ஆறு ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் ராம்ஜி, காயத்ரி, நான் மூவரும் பேசிக்கொண்டிருந்தபோது போகிற போக்கில் என்று சொல்வோமே அம்மாதிரி த்வனியில் “உடனே லா.ச.ரா.வை மொழிபெயர்த்து விடுவோம்” என்றாள் காயத்ரி. ஆங்கில மொழிபெயர்ப்பு. அதைக் கேட்டவுடன் நான் ஏதோ சாமி வந்தது போல் ஒரு வெறியாட்டம் ஆடினேன். அந்த வெறியாட்டத்தின் சுருக்கம்: ”என்னது, லாசராவை மொழிபெயர்ப்பதா? கடவுளின் வார்த்தைகளை அப்படி போகிற போக்கில் மொழிபெயர்த்து விட முடியுமா? லாசராவை மொழிபெயர்க்க ஒருத்தன் இந்த உலகில் பிறந்திருக்கிறானா?”
குரூரத்தின் அழகியலை தமிழில் நான் கற்றது அசோகமித்திரனிடமிருந்து. அதே சமயம் என் எழுத்தின் மூல வேர், ஜெர்மன் சினிமா. அதிலும் குறிப்பாக ஜெர்மானிய பெண் இயக்குனர்கள். அதனால்தான் அடிக்கடி நான் ஜெர்மன் சினிமாவின் வாரிசு என்று சொல்கிறேன். இது அழகியல். ஆனால் நான் ஒரு மொழிக் கலைஞனும் கூட. எனக்குத் தெரிந்து நவதமிழில் பாரதிக்கு இணையாக மொழியைக் கையாண்டதில் முதலிடத்தில் வருபவன் அடியேன். ஏன் இங்கே லா.ச.ரா.வையும் தி. ஜானகிராமனையும் சேர்க்கவில்லை என்றால், அவர்கள் மொழியை அழகுறச் செய்தார்களே தவிர சிதைக்கவில்லை. நான் சிதைக்கவும் செய்தேன். ஸீரோ டிகிரியில் கவித்துவமும் உண்டு. மொழியின் சிதைவும் உண்டு. என்னுடைய நான் லீனியர் கதைகள் மற்றுமொரு உதாரணம்.
நானொரு மொழிக் கலைஞன் என்று மமதையுடன் சொல்லிக் கொள்வதற்குக் காரணம், நான் லா.ச.ரா.வின் புத்திரன். லா.ச.ரா.வின் மொழி என் குருதியில் ஓடுகிறது. அவர் சரஸ்வதியிடமிருந்து பெற்றேன் என்கிறார். எனக்குக் கனவிலிருந்து வருகிறது. அபிதாவில் ஒரு இடம் இது:
“எழுதியாகிறதென்றாலும் கதையில் படிப்பது அனுபவமாக நிகழ்ந்திடில், அது சமாதானமாவதில்லை. அதில் கதையின் இன்பமில்லை. ஒரு தினுசான பீதிதான் தெரிகிறது. எந்தச் சமயம் கனவு கலைந்து எப்போ நனவில் விழிப்போ எனக் கனவு கலையும் சமயத்திற்கஞ்சி நனவை நானே எதிர்கொள்ளக் கண்ணைக் கசக்கிக் கொள்கிறேன். ஆனால் நான் காண்பதாக நினைத்துக் கொள்ளும் கனவேதான் நான் கண்விழித்த நனவு எனத் தெளியத் தெளியக் குழப்பம்தான் கூடுகிறது.”
இன்ஸெப்ஷன் படத்தில் வருவது போன்ற ஒரு காட்சி இது.
இப்போது அராத்து விஷயத்துக்கு வருவோம். அராத்து இப்படி எழுதுகிறார்:
நானும் திரும்ப அபிதா படிக்க வேண்டி இருக்கிறது. கொஞ்சம் பொறுமையா தான் வர வேண்டும்.
முதலில் தலித் மேட்டருக்கு மட்டும் பதில் சொல்லி விடுகிறேன்.
இந்த தலித் மேட்டரே சாருவிடமிருந்து கற்றதுதான்.
சமூகம் நமக்கு கொடுக்கும் பிரவிலேஜை பயன்படுத்தக் கூடாது. அதாவது பிறப்பால் கிடைக்கும் பிரிவிலேஜ்.
ஜெயமோகனின் மகன் ஒரு முறை முதல் மதிப்பெண் எடுத்திருந்ததை கொஞ்சம் பெருமையாக ஜெயமோகன் பகிர்ந்த பொழுது சாரு நிவேதிதா எழுதிய கட்டுரை மிக முக்கியமானது.
அதை இப்பொழுது ஸ்ரீராம் மீண்டும் மறு பதிப்பு கூட செய்யலாம்.
நினைவில் இருந்து சொல்கிறேன்…
எத்தனையோ மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்து, தேர்வில் தோல்வியுற்று தூக்கு மாட்டிக் கொண்டு செத்துக் கொண்டிருக்கையில், தன் மகன் முதல் மதிப்பெண் எடுத்ததை கொண்டாடுவது சரியில்லை என்பதாக போகும் அந்த கட்டுரை.
நான் புரிந்து கொண்டது…
1. முதல் மதிப்பெண் என்பது அந்த தோல்வியுற்ற மாணவர்கள் மற்றும் குறைந்த மதிப்பெண் எடுத்து குகைந்து கொண்டிருக்கும் மாணவர்கள்… இவர்களை ஒப்பிட்டு ரிலேடிவாக கிடைக்கும் ஒரு இடம் தான் முதல் மதிப்பெண்.
2. எல்லோரும் எல்லாக் குழந்தைகளையும் தன் குழந்தைகள் போல தானே பாவிக்க வேண்டும். அதிலும் எழுத்தாளர் பார்வை எப்படி இருக்க வேண்டும்?
ஒரு பிராமண குலத்தில் பிறந்ததால், சரஸ்வதி என்கிட்ட பேசறா, சரஸ்வதி எனக்கு கொடுக்கிறா என்று பேசுவதை எல்லாம் நான் ஒரு பிரவிலேஜாக பார்க்கிறேன்.
கவனியுங்கள் , ஒரு பிராமணன் அப்படி பேசும் போது அதை சமூகம் ஒத்துக் கொள்ளும். அதற்கு ஒரு நம்பகத்தன்மை கிடைக்கும். இது ஒரு நாளில் நடப்பதல்ல.
தலித் மட்டுமல்ல, வேறு எந்த இடைநிலை ஜாதியை சார்ந்தவர்களும் பொதுவாக இப்படி பேசிவிட முடியாது. பேசக்கூடாது என்பதல்ல, பேச மாட்டார்கள். பேசினாலும், சமூக சூழலில் அது எடுபடாது.
இது ஒரு நுண்ணுணர்வு சம்பந்தப்பட்டது என்று நான் நம்புகிறேன். ஒரு வாசகனுக்கே இருக்கக்கூடிய இந்த ஒரு வாசகனுக்கே இருக்க வேண்டிய இந்த நுண்ணுணர்வும் இங்கிதமும் எழுத்தாளருக்கு இல்லை என்றால் எப்படி?
பக்தி இலக்கியம் என்றால் கூட அப்படி எழுதலாம். லா ச ரா எழுதியது பக்தி இலக்கியமா?”
”சமூகம் நமக்கு கொடுக்கும் பிரவிலேஜை பயன்படுத்தக் கூடாது. அதாவது பிறப்பால் கிடைக்கும் பிரிவிலேஜ்.”
Privilege என்று கூகிளில் தட்டினால் சலுகை என்று வருகிறது. ஆனால் அராத்து பிரிவிலேஜ் என்று எழுதுகிறார். இப்படித் தமிழைக் கொலை செய்பவர்கள் லா.ச.ரா.வையே படிக்கலாகாது என்று சொல்வேன். ஆனால் ஜனநாயக நாடு. யார் எதைப் படிக்கக் கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. ஆனாலும் ஒரு அற உணர்ச்சியால் அப்படிச் சொல்கிறேன்.
எனக்கு தமிழ் மீது தனித்த பற்று எல்லாம் கிடையாது. இந்த உலக மொழிகளிலேயே அரபிதான் இனிமையான மொழி என்று எழுதியிருக்கிறேன். மொழிப் பற்று உள்ள எவனும் அப்படி எழுத மாட்டான். எனக்கு யாதும் ஊரே, யாவரும் கேளிர். ஆனால் எந்த மொழியையும் சரியாகக் கையாள வேண்டும். நூறு ஆண்டுகளுக்கு முன்பு மணிப்பிரவாள நடை என்ற ஒரு சாக்கடை இருந்தது. மொழியை சாக்கடை போல் செய்து வைத்திருந்தார்கள். அதனால்தான் மறைமலையடிகள் போன்ற தீவிரவாதிகள் தோன்ற வேண்டியிருந்தது. அந்த மணிப்பிரவாள நடையைத்தான் இப்போது பெரும்பாலானவர்கள் பின்பற்றுகிறார்கள். அன்றைய சம்ஸ்கிருதத்துக்குப் பதிலாக ஆங்கிலம். அராத்து எழுதுவதும் கிட்டத்தட்ட அந்த மணிப்பிரவாள நடைதான். அது மொழியை சாக்கடை போல் ஆக்கும். நான் பின்நவீனத்துவ்வாதி என்பதற்காகப் பீயைத் தின்ன முடியாது. ஹூலியோ கொர்த்தஸார் மீட்டிங் என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். கொர்த்தஸார் இசை கற்றவர். இசைக் கலைஞர். மீட்டிங் கதையை நான் சந்திப்பு என்ற தலைப்பில் மொழிபெயர்த்தேன். அந்தக் கதையில் இசை பற்றி நிறைய குறிப்புகள் வருகின்றன. அப்போது இசை சம்பந்தமான ஒரு வார்த்தைக்குத் தமிழ் வார்த்தை தேடி ஒரு மாதம் காத்திருந்தேன்.
அப்படித்தான் அராத்துவும் ப்ரிவிலெஜ் என்ற வார்த்தைக்குத் தமிழ் வார்த்தை தேடி பல மணி நேரம் காத்திருந்திருக்க வேண்டும். பலரையும் கேட்டிருக்க வேண்டும். மண்டையை உடைத்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். ஆனால் இப்போதைய எழுத்தாளர்களுக்கும், இளைஞர்களுக்கும் மொழி என்பது ஒரு கருவி. உங்கள் கருத்தை வெளிப்படுத்த ஒரு கருவி. அவ்வளவுதான். அதைத் தமிழில் சொன்னால் என்ன? ஆங்கிலம் கலந்து சொன்னால் என்ன? மயிரே போச்சு.
சங்க காலத்தில் இப்படி நினைத்திருந்தார்களேயானால் இப்போது நமக்கு தமிழே கிடைத்திருக்காது. ஆஃப்ரிக்காவில் ஊருக்கு ஊர் ஒவ்வொரு மொழி இருக்கிறது. எழுத்து கிடையாது. இலக்கியம் கிடையாது. சிந்தனை கிடையாது. அந்த மொழிகளில் மொத்தமாகவே இருநூறு வார்த்தைகள்தான் இருக்கும். அப்படி ஆகியிருக்கும் தமிழ்.
எழுத்தாளனுக்கு சமூகப் பொறுப்புணர்ச்சி வேண்டும். எழுத்தாளனின் சமூகப் பொறுப்புணர்ச்சி பற்றிப் பாடம் எடுக்கும் குறிப்பிலேயே இத்தனை பொறுப்பின்மையா?
நான் இங்கே தலித் மேட்டர் என்ற பிரயோகத்தில் கை வைக்கவில்லை என்பதை கவனியுங்கள். நான் ஒன்றும் ”சுத்தத் தமிழ்” வெறியன் அல்ல. தலித் மேட்டர் தலித் மேட்டர்தான். ஆனால் ப்ரிவிலெஜ்தான் மொழியைக் குண்டியடிக்கும் மேட்டர்.
ஒரு சாதாரண உதாரணம் தருகிறேன். சோற்றில் கல் சிக்கக் கூடாது. வேற்று மொழிச் சொற்கள் சோற்றில் கிடக்கும் கற்கள். கொரோனா காலகட்டட்த்தில் ஃப்ரெஞ்சுக்காரர்கள் கொரோனாவுக்கு ஃப்ரெஞ்ச்சில் வார்த்தை கண்டுபிடித்து அதைத்தான் பயன்படுத்தினார்கள். மொழியில் புழங்கும் எழுத்தாளர்களும் அப்படித்தான் இருக்க வேண்டும்.
”ஒரு பிராமண குலத்தில் பிறந்ததால், சரஸ்வதி என்கிட்ட பேசறா, சரஸ்வதி எனக்கு கொடுக்கிறா என்று பேசுவதை எல்லாம் நான் ஒரு பிரவிலேஜாக பார்க்கிறேன்.
கவனியுங்கள் , ஒரு பிராமணன் அப்படி பேசும் போது அதை சமூகம் ஒத்துக் கொள்ளும். அதற்கு ஒரு நம்பகத்தன்மை கிடைக்கும். இது ஒரு நாளில் நடப்பதல்ல.
தலித் மட்டுமல்ல, வேறு எந்த இடைநிலை ஜாதியை சார்ந்தவர்களும் பொதுவாக இப்படி பேசிவிட முடியாது. பேசக்கூடாது என்பதல்ல, பேச மாட்டார்கள். பேசினாலும், சமூக சூழலில் அது எடுபடாது.
இது ஒரு நுண்ணுணர்வு சம்பந்தப்பட்டது என்று நான் நம்புகிறேன். ஒரு வாசகனுக்கே இருக்கக்கூடிய இந்த ஒரு வாசகனுக்கே இருக்க வேண்டிய இந்த நுண்ணுணர்வும் இங்கிதமும் எழுத்தாளருக்கு இல்லை என்றால் எப்படி?
பக்தி இலக்கியம் என்றால் கூட அப்படி எழுதலாம். லா ச ரா எழுதியது பக்தி இலக்கியமா?”
பிராமண குலத்தில் பிறந்தவர் சரஸ்வதி கொடுக்கிறாள் என்றுதான் சொல்ல முடியும். லா.ச.ரா.வுக்கு சரஸ்வதி. தெரிதா அதை மொழிக் கிடங்கு என்கிறார். நான் கனவு என்கிறேன். லா.ச.ரா.வுக்குத் தெரிந்ததை அவர் சொன்னார். அவர் என்ன எனக்குக் கார்ல் மார்க்ஸ் கொடுத்தார், பெரியார் கொடுத்தார், மூனீஸ்வரன் கொடுத்தான் என்றா எழுத முடியும்? எழுத்தாளன் தனக்குத் தெரிந்ததைச் சொல்கிறான். அதை உங்கள் மொழியில் புரிந்து கொள்ள வேண்டியது உங்கள் கடமை. மொழிபெயர்ப்பு செய்ய வேண்டியது எழுத்தாளனின் வேலை அல்ல.
மேலும், லா.ச.ரா. முந்தைய தலைமுறை எழுத்தாளர். அந்தத் தலைமுறை வரை எழுத்து கடவுள் கொடுத்தது என்றே இந்தியர்கள் நம்பினார்கள். காளிதாஸன் கதை, நாவுக்கரசர் கதை எல்லாமே இதைத்தான் சொல்கிறது. அதனால்தான் லா.ச.ரா. சரஸ்வதி கொடுத்தாள் என்கிறார். அவர் காலத்தில் தெரிதா பிறக்கவில்லை என்று நினைக்கிறேன். அதனால் லா.ச.ரா. தெரிதாவைப் படிக்கவில்லை. படித்திருந்தால் ஒருவேளை சரஸ்வதிக்குப் பதிலாக மொழிக்கிடங்கு என்று சொல்லியிருக்கலாமோ என்னவோ!
மேலும் தேவர் சமூகமும் ஒடுக்கப்பட்டது, நாடார் சமூகமும் ஒடுக்கப்பட்டது, வன்னியர் சமூகமும் ஒடுக்கப்பட்டது. ஆகவே ஒரு பிராமண எழுத்தாளன் தனக்குப் பிறப்பால் கிடைத்த சலுகை காரணமாக, சரஸ்வதி என்று சொல்லாமல் ஒரு தேவரும், ஒரு நாடாரும், ஒரு வன்னியரும் என்ன சொல்வார்களோ அதைப்போல் சொல்ல வேண்டுமா? என்ன பேச்சு இது? தலித் சொல்ல வேண்டியதை தலித் சொல்வான். தலித் சொல்ல வேண்டியதை பிராமணன் சொல்லக் கூடாது.
”ஏன் நீங்கள் மற்ற சாதியினர் – குறிப்பாக தலித்துகள் பற்றி எழுதுவதில்லை?” என்று தி.ஜானகிராமனிடம் ஒருமுறை கேட்கப்பட்ட போது “எனக்குப் பாப்பாத்தியை மட்டும்தான் தெரியும், —————ச்சியைத் தெரியாது” என்று சொன்னார்.
ஆம், அவருக்குத் தெரிந்ததை மட்டுமே அவரால் எழுத முடியும்.
ஒரு எழுத்தாளனின் வேலை பறவையைப் போன்றது. பறவை இடும் எச்சத்தால் வனம் உண்டாகிறது. வனங்களினால் மழை பெய்கிறது. மழையினால் மனித குலம் வாழ்கிறது. ஆக, பறவையே ஆதிமூலம்.
அதேபோல் எழுத்தாளன் தன் வேலையை மட்டும் செய்கிறான். எழுத்து மட்டுமே அவன் வேலை. தலித்துகளின் வாழ்க்கை பற்றி ஒரு பிராமண எழுத்தாளன் எழுதலாகாது. அவனுக்குத் தெரியாது. தலித்தின் கதையை தலித்தே எழுத வேண்டும்.
பறவை தன் எச்சம் பற்றிக் கவலைப்படாது. அதேபோல் எழுத்தாளனும் எது குறித்தும் அஞ்சக் கூடாது. சுதந்திரப் போராட்டம் நடந்துகொண்டிருந்தபோதுதான் தி.ஜ.ரங்கநாதன், மௌனி, புதுமைப்பித்தன், தி. ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, கு.ப.ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி, க.நா.சு., ந. சிதம்பர சுப்ரமணியன் போன்ற பல ஜாம்பவான்கள் எழுதினார்கள். ஆனால் ஒருத்தர் கூட தேசமே பற்றி எரிந்துகொண்டிருந்த சுதந்திரப் போராட்டம் பற்றி ஒரு வார்த்தை கூட எழுதினதில்லை. சி.சு. செல்லப்பா மட்டுமே சுதந்திர தாகம் என்ற நாவலை எழுதினார். நானாக இருந்தாலும் எழுதியிருக்க மாட்டேன்.
என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். எனக்கு இந்த சமூகம் பற்றி என்ன தெரியும்? எனக்கு கிராம வாழ்க்கையே தெரியாது. கிராமங்களையே நான் பார்த்ததில்லை. இளம் தலைமுறை பற்றியும் தெரியாது. மனிதர்களையே எனக்குப் பிடிக்காது. மனிதர்களிடமிருந்து ஒதுங்கி தனித்து வாழ்பவன். ஆனாலும் எனக்குத் தெரிந்ததை, நான் கேட்டதை, நான் கண்டதை எழுதுகிறேன். அவ்வளவுதான்.
அதை எழுத வேண்டும் இதை எழுத வேண்டும் என்று யாரும் எழுத்தாளனுக்கு உத்தரவு போட முடியாது. அராத்து ஒன்றும் சர்வாதிகாரி இல்லை. அராத்து இனி ஒருமுறை அபிதாவைப் படித்தாலும் அதை அவரால் ரசிக்க முடியாது. எப்படி அவரால் மல்லிகார்ஜுன் மன்ஸூரை ரசிக்க முடியாதோ அதேபோல் அவரால் அபிதாவையும் ரசிக்க முடியாது. மல்லிகார்ஜுன் மன்ஸூரை ரசிக்க முடியும் மனோலயம் இருந்தால்தான் அபிதாவை ரசிக்க முடியும். அராத்துவுக்குப் பிடிக்காது என்பதால் மல்லிகார்ஜுன் மன்ஸூர் கலைஞர் அல்ல என்று ஆகி விட மாட்டார்.
நேற்று என்னிடம் அராத்து ”நான் லா.ச.ரா. பற்றிப் பேசினால் நீங்கள் அசோகமித்திரன் பற்றியும் ஆ. மாதவன் பற்றியும் பேசுகிறீர்களே, இது நியாயமா?” என்று கேட்டார். “நியாயமோ அநியாயமோ, அது Hand of God” என்றேன். நண்பர்களுக்கு நான் சொன்னது புரியவில்லை. 1984 உலகக் கோப்பையின் போது கோப்பையைத் தீர்மானிக்கும் கோலை மரதோனா போட்டார். ஆனால் அதை அவர் தன் கையினால் போட்டார். ஆனால் சரியாகப் பார்க்க முடியாததால் நடுவர் அதை கோல் கணக்கில் சேர்த்து விட்டார். அது பற்றி ஆட்டம் முடிந்து பத்திரிகையாளர்கள் கேட்டபோது “அது என் கை அல்ல; கடவுளின் கை” என்றார் மரதோனா.
அதனால் நானும் சொல்லிக்கொள்கிறேன். எதையும் நான் எழுதவில்லை. சரஸ்வதிதான் எழுதுகிறாள். வேண்டுமானால் பின்நவீனத்துவ சரஸ்வதி என்று வைத்துக்கொள்ளுங்கள். அதனால்தான் எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் நாவலில் கொஞ்சம் அசிங்கமாகவெல்லாம் எழுதி விட்டாள். அது சரி, பத்து கரங்களிலும் பத்து அரிந்த மனிதத் தலைகளை ரத்தம் சொட்டச் சொட்ட வைத்துக் கொண்டிருக்கும் காளியின் மற்றொரு வடிவம்தானே சரஸ்வதி? அவளுக்கென்ன அசிங்கம் சிங்கமெல்லாம்…
அபிதாவில் ரசிக்க இன்னும் நிறைய இருக்கிறது. முக்கியமாக எழில் கொஞ்சும் தமிழ். நேற்றைய மேற்கோளில் சர்மன் என்ற வார்த்தையைப் பார்த்தீர்களா? குருக்கள் சம்ஸ்கிருதத்தில் வல்லவர். அதனால் அப்படியே சம்ஸ்கிருத வார்த்தைகளை அள்ளி விடுகிறார். தமிழில் லேசாக சம்ஸ்கிருதம் கலந்தால் ருசியாக இருக்கும். லலிதம் அப்படி ஒரு வார்த்தை.
”தொட்டிலிட்டு சூட்டின சர்மன் ஊருக்கே மறந்து போச்சு” என்கிறார் குருக்கள். ஊரே அவரை நொண்டி குருக்கள் என்று அழைத்து, தொட்டிலிட்டு சூட்டின சர்மன் ஊருக்கே மறந்து போச்சு. நேற்று நீங்கள் சர்மன் என்ற வார்த்தையை கவனித்தீர்களா? சர்மன் என்று போட்டால் கூகிளில் கூட அர்த்தம் கிடைக்கவில்லை. சர்மன் சம்ஸ்கிருந்த வார்த்தை. பெயர் என்று பொருள். இது குறித்து வேதபாடசாலை ஆசிரியரும் என் வாசகருமான ஸ்ரீதரை அழைத்துக் கேட்டேன். அவர் அனுப்பிய பதிலில் ந-காராந்தம் என்று ஒரு வார்த்தையைப் பயன்படுத்தினார். நான் கூகிளில் காராந்தம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடினால் அது என்னை என் குருவான மஹா பெரியவருக்கு அழைத்துச் சென்றது. மஹா பெரியவர் மொழிப் பண்டிதர்.
இதைப் படியுங்கள்:
மொழியைப் பொருத்தவரை லா.ச.ரா. ஒரு மானுடவியல் அறிஞர் செய்ய வேண்டியதைச் செய்திருக்கிறார் என்று தோன்றுகிறது. லா.ச.ரா. பயன்படுத்திய பல வார்த்தைகள் இன்று மானுடவியல் முக்கியத்துவம் பெற்று விட்டன. அதாவது, அவ்வார்த்தைகள் இன்று புழக்கத்தில் இல்லை.
இதை விடுங்கள். நான் எழுதும் தமிழுக்கு, தமிழ் நடைக்கு, அதன் அழகுக்கு லா.ச.ரா.வுக்கே பெரிதும் கடன்பட்டிருக்கிறேன். அதனால் லா.ச.ரா.வின் அபிதாவிலிருந்து மேலும் சில மேற்கோள்கள்:
“போன புதிதில் நாட்கள் இப்படிக் கழிந்த ஒரு வாரத்துள் ஒரு நாள் வயிற்றில் ஈரத்துணி, கண்ணில் உசிரை வைத்துக் கொண்டு சத்திரத்துத் திண்ணையில் அண்ணாந்து படுத்து, கூரை விட்டத்தில், என் கண்ணுக்குத் தெரியாமல், கண்ணில் நிற்கும் உசிருக்கு மட்டும் தெரியும் என் விதியேட்டைப் படித்துக் கொண்டிருக்கையில்…”
“பணக்காரப் பெண்ணுக்கு, பரிசாரகன் போட்டுக் கொடுத்த காப்பியை வெள்ளி டம்ளரில் ஆற்றிக் கொடுக்கத்தான் தெரியும், வேறொண்ணும் தெரியாது என்று நீ எண்ணாதே. வற்றல் குழம்பு, நாக்கு ஒட்டிக்கச் செவக்க, உணக்கையா சாவித்ரி நன்னா பண்ணுவாள். வற்றல் குழம்பும் சுட்ட அப்பளாமும் நம் சீமைக் குலதெய்வம். விருந்து சாப்பாட்டையெல்லாம் அதன் காலில் கட்டியடிக்க வேண்டும். எல்லா விருந்துக்கும் மருந்து அதுவே விருந்து. என்ன சொல்கிறாய்?”
***
“ஊன்வெறி தணிந்ததும் மறுபடியும் தலைகாட்டுவது அவரவர் தனித்தனி எனும் உண்மைதான்.”
***
“குன்றின் உச்சியினின்று தீபாராதனை மணியின் கார்வை எங்கள் மேல் தீர்க்கமாய் இறங்கிற்று.”
***
“அதெல்லாம் ஒன்றுமில்லை. ஜீரணக் கோளாறாயிருக்கலாம். அல்லது மனதில் ஏதாவது idea preassure இருந்தாலும் இந்த மாதிரியெல்லாம் நேர்வதுண்டு. இதை எங்கள் பாஷையில் psychosomatic என்போம். பாட்டியம்மா பாஷையில் ‘உடம்பு கால்; மனசு முக்கால்’ என்று அதற்கு அர்த்தம்.
பாட்டியம்மா பாஷைன்னா சூள் கொட்டாதேங்கோ ஸார்! அதுதான் எழுத்தையும் மீறி, வழிவழியா பாட்டி பேத்திக்குச் சொல்லி, பேத்தி பாட்டியாகி அவள் பேத்திக்குச் சொல்லி வழக்கில் வந்த உயிர்ப்பாஷை. நம்ம பாஷையை விட அதில் தான் உண்மை அதிகம்-“
***
“குரோதங்களைப் புதைக்க இடம் வயிறு, இன்பங்களுக்கு இதயம் என்று என் துணிபு. இரண்டுமே ஊமைக் காயங்கள்தான். ஸ்புடத்தினின்று நெஞ்சுக்கு சாவகாசமாய் வரவழைத்துக் கொண்டு குமுறுகையில், அல்ல, கரைகையில், அப்போது கடைந்து உடல் பூரா பரவுவது நஞ்சோ அமுதமோ, அசைதரும் சுவை அவரவர்க்குத் தனி. இதை மனைவியே ஆனாலும் பகிர்ந்து கொள்வது எப்படி?”
***
“உங்களைப் போல் நீங்களே இருங்கள். நான் இருக்க வேண்டாம். ‘மனசில் ஒண்ணும் வெச்சுக்கத் தெரியாதவள்; வெகுளி’ன்னு கட்டின அசட்டுப் பட்டம் அப்படியே இருந்துட்டுப் போகட்டும். யாரும் என் நெஞ்சில் உப்புமண்ணை வெச்சு நெருட வேண்டாம். வயத்துலேயே வெச்சுண்டு வெடிக்காமல் உப்பி உப்பி, செத்தாலும் வேகாத பச்சைப் புண்ணாய் அழுகிண்டு இருக்க வேண்டாம். கட்டையிலே வெச்சதும் காஷ்டம் காஞ்சதா, தணல் பட்டவுடன் பஸ்மமா போச்சுதா? அதுவே என் வெள்ளை மனசுக்கு அத்தாக்ஷியாக இருக்கட்டும்.”
பிராசம் எப்படித்தான் பெண்களுக்குக் கூடவே பிறக்கிறதோ!
***