்திலேயே எழுதப்பட்டவை. 

அப்போதெல்லாம் மொகலாய மன்னர்கள் தங்களைத் துதிபாடும் அரசவை எழுத்தாளர்களை வைத்து தங்கள் சரித்திரத்தை எழுதுவார்கள்.  அப்படிப்பட்ட துதிபாடல் நூல்களிலும்கூட அக்காலச் சித்திரத்தை நம்மால் ஓரளவு அனுமானிக்க முடியும் என்பது வேறு விஷயம்.  ஆனால் மிகத் தீவிரமான ஒழுக்கவாதியும் ‘By the (Holy) Book’ என்று வாழ்ந்தவருமான ஔரங்ஸேபுக்கு இப்படி ஜால்ரா போடுபவர்களையும், முகஸ்துதி செய்பவர்களையும் பிடிக்காது என்பதால் அரசவையில் அதுவரை ஜாலி பண்ணிக்கொண்டிருந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஜோதிடர்கள் எல்லோரும் துரத்தியடிக்கப்பட்டனர்.    

அதையும் மீறி ஔரங்ஸேப் காலத்தில் அக்கால வாழ்க்கை பற்றி இரண்டு சாமான்யர்கள் எழுதியிருக்கிறார்கள்.  இருவரில் ஒருவர் ஹிந்து.  இந்த ஹிந்து சிப்பாய் ஔரங்ஸேபை வெகுவாகப் புகழ்ந்து எழுதியிருக்கிறார்.  இத்தனைக்கும் அவர் இப்படி எழுதியிருப்பதே ஔரங்ஸேபுக்குத் தெரியாது.  (நாவலில் இவர் ஔரங்ஸேபின் ஒற்றர் என்று எழுதியிருப்பது என்னுடைய கற்பனை.  எதார்த்த்த்தில் அப்படி இல்லை.  அந்த ஹிந்து சிப்பாயை ஔரங்ஸேபுக்குத் தெரியாது.)

ஔரங்ஸேப் நாவலை எழுதியபோது கிடைப்பதற்கே அரிதான பல புத்தகங்கள் தேவைப்பட்டன.  அதையெல்லாம் தேடி அலைந்தால் முழுதாகப் பத்து ஆண்டுகள் தேவைப்படும். அந்த ஆய்வுகளுக்குப் பல லட்சம் ரூபாய் வேறு வேண்டும்.  சில நூல்கள் லண்டன் நூலகத்தில் இருந்தன.  நேரில் போய்தான் படிக்க வேண்டும்.  புகைப்பட நகல் தர மாட்டார்கள்.  ஒரு மாதம் லண்டனில் தங்கிப் படித்தால் என்ன செலவு ஆகும்?

அந்த நூல்களையெல்லாம் எனக்கு எப்படியெப்படியோ முயற்சி செய்து கிடைக்கச் செய்தவர்கள் வித்யா சுபாஷ், மும்பை மனோஜ், ஸ்ரீராம். இப்படியாக சுமார் இருபது பேர் இருப்பார்கள்.

அப்போது நான் படித்த ஏராளமான நூல்களில் ஒரே ஒரு வாக்கியம் என் மனதில் ஆழமாகப் பதிந்து போனது.  அதை வாசிக்கும் யாராலும், எந்த மனிதராலும் மறக்கவே முடியாத வாசகம் அது. 

”நபிகள் நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தன் தோழரான அப்துல்லாஹ் இப்னு உமரிடம் ”உலகில் நீ ஒரு அந்நியனைப் போல் இரு. அல்லது, ஒரு வழிப்போக்கனைப் போல் இரு. அல்லது, கல்லறையிலே உறங்கும் ஒரு மனிதனைப் போல் இரு” என்று கூறினார்கள். அதே போல முஹையத்தீன் அப்துல் காதிர் ஜிலானி ”மய்யத்தைக் குளிப்பாட்டக்கூடியவரின் கையில் இருக்கும் உடலைப் போல் இருக்கிறேன்” என்றார்கள்.”

ஔரங்ஸேபின் கதையை நான் ஒரு வாழ்க்கை வரலாற்று நூலாக எழுதவில்லை, ஆய்வு நூலாக எழுதவில்லை, நாவலாக எழுதினேன். அதனால் ஒவ்வொரு மேற்கோளையும் எங்கிருந்து எடுத்தேன் என்ற அடிக்குறிப்புகளை எழுதவில்லை.  எழுதினால் நாவலின் போக்கு தடைப்படும்.  நாவலின் இறுதியில் மட்டுமே நாவலை எழுத ஆதாரமாக இருந்த நூல்களிலிருந்து முக்கியமானவற்றை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொடுத்தேன்.  நான் ஒரு ஐநூறு நூல்கள் படித்திருந்தேன் என்றால் நூறு நூல்கள்தான் ஆதார நூல் பட்டியலில் இருக்கும். 

நாவலின் பிரதி அச்சுக்குப் போகும் முன் அதை நான் தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான இஸ்லாமிய அறிஞர்களிடம் வாசிக்கக் கொடுத்த போது நபிகள் நாயகத்தின் மேற்கண்ட வாசகம் எந்த நூலிலும் சொல்லப்படவில்லை என்று தீர்மானமாகக் கூறி விட்டார்கள்.  மட்டுமல்லாமல், என்னதான் அந்த வாசகம் அற்புதமான செய்தியைச் சொல்வதாக இருந்தாலும் நபிகள் சொல்லாததைச் சொல்வது சரியாகாது என்றும் எச்சரித்தார்கள். எனக்கோ அந்த வாசகத்தை எங்கே படித்தேன் என்று ஞாபகம் இல்லை.  ஆனாலும் அதைப் படித்தது மிக நன்றாக மனதில் பதிந்திருந்ததால் பிரச்சினை வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று புத்தகத்திலிருந்து அதை எடுக்கவில்லை.  அந்த நாவல் பெரிதாக இருந்ததாலும், பொதுவாகவே இலக்கியவாதிகள் என்ன எழுதினாலும் தமிழ்ச் சமூகம் அதைக் கண்டுகொள்வதே இல்லை என்பதாலும் ஔரங்ஸேப் நாவல் கிணற்றில் போட்ட கல்லாக அப்படியே அடியில் தங்கி விட்டது.  என் தீவிர வாசகர்களைத் தவிர அந்த நாவல் யாராலும் வாசிக்கப்படவில்லை.  இஸ்லாமிய சமூகத்தில் அந்த நாவல் தீண்டப்படவே இல்லை.  உண்மையில் ஔரங்ஸேப் நாவல் ஹிந்துத்துவ அரசியலுக்கு மிகப் பெரும் எதிர்ப்பைக் கொண்டிருந்த புதினம்.  ஆனால் தமிழ்நாட்டில் பொதுவாக சினிமாக்காரர்கள் செய்தால்தான் எதையும் கண்டுகொள்வார்கள். 

ஆனால் ஔரங்ஸேப் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட போது – அதிலும் ஹார்ப்பர் காலின்ஸ் பதிப்பகம் இந்தியாவின் மிகப் பிரபலமான ஒன்று என்பதால் – பின்னால் எதுவும் பிரச்சினை வரக்கூடாது என்பதால் அந்தக் குறிப்பிட்ட மேற்கோளுக்கான ஆதாரம் என்ன என்று பதிப்பகத்தின் எடிட்டர் என்னைக் கேட்டார்.   

பிறகுதான் நான் படித்த எல்லா நூல்களையும் மறுபடியும் ஆய்வு செய்து ஆதார நூலைக் கண்டு பிடித்தேன்.  அது பன்னிரண்டாம் நூற்றாண்டில் Radi al-Din Hasan எழுதிய Makārim al-akhlāq என்ற நூல்.

நான் படித்தவரை எல்லா தீர்க்கதரிசிகளும், எல்லா புனித நூல்களும் ஒரே விஷயத்தைத்தான் வலியுறுத்துகின்றன.  ”ஆசாபாசம் இல்லாமல் இரு.  பற்றற்று இரு.  யாரையும் துன்புறுத்தாதே.  உன்னிடமுள்ள செல்வத்தை எல்லோருக்கும் பகிர்ந்து அளி.  அடுத்தவன் பட்டினி கிடந்தால் அதைப் போக்க முயற்சி செய்.  பேராசைப் படாதே.  நீ கொண்டு வந்தது எதுவும் இல்லை.  ஏதோ இந்த உலகத்தையே அள்ளிக்கொண்டு போவது போல் பணம் பணம் என்று அலையாதே.”

”கல்லறையிலே உறங்கும் மனிதனைப் போல் இரு” என்ற நபிகள் நாயகத்தின் வாசகத்தையும், அருணகிரி நாதர் சொன்ன ”சும்மா இரு, சொல் அற” என்ற வாசகத்தையும் நான் ஒன்றேபோல்தான் பார்க்கிறேன்.

ஏற்கனவே எழுதிய ஒன்றை இங்கே அவசியம் கருதி மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது.  ஒருநாள் ஏற்காடு பங்களாவில் நானும் நண்பர்களும் கூடிப் பேசிக்கொண்டிருந்தோம்.  அப்போது எங்களோடு ஒரு மார்க்சிய அறிஞரும் இருந்தார்.  வாழ்நாள் பூராவும் குடும்பம் என்பது ஒரு இறுக்கமான அதிகார அமைப்பு, குடும்பத்தைச் சிதைக்க வேண்டும் என்றெல்லாம் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்த அவர், வயதான காலத்தில், ஒரு மத்தியதர வர்க்க சாமானியனைப் போல், தன் பத்து வயது வளர்ப்பு மகனை நினைத்து அழ ஆரம்பித்து விட்டார். மகன் நன்றாகத்தான் இருக்கிறான்.  ஆனால் என் காலத்துக்குப் பிறகு அவனை யார் வளர்ப்பார், அவன் இல்லாவிட்டால் நான் செத்து விடுவேன் என்று புலம்பத் தொடங்கினார். 

அப்போது மரணம் பற்றி ஒவ்வொருவரும் பேச ஆரம்பித்தார்கள்.  நான் எப்போதுமே என்னை ஒரு ஞானி என்றே குறிப்பிட்டு வருகிறேன்.  எவனொருவன் மரண பயத்தைக் கடந்தவனோ அவன் ஞானி.  தன்னுடைய மரணம் மட்டுமல்ல, தன் உறவின் மரணத்தையும் கூட கடக்க வேண்டும்.  எனக்குக் கடுமையான ஹார்ட் அட்டாக் வந்து, தாங்கவே முடியாத நெஞ்சு வலியில், உடம்பெல்லாம் ஆறாக வியர்வை பெருகிக் கொட்டிக்கொண்டிருந்த நிலையிலும், மருத்துவமனைக்குப் போகும் வழியில், எந்த பயமும் இல்லாமல், ஜாலியாக “இந்த உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தவன் நான்” என்று சொல்லி, “நான் இந்தக் கணத்தில் இறந்து போனால் என்னென்ன செய்ய வேண்டும்” என்பதை என் மாணவியிடம் விளக்கிக்கொண்டு போனேன்.  எல்லாம் என் எழுத்துக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது குறித்துதான்.

ஏற்காடு பங்களாவில் மார்க்சீய அறிஞர் அழுது கொண்டிருந்த தருணத்தில் நண்பர் சுரேஷ் என்னிடம் கேட்டார். 

மரணத்தை நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள்?  குறிப்பாகச் சொன்னால், உங்களுக்குப் பிரியமான ஒருவரின் மரணத்தை எப்படி எதிர்கொள்வீர்கள்?

கண்ணிமைக்கும் நேரம் கூட யோசிக்காமல் “ஒரு தெருவில் ஒரு வீட்டில் மரணம் நிகழ்ந்திருக்கிறது, அதை அந்தத் தெருவில் வசிக்கும் ஒரு பூனை எப்படி எதிர்கொள்ளுமோ அப்படியே எதிர்கொள்வேன்” என்று சொன்னேன். 

கல்லறையிலே உறங்கும் மனிதனைப் போல் வாழ – குறைந்த பட்சம் – நான் முயற்சியாவது செய்கிறேன்.  அதனால்தான் ஹிரோஷிமா மியூசியத்தில் ஆயிரக்கணக்கான மானுட உடல்களை பிரேதங்களாக புகைப்படத்தில் பார்த்த போது என்னுள் அது எந்தவித உணர்வையும் ஏற்படுத்தவில்லை.  உலகில் உள்ள ஒவ்வொரு தேசமும் ராணுவம் என்ற கொலைகார அமைப்பை வைத்துக்கொண்டு, எப்படியெல்லாம் மானுட உடல்களைக் கொல்வது என்பதை தேசப்பற்று என்று சொல்லிக்கொண்டு, மானுட அறிவை வளர்க்கும் கல்விக்குச் செலவு செய்யாமல், மானுட உடல் அழிப்புக்குக் கோடிக்கணக்கான பணத்தை செலவிட்டுக்கொண்டு இருக்கும் இந்தக் காலகட்டத்தில் மனிதர்கள் என்னைக் கண்டு ஆச்சரியப்படுகிறார்கள்!  கொலைத்தொழிலை தேசப்பற்று எனக் கொண்டாடும் இந்த சமூகம் அல்லவா தங்களைப் பார்த்துத் தாங்களே வெட்கித் தலை குனிய வேண்டும்? 

உங்கள் உடல், உங்கள் உயிர் இரண்டும் இறைவனின் படைப்பு.  உங்களுக்கு இறை நம்பிக்கை இல்லையேல் இயற்கையின் படைப்பு எனக் கொள்ளுங்கள். 

ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் உடலை தேசம், மதம் என்ற பெயரில் தன்னிடமுள்ள துப்பாக்கியால், கண்ணி வெடியால், பீரங்கியால், டாங்கிகளால், ரசாயண குண்டுகளால் அழிக்கிறான், அதை தேசப்பற்று என்று சொல்லிக் கொண்டாடுகிறான் என்றால், அவன் அல்லவா ஆபத்தானவன்?  ஹிரோஷிமா மியூசியத்தில் ஆயிரக்கணக்கான உடல்களைப் பார்த்து எந்த உணர்வும் வராத நானா ஆபத்தானவன்? 

மானுட குலத்தின் வன்முறைக்கு வெளியே நிற்பவன் கலைஞன்.  அதனால் மானுட குலம் குருதி வெள்ளத்தில் மடிய வேண்டாமே என்ற கவலையினால், கருணையினால் நான் என் உடலை உருக்கி, சமூகத்தில் பிச்சை எடுத்து, எழுதிக்கொண்டிருக்கிறேன்.  மானுட குலத்தின் மேம்பாட்டுக்காக, மானுட இனத்தை கொலைத்தொழிலிருந்து விடுவிப்பதற்கான மந்திரம்தான் நான் எழுதும் ஒவ்வொரு சொல்லும், வாக்கியமும். 

என் எழுத்து ஒரு போராட்டம்.  இந்தப் போராட்டத்தில் நான் ஈடுபட்டிருப்பதால்தான் நான் பிரேதங்களின் மீது நடந்து செல்கிறேன் என்கிறேன்.  நான் திருவண்ணாமலை பயிலரங்குக்குப் புறப்பட்ட போது அவந்திகா கடுமையான ஜுரத்தில் படுத்த படுக்கையாகக் கிடந்தாள்.  கஷாயம் போட்டு வைத்து விட்டுக் கிளம்பினேன்.  அவ்வளவுதான் முடியும்.  தமிழ்நாடு முழுவதிலுமிருந்து இருநூறு பேர் வருகிறார்கள்.  நான் குடும்பத்தைப் பார்க்க இயலாது. 

பயிலரங்கம் முடிந்து அவந்திகாவுக்கு ஃபோன் செய்தேன்.  பதில் இல்லை.  மறுநாள் ஃபோன் செய்தேன். பதில் இல்லை.  மறுநாள் மாலை ஃபோன் செய்தேன்.  பதில் இல்லை.  மூன்றாம் நாள் மதியம் ஃபோன் செய்தேன்.  பதில் இல்லை.  கொஞ்சம் பயந்து போய் துபயில் இருக்கும் என் மகனுக்கு ஃபோன் செய்து விஷயத்தை விளக்கினேன்.  நீ அம்மாவுடன் பேசி விட்டு, எனக்கு ஃபோன் செய் என்றேன்.  இன்னமும் ஃபோன் வருகிறது! 

ஊருக்குத் திரும்பியதும் அவந்திகாவிடம் கேட்டேன்.  ஃபோனை எடுத்துக்கூட பேச முடியவில்லை என்றாள் ஈனஸ்வரத்தில்.  கார்த்திக் ஃபோன் பண்ணினானா என்று கேட்டேன்.  செய்தான் என்று நினைக்கிறேன், ஏதோ கனவில் நடந்தது போல் இருக்கிறது என்றாள்.   

இதனால்தான் சொல்கிறேன், நான் என் எழுத்துக்காக பிரேதங்களின் மீது நடந்து செல்கிறேன் என்று.  அதில் முதல் பிரேதம் என்னுடையது. 

நான்தான் ஔரங்ஸேப் நாவலைப் படித்துப் பாருங்கள்.  அதில் இன்னொரு முக்கியமான இடம் வருகிறது. 

”ஒரு ஃபக்கீர் என்பவன் எப்படி இருக்க வேண்டும்? முஸாஃபிர் பாபா சொல்கிறார்: “ஒரு ஃபக்கீருக்கு ஏதாவது கிடைத்தால் அன்றைய தினமே அவன் அதைச் செலவு செய்து விட வேண்டும். தனக்கென்று எதையுமே வைத்துக் கொள்ளக் கூடாது. இன்று இரவு ஒரு ஃபக்கீர் இறக்கிறான் என்றால் அவனுக்குச் சொந்தமாக அவனிடம் எதுவுமே இருக்கக் கூடாது. அதனால்தான் அவ்லியாக்கள் தங்கள் ஃபக்கீர்களைத் தேர்ந்தெடுக்கும்போது அந்தச் சடங்கில் ஃபக்கீர் கஃபன் துணியை அணிந்து கொள்கிறார். காரணம், ஏற்கனவே சொன்னதுதான். ஒரு ஃபக்கீர் என்பவன் மய்யத்தைக் குளிப்பாட்டுபவரின் கையில் இருக்கும் உடலைப் போல் இருக்கிறான்.

என்னைப் பொருத்தவரை, மரியாதைக்குரிய லேகக் அவர்களே, சரித்திரத்தின் மத்திய காலகட்டத்தில், சூஃபிகள் மக்களின் துயர் துடைப்பவர்களாக மட்டும் அல்லாமல் அரச ஒடுக்குமுறைக்கு எதிராகவும், பேசுவதற்கு இடமில்லாத சாமானியர்களின் குரலாகவும் இருந்திருக்கிறார்கள். அதிகாரத்துக்கு எதிரான போர் வீரர்களாகவே சூஃபிகளை நான் காண்கிறேன். இதுவரை நான் விவரித்த சம்பவங்களிலிருந்தே அதை நீங்கள் உணர்ந்திருக்கலாம். ஹிந்துஸ்தான் நெடுகிலும் ஒவ்வொரு ஊரிலும் வாழ்ந்த சூஃபிகள் அந்தந்த ஊரின் காவல் தெய்வங்களாகவே விளங்கியிருக்கிறார்கள். அதேபோல் எதிரிகளிடமிருந்தும் மக்களைக் காப்பாற்றியிருக்கிறார்கள். எத்தனையோ போர்களின் முடிவு சூஃபிகளின் பறக்கத்தினால் மாறியிருக்கிறது.”

இத்தனையும் எனக்கு நேற்று வந்த ஒரு கடித்த்தைப் படித்த போது ஞாபகம் வந்தது.  துபயிலிருந்து என் நண்பர் எழுதியிருந்தார்.

22.07.2024.

அன்புள்ள சாரு,

நான்  ——————.  முன்பு ஒருசில முறை உங்களுடன் மின்ன்ஞ்சல் மூலம் தொடர்பு கொண்டிருந்தேன்.

சமீபத்தில் உலக சினிமா பற்றிய உங்களின் ஒருநாள் நிகழ்வு சிறப்பாக நடந்து முடிந்ததற்கு இறைவனுக்கு நன்றி.

வாழ்வியல் சார்ந்த உங்கள் கருத்துக்கள் எப்போதும் என் மனதுக்கு நெருக்கமானவை.  இஸ்லாம் வலியுறுத்தும் “இந்த உலகியல் வாழ்வில் எப்போதும் ஒரு பயணியைப் போல் இரு” என்ற தத்துவத்துக்கு இணையான உங்கள் கருத்தியல் மிக வலிமையானது.  எல்லா மெய்யியல் தத்துவங்களும் இதையே வலியுறுத்துவதாக நான் நம்புகிறேன்.

உங்களின் “குருவுக்கு வணக்கம்” பதிவு என்னை மிகவும் யோசிக்க வைத்த்து.  எங்களைப் போல் வெளிநாடுகளில் வாழும், எப்போதும் பதற்றத்துடனும், பாதுகாப்பற்றும் உணரும் லட்சக்கணக்கானவர்களுக்கு உங்கள் கருத்துக்கள் மிகவும் பொருந்திப் போகிறது. 

எந்நேரமும் “Peer pressure”இல் வாழ்பவர்களுக்கு உங்கள் பதிவு ஓர் அற்புதமான அறிவுரை. 

எவ்வளவுதான் நம் சந்ததிகளுக்கு நாம் சேர்த்து வைத்தாலும், அது அவர்களுக்கு மட்டுமே பயன்படுமா என்ற உத்தரவாதமில்லாத சூழ்நிலையில்தான் இருக்கிறோம்.  எதற்காக இப்படி ஓடுகிறோம் என்று நிதானமாக யோசித்தால் குழப்பம் மட்டுமே மிஞ்சுகிறது.  ஒரே ஆறுதலும் நம்பிக்கையும் உங்களைப் போன்றவர்களின் எழுத்துக்கள்தான்.

நல்ல உணவு, நல்ல இசை, புத்தகங்கள், பயணங்கள் மட்டுமே எங்களைப் போன்றோரை ஆற்றுப்படுத்துகின்றன.  உங்களிடமிருந்து கற்றதும் பெற்றதும் ஏராளம்.

நபிகள் தம் தோழர்களுக்கு ஓர் அறிவுரை கூறினார்.  “நீங்கள் ஈட்டிய செல்வத்தை உங்கள் கைகளால் உங்கள் குடும்பம், உறவுகள், அண்டை வீட்டார், மற்றும் தேவையுடையவர்களுக்குச் செலவிடுங்கள்.”  மேலும், “உங்கள் செல்வத்தில் நீங்கள் உண்டு கழித்தது, உடுத்திக் கிழித்தது, அடுத்தவர்களுக்குக் கொடுத்துக் களித்தது மட்டுமே உங்களுடையது… மற்றது வேறு யாருடையது என்பதை இறைவனே அறிவான்” என்றார்கள். 

உங்கள் பதிவு எவ்வளவு சரியாக நபிகளாருடன் பொருந்திப் போகிறது என நினைத்து நெகிழ்ந்தேன்.  தமிழில் தட்டச்சு பயின்று உங்களுடன் அடிக்கடி தொடர்பில் இருக்க விருப்பம்… இன்ஷா அல்லாஹ்.

உங்கள் வங்கிக் கணக்குக்கு —————– ரூ. அனுப்பியிருக்கிறேன்.  அன்புடன் பெற்றுக் கொள்ளவும். 

உங்களின் நலனுக்கும் ஆரோக்கியத்திற்கும் என்றும் பிரார்த்தனையும், அன்பும்.

——–

***

இதுவரை படிக்காதிருந்தால் நான்தான் ஔரங்ஸேப் நாவலை வாங்கிப் படிக்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.   

***

நேற்று கிம் கி டுக்கின் ஒன் ஆன் ஒன் படம் பார்த்தேன்.  தேகம் நாவலைப் போல் இருந்தது.  முடிவு மட்டும் எனக்குக் குழப்பமாக இருந்தது.  படம் பார்த்தவர்கள் விளக்கலாம்.  பழிக்குப் பழியாக அவன் கொலை செய்ய வேண்டியது தன்னுடைய தலைவனை.  ஆனால் அவனோ வேறு ஒருவனைக் கொல்கிறான்.  அது ஏன் என்று புரியவில்லை.

***

என்னுடைய நண்பர்கள் அவ்வப்போது பணம் அனுப்பி எனக்கு லௌகீகப் பிரச்சினை இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.  அதில் எந்தக் குறையும் இல்லை.  ஆனால் இந்தத் தளத்தை பத்தாயிரம் பேர் வாசிக்கிறார்கள்.  அவர்களில் ஒரு முந்நூறு பேர் மாதம் முந்நூறு ரூபாய் அனுப்பினால் பணம் குறித்த யோசனையே இல்லாமல் இருக்கலாம் என்று நினைத்தே இந்த 300 ரூ. என்ற குறைந்த பட்ச சந்தாத் திட்டத்தை அறிமுகப்படுத்தினேன்.  மாதம் முப்பது கட்டுரை.  முந்நூறு ரூபாய்.  ஒரு கட்டுரைக்குப் பத்து ரூபாய். 

யோசித்துப் பாருங்கள்.  இந்தக் கட்டுரையின் விலை பத்து ரூபாய்.  உங்கள் மனம் இதை ஏற்கிறதா?

இன்று பத்து ரூபாயை நீங்கள் பிச்சைக்காரனுக்கு மட்டும்தான் போடலாம்.  வேறு இடங்களில் பத்து ரூபாய் செல்லாது.  ஆனால் இந்தத் தளத்தை வாசிக்கும் பத்தாயிரம் பேரில் வெறும் ஐம்பது பேர்தான் 300 ரூபாய் அனுப்பியிருக்கிறார்கள்.  ஆயிரம், ரெண்டாயிரம், ஐயாயிரம் என்று அனுப்பியவர்கள் ஒரு பத்துப் பதினைந்து பேர்.  ஆனால் நன்கொடை அனுப்பியது மொத்தமே ஐம்பது பேர்தான்.  இந்த முந்நூறு ரூபாய்த் திட்டம் ஒரு முந்நூறு பேர் அனுப்பினால்தான் செல்லுபடியாகும்.  ஐம்பது பேர் அனுப்பினால் செல்லாது.  இதைத்தான் சீனி சொன்னார்.  “உங்களுக்குப் பணம் அனுப்பும் நண்பர்கள் அனுப்பிக்கொண்டேதான் இருப்பார்கள்.  ஆனால் சந்தா அல்லது நன்கொடை என்று உங்கள் தளத்தைப் படிக்கும் பத்தாயிரம் பேரிடமும் கேட்டால் ஐம்பது பேர்தான் அனுப்புவார்கள்” என்றார் சீனி.  அவர் சொன்னபடியேதான் நடந்திருக்கிறது. 

வருத்தம் இல்லை.  இருந்தாலும் மீண்டும் எழுதுகிறேன்.  இந்த மாதம் முப்பது கட்டுரை.  அடுத்த மாதத்திலிருந்து தொடர்ந்து மாதம் இருபது கட்டுரைகள் வரும்.  அதற்குக் குறைந்த பட்ச நன்கொடை அல்லது சந்தா என்று முந்நூறு ரூபாய் அனுப்புங்கள்.  அதற்கு மேல் அனுப்புவது உங்கள் சௌகரியமும் விருப்பமும் ஆகும்.  மாதாமாதம் முந்நூறு பேர் முந்நூறு ரூபாய் அனுப்பினால் பணம் பற்றி யோசிப்பதை நிறுத்தி விடுவேன்.  ஐநூறு பேர் அனுப்பினால் எதேஷ்டம்.

ஜீபே அனுப்பினால் அதில் ராஜா என்ற பெயர்தான் வரும்.  அவர் என் வளர்ப்பு மகன்களில் ஒருவர்.  அவருக்கு அனுப்பினால் அடுத்த நிமிடம் எனக்கு வந்து விடும்.  என் தொலைபேசி எண்ணைக் கொடுப்பதில் கொஞ்சம் தயக்கம் இருக்கிறது.  காரணம் உங்களுக்குப் புரியும். 

ராஜாவின் ஜீபே எண்:   92457 35566