நீங்கள் பெட்டியோ நாவலைப் படித்திருக்கிறீர்களா இல்லையா எனத் தெரியாது. அதன் பக்கங்களை நான் கனவிலிருந்தே எழுதினேன். ஸீரோ டிகிரியைப் போல. அதிலிருந்து சில பகுதிகளை கீழே தருகிறேன்.
ஆம், அப்படி ஒரு துய்ப்பை என் வாழ்நாளில் அடைய முடியுமெனத் தோன்றவில்லை. தமாலியுடனான சரீர சேர்க்கை அப்படித்தான் இருந்தது. மரணம் எப்பேர்ப்பட்ட ருசியுடையதென்று தெரியுமா உனக்கு? அதை ருசித்தால் நாம் இல்லாமல் ஆகி விடுகிறோம். சரீர சேர்க்கை என்பது மரணத்தைத் தொட்டுத் தொட்டு ஓடி வரும் நாடகம். ஆனால் தமாலியும் நானும் மரணத்திலேயேதான் வாழ்ந்தோம். மரணத்திலேயேதான் திளைத்தோம். வார்த்தைகளால் விவரிக்க முடியாத பேரின்ப வெளி அது. மரணத்தைத் தாண்டி அப்பால் சென்று மீண்டும் பழைய இடத்துக்கே திரும்பி வந்த யாரையேனும் கண்டிருக்கிறாயா நீ? அப்படித் திரும்பியவர்கள் தங்களின் மரணம் தாண்டிய அனுபவத்தை எப்படி வார்த்தைப்படுத்தியிருக்கிறார்களென தெரியுமா உனக்கு? தமாலியும் நானும் அப்படித்தான் இருந்தோம். ஒரே காலத்தில் மரணக் கோட்டுக்கு அப்பாலும் இப்பாலுமாக வாழ்ந்தோம். ஒரே காலத்தில் உயிருள்ளவர்களாகவும் உயிரற்றவர்களாகவும் இருந்தோம். எங்கள் நாவினால் மரண யோனியின் அந்தகாரச் சுவர்களில் கோட்டோவியம் தீட்டினோம். எங்கள் விரல்களால் சூன்ய வெளியின் இதழ்களை மீட்டினோம். பரவசத்தில் சுவாசம் நின்று நின்று மீள்கிறது. நொடிக்கு நொடி மரணித்து நொடிக்கு நொடி உயிர்த்தெழுந்தோம்.
ஆனாலும் அப்பேர்ப்பட்ட இன்பத்தை நான் திரஸ்கரித்தேன். அண்ட சராசரங்களிலும் தேடிக் கண்டடைந்த அமிர்த சாகரத்தை விட தனிமை மகத்தானதெனக் கண்டு கொண்டேன். யாரையும் சார்ந்திராத தனிமை. தனிமை தரும் சுதந்திரம். இந்தத் தனிமையும் சுதந்திரமும் வலியும் வாதையும் தருவதாகவே தோன்றுகிறது. ஆனாலும் பெட்டியோ, அடிமையாகக் கிடந்து அமிர்தம் உண்பதை விட தனிமையின் சுதந்திரத்தில் கிடைக்கும் வலி தின்பது போற்றதற்குரியது அல்லவா?
***
யுத்தமும் ஒருவகை நடனம்தான். வன்முறையும் நடனம்தான். அங்கெல்லாம் நடனம் செந்நிறத்தில் நம்மை ஆட்கொள்கிறது. பெட்டியோ, நீ என்னை நடனத்தின் மூலம்தான் நெருங்கினாய். நடனம் என்று சொல்லிக்கொண்டு நீ அசட்டுத்தனமாக உனது கரங்களையும் கால்களையும் அசைத்தாய். ஆனால் அசைவே நடனம் என்பது என் மதம். நடையே நடனம். தாமரை அசைதல் நடனம். தாமரை இதழ்கள் நடனத்தின் குறியீடு. நடனம் சிருஷ்டி. நடனம் யோனி. நடனம் சூன்யம். நடனம் குருதி. நீயும் நானும் நடனத்தின் குழவிகளாய் அன்றைய தினம் குருதியிலே ஆட்டம் போட்டோம். அதனால்தான் காமமும் காதலும் கொப்பளித்த உன் கண்களை மன்னித்தேன்.உன்னை முதல் முதலில் கண்டபோது நீ தமிழன் என்று அனுமானிக்கவே முடியவில்லை. என்னால் ஒருவரைக் கண்டு அவர் எந்த தேசமெனச் சொல்லி விட முடியும். நீ அணிந்திருந்த ஆடையையும் நகைகளையும் கண்டு மலேஷியனோ என நினைத்தேன். ஆனால் மலேஷியர்கள் இன்னும் உயரமாக, திடகாத்திரமாக இருப்பார்கள். நீ பர்மாவையும் தாய்லாந்தையும் சேர்த்தபடி இருந்தாய். பிறகுதான் உன் நண்பர்களைக் கொண்டு உன்னைத் தமிழன் என்று கண்டு கொண்டேன். மற்றபடி நீ யாரென்று தெரியாது. ஊர் பேர் தெரியாது. அப்படிப்பட்ட நீ என் இருப்பின் சூன்ய ரேகையைக் கொண்டு என்னை வீழ்த்தி விட்டாய். முன்பின் அறியாத நாமிருவரும் இந்தப் பிரபஞ்ச வெளியில் மிதந்து கொண்டிருந்தோம். அப்போது தமாலியின் மூலம் நம் நடனம் சரிந்தது.
***
நித்திய தரித்திரனுக்கு நிதிக் குவியல் கிடைத்தது போல் எனக்குக் கிடைத்த நின் உந்திச் சுழியில் முளைத்தெழுந்த ரோமப் பசுந்தாளில் என் நாவினால் இசை மீட்ட அவாவுறுகிறது மனம்.
நயநதினியின் அமுதக் கனி அதர பானமே என் மதுபானமெனக் கண்ட உன் அடிமை,
பெருமாள்.
***
மரணித்தவன் உயிர்த்தெழுந்ததைப் போல இந்தப் பிரபஞ்சத்தின் ஒட்டு மொத்த துக்கமும் உன்னால் கனக தாரையாக மாறி விட்டது. இன்றைய நூற்றாண்டின் துக்கத்தின் குறியீடாக விளங்கும் ஒரு பாடல் எப்படி கொண்டாட்டத்தின் தேசிய கீதமாக மாற முடியும்? ஏற்கனவே கேட்ட போதெல்லாம் எனக்கு அப்படித் தோன்றவில்லையே? அன்றைய தினம் மவுண்ட் லவினியாவில் தியஸ்த்தோவின் அடாஜியோவுக்கு நான் ஆடியது போல் இனி எப்போதாவது ஆட முடியுமா, சொல் பெட்டியோ…?
அப்போது நீ ஒரு காரியம் செய்தாய், ஞாபகம் இருக்கிறதா? எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி என்று பாடியபடி என் கால்களில் விழுந்தாய். அந்தப் பாடலை மறந்து விடக் கூடாது என்று உன்னைத் திரும்பத் திரும்ப சொல்லச் சொல்லி மனனம் செய்து கொண்டேன். உண்மையிலேயே நீ ஒரு பித்தன்தான்.
ஆதியிலே நடனம் இருந்தது. அங்கே நீ சொன்ன திருமேனியன் சிவனும் இருந்தான். சக்தியும் இருந்தாள். திருக்கூத்து தரிசனமும் காணப் பெற்றேன். தரிசனத்தின்போது கடல் அலைகளின் நீர்த் திவலைகள் தமிழர்களின் மங்கல நிகழ்ச்சிகளில் பன்னீர் தெளிப்பதைப் போல நம் மீது தெளித்துக் கொண்டிருந்தன.
இப்படி என் துக்கத்தைப் பெரும் பரவசமாய் மாற்றிய மந்திரவாதி நீ… உன்னால் இந்த பூமியில் என் வருகை முழுமையடைந்தது என்பதை உனக்கு நான் சத்தியமளிக்கிறேன், பெட்டியோ…
***
நாம் இந்த உடலைக் கொண்டு இந்த உடலை மீறுவோம். இந்த உடலைக் கொண்டே இந்த உடலிலிருந்து விடுதலை தேடுவோம்.
நீ என்ன சொன்னாய், நீ தின்ற காமம் போதவில்லை என்று.
வா, என்னைப் புசி என்றேன்.
என்னைத் தீரத் தீரத் தின்று கொள், பெட்டியோ. எந்தத் தடையுமில்லை. என் குருதியைக் குடி. என் தசையைக் கடித்துக் குதறு. என் நிதம்பத்தை அள்ளிப் பருகு. நிதம்பத்தில் மூழ்கித் திளை. உன்னையே திரவமாக்கி அதில் என்னை அமிழ்த்தி, என் சுவாசத்தைத் திணற அடி. நாம் இருவரும் ஒன்றாகிப் பிரபஞ்ச சாகரத்தில் நீந்திக் கொண்டே இருப்போம்.
எப்போது வந்து என்னைப் புசிப்பாய், பெட்டியோ…
***
நான் என்னை வெளிப்படுத்திக் கொள்வது வார்த்தைகளால் அல்ல…
என் பாவனைகளின் மூலம்
என் சமிக்ஞைகளின் மூலம்
என் அபிநயங்களின் மூலம்
என் அசைவுகளின் மூலம்
என் சொற்களற்ற ஒலிகளின் மூலம்
என் கிறீச்சிடல்களின் மூலம்
என் அலறல்களின் மூலம்
என் ஆழ்மனப்பிறழ்வுகளின் சிலம்பாட்டங்களின் மூலம்
என் ஆயுதங்களின் மூலம்
என் ஓலத்தின் மூலம்
என் முனகல்களின் மூலம்
என் கதறல்களின் மூலம்
என் மிருக சப்தங்களின் மூலம்
என் பேய்க் கனவுகளின் மூலம்
என் விபரீத ஒப்பனைகளின் மூலம்
என் மந்திர உச்சாடனங்களின் மூலம்
என் தொல்குடிச் சடங்குகளின் மூலம்
சிகரெட் புகை காற்றில் பரவுவதைப் போன்ற என் சரீர உறுப்புகளின் மென்சலனங்களின் மூலம்
குருதி கொப்பளித்து வடியும் கிழிபட்ட என் ஆன்மாவின் மூலம்
என் நடனத்தின் மூலம்
காலம் வெளி இரண்டையும் ஊடுருவிப் பாயுமென் நர்த்தனத்தின் மூலம்
என் மந்திர ஜாலத்தின் மூலம்
என் விசித்திரமான ஓசைகளின் மூலம்
வினோதமான சப்தங்களின் மூலம்
என் தனிமையின் கூச்சல்களின் மூலம்
கடலலை போல் தீராத என் இரைச்சல்களின் மூலம்
என் நாடகங்களில் வந்து போகும் அமானுஷ்ய ஒளியின் சிதறல்கள் மூலம்
என் வண்ண முகமூடிகளின் மூலம்
என் முடிவுறாத கலகத்தின் மூலம்
என் மேகநிறப் பொய்களின் மூலம்
என் உவகையின் ஆர்ப்பரிப்புகளின் மூலம்
நித்திரை மறந்த இரவுகளின் இரக்கமற்ற இருளின் மூலம்
புராதனச் சடங்குகளின் மூலம்
ஊழிக்காற்றின் மூலம்
தீச்சுவாலைகளின் மூலம்
உன்னைப் பித்தனாக்கும் என் வசீகரத்தின் மூலம்
எதுயெது எதுயெதுவெனத் தெரியாத குழப்பத்தின் மூலம்
உன் மஜ்ஜையில் புகுந்து வெளியேறும் என் வெறிக்கூச்சலின் மூலம்
என் புன்னகையின் மூலம்
காற்றில் மென் துகள்களாய்ப் பரவுமென் இசையின் மூலம்
என் ஊளையின் மூலம்
குலச்சின்னங்களின் மூலம்
தாந்த்ரீகக் குறியீடுகளின் மூலம்
வண்ணங்களின் மூலம்
சப்தம் மற்றும் காட்சிப் படிமங்களின் மூலம்
சொர்க்கத்துக்கும் பூமிக்குமிடையே ஊசலாடியபடி இருக்கும் என் தனிமையின் கவிதைகளின் மூலம்
மகிழ்ச்சியின் மகரந்தங்களைப் பரவ விடும் என் பாடலின் மூலம்
எதிரொலிகளின் மூலம்
என் குரூர இச்சைகளின் மூலம்
என் துரோகத்தின் மூலம்
மரணத்தைத் தீண்டித் தீண்டி விளையாடும் என் பரவசத்தின் மூலம்
சோர்ந்து கிடக்கும் கடவுளுக்குச் சொன்ன என் ஆறுதல்களின் மூலம்
எதார்த்த உலகிலிருந்து உன்னைக் களவாடத் துடிக்கும் என் வசியத்தின் மூலம்
என் நாடகப் பிரதியில் பொதிந்திருக்கும் முட்களின் மூலம்
என் வஞ்சகத்தின் மூலம்
என் வன்மத்தின் மூலம்
என் வக்கிரங்களின் மூலம்
என் கொடுங்கனவுகளின் மூலம்
என் பிதற்றல்களின் மூலம்
என் பாவங்களின் மூலம்
என் ரகசிய வேட்கைகளின் மூலம்
தாபத்தினால் சுரக்கும் என் நிதம்ப ஊற்றின் மூலம்
மூதாதையர் தந்த சாசனங்களின் மூலம்
என் பிரார்த்தனைகளின் மூலம்
சிதறிக் கிடக்கும் என் நிழல்களின் மூலம்
என் காம அதிர்வுகளின் மூலம்
இயலாமையின் பெருமூச்சுகளின் மூலம்
என் மின்காந்த அலைகளின் மூலம்
என் புனித போதையின் உளறல்களின் மூலம்
என் கண்களிலிருந்து பரவும் தீக்கங்குகளின் மூலம்
கடவுளைக் கண்டு விட்டதாகப் பிதற்றும் என் மடமையின் மூலம்
அதிகாலைச் சூரியனைப் போன்ற என் வாழ்த்துக்களின் மூலம்
கடவுளின் ஊர்வலத்தில் தொலைந்து போன குழந்தையின் விசும்பலின் மூலம்
தொடக்கமும் முடிவுமற்ற காலத்தின் தீராத பக்கங்களில் உயிர்த்துக் கொண்டேயிருக்கும் என் முத்தங்களின் மூலம்
பாம்பு சீறுவதைப் போன்ற என் மூச்சுக் காற்றின் மூலம்
காமப் பரவசத்தில் தெறிக்கும் நட்சத்திர வெடிப்புகளின் மூலம்
கடவுளிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களிடம் நான் நடத்திய உரையாடல்களின் மூலம்
கடவுளைப் போல் வாழ்ந்த என் தருணங்களின் மூலம்
சாத்தானின் பொம்மையான கடவுள் சொன்ன கதைகளின் மூலம்
கடவுளை சாத்தானின் பிம்பமாக மாற்றிய என் மாயக்கண்ணாடியின் மூலம்
கடவுளாக நடித்துக் கொண்டிருக்கும் சாத்தானின் பக்கங்களை எழுதிக் கொண்டிருப்பதன் மூலம்
எதனாலும் இட்டு நிரப்ப முடியாத என் வெறுமையின் மூலம்
இருள் மையத்தை விழுங்கத் துடிக்கும் வாழ்வுச் சுழலின் பதற்றம் மிகுந்த அதிர்வுகளின் மூலம்
வாழ்வின் மீதான என் தீராத தாகத்தின் மூலம்
சிருஷ்டியின் அலங்கோலம் கண்டு வெதும்பும் கடவுளின் கண்ணீரின் மூலம்
முடிவற்ற பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் என் உற்சாகத்தின் மூலம்
சமயங்களில் அது தரும் சலிப்பின் மூலம்
குரூரத்தை சிருஷ்டியாக மாற்ற முயலும் என் ரசவாதத்தின் மூலம்
சொற்களை சமிக்ஞைகளாகவும் குறியீடுகளாகவும் மாற்றும் என் நாடகங்களின் மூலம்
பாறைப் படிவுகளாய் உறைந்து விட்ட சொற்களை உயிர்ப்பிப்பதன் மூலம்
என் யோனியிலிருந்து பெருகும் குருதியின் மூலம்
பனிப்பாறைகளாய் கனத்திருக்கும் என் மௌனத்தின் மூலம்
என்னை நான் வெளிப்படுத்திக் கொள்கிறேன்…
***
பெட்டியோ, என் அருகே வா. என்னைப் புசி. என்னைப் புசிப்பதன் மூலம் என்னை நிர்மூலமாக்கு.
என்னைக் குத்திக் கிழித்து என் குருதி உறிஞ்சி என்னைத் தின்பதன் மூலம் என்னை இல்லாமலாக்கு.
***
எனக்குத் தாயுமில்லை, தகப்பனுமில்லை. சகோதரனும் இல்லை, சகோதரியும் இல்லை. மனைவியும் இல்லை, மக்களும் இல்லை. சிநேகிதனுமில்லை, சத்ருவும் இல்லை. எனக்கு ஜனனமும் இல்லை, மரணமும் இல்லை. எனக்கு சுகமும் இல்லை, துக்கமும் இல்லை. எனக்கு மழையும் இல்லை, வெயிலும் இல்லை. எனக்கு வரமும் இல்லை, சாபமும் இல்லை. எனக்குக் கடவுளும் இல்லை, சாத்தானும் இல்லை. எனக்கு சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை. எனக்குப் பாவமும் இல்லை, புண்ணியமும் இல்லை. எனக்கு அன்பும் இல்லை, துவேஷமும் இல்லை. எனக்குக் கண்ணீரும் இல்லை, காதலும் இல்லை.
நான் என் எழுத்தில் வாழ்கிறேன்.
***
பெட்டியோ நாவலை இதுவரை வாசிக்காதவர்கள் ஸீரோ டிகிரி பதிப்பகத்திலிருந்து தருவித்துக் கொள்ளலாம்.
இணைப்பு:
தொலைபேசி எண்:
Contact: +91 8925061999, eMail: zerodegreepublishing@gmail.com
***
சந்தா இதுவரை அனுப்பாதவர்களை அனுப்பி வைக்குபடி கேட்டுக் கொள்கிறேன். குறைந்த பட்ச சந்தா 300 ரூ. அதற்கு மேல் அனுப்புவது உங்கள் விருப்பம். ஜீ.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566
பெயர்: ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே தயக்கமின்றி அனுப்பலாம்.)
***
வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:
வங்கி விவரம்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai