“இன்று 26.7.2024) அபிதாவையும் அசுரகணத்தையும் படித்து விட்டு நாளை சந்திக்கிறேன். அநேகமாக நேற்றைய ஆட்டத்தை விட ரௌத்ரமாக இருக்கும்.”
நேற்று நான் இப்படி எழுதியிருந்ததற்கு அராத்துவின் எதிர்வினை:
”என்ன சாரு, இப்படி எல்லாம் முன்முடிவோடு படிக்க இறங்கலாமா? இது நம் பள்ளி விதிகளுக்கு எதிரானது அல்லவா ? ரௌத்திரமான ஆட்டம் என்றெல்லாம் பஞ்ச் டயலாக் வேறு விடுகிறீர்கள். பயமாக இருக்கிறது.”
முன்முடிவோடு படிக்க இறங்குவது நம் பள்ளி விதிகளுக்கு எதிரானதுதான். ஆனால் நான் இங்கே முன்முடிவோடு இறங்கவில்லை. ஒரு உதாரணம் சொல்கிறேன்.
இன்னும் இருபது ஆண்டுகள் கழித்து அராத்துவின் மாணவன் ஒருவன் – அராத்துவின் எழுத்தைக் கொண்டாடுபவன், அராத்துவிடமிருந்து இலக்கியம் கற்றவன் – அவரிடம் வந்து “சாருவின் ஸீரோ டிகிரி, ராஸ லீலா ரெண்டையும் படித்தேன், பீக்கரைசலை மூஞ்சியில் ஊற்றியது போல் இருந்தது” என்று சொல்கிறான் என வைத்துக் கொள்வோம். அப்போது அராத்து, ”டேய் இருடா, நீ சொன்ன ரெண்டையும் படித்து விட்டு வருகிறேன், உனக்கு இருக்கிறது வேட்டு” என்று சொன்னால், “நீங்கள் என்ன முன்முடிவோடு படிக்க இறங்குகிறீர்கள்?” என்று அராத்து அந்த இளைஞனிடம் கேட்பாரா? வாஸ்தவத்தில் என்ன நடக்கும் என்றால், அராத்துவுக்கு ஞாபக சக்தி அதிகம். அவர் அந்த உரையாடலுக்காக என் நாவல்களைத் திரும்பப் படிக்க வேண்டிய அவசியமே இல்லாமல் அந்தப் பையனை அந்தக் கணமே நாக் அவ்ட் பண்ணி விடுவார். ஆனால் எனக்கு ஞாபக சக்தி குறைவு என்பதால் நாளை வருகிறேன் என்று ஒருநாள் வாய்தா வாங்கினேன்.
அபிதாவை நான் சின்ன புள்ளையாக இருக்கும்போது படித்தது. ஆனாலும் அது என் நாடி நரம்பெல்லாம் ஊறிப் போய் விட்ட எழுத்து. அபிதா என்று அல்ல. லா.ச.ரா. எழுதிய எல்லாமே என் எலும்பு மஜ்ஜையில் போய் தங்கி விட்டது. மூளையின் செல்களில் பிணைந்து விட்டது. அப்போதெல்லாம் நான் பார்க்கின்ற பெண்களையெல்லாம் ஜனனி என்றே அழைத்துக்கொண்டிருந்தேன். ஜனனி போல் குரூர அழகியலை வெளிப்படுத்தும் கதையை நான் உலக மொழிகளிலேயே படித்தது இல்லை. உலகில் ஒரு பத்து ட்ரான்ஸ்கிரஸிவ் கதைகளை எடுத்தால் முதலில் வருவது ஜார்ஜ் பத்தாயின் Ma Mère (என் அம்மா) நாவல். அதில் வரும் அம்மா கதாபாத்திரம் தன் மகனை மோகித்து அவனோடு உறவு கொள்வாள். ஆனால் அதில் கூட கிறித்தவ மதத்தின் பாவம் என்ற கருத்தாக்கம் உள்ளோடி இருக்கும். அதனால் லொலிதாவைப் போலவே பத்தாயின் ”அம்மா” நாவலையும் ட்ரான்ஸ்கிரஸிவ் கதையாடலில் சேர்க்க மாட்டேன். வணிகப் பாலியல் கதைகளின் மொழியில் எழுதியதால் ஜார்ஜ் பத்தாயின் ”கண்ணின் கதை”யை வேண்டுமானால் ட்ரான்ஸ்கிரஸிவ் வகைமையில் சேர்க்கலாம். மற்றபடி கேத்தி ஆக்கரிடம் மட்டுமே பாவம் என்ற கருத்தாக்கம் இல்லை, குற்ற உணர்ச்சியும் இல்லை.
அதனால் லா.ச.ரா.வைத் திரும்ப வாசித்தல் என்பது என்னைப் பொருத்தவரை அவரைக் குறித்த மாற்று மதிப்பீடு வரலாம் என்ற நோக்கத்தில் அல்ல. இன்னும் முப்பது ஆண்டுகள் ஆனாலும் அராத்துவுக்கு எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் பற்றியோ ஸீரோ டிகிரி பற்றியோ ராஸ லீலா பற்றியோ மாற்றுக் கருத்துகள் உருவாகப் போவதில்லை. எனக்கு லா.ச.ரா.வும் அப்படித்தான்.
அசுர கணம் அப்படி அல்ல. அதை நான் இளமையில் படித்ததில்லை. பழுப்பு நிறப் பக்கங்கள் எழுதிய காலகட்டத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன்புதான் படித்தேன். அப்போது அது ஒரு உலகத் தரமான நாவல் என்று தோன்றியது. அதாவது, என் அறுபதாவது வயதில். இந்த வயதுக்கு மேல் எல்லாம் ஒரு நாவலைப் பற்றி மாற்றுக் கருத்து ஏற்பட்டு விட வாய்ப்பே இல்லை.
என்னைப் பற்றி பல நண்பர்கள் சொல்லும் குற்றச்சாட்டு ஒன்று உண்டு. அடிக்கடி நான் என் கருத்தை மாற்றிக் கொள்கிறேன். ஆனால் இலக்கியத்தில் நான் அப்படி அல்ல என்றே நினைக்கிறேன். என்னுடைய இருபதாவது வயதிலிருந்து இந்த எழுபதாவது வயது வரை கரிச்சான் குஞ்சு, எம்.வி. வெங்கட்ராம், கு.ப.ரா., நகுலன், ஆதவன், அசோகமித்திரன், ந. முத்துசாமி போன்றவர்கள் பற்றியெல்லாம் ஒரே மாதிரியான கருத்தைத்தான் கொண்டிருக்கிறேன்.
தி.ஜானகிராமன், புதுமைப்பித்தன் ஆகிய இரண்டு பேர் பற்றி மட்டுமே என் கருத்து மாறியது. அதுவும் எதிர்மறையிலிருந்து நேர்மறையாக. ஆனால் பொதுவாக நேர்மறையிலிருந்து எதிர்மறையாக மாறுவதற்கு வாய்ப்பு இல்லை. காரணமும் தெரியாது. அது அப்படித்தான்.
லா.ச.ரா. சிறுபத்திரிகை இயக்கத்தோடு தொடர்பு இல்லாதவர். அரசியல் பிரக்ஞையும் அற்றவர். குடும்பஸ்தர். ஒரு வங்கியில் அதிகாரியாக இருந்தவர். நாற்பது ஆண்டுகளாவது வங்கிப் பணியில் இருந்திருப்பார். ஒரு எழுத்தாளனுக்கு உரிய எந்த அடையாளமும் அவரிடம் இல்லை.
அவருடைய கதைகள் கல்கி, குமுதம் போன்ற வணிக இதழ்களில் மட்டுமே வெளியாகிக்கொண்டிருந்தன.
இத்தனைக்குப் பிறகும் தமிழின் சௌந்தர்யத்தைக் கூட்டிய உச்சபட்சமான ஆள் லா.ச.ரா.தான்.
”மொழி என்ன மயிருக்கு?” என்பார் அராத்து.
நான் இதில் அராத்துவிடமிருந்து முற்றிலும் மாறுபடுகிறேன். எந்த உயிருக்கும் உடல் தேவை. உடல் இல்லையேல் அது ஆவி. அதேபோல் ஆன்மா இல்லாவிட்டால் அது பிரேதம். அராத்து ஆவியாக அலைகிறார். இன்றைய தமிழ் எழுத்தாளர்களோ பிரேதங்களாகக் கிடக்கிறார்கள்.
அராத்துவுக்கு மொழி முக்கியம் இல்லை. உள்ளடக்கம் மட்டுமே முக்கியம். அந்த உள்ளடக்கத்தினால்தான் அவர் கதைகளை நான் சிலாகிக்கிறேன். மொழி இல்லாவிட்டாலும் narrative techniques & perception போன்றவற்றில் அவர் பின்நவீனத்துவவாதியாகவே இயங்குகிறார். அது எல்லாவற்றையுமே நான் ஆன்மா என்று பார்க்கிறேன். ஆனால் மொழி என்ற உடல் அராத்துவிடம் இல்லை. அதேபோல் இன்றைய இளம் எழுத்தாளர்கள் நல்ல மொழிவளத்தோடு உள்ளே ஒன்றுமேயில்லாமல் ஜல்லியடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் பிரச்சினைக்கு பிறகு வருவோம்.
பிராமண அழகியலுக்கு மிகச் சரியான உதாரணமாக நான் ஷோபா சக்தியைக் கூறுவேன். அவருடைய கதைகள் எல்லாமே கதை இலக்கணத்துக்கும், கதையின் நெறிமுறைகளுக்கும், சட்ட திட்டங்களுக்கும் மிகச் சரியாகப் பொருந்தி வருகிறன்றன.
பிராமண அழகியல் என்பதை பிராமண இனத்தோடு தொடர்பு படுத்திக் கொள்ளாதீர்கள். இது பற்றி முன்பே விளக்கியிருக்கிறேன். பிராமண அழகியலை குத்துமதிப்பாக Status Quo என்று சொல்லலாம். ஷோபா சக்தியை பிராமண அழகியல் என்று சொல்வது பலருக்கும் ஆச்சரியத்தையும் திகிலையும் அளிக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. ஷோபா சக்தியின் கதைகளைப் பாராட்டாத தமிழ் வாசகரோ தமிழ் எழுத்தாளரோ யாரும் இல்லை. தமிழில் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் அத்தனை பேரையும் குப்பை என்று திட்டித் தீர்க்கும் ஒரு மனநோயாளி விமர்சகர் – சுந்தர ராமசாமியின் சீடர் – ஷோபா சக்தியை தமிழ்ச் சிறுகதையின் உச்சம் என்று எழுதுகிறார்.
சினிமாவில் இதற்கு சத்யஜித் ராயை உதாரணம் சொல்லலாம்.
ஷோபாவின் கதைகள் ஒரு தீர்மானமான வரையறைக்குள், சட்டகத்துக்குள், இலக்கணத்துக்குள் வரையப்படுகின்றன. எந்தப் பிசகும் இல்லாமல், எந்தப் பிசிறும் இல்லாமல் வெகு நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்ட கதைகள் அவருடையவை. Craft என்ற சொல்லுக்கு இலக்கணம் ஷோபாவின் கதைகள். உதாரணமாக, அவருடைய ராணி விலாஸ் என்ற சிறுகதையைப் படித்துப் பாருங்கள். ஒரு இலக்கிய ஆர்வலருக்கு அந்தக் கதை உலகின் மிகச் சிறந்த கதைகளில் ஒன்றாகவே தோன்றும். அப்படி ஒரு நேர்த்தி. அப்படி ஒரு வடிவ ஒழுங்கு.
ஆனால் அதை ஒரு ஏமாற்று வேலை (cheating) என்றே நான் அழைப்பேன். இதை ஷோபா தெரிந்தே செய்யவில்லை. அவர் செய்நேர்த்தி என்ற சட்டகத்துக்குள் வசிக்கிறார். அவரால் அதை மட்டும்தான் செய்ய முடியும். அது ஒரு ஏமாற்று வேலை என்று அவருக்கே தெரியாது. ஆனால் இன்னொரு உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் இருக்கிறார். நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்களை விடப் புகழ் மிக்கவர். அவர் பெயர் ஹாருகி முராகாமி. அவர்தான் தெரிந்தே அந்த ஏமாற்று வேலையைச் செய்கிறார். அந்த ஏமாற்றுக் கதைகளை நியூயார்க்கர் பத்திரிகையும் தொடர்ந்து பிரசுரித்து அவரை உச்சாணிக் கொம்பிலேயே வைத்திருக்கிறது. உதாரணத்துக்கு, நியூயார்க்கரில் வெளிவந்த அவருடைய Birthday Girl என்ற சிறுகதையைப் படித்துப் பாருங்கள்.
ராணி விலாஸ் கதையை ஏன் நான் பிராமண அழகியலுக்குள் அடைக்கிறேன்?
ஒரு பெண். அவளை அவள் கணவன் வாழ்நாள் பூராவும் வதைத்துக்கொண்டே இருக்கிறான். அவர்கள் பிள்ளைகளில் ஒருத்தன் அப்பனின் வதை தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறான். இப்படியே கணவனும் மனைவியும் முதுமை அடைகிறார்கள். ஒருநாள் மனைவி தன் கணவனைக் கொன்று விடுகிறாள்.
இந்தக் கதையில் எந்தப் பொய்யும் இல்லை. பாசாங்கு இல்லை. கற்பனை இல்லை. எதார்த்தமாக நாம் பார்க்கும் வாழ்க்கை. இதை ஷோபா ஒரு உச்சக்கட்ட அழகியலோடு, கலைத்துவத்தோடு எழுதியிருக்கிறார். படிப்பவர்களெல்லாம் ஆஹாகாரம் செய்வார்கள். இதற்கு விருதுகளும் கிடைக்கும். அரசு அங்கீகாரமும் கிடைக்கும். ஷோபா சக்தியின் எல்லா கதைகளுமே இப்படியாகத்தான் இருக்கின்றன. அவருக்கு விரைவில் நோபல் பரிசு கிடைத்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். விருதுக்கான, சான்றோர்களின் அங்கீகாரத்துக்கும் பாராட்டுக்குமான அஜெண்டாதான் ஷோபாவின் கதைகள்.
ராணி விலாஸ் கதையைப் படிக்கும்போது நமக்குள் ஒரு திருப்தி ஏற்படுகிறது. சினிமாவில் வில்லனை ஹீரோ அடித்துக் கொல்லும்போது ஏற்படும் ஆவேசம் ஏற்படுகிறது. ”கொல்லுடா அவனை” என்பதான ஆவேசம்.
ஆனால் என்னுடைய கதைகளை பலரும் மலம் என்றார்கள். அல்லது, எதுவுமே சொல்லாமல் இருட்டடிப்பு செய்தார்கள். ஏனென்றால், அது விபச்சாரி வீட்டுக்குப் போவது போல. இருட்டில் யாருமறியாமல் செய்ய வேண்டும். வெளியே சொல்ல முடியாது. அப்படித்தான் என் எழுத்தை சமூகம் புறக்கணித்தது. திட்டக்கூட இல்லை. முழுமையான புறக்கணிப்பு. தடை செய்யவில்லை என்பதை கவனியுங்கள். தடை செய்தால் நான் உலகப்புகழ் அடைந்திருப்பேன். ஏன் என்னைத் தடை செய்யவில்லை என்றால், இங்கே யாரும் படிப்பதில்லை. எனவே சமூகத்துக்கு என்னைத் தெரியாது. இலக்கியவாதிகள் பிராமணிய அழகியலுக்குள் இயங்குபவர்கள் ஆதலால் சீச்சீ என்று என்னை இருட்டடிப்பு செய்தார்கள்.
பிராமண அழகியலுக்கு எதிரான எழுத்து எப்படி இருக்கும்? ஆ. மாதவனின் சிறுகதைகளையும், தஞ்சை ப்ரகாஷின் சிறுகதைகளையும் நாவல்களையும் படித்துப் பாருங்கள். இவர்களில் தஞ்சை ப்ரகாஷ் முழுமையாக இருட்டடிப்பு செய்யப்பட்டவர். போர்னோ எழுத்தாளர் என்று கருதப்படுபவர்.
தஞ்சை ப்ரகாஷின் ட்ரான்ஸ்கிரஸிவ் தன்மைக்கு உதாரணமாகச் சொல்ல அவருடைய பொறா ஷோக்கு என்ற ஒரு குறுநாவல் போதும். எழுபது வயது கிழவனுக்குத் தன் பதினாறு வயது மகளைத் திருமணம் செய்து வைக்கிறாள் தாய். தஞ்சாவூர் மாவட்டத்தில் எழுபது என்பது நாற்பதைப் போல் கருதப்படும். அந்தக் கிழவனுக்கு நீண்ட நாள் உடலுறவு கொள்ளாததால் விறைப்பு ஏற்படவில்லை. மணப்பெண்ணுக்கோ அவனுக்கு விறைப்பு ஏற்படுத்தும்படி களியாட்டங்களில் ஈடுபடத் தெரியவில்லை. இதை அறைக்கு வெளியே அமர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் தாய் அந்தக் கிழவனுக்குத் தூண்டுதலை ஏற்படுத்தி, மகளின் கணவனோடு உடலுறவு கொண்டு, இப்படிச் செய் மகளே என்று சொல்லி மகளை அவனிடம் அனுப்புகிறாள்.
சரி, ராணி மஹால் கதையை எப்படி பிராமண அழகியலுக்கு எதிராக, ட்ரான்ஸ்கிரஸிவாக எழுத முடியும்? ஷோபா சக்தியின் ராணி மஹாலை நான் எப்படி எழுதியிருப்பேன்?
அதை இங்கே நான் எழுத விரும்பவில்லை. அதை நீங்களே யூகித்துக் கொள்வதற்கு ஒரு வழி சொல்கிறேன். ரியூ முராகாமியின் நாவல்களையும் சிறுகதைகளையும் படித்துப் பாருங்கள். குறைந்த பட்சம், அவருடைய சிறுகதைகள். அந்தக் கதைகளையே அவர் திரைப்படமாகவும் எடுத்திருக்கிறார். அதையும் பார்க்கலாம்.
பிராமண அழகியலுக்கு எதிர் அழகியலை முன்வைக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் கிம் கி டுக். ஆனால் திரையில் வன்முறையை ரசிக்கும் மக்கள் கூட்டத்தின் மனோபாவம் காரணமாக அவர் இலக்கியத்தில் ட்ரான்ஸ்கிரஸிவாக எழுதி யாரும் அறியாமல் வாழும் இலக்கியவாதிகள் போல் அல்லாமல் உலகப் புகழ் பெற்று விட்டார்.
கிம் கி டுக்கின் Pieta என்ற ஒரு திரைப்படம். லத்தீன் மொழியில் இதன் பொருள், கருணை. அந்தச் சொல்லுக்கு இன்னொரு அர்த்தமும் உண்டு. இயேசு கிறிஸ்துவின் மரித்த உடலைத் தன் மடியில் கிடத்தியபடி அமர்ந்திருக்கும் மேரி மாதாவின் ஓவியம் அல்லது சிற்பம் Pieta என்றே அழைக்கப்படுகிறது.
கிம் கி டுக்கின் திரைப்படம் இந்த இரண்டாவது அர்த்தத்தையே கொண்டிருக்கிறது. ஒரு இளைஞன் சிசுவாக இருக்கும்போது அவனை எங்கோ போட்டு விட்டு ஓடி விடுகிறாள் தாய். அந்த சிசுவை எடுத்துத் தன் அடியாளாக வளர்த்து வருகிறான் ஒரு தாதா. இளைஞனின் வேலை கடன் வசூல் செய்வது. பத்து மடங்கு வட்டி என்பதால் பலராலும் கடனை அடைக்க முடிவதில்லை. கடன்காரர்களின் காலையோ கையையோ முடமாக்கி விட்டு, அதற்காக அவர்களுக்குக் கிடைக்கும் இன்ஷூரன்ஸ் தொகையைக் அபகரித்துக் கொள்வதுதான் இளைஞனின் பணி. இதை அந்த இளைஞன் எந்தவிதக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் செய்து வருகிறான்.
அவனிடம் ஒரு நாள் வந்து சேர்கிறாள் ஒரு பெண். நான்தான் உன் தாய், என்னை மன்னித்து விடு என்கிறாள். கடும் கோபம் அடையும் அவன் “சிசுவாக என்னை எங்கோ போட்டு விட்டு இப்போது என் முன்னே என் தாய் என்று சொல்லிக்கொண்டு வந்து நிற்கும் நீ உண்மையிலேயே என் தாய்தான் என்று எப்படி நம்புவது?” என்று கத்தி விட்டு, அவளுடைய யோனியை வதை செய்து, இந்தத் துவாரத்திலிருந்துதான் நான் வந்தேன் என்று எப்படி நம்புவது என்று கேட்டு, அவளை வன்கலவி செய்கிறான்.
பிறகு அவள்தான் தன் தாய் என்று நம்பி அவளைச் சேர்த்துக் கொள்கிறான். ஒருநாள் இரவு அவன் தூக்கக் கலக்கத்தில் கரமைதுனம் செய்துகொண்டிருக்கும்போது அவனுக்குக் கர மைதுனம் செய்து விடுகிறாள் அவன் தாய்.
படத்தின் இறுதி வரை அவனைத் தன் மடியிலேயே போட்டுக்கொண்டு, தாலாட்டுப் பாடி, அவனை ஒரு மனிதனாக மாற்றுவதற்கு முயற்சி செய்கிறாள் அந்தப் பெண். அந்த முயற்சியில் தொடர்ந்து தோல்வியுற்று ஒருநாள் அவன் எதிரிலேயே ஒரு கட்டிடத்தின் உச்சியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்கிறாள். அந்தக் கட்டிடத்திலிருந்துதான் அவன் கடன்காரர்களைக் கீழே தள்ளி விட்டு முடமாக்குவது வழக்கம்.
இதுதான் பிராமண அழகியலுக்கு எதிர் அழகியல். ட்ரான்ஸ்கிரஸிவ் அழகியல். இந்த அம்சம் கடுகத்தனை கூட ஷோபா சக்தியின் கதைகளில் இல்லை. அது மட்டும் அல்ல, இன்றைய எழுத்தாளர்கள் பலரின் கதைகளும் பிராமண அழகியலின் விதிமுறைகளுக்கு ஏற்பவே புனையப்படுகின்றன. இந்தச் செய்நேர்த்தியில் மிகத் துல்லியமாக இருப்பதால் ஷோபா சக்தி இந்தப் பள்ளியின் ஆகச் சிறந்த கதைசொல்லியாகத் திகழ்கிறார்.
இந்தப் பின்னணியில் லா.ச.ரா.வை எப்படி வாசிப்பது என்பதை நாளை சொல்கிறேன்.
இதுவரை 300 ரூ. மாதச் சந்தாவை 60 பேர் அனுப்பியிருக்கிறார்கள். சீனி சொன்ன நூறைக்கூட தொடாது போல் தெரிகிறது. 300 பேர் அனுப்பினால்தான் இந்தத் திட்டம் ஓரளவு வெற்றி என்று சொல்லலாம். மற்றபடி எனக்கு எப்போதும் பண உதவி செய்யும் நெருங்கிய நண்பர்கள்தான் இப்போதும் அனுப்பியிருக்கிறார்கள். புதிதாக வந்தவர்கள் ஒரு முப்பது பேர் இருக்கலாம். ஏனென்றால், இந்த அறுபது பேரில் என் வலதுகரமாக விளங்கும் டாக்டர் ஸ்ரீராமும் ஒருவர். இந்தத் திட்டத்துக்கு யோசனை சொன்ன நண்பர் இன்னொருவர். ஆகவே புதிய வாசகர்கள் யாரும் 300 ரூ. குறைந்த பட்ச சந்தாவை அனுப்பத் தயார் இல்லை என்று தெரிகிறது. இருந்தாலும் அடுத்த மாதம் இருபதாம் தேதி வரை தினமும் ஒரு கட்டுரை வரும்.
300 ரூ. என்பது குறைந்த பட்ச நன்கொடை. அதிக பட்சம் உங்கள் விருப்பம்.
ஜீ.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566
பெயர்: ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே தயக்கமின்றி அனுப்பலாம்.)
***
வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:
வங்கி விவரம்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai