9. ஒரு குருக்களின் கதை

ஆண்டன் செகாவ் பற்றி, தஸ்தயேவ்ஸ்கி பற்றி, மாப்பஸான் பற்றி, ப்யூகோவ்ஸ்கி பற்றி, மற்றும் பல மேற்கத்திய இலக்கிய மேதைகள் பற்றியெல்லாம் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் ரோமாஞ்சனம் பெருகப் பேசும்போதெல்லாம் எனக்கு அசூயையாக இருக்கும்,   நம்மிடையே இருக்கும் மாமேதகள் பற்றி யார் ஐயா பேசுவது என்று. 

பேசாவிட்டாலும் பரவாயில்லை, அந்த மாமேதைகள் மீது மூத்திரமும் அடித்தால் அந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல?  அதிலும் என் மாணவரே அப்படிச் செய்யும்போது மனம் பதறுகிறது. 

இது அராத்து:

“லா.ச.ரா வின் அபிதா படித்தேன். எந்தச் சந்தேகமும் இல்லாமல் அதை இலக்கியம் அல்ல என இடது கையால் ஒதுக்கி வைப்பேன். இலக்கியம் என்ன இலக்கியம்? அதெல்லாம் ஒரு புதினமே இல்லை என்பேன். அது ஏதோ இன்ஸெஸ்ட் மாஸ்ட்ருபேஷன் வகையறா போல. இன்ஸெஸ்ட் என்பது இலக்கியத்தில் பிரச்சனை அல்ல. அதை நேர்மையாக எதிர்கொண்டு துணிச்சலாக எழுதினாயா என்பதுதான் பிரச்சனை. அதை பூடகமாக, பூடகமான மொழியில், கனவில் கையட்டிப்பது போல, அப்படிக் கூட அல்ல, கனவில் குறிசொறிவது போல என்னத்தையோ எழுதி, அதை புனிதமான – கிட்டத்தட்ட கவிதை மொழியில் கொடுத்து விட்டால் ஆச்சா? அந்தக் கிட்டத்தட்ட கவிதை மொழிதான் அபிதாவை எல்லோரையும் இலக்கியமாக ஒத்துக்கொள்ள வைக்கிறது.

லொலிதா படித்தவனுக்கு அந்த இலக்கியம் என்ன சொல்ல வருகிறது, எந்த உணர்வைக் கடத்துகிறது  என்று புரியும், மொழியைத்தாண்டி. அபிதா படித்தவனுக்கு ஒரு மயிரும் ஏறாது. என்னமோ கவித்துவமா சொல்லியிருக்காருப்பா என உணர்ச்சிவசப்பட்டு விழிப்பான்.  லா.ச.ரா. எப்படி இவ்வகை எழுத்துக்கு அதிகாரம் உருவாக்குகிறார் பாருங்கள். அவருக்கு மேலே இருந்து எழுத்து வருகிறதாம். அதாவது சரஸ்வதி நேரடியாக லா.ச.ரா. வுக்கு அளிக்கிறாள். இவர் கை வழியே அப்படியே கொட்டுகிறாராம். எப்படி? இதற்குப் பிறகு எவனாவது அதை விமர்சிப்பான்?  ஒரு தலித் எழுத்தாளரால் இபப்டிச் சொல்ல முடியுமா? சொல்ல இயலாது என்பது லா.ச.ரா. வுக்குத் தெரிய வேண்டும் அல்லவா? அவனால் சொல்ல முடியாததை தாம் சொல்லக்கூடாது என்றல்லவா அவர் முடிவெடுத்திருக்க வேண்டும்?”

அராத்துவின் இந்த மேற்கோளில் கடைசி நான்கு வாக்கியங்கள் சுத்தப் பேத்தல்.  அதற்கு யாரும் பதில் சொல்ல முடியாது.  தலித் எழுத்தாளர்கள் எல்லாம் என்ன நாத்திகர்களா? தம்முடைய கதையை அவர்கள்தான் சொல்ல வேண்டும்.  தலித்துகளால் சொல்ல முடியாததைத் தான் சொல்லக் கூடாது என்றெல்லாம் பேசுவது ஹிட்லரிசம்.  தாலிபான்களின் பேச்சு.  இது பற்றியெல்லாம் விவாதிப்பதே அவமானம். 

ஆனால் அபிதா இலக்கியம் அல்ல என்று அராத்து சொல்வது பற்றிப் பேசலாம்.  எது இலக்கியம், எது இலக்கியம் அல்ல என்று யாரும் தீர்ப்பு சொல்ல முடியாது.  முதலில் இது உரையாடலுக்கான பொருளே அல்ல.  நான் எத்தனை மணி நேரம் விவாதம் செய்தாலும் அபிதா ஒரு இலக்கியப் பனுவல் என்று அராத்துவிடம் என்னால் நிரூபிக்க இயலாது.  அதேபோல் அவர் எத்தனை மணி நேரம் விவாதித்தாலும் அபிதா இலக்கியம் அல்ல என்று என்னை ஒப்புக்கொள்ளச் செய்ய முடியாது.  இது எரிந்த கட்சி, எரியாத கட்சி விவாதம் போல.  அல்லது, ஒரு ஆத்திகனும் நாத்திகனும் விவாதிப்பது போல.  எந்தப் பயனுமே இல்லாத வெற்றுச் சண்டை.

என்னைப் பொருத்த வரை அபிதா வ்ளமீர் நொபகோவின் லொலிதாவை விட பல மடங்கு உசத்தியான இலக்கியப் படைப்பு.  லொலிதாவை நான் ஒரு நல்ல இலக்கிய ஆக்கம் என்று சொல்ல மாட்டேன்.  ஏனென்றால், அதில் பாவம் என்ற அடிப்படைச் சரடு ஓடுகிறது.  லொலிதாவின் வயது பன்னிரண்டு.  லொலிதாவின் மீது காதல் கொள்பவன் அந்த நாவலில் குற்றம் செய்தவனாக, பாவம் செய்தவனாக வருகிறான். 

எப்படி யோசித்தாலும், ஆல்பர் கம்யு, சார்த்தர், ஜார்ஜ் பத்தாய் போன்ற எல்லா ஃப்ரெஞ்ச் எழுத்தாளர்களையும் விட லா.ச.ரா. எத்தனையோ படி மேலே இருக்கிறார் என்றே நிச்சயமாகத் தோன்றுகிறது.  தான் எழுதுவதெல்லாம் சரஸ்வதி கொடுத்த்து என்று லா.ச.ரா. சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டுமே, அதைப் பற்றி நமக்கு என்ன?  ஏன், சரஸ்வதி என்பது பொய் என்று நிரூபிக்கப்பட்டு விட்டதா?  கடவுள் இல்லை என்று நிரூபிக்கப்பட்டு விட்டதா?  ராபர்ட் ஸ்வபோதா எழுதிய அகோரா என்ற நூலைப் படித்தால் சரஸ்வதி உண்மைதான் எனத் தோன்றுகிறது.  மேலும், வள்ளுவர் சொல்வது பொய், தாயுமானவர் சொல்வது பொய், அருணகிரி நாதர் சொல்வது பொய், ராமகிருஷ்ணர் பொய், ரமணர் பொய், விவேகானந்தர் பொய் – இப்படி நூற்றுக்கணக்கான ஆன்மீகவாதிகள் மற்றும் கவிஞர்கள் கொடுக்கும் சாட்சியெல்லாம் பொய் என்று என் முற்போக்குத் தம்பி சொல்வதை நான் ஏன் நம்ப வேண்டும்?

நான் பலமுறை எழுதியிருக்கிறேன்.  ஏழ்மையான கோவில்களில் பணி புரியும் குருக்கள் இனத்தார் சமூகத்தின் விளிம்புநிலை மாந்தர் போல் பெரிதும் ஒடுக்கப்பட்டவர்கள்.  அவர்களை விட ஒடுக்கப்பட்டவர்கள் சவுண்டிப் பாப்பான் என்று அழைக்கப்படும் சவுண்டி பிராமணர்.  அவர்கள் நடமாடும் பிரேதம் எனவே கருதப்பட்டார்கள். 

தலித்துகள் தீண்டாமைக் கொடுமையை அனுபவித்தவர்கள்.  அவர்களும் தங்கள் இனத்தில் ஒரு பகுதியினரைத் தீண்ட மாட்டார்கள்.  அவர்கள் தலித்துகளுக்கு துணி துவைத்துக்கொடுக்கும் வண்ணார் இனத்தவர்.  தலித்துகளிலேயே இந்த ஒடுக்குமுறை.  அவர்களைப் போன்றவர்களே குருக்கள்மாரும் சவுண்டிகளும். 

இலக்கியமே அல்ல என்று அராத்து சொல்லும் அபிதாவில் ஒரு குருக்கள் தன் கதையை இரண்டு பத்திகளில் சொல்கிறார்.  இந்த உலகில் எழுதப்பட்ட எல்லா குரூர அழகியல் பிரதிகளையும் விட, ஏன் அசோகமித்திரன் காண்பிக்கும் குரூரங்களையும் தாண்டிய ஒரு குரூரமான கதை அந்த குருக்களின் கதை:  

”மலையுச்சியில் கருவேலங் காட்டுள், மரத்தடியில் எழுந்தருளியிருக்கும் திருவேலநாதரை எனக்கு நன்கு தெரியும். கோபுரமா, கூரையா, பந்தலா ஒன்று கிடையாது. பக்தர்கள் எழுப்பப் பார்த்தும் ஒத்து வரவில்லை. ஒன்று கூரை சரிந்தது ; இல்லை, கொத்தனுக்குக் கால் ஒடிந்தது. இல்லை, மெய்வருந்தச் சேர்த்துக் குன்றின் மேல் கொண்டு போய்க் குவித்த மணலும் தாளித்து வைத்த சுண்ணாம்பும் அங்குமட்டும் இரவில் மழை பெய்து மறுநாள் சோடை கூடத் தெரியாது கரைந்து போயின.

“எங்கள் ஜாதியே விதியை நொந்து பயனில்லை. சுவாமியைத் தொட்டு நடத்தும் ஜீவனம் உருப்பட வழியேயில்லை. இது குலசாபம். திருஷ்டாந்தம் வெளியே தேட வேண்டாம். எங்கள் குடும்பத்தையே எடுத்துக் கொள்ளேன். அரிசி ரூபாய்க்கு எட்டுபடி வித்த அந்த நாளிலேயே எங்களுக்கு விடிஞ்சதில்லை. என்னைப் பார், கார்த்திகை அமாவாசை வந்தால் எழுபதை எட்டிப்பிடிக்கப் போறேன். அறுபது வருஷமா நொண்டிண்டிருக்கேன். இளம்பிள்ளைவாதம். காலை இழுத்தூட்டு நொண்டி குருக்கள்னு கட்டின பட்டம் வழக்கில் வந்து கெட்டிப்பட்டு, தொட்டிலிட்டு சூட்டின சர்மன் ஊருக்கே மறந்து போச்சு. மூக்குக் கண்ணாடிக்குக் கம்பி ஒடிஞ்சு வருஷம் மூணு ஆறது. கயித்தைப் போட்டுக் கட்டிண்டிருக்கேன். மூக்குக்குப் பழக்கம் கண்ணுக்குத் தைரியம்னு தவிர கண்ணாடியால் உண்மையால் உபயோகமில்லை. அதில் பவர் எப்பவோ போயாச்சு.

”சரி அதுதான் அப்படிப் போச்சா? போகட்டும். இந்த நொண்டிக்காலோடு எங்கள் சக்திக்கேற்றபடி – இல்லை, சக்தியை மீறிக் கல்யாணம் ஆகி சிசுக்களுக்கும் குறைச்சலில்லை. குழந்தைகள்னு சொல்றோம், ஆனால் எல்லாம் பெத்த கடன்கள்; வெறும் இச்சாவிருத்திகள். குழியில் வெக்கறதும் வயத்தில் காண்றதுமா உயிர்க்குமிழிகள் வெடிச்சதுபோக தங்கினது பிள்ளை ஒண்ணு, பெண் ஒண்ணு.

”சகுந்தலையைத்தான் உனக்குத் தெரியும். அவளுக்கு அண்ணன், அம்மா செல்லம், உதவாக்கரை. ஒரு நாள், எனக்கு ‘உடம்பு சரியில்லை. கோவிலுக்குப் போன்னு சொல்லியிருக்கேன். வேறெங்கோ காசு வெச்சு கோலியாடப் போய், ஒரு கால பூஜை, அதையும் முழுங்கிட்டான். விஷயம் வெளிப்பட்டதும் அடிச்சேன்; அதுவே சாக்கு, வீட்டை விட்டு பன்னிரண்டு வயசில் ஓடிப் போனவன் இன்னும் திரும்பிவல்லே. வந்தால் உன் வயசிருப்பான். நான் செத்துப் போனப்புறம் பட்டனத்தார் மாதிரி கொள்ளி போடத்தான் வருவானோ, இல்லை அவனேதான் கொள்ளிக்கிரையாயிட்டானோ? ஏன் முகத்தை சுளிக்கிறே? பேச்சுன்னா எல்லாத்தையும்தான் பேசி ஆக வேண்டியிருக்கு. மாமிக்கும் எனக்கும் பேச்சறுந்து போச்சு. நீயே கவனிச்சிருக்கலாம். இதேதான் காரணம். என்ன பண்ணுவேன்? திருவேலநாதர் பிறக்கும்போதே பிள்ளையாண்டானுக்கு மண்டையில மரத்தையும்

”காலில் கருவேல முள்ளையும் தைச்சு விட்டுட்டார். அவரால் எங்களுக்கு முடிஞ்சது அவ்வளவுதான்.

”ஆனால் அம்பீ, இப்போ வரவரத் தள்ளல்லேடப்பா, சகுந்தலையே குடம் ஜலத்தை மலைமேல் கொண்டு போய் வைக்க வேண்டியிருக்கு. ஒரொரு சமயம் நீயும்தான் கை கொடுக்கறே. என் பாட்டன் முப்பாட்டன் நாளிலிருந்து இதே மாதிரி தினே தினே மலையேறி சுவாமி தலைமீது கொட்டியிருக்கும் ஜலத்தை தேக்கினால் கரடிமலையே முழுகிப் போயிருக்கும். ஆனால் கண்ட மிச்சம் என்ன? இந்த விரக்திதான். விரக்தி என்பது என்னென்று நினைக்கறே? தோல் தடுமன்; குண்டு பட்டால் குண்டு பாயக்கூடாது, குண்டு தெறிச்சு விழணும்னு அர்த்தம். ரோசத்துக்கு முழுக்குன்னு அர்த்தம். பசிச்சவனின் பழம் கணக்கு; தரிசனம் தராத சிரமத்தின் ரிகார்டு; காலே தேஞ்சாலும் போய்ச் சேராத ஊருக்கு வழி…”

குருக்கள் பேச இன்று முழுக்கக் கேட்கலாம். பொழுது போவதே தெரியாது. பேச்சில் ஒரு கிண்டல், வார்த்தைகளினிடையிடையே ஸம்ஸ்கிருதம் தெளித்து பேச்சிலேயே இன்னதென்று இனம் தெரியா மணம் கமழும். தான் உள்பட உலகத்தையே எள்ளும் புன்னகையில், மேல்வாயில் முன்பற்கள் இரண்டு காணோம், ஏன் என்று காரணம் கேட்காமலே, தானே: “கீழே விழவில்லை வயிற்றுள் இருக்கு” என்று அதிலும் ஒரு பொடி.”

***

இது இலக்கியம் இல்லை என்றால், அராத்து சார், நான் உங்கள் பாதம் பட்ட மண்ணெடுத்து நெற்றியில் இட்டுக்கொண்டு விலகி விடுகிறேன்.  ஆளை விடுங்கள்.

***

சந்தா அனுப்ப மீண்டும் நினைவூட்டுகிறேன். 300 ரூ. என்பது குறைந்த பட்ச நன்கொடை.  அதிக பட்சம் உங்கள் விருப்பம்.     

ஜீ.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்:  ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே தயக்கமின்றி அனுப்பலாம்.)

***

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

வங்கி விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. 

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai