நேற்று (26.4.2024) கிட்டத்தட்ட நாள் பூராவும் நானும் அவந்திகாவும் தென் சென்னை முழுக்கவும் வீடு தேடி அலைந்தோம். நண்பர்களிடம் சொல்லியிருந்தால் கார் அனுப்பியிருப்பார்கள். எப்போது கிளம்புவோம் என்று தெரியாததால் கார் வேண்டாம், ஆட்டோவிலேயே போகலாம் என்று சொல்லி விட்டாள் அவந்திகா. வீட்டில் கார்த்திக்கின் கார் இருக்கிறது, டிரைவர் இருந்தால் அதில் போயிருக்கலாம். பகுதி நேர டிரைவர் கிடைத்தாலும் என்னால் பெட்ரோல் போட்டு மாளாது என்பதால் அது பற்றி யோசிக்கவே முடியவில்லை. ஆட்டோவிலேயே நாள் பூராவும் சுற்றினோம். வீட்டுக்குத் திரும்பியபோது ஏழு மணி ஆகி விட்டது. நேற்றைய கட்டுரையை எங்கே எழுதுவது? என்னால் நிற்கக்கூட முடியவில்லை. அத்தனை களைப்பு. காலையில் வெறும் கஞ்சிதான் குடித்திருந்தேன். மதியமும் சரியான சாப்பாடு இல்லை. காரணம், நான் அசைவ உணவு விடுதிக்குப் போனால் அவந்திகாவினால் சாப்பிட முடியாது. சைவ உணவகங்களில் சரியான, முறையான சாப்பாடு கிடைக்காது. சென்னையில். சாணியும் லத்தியும்தான் சாப்பாடு என்று தருகிறார்கள், சைவ உணவகங்களில்.
அதனாலும் களைப்பு அதிகமாகி விட்டது. அந்தக் களைப்பிலும் வீட்டுக்குத் திரும்பி வந்து பற்றுப் பாத்திரங்களைத் தேய்த்து விட்டு, அவந்திகாவுக்கு இரண்டு மாதுளைகளை உரித்து வைத்து விட்டுத்தான் எழுத ஆரம்பித்தேன். அதனால் 1100 வார்த்தைகள்தான் எழுத முடிந்தது.
ஆனால் உற்சாகம் எங்கே குன்றி விடுகிறது என்றால் மூன்றே மூன்று பேர்தான் முந்நூறு ரூபாய் சந்தாவும், ஒரு நண்பர் ஐநூறும் அனுப்பியிருந்தார்கள்.
ஆனால் நேற்றைய என் கட்டுரையைப் படித்து விட்டு, என் வளர்ப்பு மகன்களில் ஒருவர் 5000 ரூ. அனுப்பியிருந்தார். சில தினங்களுக்கு முன்புதான் அவர் 10000 ரூ. அனுப்பியிருந்ததால் அவரை பத்தரை மணிக்கு அழைத்தேன். ஏன் உங்களுக்கு இந்த சிரமம் என்று கேட்டேன். நான் உங்கள் வாசகன் அல்ல சார், மகன் என்றார். குட்நைட் சொல்லி ஃபோனை வைத்து விட்டேன்.
இப்படியாகத்தான் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.
லா.ச.ரா.வின் அபிதாவைப் படித்தேன். கடவுளோடு உரையாடுவது போல் இருந்தது. கடும் வெறியுடன் அதில் உள்ள பல பத்திகளை உங்களுக்கு எடுத்துத் தர வேண்டும் என்று தோன்றியது. ஆனால் ஃபைல் எல்லாம் பிடிஎஃப் ஆக இருந்ததால் காப்பி பேஸ்ட் பண்ண முடியவில்லை. சரி, எல்லாவற்றையும் தட்டச்சு செய்து விடலாமா என யோசித்து, எதற்கும் நண்பர்களைக் கேட்டு விடுவோம் என்று கேட்டேன். யாராலும் பிடிஎஃப்பை வேர்டில் மாற்றி காப்பி பேஸ்ட் பண்ண முடியக் கூடியதாகச் செய்ய முடியவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று பத்தரை மணி அளவில் சீனியைக் கேட்டேன். இது போன்ற விஷயங்களில் சீனியை அணுக எப்போதும் தயங்குவேன். காரணம், காலையிலிருந்து (பதினோரு மணி) இரவு பதினோரு மணி வரை அவரது அலுவலகத்திலிருந்தும், குடும்பத்திலிருந்தும், நட்பு வட்டத்திலிருந்தும் அவரை அழைத்து சூத்து கழுவ கக்கூஸில் தண்ணீர் வரவில்லை என்று தொடங்கி, அலுவலகத்தில் முக்கியமான ஆள் காணாமல் போய் விட்டார் என்பது வரை தொலைபேசி அழைப்புகளாக வந்து கொண்டே இருக்கும் என்பதால் அவரை நான் அணுகுவதில்லை. பெரிய எஞ்ஜினியரிங் படிப்பு படித்தவர்களெல்லாம் அவரிடம் காப்பி பேஸ்ட் பண்ண முடியவில்லை என்ற பிரச்சினையைக் கொண்டு வருவார்கள். எனக்கு வந்தால் புரிந்து கொள்ளலாம். நான் வெறும் பதினோராம் வகுப்பு. எஞ்சினியரிங் முடித்தவர்களுக்கு என்னய்யா பிரச்சினை?
கடைசியில் அவர்தான் அபிதாவை காப்பி பேஸ்ட் பண்ண முடியக் கூடியதாக ஃபைலை அனுப்பி வைத்தார். இதற்கு அவர் எடுத்துக்கொண்ட நேரம் பத்து நிமிடம். இத்தனைக்கும் அவர் எஞ்சினியரிங் குஞ்சினியரிங் எல்லாம் படிக்காதவர். இன்றுதான் அவரிடம் அந்தத் தொழில்நுட்ப நுணுக்கத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். இளம் சமுதாயத்தைப் பார்த்துப் பார்த்து, நான் ஒரு மக்கு என்ற என் நீண்ட நாளைய நம்பிக்கையிலிருந்து மாறி விட்டேன். நான் ரொம்ப ரொம்ப புத்திசாலி என்று தெரிந்து விட்டது.
***
ஒரு முக்கியமான கடிதத்தை இங்கே உங்களுக்குத் தருகிறேன்.
டியர் சாரு,
தாங்கள் எழுதிய தயிர் வடை சென்ஸிபிலிட்டி கட்டுரை, அதைக் குறித்து அராத்துவின் கட்டுரை மற்றும் அவருக்கு நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் பதில் எல்லாம் வாசித்தேன். இதுவரை இலக்கியத்தைப் பற்றி ஓரு கடைநிலை வாசகனாக நான் கொண்டிருந்த மதிப்பீடுகள் அனைத்தையுமே தவிடு பொடியாக்கிவிட்டது.
“அழகியல் என்பது வெறுமனே மொழியின் வெளித்தோற்றம் அல்ல. அழகியல் என்பது ஒரு எழுத்தாக்கத்தின் ஆன்மா” என அசொகமித்திரனின் படைப்புகளில் கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லை எனினும் எவ்வாறு குரூர அழகியலை அதன் அடிநாதமாகக் கொண்டிருக்கின்றன என அவர் படைப்புகளிலிருந்து சில தருணங்களை உதாரணமாக முன்வைத்து நீங்கள் செய்திருந்த deconstruction என்னைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது.
குறிப்பாக தண்ணீர் நாவலில் உத்தரத்தில் சுருக்குக் கயிறைப் போட்டுக் கொண்டிருக்கிற ஜமுனாவை அவள் அறையில் காணும் வீட்டுக்கார அம்மாள் ”பெண் நாணிட்டுச் செத்த வீடு” என்ற பெயர் வந்து விடுமே என்பதற்காகப் பதறும் இடம், வெறும் ஒரு அபலைப் பெண்ணின் மேல் பரிதாப உணர்ச்சியைக் கடத்துவது போன்று அமையாமல், வாழ்வின் அபத்தத்தன்மை மற்றும் கைவிடப்பட்ட நிலையை முன்வைக்குமாறு அமைந்துள்ளதாக தாங்கள் குறிப்பிடுவது, கதையை கதையாகவே மட்டும் வாசித்துப் பழகிய என்னைப் போன்ற ஆரம்ப நிலை வாசகர்கள் கவனிக்கத் தவறும் தத்துவக்கூறுகள் ஆகும்.
கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு தருணத்தை எம்.வி. வெங்கட்ராமின் காதுகள் நாவலில் வாசித்திருக்கிறேன். மாலி, வறுமையினால் இறந்து பிறந்த தனது சிசுவை செவிலியரிடம் கையிலிருந்த காசை லஞ்சமாகக் கொடுத்து தனது வீட்டிற்கு வாங்கி வந்து கொல்லைப்புறத்தில் அதைப் புதைக்கக் குழி தோண்டிக்கொண்டிருக்கும்போது பின் வீட்டுக் கிழவி, குழியைத் தன் இடத்திற்குள் தோண்டி விட்டதாக எரிச்சலுடன் கூறி சற்று முன்னே தள்ளித் தோண்டுமாறு வலியுறுத்துகிறாள்.
வெங்கட்ராம் நினைத்திருந்தால் இந்தச் சம்பவத்தை ஒரு பெரிய அழுகாச்சி காட்சியாக சித்தரித்து வாசகர்களை கண்ணீர் சமுத்திரத்தில் மூழ்கடித்திருக்கலாம். ஆனால், எந்த சோக வர்ணனைகளும் அங்கே இடம் பெறவில்லை. மேலும் இந்த நாவல் வெங்கட்ராமின் auto-fiction வேறு. எனக்கு இதை வாசிக்கும் போது துக்கம் எழுவதற்கு மாறாக சகிக்க முடியாத ஒரு வெறுமை உணர்வே ஏற்பட்டது. இதை உப்பு, புளி, காரம் பிரச்சினையாக அணுகாமல், அதற்கு மாறாக மனித வாழ்வின் angst and absurdity குறித்து வெங்கட்ராமன் குரலெழுப்ப விளைகிறாரோ என உங்கள் கட்டுரையை வாசித்த பின் தோன்றுகிறது.
மேலும் வெங்கட்ராமின் பைத்தியக்காரப் பிள்ளை எனும் சிறுகதையில் வரும் தாய் கதாப்பாத்திரம்போல ஒரு தாயை நான் எந்தத் தமிழ்க் கதையிலும் இதுவரை வாசித்ததில்லை. நம் சமூகத்தில் தாய் மேல் அனைவரின் மனதிலும் தோய்ந்த புனித பிம்பத்தை முற்றிலும் கேள்விக்குட்படுத்துகிறது அந்தச் சிறுகதை. தாயையே ஒரு அதிகாரத்தின் அடையாளமாக இக்கதையில் நான் கண்டேன். நான் உங்களை மட்டும் வாசித்திருக்காமல் இருந்திருந்தால் எம். வி. வெங்கட்ராம், தஞ்சை பிரகாஷ் போன்ற மேதைகளை கண்டைந்திருப்பேனா என்பது கேள்விக்குறியே. அது போக, Marquis de Sade, Pierre Klossowski போன்ற பெயர்கள் தெரிவதற்கே வாய்ப்பில்லை!
இரண்டு ஆண்டுகளுக்கு முன் அசோகமித்திரனின் புலிக்கலைஞன் சிறுகதையை என் கல்லூரி நூலகத்தில் வாசித்தேன். சமீபத்தில் ஓவியர் Edvard Munchஇன் The scream ஓவியத்தை நான் கண்டபோது ‘டகர் பாய்ட்’ காதரின் ஞாபகம்தான் வந்தது. (எனக்கு அந்த ஓவியத்தின் உள்ளார்ந்த அர்த்தம் பற்றி வேறு ஒன்றும் தெரியாது). நான் படித்ததிலேயே புலிக்கலைஞன் போல வெகுஜன தமிழ் சினிமா உலகை பகடி செய்து, உன்மையான கலை இங்கு அரங்கேறாமல் ஓரங்கட்டப்படுவதை உணர்த்திய கதை வேறு ஒன்றில்லை.
கதையின் இறுதியில் சென்ற படத்தில் நாயகன் காவடி எடுத்து படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்த படத்திற்கு கரகாட்டம் ஆடுவதாக படக்குழுவினர் முடிவு செய்தது, நமது சமூகத்தின் கலை ரசனை மற்றும் வாழ்வியல் மீதான ஒரு காத்திரமான விமர்சனமாக நான் கருதுகிறேன் . ஆனால் உங்கள் கட்டுரையை வாசித்த பிறகு நான் அதில் பார்க்கத் தவறிய வேறு சில பரிமாணங்கள் எனக்குப் புலனாகிறது.
உதாரணத்திற்கு, புலிக்கலைஞன் காதரை மையமாகக்கொண்டிருந்தாலும் காஸ்டிங் அசிஸ்டன்டின் (கதைசொல்லி) பார்வையிலிருந்தே கதை செல்கிறது. கதை இலாக்காவை சேர்ந்த சர்மா காதருக்கு எப்படியாவது வாய்ப்பு வாங்கித்தர வேண்டும் என முயன்று வாய்ப்பும் வாங்கிவிடுகிறார். ஆனால் இறுதியில் காஸ்டிங் அசிஸ்டன்ட் காதருக்கு அனுப்பும் கடிதம் திருப்பி அவரிடமே வருகிறது, அந்த விலாசத்தில் மேற்படி நபர் இல்லை என. காதரின் வறுமையை மட்டுமின்றி காஸ்டிங் அசிஸ்டன்டின் (கதைசொல்லி) உதவ முடியாத கையறு நிலை, அவர் மனதில் உருவாக்கும் angstஐ, அவரது இடத்திலிருந்து பார்க்குமாறு என்னைச் சிந்திக்க வைத்தது உங்கள் கட்டுரையே. Catharsis எனும் வார்த்தையையே இந்தக் கட்டுரை வாசிக்கும்வரை நான் கேள்விப்பட்டதில்லை.
உங்களுடைய அந்தோனின் ஆர்த்தோ நாடகத்துக்கு ஜெயமோகன் எழுதிய மதிப்புரையில் “வரலாறு என்பதே தர்க்கம் என்பது பித்தின்மீது தொடுத்த போரும், அறுதியாக அதை அழித்தொழித்ததும்தானா என்ற வினாவுடன் வந்து நின்றிருக்கிறது இந்த நாடகப்பிரதி” எனக் குறிப்பிட்டிருந்தார். இது எனக்கு வேறு ஒரு விஷயத்தையும் நினைவுக்குக் கொண்டுவருகிறது
சென்ற சென்னை புத்தகக் கண்காட்சியில் நீங்கள் ஆற்றிய உரையில் collective madness, cultural madness and creative madness என மூன்று வகையான madness இருக்கிறது எனக் குறிப்பிட்டுருந்தீர்கள். இதில் யூதர்களின் படுகொலை நாஜிகளின் collective madnessஇன் விளைவு என்றும், பெரும்பாலான நம்மூர் மைய நீரோட்ட சினிமாவினால் மக்களுக்குத் தொத்திக்கொள்வது cultural madness என்றும், ஆண்டாள் பித்தநிலையில் பெருமாளை எண்ணி ஏற்றிய பாசுரங்களை creative madnessக்கு உதாரணமாகவும் சொன்னீர்கள்.
பிறகு பக்தி இயக்க காலத்தில் எழுதப்பட்ட பாடல்களில் வெளிப்படும் தீவிரமான பித்தநிலை சங்க காலப்பாடல்களில் வெளிப்படவில்லை என தாங்கள் கூறியதும், நீங்கள் பேசி முடித்த பிறகு அதற்கு மனுஷ்யபுத்திரன் அதன் சமூகவியலான காரணத்தை விளக்கியதுமாக மிக சுவாரஸ்யமாக அன்றைய உரையாடல் போய்க்கொண்டிருந்தது ஒரு பக்கம் இருக்கட்டும்.
மேற்கண்ட உரையில் நீங்கள் creative madness மற்றும் cultural madness பற்றிப் பேசியபோது எனக்கு திடீரென புலிக்கலைஞன் கதையே நினைவுக்கு வந்து சென்றது. ‘டகர் பாய்ட்’ காதர் சொந்த கண்களோடு ஒரு சிறுத்தையின் தலையுடைவனாக மாறி கர்ஜித்து பத்தடி சுவரின் மேல் ஒரேப் பாய்ச்சலில் தாவும் ஆவேசமும், சர்மாவின் மேஜை மேல் சிதறிக்கிடக்கும் பொருட்களில் கால்படாமல் பாயும் நேர்த்தியும் எனக்கு தாங்கள் குறிப்பிட்ட creative madnessஐயே நினைவுப்படுத்தியது. அதேபோல் கதையின் இறுதியில் படக்குழுவினர் எடுக்கும் cliche தனமான முடிவோ cultural madnessஐ நினைவுப்படுத்தியது. இக்கதையே (புலிக்கலைஞன்) cultural madness எவ்வாறு creative madnessஐ முடக்கிக்கொண்டே வருகிறது எனும் அடிப்படையில் அமைந்துள்ளதோ எனவும் எனக்குத் தோன்றுகிறது.
நீங்கள் சாதரணமாக சொல்லிவிட்டுக் கடந்து செல்லும் ஒரு வாக்கியத்தில்கூட எவ்வளவு ஆழமான விஷயங்கள் புதைந்து கிடக்கிறது என நினைத்தால் பிரமிப்பாக உள்ளது.
திருவண்ணாமலை பயிலரங்கத்தின்போது, இதைப்பற்றி எல்லாம் பயிலரங்கம் முடிந்த பின் உங்களிடம் கேள்வி கேட்க வேண்டும் என்றுதான் இருந்தேன். ஆனால் உங்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று எண்ணி புத்தகங்களில் கையெழுத்து மட்டும் வாங்கிக்கொண்டு விடைபெற்று கொண்டேன்.
சாரு ஆன்லைன் தளம் ஒரு பொக்கிஷம். நீங்கள் அதற்கு நிர்ணயம் செய்திருக்கின்ற குறைந்தபட்ச சந்தா நீங்கள் எழுதும் ஒரு வாக்கியத்திற்கு கூட ஒப்பாகாதுதான். ஆயினும் இன்றைய எனது பொருளாதார சூழலை முன்னிட்டு அந்தக் குறைந்தபட்ச சந்தாவைத்தான் என்னால் கட்ட முடிந்தது. ஆனால் இன்னும் எவ்வளவோ காணிக்கை செலுத்த கடமைப்பட்டிருக்கிறேன்.
நீங்கள் அராத்துவுக்கு அபிதா மற்றும் அசுரகணம் நாவல்கள் குறித்து எழுதவிருக்கும் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றேன்.
Thanks for spreading your wisdom.
பேரன்புடன்,
திருக்கண்ணன்
(பின்குறிப்பு: என்னளவில் ஒரு எழுத்தாளருக்கு நான் எழுதும் முதல் கடிதம் இதுவே. அதுவும் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளருக்கு. ஆகையால், இக்கடிதத்தில் மொழிப் பிழை அல்லது பொருளில் பிழை ஏதாவது இருந்தால் தயவுசெய்து என்னை சிறுபிள்ளை என எண்ணி மன்னித்து விடுங்கள்!)
அன்புள்ள திருக்கண்ணன்,
பிழை எதுவும் இல்லை. ஒவ்வொரு பெயரின் முன்னாலும் எழுத்தாளர் என்று இருந்ததை மட்டும் நீக்கி விட்டேன். முக்கியமாக, எழுத்தாளர் ஜெயமோகனை ஜெயமோகன் என்றும், எழுத்தாளர் மனுஷ்ய புத்திரனை மனுஷ்ய புத்திரன் என்றும், எழுத்தாளர் அராத்துவை அராத்து என்றும்.
மற்றபடி உங்கள் கடிதம் எனக்குப் பெரும் உற்சாகத்தை அளித்தது. அதிலும் நான்கு பேர் மட்டுமே சந்தா அனுப்பியிருந்த தருணத்தில் இந்தக் கடிதம் அந்த மன உளைச்சலையெல்லாம் இருந்த இடம் தெரியாமல் அடித்து விட்டது.
தொடர்ந்து வாசியுங்கள். கையில் காசு கிடைக்கும்போது என்னுடைய பழுப்பு நிறப் பக்கங்கள் தொகுதிகளை வாங்கிப் படியுங்கள். இணையத்திலும் அவை கிடைக்கின்றன. புத்தகமாக வாங்கினால்தான் பணச் செலவு. அது இல்லாமல் இணையத்தில் படிக்கலாம். என் இளம் வயதில் நான் நூலகங்களில் வாசித்துத்தான் உருவானேன். இன்று இணையம்.
சாரு
300 ரூ. என்பது குறைந்த பட்ச நன்கொடை. அதிக பட்சம் உங்கள் விருப்பம்.
ஜீ.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566
பெயர்: ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே தயக்கமின்றி அனுப்பலாம்.)
***
வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:
வங்கி விவரம்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai