ராகம் மாரு பிஹக். ரஸியா, ஹோ ந ஜானா ரே என்ற இந்தப் பாடலை பலரும் பாடியிருக்கிறார்கள். அதில் என்னை வெகுவாகக் கவர்ந்தது வெங்கடேஷ் குமார். இன்றைய ஹிந்துஸ்தானி இசையில் அவரையே நான் முதன்மை ஸ்தானத்தில் வைப்பேன்.
தினமும் காலை ஏழிலிருந்து எட்டு எனக்கு நடை நேரம். இன்று அந்த நேரத்தில் தொலைபேசியில் பேசுவதற்கு யாரும் கிடைக்காததால் வெங்கடேஷ் குமாரின் ரஸியாவைக் கேட்டேன். ஹர்ஷ் போரஸ் படேல் இயற்றியது. இவர் யார் என்று என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை.
கடவுளோடு உரையாடுவது போல் இருந்தது. பல சமயங்களில் உணர்ச்சிவசப்பட்டு அழுது விட்டேன். சில சமயங்களில் வெங்கடேஷுடன் சேர்ந்து பாடினேன். இப்படியாக இன்றைய காலை ஒரு பரவசப் பொழுதாகக் கழிந்தது.
நேற்று சுதந்திரப் போராட்டம் பற்றி சி.சு. செல்லப்பா தவிர முந்தைய தலைமுறையில் வேறு எந்த எழுத்தாளரும் எழுதவில்லை, எழுத வேண்டிய அவசியமும் இல்லை என்று எழுதியிருந்தேன். அதில் சேர்க்க வேண்டிய மற்றொரு விஷயம் உண்டு. தியாகராஜர் என்ன செய்தார்? சமூகத்தில் தீண்டாமை தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்த கால கட்டம். நெற் களஞ்சியம் என்று கருதப்பட்ட தஞ்சைத் தரணியில் அப்போது நெல்வயல்கள் பூராவும் மனிதத் தலைகள் குவிந்து கிடந்தன. காவிரியில் தண்ணீருக்குப் பதிலாக குருதி வெள்ளம் ஓடியது. மொகலாயருக்கும் ராயர் மன்னர்களுக்கும் சண்டை. பிரிட்டிஷ்காரர்களுக்கும் தஞ்சாவூர் ராஜாவுக்கும் சண்டை. இந்தக் காலகட்டத்தில்தான் தியாகராஜர் ராமனைத் துதிக்கும் கீர்த்தனைகளாகப் பாடிக்கொண்டே இருந்தார். மனிதர்களைப் பற்றி அவர் பாடவே இல்லை. நிலத்துக்காக அடித்து வெட்டிக் கொள்ளும் மனிதப் பதர்களைப் பற்றி அவர் ஏன் பாட வேண்டும்?
அவர் இயற்றிய கீர்த்தனைகள் எல்லாமே முழுக்க முழுக்க ராம நாமம்தான். அதுவும் தவிர 96 கோடி முறை அவர் ராமநாமத்தை ஜெபித்தவண்ணம் இருந்தார். தினமும் ஆறு மணி நேரம் என்ற கணக்கில் சுமார் இருபத்தைந்து ஆண்டுகள்.
இப்போது தியாகராஜரின் செயல்பாடுகளை எவ்வாறு மதிப்பீடு செய்வீர்கள்? இனவிருத்தி செய்வதும், தீனியைத் தின்று தின்று சாணி போடுவதும்தான் மனிதனின் அடையாளமா? மனிதன் என்ன எருமைமாடா? யாராவது தியாகராஜரிடம் போய் ”நீர் ஏன் தீண்டாமை பற்றிப் பாடவில்லை, privileged சமூகத்தில் பிறந்த நீர் ராமா ராமா என்று பாடியது அதர்மம் இல்லையா?” என்று கேட்டால் அது தகுமா? அப்படித்தான் இருக்கிறது, லா.ச.ரா.விடம் போய் நீர் எப்படி சரஸ்வதி பெயரை இழுக்கலாம் என்று கேட்பதும். மின்சாரம் கண்டு பிடித்த பெஞ்ஜமினிடம் போய் ”ஏன் ஐயா, நீர் அடிமைத்தனத்தை எதிர்த்து கடிதமும் கட்டுரையும் எழுதியதோடு நிறுத்தி விட்டீர், ஏன் களத்தில் இறங்கிச் போராடவில்லை?” என்று கேட்பது போல.
அடுத்து தி.ஜானகிராமனின் மரப்பசு பற்றியும் கொஞ்சம் சொல்ல வேண்டும். மரப்பசுவில் வரும் அம்மணி இந்த உலகத்தில் எல்லா ஆண்களோடும் செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறாள். வெறும் விருப்பம் மட்டும் அல்ல. அதை அவளால் முடிந்த வரை நடைமுறைப்படுத்தவும் செய்கிறாள். ஒரு இரவில் அமெரிக்காவின் பிக்காடில்லி சதுக்கத்தில் நின்றுகொண்டு அங்கே தனக்கான ஆண் துணை ஒருவனைத் தேடுகிறாள். இப்படி எழுபது எண்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுத ஒருவருக்கு எத்தனை துணிச்சல் வேண்டும்?
புதினத்தில் ஜனன உறுப்புகளின் புழக்கத்தில் உள்ள வார்த்தைகளைப் போட்டால்தான் அது ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்து என்று அர்த்தம் அல்ல. சந்தேகம் இல்லாமல் மரப்பசு ஒரு புரட்சிகரமான முயற்சிதான். மோகமுள், அம்மா வந்தாள், செம்பருத்தி போன்ற நாவல்களில் உள்ள அளவுக்கு மரப்பசுவில் கலை நேர்த்தி கூடி வரவில்லை என்றாலும் மரப்பசு சுந்தர ராமசாமி எழுதிய நாவல்களைப் போன்ற fake நாவல் அல்ல. ஏன் மரப்பசு தி.ஜா.வின் மற்ற நாவல்கள் அளவுக்கு வரவில்லை என்றால் மற்ற நாவல்கள் தி.ஜா. நேரடியாகப் பார்த்தது, அனுபவித்தது. மரப்பசு கற்பனை.
மரப்பசு பற்றி அவர் ஒரு நேர்காணலில் அந்த நாவலின் ஊற்றுக்கண் என்ன என்று குறிப்பிடுகிறார். அவருடைய அத்தை ஒருவர் ஆறு வயதில் விதவையாகி காலம் முழுவதும் மொட்டைப் பாப்பாத்தியாகவே வாழ்ந்திருக்கிறாள், அதைப் பார்த்து ஆவேசமுற்றுத்தான் மரப்பசுவை உருவாக்கினார் தி.ஜா. அந்த நாவலை எழுதும்போது தி.ஜா.வின் வயிற்றில் அக்கினி இருந்திருக்க வேண்டும். அப்படி ஒரு ஆவேசத்தைக் காண முடியும் அந்த நாவலில். பிராமண சமூகத்தை தி.ஜானகிராமன் அளவுக்கு விமர்சித்த வேறு ஒரு எழுத்தாளர் தமிழில் இல்லை.
வாஸ்தவத்தில் தமிழ்நாடு ஒரு சுரணையுள்ள சமூகமாக இருந்திருந்தால் தி.ஜா.வின் பல நாவல்கள் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும். பிரிட்டனில் அப்படி நடந்தது. பெருமாள் முருகனுக்கு நடந்தது தி.ஜா.வுக்கு நடந்திருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால் தி.ஜா.வின் பெயர் உலகம் முழுதும் தெரிந்திருக்கும். நாமும் இப்போது போல் இத்தனை அவமானப்பட்டிருக்க வேண்டாம்.
இரண்டு துறைகளில் நம் தமிழ்நாட்டுக்கு அந்த அவமானம் நடக்கிறது. சர்வதேச அளவில் செல்லும் தமிழ் எழுத்தாளர்கள் பெரும் மொக்கைகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கும் இலக்கியத்துக்கும் சம்பந்தமே இல்லை. இமையம் மாதிரி, பெருமாள் முருகன் மாதிரி. அப்படி இல்லாமல் தி.ஜா. சர்வதேச அளவில் தெரிந்திருந்தால் நம் சமகாலத் தமிழ் இலக்கியம் பெருமளவு அங்கீகாரத்தைப் பெற்றிருக்கும். போகட்டும், அது நடக்கவில்லை.
சர்வதேச அளவில் நாம் அவமானப்பட்டுத் திரும்பும் இன்னொரு துறை, சினிமா.
தமிழ்ச் சூழலில் நடப்பதெல்லாம் புறக்கணிப்பு. உதாசீனம். எனவே மரப்பசு வந்தபோது இலக்கிய உலகில் கொஞ்சம் சலசப்பு ஏற்பட்டதே தவிர சமூகத்தில் எந்த பாதிப்பும் இல்லை.
பாரதி காலத்திலிருந்தே இப்படித்தான் நடக்கிறது. தமிழ்நாட்டுக்கு வந்த தாகூருக்கு பாரதி என்ற பெரும் கவி இங்கே வாழ்கிறான் என்றே தெரியவில்லை. யாரும் அவரிடம் பாரதி பற்றிச் சொல்லவில்லை. ஆனால் தாகூர் உ.வே.சா.வை நேரில் போய்ச் சந்திக்கிறார்.
காரணம், தி.ஜா.வுக்கு என்ன நடந்ததோ அதேதான் பாரதிக்கும் நடந்தது. முழுமையான புறக்கணிப்பு.
சரி, தி.ஜா. பிராமணர். அவர் காலத்தில் பிராமண சமூகம்தான் சமூகப்படிக்கட்டில் உச்சத்தில் இருந்தது. இருந்தாலும் தி.ஜா. புறக்கணிக்கப்பட்ட்து ஏன்?
இங்கே நீங்கள் கல்கி என்பவரை நினைவுகூர வேண்டும். எனக்கு ஒரு பிராமண நண்பர் இருந்தார். பெரிய படிப்பாளி. ஆங்கில இலக்கியம், சங்க இலக்கியம் எல்லாம் படித்தவர். ஆனால் சமகாலத் தமிழ் இலக்கியத்தில் ஒரு ஆள் பெயர் கூட அவருக்குத் தெரியவில்லை. கல்கியைத் தெரியும். சுஜாதாவைத் தெரியும். இந்த இரண்டு பெயர்கள்தான் அவருக்குத் தெரிந்த சமகாலத் தமிழ் எழுத்தாளர்கள். க.நா.சு., சி.சு. செல்லப்பா, புதுமைப்பித்தன் கூடத் தெரியவில்லை.
காரணம், கல்கி என்ற ஒரே ஒரு மனிதர். அவருடைய எழுத்து அப்படியே தமிழ்நாடு பூராவையும் புழுதிப் புயல் சூழ்வது போல் மூழ்கடித்து விட்டது. தி.ஜா., புதுமைப்பித்தன் எல்லாம் கல்கி என்ற அந்தப் புழுதிப் புயலில் காணாமல் போனவர்கள்தான்.
தமிழ்நாடு மட்டும் பிரிட்டனைப் போல் இலக்கிய சுரணையுணர்வு உள்ள தேசமாக இருந்திருந்தால், தி.ஜா.வின் நாவல்கள் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும். இதை நீங்கள் என்னுடைய வாக்கியமாகக் கொள்ளாதீர்கள். எண்பது ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தின் மதிப்பீடுகளின்படி சொல்கிறேன். தி.ஜா. சிறைக்குச் சென்றிருக்க வேண்டும். அல்லது, குறைந்த பட்சம் தேசப் பிரஷ்டம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்படித்தான் பிரிட்டனில் நடந்தது.
தமிழர்களுக்கு தி.ஜா.வின் பெயரே தெரியாது என்பதால் எதுவும் நடக்கவில்லை. கல்கி அளவுக்கு தி.ஜா.வின் பெயர் பிரபலமாக இருந்திருந்தால் தி.ஜா.வின் எழுத்து தடை செய்யப்பட்டிருக்கும். தி.ஜா. சிறைக்கு அனுப்ப்ப்பட்டிருப்பார். அல்லது, தேசப்பிரஷ்டம் செய்யப்பட்டிருப்பார்.
அப்போது அராத்து தி.ஜா.வை ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்தாளர் என்று ஒப்புக்கொண்டிருப்பார்.
துரதிர்ஷ்டவசமாக தமிழர்களுக்கு எழுத்தாளர்களின் பெயரே தெரியாது என்பதால் அப்படி நடக்கவில்லை. தி.ஜா.வும் கடைசி வரை ஆல் இண்டியா ரேடியோவில் பெரிய அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றார். நாமும் தி.ஜா. Status Quo எழுத்தாளர் என்று வாய்க்கு வந்ததை உளறிக்கொண்டிருக்கிறோம்.
மற்றபடி மரப்பசுவின் அம்மணிக்கு நிகராக கேத்தி ஆக்கரை மட்டுமே சொல்ல முடியும். ஒரே வித்தியாசம், அம்மணி கற்பனை. கேத்தி ஆக்கர் நிஜம். இன்னொரு வித்தியாசம், கேத்தி ஆக்கர் ஜார்ஜ் பத்தாயைப் போல் பாலியல் தளங்களின் மொழியைப் பயன்படுத்துவார். தி.ஜா. அனாச்சாரமான விஷயங்களை ஆச்சாரமான மொழியில் எழுதுவார். ஆச்சாரமான மொழியில் எழுதப்பட்டது என்பதனால் தி.ஜா.வின் கலகம் கலகம் அல்ல என்று ஆகிவிடாது. மார்க்கி தெ ஸாத், ஜார்ஜ் பத்தாய், ஹென்றி மில்லர், கேத்தி ஆக்கர் போன்ற ஒருசிலரைத் தவிர அப்போதைய கலக எழுத்தாளர்கள் அனைவருமே ஆச்சாரமான மொழியில்தான் எழுதினார்கள் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
ஆனாலும் டி.ஹெச். லாரன்ஸ் (1885 – 1930) போல் ஏன் தி.ஜா. எழுதவில்லை என்பது ஒரு அவசியமான கேள்விதான். அதற்கு என் பதில்: இங்கே அதற்கான சூழல் இல்லை. ஏனென்றால், இங்கே எழுத்தாளன் என்றாலே யாருக்கும் தெரியாது.
மொழியின் புனிதத்தை உடைப்பதற்கு இங்கே 1980 வரை காத்திருக்க வேண்டியிருந்தது. எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் என்ற நாவலில்தான் அது சாத்தியம் ஆயிற்று. இரண்டாயிரம் வருடத்திய மொழிப் புனிதம் முதல் முதலாக தமிழில் சிதைக்கப்பட்ட நிகழ்வு அந்த நாவலில்தான் நடந்தது.
***
இரண்டாயிரம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் பணம் அனுப்பியிருக்கும் நண்பர்கள் அவர்களின் மின்னஞ்சல் முகவரியை அனுப்பினால் திருவண்ணாமலை பயிலரங்கின் ஒளிப்பதிவை அனுப்பி வைக்க முடியும். எழுதுங்கள்: charu.nivedita.india@gmail.com
சந்தா இதுவரை அனுப்பாதவர்களை அனுப்பி வைக்குபடி கேட்டுக் கொள்கிறேன். குறைந்த பட்ச சந்தா 300 ரூ. அதற்கு மேல் அனுப்புவது உங்கள் விருப்பம். ஜீ.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566
பெயர்: ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே தயக்கமின்றி அனுப்பலாம்.)
***
வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:
வங்கி விவரம்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai