13. சரஸ்வதி சொன்ன விபரீத கதை

கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக இந்தியர்கள் வரலாற்றைப் புறக்கணித்து விட்டார்கள்.  உலகில் எங்கும் இப்படி நடந்ததில்லை.  கிரேக்கத்தில் சாக்ரடீஸ் பற்றியும், அவருக்கு இரண்டு நூற்றாண்டுகள் முன்பு பிறந்த லெஸ்பியன் கவி Sappho பற்றியும் துல்லியமாக எழுதி வைத்திருக்கிறார்கள்.  அவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதற்கு சிலைகள் இருக்கின்றன.  மேலை நாடுகள் முழுவதுமே கவிஞர்கள், ஓவியர்கள், தத்துவவாதிகள், விஞ்ஞானிகள், அரசர்கள் போன்றோர் பற்றிய எல்லா விவரங்களும் கிடைக்கின்றன.

இந்தியாவில் கிடைப்பதெல்லாம் வெறும் கட்டுக்கதைகள்தாம்.  திருவள்ளுவர் மணமானவரா, துறவியா, ஹிந்துவா, சமணரா, எப்போது பிறந்தார், எப்போது இறந்தார், எதுவுமே தெரியாது.  இதற்கு ஒரு தத்துவார்த்தமான காரணமும் உண்டு.  பொதுவாக இந்தியத் தத்துவத்தில் ”நான்” இல்லை.  தன்னை முன்னிறுத்தாத, எல்லாவற்றையுமே இறை சக்தியிடம் ஒப்படைத்து விடும் மனோபாவம்.  எதற்குமே உரிமை கொண்டாடாத மனோபாவம்.  இதன் விளைவுதான் இந்தியாவில் வரலாறே இல்லாமல் போனது. 

இதற்கு ஓரளவு பிராயச்சித்தமாக சில செயல்பாடுகள் இலக்கியத்தில் நடைபெறுகின்றன.  அது கூட ஒரு ஐந்தோ பத்தோ சதவிகிதம்தான்.  பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு வாழ்க்கை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமானால் நாம் அக்காலத்தில் எழுதப்பட்ட இலக்கியப் பனுவல்களை விட உ.வே. சாமிநாதய்யர் எழுதிய நூல்களைத்தான் வாசிக்க வேண்டும்.  ஆனால் பாரதிக்குப் பிறகு ஓரளவுக்கு – கொஞ்சமே கொஞ்சம் இலக்கியத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.  அதிலும் சுதந்திரப் போராட்டம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தபோது தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் யாருமே அதைக் கண்டு கொள்ளவில்லை.  சி.சு.செல்லப்பா மட்டுமே ஒரே விதிவிலக்கு.  ஆனால் சுதந்திரப் போராட்டம் மட்டுமே வாழ்க்கை இல்லையே? 

சி.சு. செல்லப்பாவின் ஜீவனாம்சம் என்ற நாவலை எடுத்துக் கொள்ளுங்கள்.  நூறு ஆண்டுகளுக்கு முன்னால் பிராமணப் பெண்ணின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பது பற்றிய ஓர் சமூக ஆவணம் அது.  மட்டுமல்ல, உலகின் மகத்தான நாவல்களில் ஒன்றாக அதை நான் மதிப்பிடுவேன்.  இளம் வயதில் கணவனை இழந்த ஒரு பெண்ணின் உடலும் மனமும் ஒடுக்கப்பட்ட கதை அது.  நாவலில் அவள் அதன் இறுதிப் பகுதியில்தான் பேசுகிறாள்.  அதிலும் மனதுக்குள்.  பெண் விடுதலை மற்றும் பெண் உடலின் அரசியல் பேசும் அத்தனை பெண்களும் படிக்க வேண்டிய நாவல் அது.  ஆனால் ஒரு பிராமணன் எழுதி விட்டதால் யாரும் அதைத் தீண்டவில்லை. 

இலக்கியம் சமூகத்தின் சாட்சியம் என்று சொன்னால் அதற்கு இதெல்லாம் உதாரணம். 

லா.ச.ரா.வும் அப்படியே.  சென்ற நூற்றாண்டின் வாழ்க்கைதான் லா.ச.ரா.வின் கதைகள். 

நாஞ்சில் நாடு, கொங்கு, மதுரை, சென்னை என தமிழ்நாட்டில் ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் ஒருவிதத் தனித்துவமான பேச்சு வழக்கு உண்டு.  இவற்றில் கொங்குத் தமிழ் பெரிதும் விரும்பிக் கேட்கப்படும் ஒன்று.  ஆனால் எனக்குத் தெரிந்து ஒவ்வொரு இனக்குழுவுக்கும் ஒவ்வொரு பேச்சு மொழி இருப்பதாகத் தெரியவில்லை.  இருந்தாலும் அது தனித்துவமானதாக இல்லை.  செட்டியாருக்கு ஒரு மொழி, வன்னியருக்கு ஒரு மொழி, முதலியாருக்கு ஒரு மொழி என்றெல்லாம் இல்லை.  எல்லாம் பொதுமொழிதான்.  ஆனால் சமூகத்தில் ஒரே ஒரு சதவிகிதத்தினரான பிராமண இனத்துக்குத் தனி மொழி இருக்கிறது.  அதிலும் பாலக்காட்டு பிராமண மொழி மற்ற பிராமண மொழியிலிருந்து வேறுபட்டது.  (பேச்சு மொழியில் இன்னும் உட்பிரிவுகளும் வித்தியாசங்களும் இருக்கிறதோ என்னவோ, எனக்குத் தெரியாது.)

ஃப்ரான்ஸ், செக்கோஸ்லோவேகியா போன்ற நாடுகளில் பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட கட்டிடங்களை அவர்கள் இன்னமும் அதே வண்ணம் பராமரிக்கிறார்கள்.  அதை இன்றைய மோஸ்தருக்கு அவர்கள் மாற்றவில்லை.  ஆனால் தமிழ்நாட்டில் மிகவும் புராதனமான கோவில்களுக்கே கூட புதிய வார்னிஷை அடித்து ஆபாசமாக்கி விடுகிறார்கள். 

இப்படிப்பட்ட சூழலில் தமிழின் தனித்தனியான பேச்சு வழக்குகள் அருகிப் போய் விட்டன.  எல்லாமே ஒரு பொதுத் தமிழாக மாறி விட்டது.  பிராமணர்கள் கூட பிராமணத் தமிழ் பேசுவதில்லை.  எல்லா விதமான தனித்துவப் பேச்சு வழக்குகளும் இன்று அழிந்து விட்டன.  குறைந்த பட்சம், அவற்றை லா.ச.ரா.வின் புதினங்கள் ஆவணப்படுத்தும் முயற்சியிலாவது வெற்றி அடைந்திருக்கின்றன.  இப்படிச் சொல்வது ஒரு மகத்தான இலக்கியக் கர்த்தாவுக்கு இழுக்குதான்.  ஆனாலும் வரலாறு என்பதே இல்லாமல் போய் விட்ட தமிழ்ச் சமூகத்தில் லா.ச.ரா. அதை வெகு அனாயாசமாகச் செய்து வைத்திருக்கிறார்.  நான் மேற்கோள் காட்டிய நொண்டி குருக்களின் பேச்சு ஒரு உதாரணம்.  அதில் அவர் தினே, தினே என்று குறிப்பிவதை கவனித்தீர்களா? 

சரி, இப்போது லா.ச.ரா.வின் இலக்கியத் தகுதி பற்றிப் பேசுவோம்.  உண்மையில் எனக்கு இது தர்மசங்கடமாகவும், மன உளைச்சல் தரும் விஷயமாகவும் இருக்கிறது.  இருபது ஆண்டுகள் கழித்து அராத்து ஒரு இளைஞனிடம் சாரு நிவேதிதாவின் இலக்கியத் தகுதியை நிரூபித்து வியாசம் எழுதுவதைப் போன்ற அபத்தம் இது.  இருந்தாலும் அராத்து முன்வைத்திருக்கும் கேள்விகள் முக்கியமானவை.  விவாதத்துக்கு உரியவை.  வரலாற்றில் இனிமேலும் பலரால் கேட்கப்பட இருப்பவை. 

அபிதாவை மூன்று தினங்களாகப் படித்துக்கொண்டிருக்கிறேன்.  ஒரு குறுநாவலைப் படிக்க ஏன் இத்தனை நேரம்?  ஒவ்வொரு வாக்கியமும் என்னை அடுத்த வாக்கியத்தை நோக்கி இழுத்துக்கொண்டு போகாமல் தீவிரமாக யோசிக்க வைக்கிறது. ஒவ்வொரு வாக்கியமும் ஒரு புதிர்வட்டப் பாதை (labyrinth) போல் இருப்பதால் அதனுள்ளேயே பயணப்பட வேண்டியிருக்கிறது.  அதிலிருந்து வெளியே வர முடிந்தால்தான் அடுத்த வாக்கியம் லபிக்கிறது. 

அபிதாவில் ஒரு இடம் இது:

”ஆயினும் ஒரு எண்ணம், ஒரே எண்ணம் – நீர்த்துப் போன சாம்பலுள் இத்தனை நாள் புதைந்து ஒளிந்திருந்தது ஒரு பொறி, நினைவின் காற்றுவாக்கில் பற்றிக் கொண்டு மறதியின் சருகுகளை எரித்து ஜ்வாலையாக்கி என்னைத் தன்முன் உந்தித் தள்ளிச் செல்கிறது. நானும் பற்றி எரிகிறேன். ஒன்று கண்டேன். எதுவுமே மறப்பதற்கில்லை. எல்லாமே ஒளிமறைவில் பாயச் சமயம் பார்த்திருப்பவையே.”

அபிதா என்ற பிரதியும் நானும் இவ்வாறாகத்தான் உறவு கொள்கிறோம். 

முக்கியமான வாக்கியங்களை அடிக்கோடு இட வேண்டுமானால் புத்தகம் முழுதுமே அடிக்கோடு போட வேண்டியிருக்கிறது.  யோசித்துப் பார்த்தால், இந்த நாவல் ஜார்ஜ் பத்தாயின் Ma Mèreஐ விட சிறப்பானது என்றே சொல்வேன்.  காரணம், ஏற்கனவே விளக்கியதுதான்.  மேற்கில் என்னதான் ட்ரான்ஸ்கிரஸிவாக எழுதினாலும் அதில் கிறித்தவத்தின் பாவம் என்ற கருதுகோள் அடிப்படையாக ஓடுகிறது.  ‘பாவம்’ தலைகாட்டாத ஒரே மேற்கத்தியப் பிரதி மார்க்கி தெ ஸாத் எழுதிக் குவித்த நாவல்கள் மட்டுமே. 

மேலும், ஐரோப்பிய எழுத்தாளர்கள் அனைவருமே (ஜார்ஜ் பத்தாய், ஆல்பர் கம்யு, சார்த்தர், பியர் க்யூத்தா, லூயி ஃபெர்தினாந் செலின்  அனைவருமே (ஜார்ஜ் பத்தாய், ஆல்பர் கம்யு, சார்த்தர், பியர் க்யூத்தா (Pierre Guyotat), மற்றும் பலர்) இரண்டாம் உலகப் போர் என்ற காட்டுமிராண்டித்தனமான சரித்திர நிகழ்வினால் மூளை பேதலித்தவர்கள்.  ஓரளவாவது மனநோயின் தாக்கத்துக்கு ஆளானவர்கள்.  அல்லது, குறைந்த பட்சம், சார்த்தரைப் போல போரின் காரணமாக, லட்சக்கணக்கான மனிதப் பேரழிவின் விளைவாக கடவுள் நம்பிக்கையை முற்றாக இழந்தவர்கள்.  மானுட வாழ்வின் மீதான எல்லா நம்பிக்கைகளையும் இழந்தவர்கள்.  உதாரணம், காஃப்கா.

காஃப்காவையும் செலினையும் படிக்கும்போது நான் அடிக்கடி நினைத்துக் கொள்வேன், போயும் போயும் போரினால் மனநிலை பாதிக்கப்பட்ட கலைஞர்களையா நாம் படித்துக்கொண்டிருக்கிறோம் என்று.   

இந்திய எழுத்தாளர்கள் அப்படி அல்ல.  அதனால் ஐரோப்பிய எழுத்தாளர்களிடம் தென்படும் நம்பிக்கையின்மையை இந்திய எழுத்தாளர்களிடம் காண முடியாது.  இந்திய எழுத்தாளர்கள் காளியிடமிருந்தும், சரஸ்வதியிடமிருந்தும், பார்வதியிடமிருந்தும், ராமபிரானிடமிருந்தும் தமது எழுத்தைப் பெற்றவர்கள்.  ஐரோப்பிய எழுத்தாளர்கள் ஹிட்லரின் போர்வெறியிலிருந்து – ஹிட்லர் என்பது ஒரு ஆள் அல்ல என்பதை மறக்கக் கூடாது, ஒட்டு மொத்த ஜெர்மானிய சமூகத்தின் பிரதிநிதி ஹிட்லர் – தங்கள் எழுத்தைப் பெற்றார்கள் என்றால், இந்திய எழுத்தாளர்கள் மேற்கண்ட இறைவர்களிடமிருந்து பெற்றதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.  நம்முடைய நம்பிக்கை வேறாக இருக்கலாம்.  லா.ச.ரா. சொல்வது நம்ப முடியாததாக இருக்கலாம்.  ஆனால் எழுத்தாளன் பொய் சொல்கிறான் என்று சொல்வது அநீதி.  அவன் நம்பிக்கையை அவன் முன்வைக்கிறான்.  அதை நம்புவதும் நம்பாமல் போவதும் உங்கள் விருப்பம்.

மேலே நான் எழுதியிருப்பது என்னுடைய மிக முக்கியமான கண்டுபிடிப்பு.  அதைத்தான் நான் போகிறபோக்கில் சொல்லிச் செல்கிறேன்.

அபிதாவை வாசிக்கும்போது இதை ஒரு மனிதன் எழுதக் கூடுமா என்றே எனக்குத் தோன்றிக்கொண்டிருந்தது.  ஒருவகையில் அபிதா, உலக அளவில் பிரபலமான லொலிதா, சன்ஸ் அண்ட் லவர்ஸ், Ma Mère போன்ற ட்ரான்ஸ்கிரஸிவ் நாவல்களையெல்லாம் விட மகத்தான நாவல் என்றே மதிப்பிடுவேன். 

கதைசொல்லியான அம்பியும் குருக்களின் மகள் சகுந்தலையும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள்.  ஆனால் அது காதல் என்றே அவர்களுக்குத் தெரியவில்லை.  இதற்கிடையில் அம்பி தன்னை வளர்க்கும் மாமாவை அடித்து விட்டு ஊரை விட்டே ஓடி விடுகிறான்.  வெளியூருக்குப் போய் ஒரு முதலாளியிடம் தஞ்சமடைந்து அவர் மகள் சாவித்ரியை மண்ந்து கொள்கிறான். 

பல ஆண்டுகள் கழித்து சாவித்ரியுடன் அவன் தன் ஊரான கரடிமலைக்கு வருகிறான்.  குருக்களும் குருக்களின் மனைவியும் இறந்து விடுகிறார்கள்.  சகுந்தலைக்குத் திருமணம் ஆகி அவளுக்கு அபிதா என்று ஒரு மகள்.  அபிதா சிசுவாக இருக்கும்போதே சகுந்தலை தற்கொலை செய்துகொண்டு இறந்து விடுகிறாள்.  சகுந்தலையின் கணவன் மறுமணம் புரிந்து கொள்கிறான்.

இதையெல்லாம் என் வார்த்தைகளில் ’ஒரு வாக்கியத்தில்’ சொன்னால் ஏதோ பாரதிராஜா சினிமா மாதிரி இருக்கும்.  ஆனால் லா.ச.ரா. தன் வார்த்தைகளில் இந்தக் கதையில் ரஸவாதம் பண்ணி அக்கினியைப் போல் ஜொலிக்க வைத்திருக்கிறார்.  ஒரு குறுங்காவியமாக மாற்றியிருக்கிறார். 

அபிதா ஒரு காதல் கதைதான்.  லொலிதாவைப் போல, ஜார்ஜ் பத்தாயின் நாவலைப் போல, சன்ஸ் அண்ட் லவர்ஸைப் போல. முறை என்று பார்த்தால் அபிதா அம்பிக்கு மகள் முறை. 

இப்போது நாவலிலிருந்து பல பகுதிகளை மேற்கோளாகத் தரப் போகிறேன்.  ஆனால் இந்தக் கட்டுரைகள் புத்தகமாகத் தொகுக்கப்படும்போது இந்த மேற்கோள்கள் இருக்காது. காரணம் உங்களுக்குத் தெரியும்.  நூறு பக்க நூலில் ஐம்பது பக்கம் லா.ச.ரா.வின் மேற்கோள்களைத் தர முடியாது இல்லையா? 

நான் இப்போது தரப் போகும் மேற்கோள்களை கவனமாக வாசியுங்கள்.  என் புதின்ங்களோடு உங்களுக்குப் பரிச்சயம் இருந்தால் நான் என்னுடைய எழுத்தை எங்கிருந்து பெற்றேன் என்பது உங்களுக்குப் புரியும். 

***      

அபிதாவிலிருந்து:

சாதம் போதாது. சகுந்தலை எழுந்து கையலம்பி வந்து மூலைப் பழையதைப் பிழிந்து வைப்பாள்.  பார்க்கத்தான் பயம், ஆனால் பசிக்கு ருசி. இப்போ நினைக்கிறேன். உப்பும் புளியும் பக்குவமாய்க் கூடினதால் மட்டும் ருசி கிட்டிவிடுவதில்லை. அன்னமிட்டாரின் எண்ணமும் கலந்த ரஸவாதம்தான் நெஞ்சு நிறைகிறது.

***

”எங்கே போயிருந்தே? என்னடா முணுமுணுக்கறே? என்னடா எதிர்த்துப் பேசறே? ஓஹோ அவ்வளவு தூரத்துக்கு ஆயிடுத்தா? ஓஹோ நெருப்பிலிருந்து எடுத்து விட்ட கையைக் கடிக்கிற பாம்பா?”

குஞ்சுத் திண்ணையிலிருந்து: “ஹி! ஹி:! ஹி!!!”

நான் பதில் பேசவே மாட்டேன். மாமா நல்லவர். கேள்வி கேட்பார், ஆனால் பதில் எதிர்பார்க்க மாட்டார். மாமா ‘ஸோலோ!!’ அவருக்கு அவர் குரல் கேட்டுக் கொண்டிருந்தால் போதும்.

***

அனேகமாய் நாம் எல்லோருமே ஆணி மாண்டவ்யர்கள்தான். நாலு பேர் மெச்ச (ஹி! ஹி!! ஹி!!!) என் பேச்சின் பெருமையில் நான் நுகரும் இன்பம்தான் எனக்குப் பெரிசு. என் சொல்லில் கழுவேறிப் பிறர் படும் வேதனையை உண்மையில் நான் அறியேன்.

என் முறை வரும் வரை.

மாமா சுபாவத்தில் கெட்டவர் என்று இன்றும் எனக்குத் தோன்றவில்லை. அவர் வாயுள் வார்த்தை நிற்கவில்லை. என் செயல் என் கட்டில் நிற்கவில்லை. அவ்வளவுதான்.

***

ஆணி மாண்டவ்யர் என்றால் புரிகிறதா? மஹாபாரத்த்தில் வரும் ஒரு பாத்திரம்.  லா.ச.ரா.வின் எழுத்தில் இது போன்ற பல உப்பிரதிகள் உண்டு.  உப்பிரதிகளில் புகழ் பெற்ற நாவல் என்றால் எனக்கு ஞாபகம் வருபவை: கோஸின்ஸ்கியின் Hermit of the 69th Street.  மற்றும் ராஸ லீலா.  கவிதையில் டி.எஸ். எலியட்டின் வேஸ்ட் லேண்ட் மற்றும் எஸ்ரா பவுண்டின் Cantos. 

ஆணி மாண்டவ்யரின் கதை:  ஒரு கொள்ளையர் கூட்டம் தாங்கள் கொள்ளையடித்த பொருள்களை மாண்டவ்யரின் குடிலில் வைத்து விட்டு அங்கேயே ஒளிந்து கொள்கிறார்கள்.  திருடர்களைத் தேடி வந்த அரசப் படை அவர்களோடு மாண்டவ்யரையும் பிடித்து வருகிறார்கள்.  மாண்டவ்யர் மௌன விரதத்தில் இருக்கிறார்.  அதனால் அரசனின் கேள்விகளுக்குப் பதில் சொல்லவில்லை.  அதனால் திருடர்களோடு சேர்த்து மாண்டவ்யரையும் கழுவில் ஏற்றுகிறான் அரசன்.  ஆனால் மாண்டவ்யர் சாகவில்லை.  குத்த்தில் குத்திய கழுவுடனேயே உயிரோடு இருக்கிறார்.  அதைப் பார்த்த பிறகு அரசன் அவரிடம் மன்னிப்புக் கேட்கிறான்.  அதிலிருந்துதான் மாண்டவ்யர் ஆணி மாண்டவ்யர் என்று அழைக்கப்பட்டார்.  இப்படிப் போகிறது கதை.

***

இனி மீண்டும் லா.ச.ரா.

”உள்ளூர உணர்ந்தும் ஒருவருக்கொருவர் வெளியிட்டுக் கொள்ள அஞ்சி இருவரும் அவர் சன்னிதானத்தில் படும் வேதனை கண்டு திருவேலநாதரின் உள்ளத்தில் மிளிரும் குஞ்சிரிப்பு அவர் மண்டை வரை ஒளி வீசுகின்றது. கல்லின் உருண்டையில் மண்டையென்றும் முகமென்றும் ஏது கண்டோம்? காலம்காலம் கற்பாந்த காலமாய் அவர் மட்டும் அறிந்து இது போன்ற எண்ணற்ற ஆத்ம ஆஹுதிகளின் தேனடைதானே அவரே!

பித்தத்தின் உச்சம்

தேன்குடித்த நரி

புன்னகையாலேயே அழித்து

புன்னகையாலேயே ஆக்கி

புன்னகையாலேயே ஆகி

புன்னகை மன்னன்.

ஆண்டவனும் ஒரு ஆணி மாண்டவ்யனே.

***

“அபிதா! வாசல்லே யாரு?” உள்ளிருந்து ஒரு பெண் குரல். வெளி ஆளை உள்ளிருந்தே மோப்பங் கண்ட குரல். சற்று உர்த்தண்டம் தான்.

“யாரோ அப்பாவைத் தேடிண்டு வந்திருக்கா.”

ஈரக்கையைத் தலைப்பில் துடைத்தபடி ஒரு மாது உள்ளிருந்து வந்தாள். வாட்ட சாட்டமான தேகம். கண்டதும் கண்ணைச் சட்டென உறுத்துவது கன்னத்தில் பெரிய மறு. என்னைப் பார்த்ததும் மேலாக்கைத் தோள்மேல் இழுத்துக் கொள்ள முயன்றாள்.

ஆனால் அந்த நாஸுக்கான ஸாஹஸம் அந்தத் தேகவாகுக்கு ஒவ்வவில்லை. அமரிக்கையின் அடையாளமாயில்லை. மறந்து போனதை நினைவுபடுத்திக் கொள்ளும் சைகையாய்த்தான் அமைந்தது.

(இந்த இரண்டே வாக்கியங்களில் அந்தப் பெண்ணின் ஒட்டு மொத்தக் குடும்ப வாழ்க்கையும் வாசகருக்குத் தெரிவிக்கப்பட்டு விடுகிறது.)

***

இனி வருவது அபிதாவின் வீடு குறித்த வர்ணனை. 

”சாமான்களை இறக்கிவிட்டு, ‘காப்பி’ என்ற பேரில் சூடாய்க் குடித்த பின்னர், சாவித்ரிக்கு மண்டையிடி குறைந்து சற்றுத் தலைதூக்கித் தன்னைச் சுற்றிப் பார்க்க முடிந்ததும், மண் தரையும் அதில் அங்கங்கே குழிகளும், சில இடங்களில் தலையிலிடிக்கத் தழைத்துவிட்ட கூரையும், கூடத்து மூலையில் குதிராய் இடத்தை அடைத்துக் கொண்டு இருட்டித்து நின்ற குதிர் – (அதில் ஏதேனும் இருக்கோ?) – சுவரில் செம்மண்ணில் வரைந்து வருடக்கணக்கில் மேலிருந்து அழுக்கு மழை ஜலம் ஒழுகிக் கரைந்த வரலக்ஷ்மிக் கலசவடிவம். மேலே பரண்கள் அடைசலில் பகலிலேயே பயமற்று விளையாடும் எலிகள், – வீட்டில் இப்போது பாதிக்குமேல் வானம் பார்க்கிறது – சுவர்களில் பாசி, திட்டுத் திட்டாய்ப் படர்ந்து அதில் காளானும் நாய்க்குடையும் விருத்தி. வீட்டில் உருப்படியாப் புறாக்கூண்டு போல் வீட்டின் ஒரே அறையில், உடைந்த பீரோ, புளிப்பானை, தையல் இலைக்கட்டு, கண்டான்முண்டான்களின் நடுவே உறைகிழிந்து, எண்ணெய்ச் சிக்குப்பிடித்து கட்டியும் முட்டியுமாய்ப் பஞ்சு கட்டிப்போன தலையணைகள், கிழிந்த பாய், ஓலைத் தடுக்கு, பல நாள் ஓதத்தின் வாடை… இந்த உலகத்தை இதற்கு முன் சாவித்ரி எங்கு பார்த்திருக்கிறாள்?

***

பின்னால் வருவது அம்பியின் மாமி:

“யாரது அம்பியா? என்னடா உயிரோடுதானிருக்கையா, செத்துப் போயிட்டையா? உருவே தெரியல்லியே! நாட்டுப் பெண்ணே வாடியம்மா! நமஸ்காரம் பண்ணறயா, பண்ணு பண்ணு – அப்படியில்லே திக்கு இதுதான் கிழக்கு – தோளோடு தாலி தொங்கத் தொங்கக் கட்டிண்டு பதினாறும் பெத்து – பதினாறும் பெத்துடாதே, நான் சொன்னேனேன்னு, நாள் இருக்கற இருப்புலே! என்ன ஒண்ணுமே காணோமே, கைப்பிள்ளையேனும் அழைச்சுண்டு வரப்படாதோ? என்ன சிரிக்கறே, என்ன முழிக்கறே? ஒண்ணுக்குக் கூட வழியில்லையா? நீங்களேதான் ஒருத்தருக்கொருத்தர் எச்சிலா? சரி, பிராப்தம் அப்படியிருந்தால் நீயும் நானும் என்ன பண்றது? கடைக்காரனாவது கொசிர் போடறான். கடவுள் எடைக்குமேல் இம்மி கூட மாட்டேன்கறான். தவிட்டையும் தங்கத் தராசில் தான் நிறுப்பேன்கறான். ஆனால் யோகமும் இப்போ தவிட்டுக்குத்தான் அடிக்கிறது. இங்கேதான் பார்க்கறையே, வதவதன்னு, போதாதா? வாடா பசங்களா, உங்கள் மாமாடா, மாமிடா, நமஸ்காரம் பண்ணுங்கோ! உங்கள் நமஸ்காரங்களும் கூலிக்குத்தானே! உங்கள் புது மாமி என்னென்னவோ பெட்டியிலிருந்து எடுக்கறாளே! எடுத்துண்டேயிருக்காளே! பிஸ்கோத்து பாக்கட் பாக்கட்டா, பப்பர்மிட்டு, சொக்காத் துணி, ரவிக்கைத் துணி – நீங்கள் இத்தனை பேர் இருக்கேன்னு எப்படிடா அவளுக்குத் தெரியும்? நாள் கழிச்சு பார்க்கறோம்; இதுவும் நியாயம்தான். ஆனால் நியாயத்துக்கும் எல்லை உண்டேப்பா அம்பி! அதைத் தெரிஞ்சுண்டிருக்கையா? தெரிஞ்சிருந்தால் சரி, இங்கிருந்தபடி உன் எல்லை என்னென்னு நான் கண்டேன்? மயிர் நரைச்சுப் போனாலும் வாழ்வு பச்சையாயிருக்குன்னு வெச்சுக்கறேன், அதைத் தவிர எனக்கென்ன தெரியும்? நாள் கழிச்சு ஒத்தரை யொருத்தர் பாக்கறோம். நீ போன முகூர்த்தம் நல்லபடியா திரும்பி வந்திருக்கே, இதைவிடத் திருப்தி எனக்கு வேறென்ன வேணும்…?”

(இதைத்தான் மானுடவியல் சாசனம் என்று சொன்னேன்.  இதுபோல் மணிக்கணக்காகப் பேசிக்கொண்டு போகும் மூதாட்டிகளை நீங்கள் பார்த்திருக்கலாம்.) 

***

அதோ தகரக் கொட்டகைகள் இரண்டு தெரிகின்றன. பிறவியின் பிரயாணம் முடியும் இடம் தகரக் கொட்டகைதான். நான் இங்கு விட்டுப்போன பின்னர் இத்தனை வருடங்களில் எரிந்து நீர்த்த எத்தனை எத்தனையோ அஸ்திகளில், கண்ணுக்கெட்டாப் பொடிப்பொடி ஸன்னங்கள் காற்று வாக்கில் சிதைப்படுகையினின்று எழும்பி பூமியின் நான்கு – அல்ல – நாற்பதினாயிரம் திக்குகளில் பறந்து செல்கையில், என் மேல் ஒற்றுவது எது அவள் சின்னம்?

இந்த உறுத்தலுக்குப் பதிலிறுப்பது போன்று, பிரும்மாண்டமான அங்கத் திரட்சியில், பூமியே படுக்கையாய்ப் புரண்ட பசுமை வடிவத்தினின்று, பிரும்மாண்டமான பெருமூச்செறிந்தது. எனக்கு ஏதோ சேதி காற்றுவாக்கில் தவிக்கிறது.

(தமிழில் எழுதப் புகும் எழுத்தாளர்களுக்கு லா.ச.ரா.தான் பாடம்.  எனக்கு ஏதோ சேதி காற்றுவாக்கில் தவிக்கிறது.  இந்த வாக்கியத்தில் தவிக்கிறது என்ற வார்த்தையைப் பார்த்த்தும் நான் வாசிப்பதை நிறுத்தி விட்டேன்.  இந்த வார்த்தை என்னை ஒரு புதிர்வட்டப் பாதைக்குள் இழுத்துச் சென்று விட்ட்து.

***

என்னைப்போல் ஒரு சின்ன உயிர், உடல் கூட்டினின்று விடுபட்டு, அனலாகி, புனலாகிப் புவியுமாகி, இப்பரந்த வெளியின் பேருயிருமான பின்னர், அந்தப் பாஷை எனக்குப் புரியாதா  புரியாதா புரியாதா…

வான் பாதியும் பூமியின் பாதியும் விளிம்பு சேர்ந்த முழு உருட்டு இப்பூமி. நித்யத்வம் உகுத்த கண்ணீர்த் துளி. அதன் நீரோட்டத்தில் ஆடும் நிழல்கள் நாம் – நம்மை நாம் என்று கொண்டதன் விளைவாய் நேர்ந்த நம் வாழ்வுகள் தாழ்வுகள், அஸ்திகள்,

அஸ்தியில் பூத்த நினைவுகள் – நாம் எல்லோருமே கண்ணீரின் நிழல்கள். இங்கு ஏதோ அற்புதம் என்னை சாசஷி வைத்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. என்ன அது?

வான்வீச்சில் தேடுகிறேன். பார்வையின் வாள் வீச்சில் சின்னாபின்னமாய், மேகச்சிதர்கள், அந்திஜால வர்ணங்கள் பூரித்துத் திக்குத் திகைத்து நிற்கின்றன. நகர்கின்றன, விரைகின்றன, அலைகின்றன. அத்தனையும் ஊமைக் குழந்தைகள். அவைகளின் தெய்வீகத் திகைப்பின் கனம், என் மார்பு அழுந்துகிறது. அவைகளின் வாயடைத்த வேதனை மோனத்தில் கூக்குரலிடுகிறது. உணர்ச்சிகள், உணர்வுகள், அத்தனையின் ப்ரதிநிதியாய், மோனத்தின் ஒரே வாய் ஒரே குரல் ஒரே கேள்வி ஒரே பதில் இத்தனையின் ஒரே குவிப்பின் ஒரே கூர்ப்பாய்த் திடீரெனக் கரடி மலை, காற்றில் ஆடும் திரைச் சீலையில் தீட்டிய சித்திரம் போன்று, கண்ணுக்கும் நெஞ்சுக்கும் படபடத்துக் கொண்டு எழுகின்றது.

***

இதோ பார், கரடிமலை திடீரெனக் குலுக்கிக் குலுக்கி, பூஜைக்குப் பறித்த மலர்கள் குவிந்து புலுபுலுக்கும் புஷ்பக் குடலை, கட்டை விரலும் பாம்பு விரலும் மட்டும் நுனி சந்தித்து, ஒவ்வொரு சந்திப்பும் ஒரு லக்னம், லக்னத்தின் முத்திரை – அவ்வளவு நுட்பம், அவ்வளவு ஜாக்கிரதை, அவ்வளவு பக்தியுடன், காம்புக்கு நோகாது, ஆய்ந்தது அவைகளே அறியாது பறித்த மலர்கள், மேகங்கள் திடீரென அவ்வளவு நளினத்தில் அலர்ந்து விட்டன.

அவை தமக்குத்தாமே ஏதோ கவிதை புரிந்து கொண்டிருக்கின்றன. மானிடர் மக்கு. நமக்குப் புரியவைக்கும் நேரம் அவைகளுக்கில்லை. தேவையுமில்லை. பூரா புரிந்துகொள்ளும் சக்தியும் பாவிகள் நமக்கில்லை. நெகிழ நெஞ்சம், பார்க்கப் பாக்கியம், மலரக் கண், படைத்தவர் கண்டு கொண்டேயிருக்கலாம். காண்பதும், கண்டதில் இழைவதுமன்றி கவிதையில் புரிந்து ஆகவேண்டியதென்ன?

குன்றின்மேல் ஒரு பெரும் புகைமண்டலம் தேங்கி நிற்கிறது.

இப்போது இருண்டது நேரமா? என் கண்களா?

(காவியம், காவியம்.  இப்படியெல்லாம் எழுதித்தான் பாரதியிடமிருந்து பெற்ற தீச்சுடரை என்னிடம் அளித்தார் லா.ச.ரா. இது ஒரு தொடர் ஓட்டம்.  தொல்காப்பியனிடமிருந்தும், கபிலர் பரணரிடமிருந்தும், கம்பனிடமிருந்தும் தொடர்ந்து பிறகு பாரதிக்கு வந்து அங்கிருந்து லா.ச.ரா., அதற்குப் பிறகு எனக்குக் கிடைத்திருக்கிறது.)

***

மேகத்தைக் கடையும் சாக்கில், கரடிமலை காலத்தையே கடையும் மத்தாக மாறிவிட்டதோ? செவியோரம் யுகங்களின் ஓசை கடைகிறது. நெற்றிப் பொட்டின் நரம்பு மீட்டலினின்று குதித்தெழுந்த நாதபித்து நான், என் சடலங் களைந்து அந்தரத்தில் மிதந்து செல்கிறேன். கரடிமலையா, இது கைலை மலையா?

கைலைமலைச் சாரலில், எந்த லோகத்தின் எந்த நிமித்தத்தில், ஆண்டவன் சந்நிதானத்திலேயே வெட்டிய எந்த ஹோம குண்டத்தினின்று எழுந்த புகையிது?

“ஸத்யோ ஜ்யோதி ஜுஹோ மிஸ்வாஹா ஆ:

ஓம் பூர்ப் புவஸ்ஸுவஸ் வாஹா ஆ…”

ஆஹுதியின் மந்த்ரகோஷம் இட, கால, தூரத்தைக் குடைந்து எட்டுவது போன்று ப்ரமை தட்டுகிறது. ஆனால் சென்றது, நிற்பது, இனி வரப்போவதன் பேதக் கோடுகள், நிகழ்ச்சியின் நிபந்தனைகள் அழிந்த இந்த நிலையில் ப்ரமை எது? நிஜம் எது? புகைக் கண்ணைக் கரிக்கிறது. ஆனால் கசக்கக் கண் இல்லை, கையுமில்லை. அங்கம், அவயவங்கள் விழுந்து, இந்த அசரீரத்தில் ப்ரக்ஞை ஒன்றுதான் மிச்சம். எனக்கு நான் சாக்ஷி, என் சாக்ஷி எனக்குத் துணையெனும் சாரமும் விழுந்ததும் என்னைக் கவ்விக் கொண்ட திகில் – திகிலே அகிலாய், என் மேல் கவிந்து கொண்ட முகிலின் பேருருவம்தானா இந்தப் புகை?

இந்த ரீதி எந்நேரம், எவ்வளவுதூரம் இருந்ததோ? ஆனால் மேகங்கள் தம் நெய்தலில் இதோ உரமும் ஒழுங்கும் பெற ஆரம்பித்துவிட்டன. துகில் போர்போராய்க் குவிகிறது.

இடையிடையே ஜரிகை சுடர் விடுகிறது. உயர்ந்த ரகஸல்லா, மடிமடியாக வானில் அலைகிறது. இந்தத் திரைக்குப்பின், மஞ்சத்தில், ஜன்னலண்டை, பல்லக்கிலிருந்து என்னைக் கவனிப்பது யார்? என் உயிர், சக்தி யாவற்றையும் தன் பார்வையாலேயே உறிஞ்சி விடுவது போலும், தன்னைக் காட்டாது, தன்வேகம் மட்டும் களவுகாட்டும் இந்தப் பார்வை யாருடையது? ஹிமவான் புத்ரி, ஹைமவதி, பர்வத ராஜகுமாரி…

திரை இதோ லேசாய் விலகுகிறது. ஒரு இம்மிதான். விலக்கிய விரல்நுனிகளுக்குப்பால் எடுப்பான புருவத்தின் வில் வளைவின்கீழ், இமையடியில், நுனிகொடுக்காய் வளைந்த கத்திகளை அடுக்காய்ச் சொருகினாற் போன்று நுனி நீண்டு சுருண்ட கண் ரப்பை மயிர்களின் கீழ் வெள்ளை விழி மேட்டில் சுழன்ற கருவிழி ஒன்று…

***

(இனி வருவது eroticism)

இடுப்பில் குடத்துடன் அவள் (அபிதா) முன் ஏறுகையில் வேணுமென்றே என் நடை அவளை இரண்டு படிகள் முன் விட்டது.

இடுப்பில் குடத்திற்கு இடம், குடத்தின் செருக்கு.

இடையில் குடம் இடுப்பின் செருக்கு.

இடையின் வளைவுள் குடத்தின் வளைவு புதைந்ததும் கோடுகள் பூக்கும் மர்மப் புன்னகை இதயத்தில் ஒளி தட்டுகின்றது.

படியேறுகையில், அவள் உடலில் லேசான வளைவுகள் சுடராட்டம் போல் விளைகையில், முதுகுப்புறம், வலது தோளில் ரவிக்கை தையல் விட்ட இடத்தில் பளீரிட்ட சதை நெருப்பு நெஞ்சில் பற்றிக் கொள்கையில், இதுவரை சென்று போன வருடங்களில் அங்கு குவிந்து அழுகிய குப்பை கூளங்கள், வயதின் சருகுகள் எரிகின்றன. நானே லேசாகிக் கொண்டிருக்கிறேன்.

***

கரடிமலையே, நீ எங்கள் பெருந் தாய். நாங்கள் உன் குட்டிகள். நீ இப்போது எங்களை உன் மார்புற அணைத்துக் கொள்கையில், நாங்கள் உன் ஆலிங்கனத்துள் அவிழ்கையில், உன் இதயத்தில் புதைந்தோமா, அல்ல, உன் கருவினுள்ளேயே புகுந்துவிட்டோமா? நீயே சொல்.

இல்லை, நீ சொல்லமாட்டாய். உன் மனம் கல். எங்கள் அனுபவம் தான் எங்கள் பேறு. எங்கள் பேறுதான் உன் பதில். அவரவர் இஷ்டம், எண்ணம், நினைப்பின் வன்மைக்கேற்றபடி அவரவர் பேறு.

***

அன்று சக்கு (சகுந்தலை) இப்படித்தான் விழுந்து எழுந்தாள். சிந்தனையின் சொந்தத்தில், பார்வை மங்கி, இவள் இப்படி மார்மேல் கைகட்டிக் கொண்டு நிற்கையில், ஆண்டவன் ஒற்றியெடுத்த அச்சில் அவளைக் காட்டிலும் இந்த முகத்தின் செதுக்கல் இன்னும் தெளிவு. அவ்வளவுதான். நெற்றி வகிடினின்று ஒரு பிரி கலைந்து காதோரம், காற்றில் எஃகுச் சுருள் சுழன்று, தன்னோடேயே கண்ணாமூச்சி விளையாடிற்று.

இந்தச் சமயத்தின் வினாடிகளை, அவைகளின் துளிப்பை, ஸ்படிகமாலை மணிகளைப் போல் ஜபித்துவிடலாம். கட்டுக்கட்டாய் அவைகளின் சுழற்சியைக் கண்ணாலேயே கண்டு விடலாம் போன்று அமைதி எங்களைச் சூழ்ந்தது. வான விளிம்பினோரம் ஒரு பக்ஷி பறந்து செல்கிறது. அது வெறுமெனப் பறப்பது போல் தோன்றவில்லை. எங்களைச் சூழ்ந்த அமைதிக்கு நூல்பிடித்து, உலகத்தையே வளைப்பது போல் தோன்றுகிறது.

அவள் முகம் மெதுவாக என் பக்கம் திரும்புகிறது. கண்களில் சிந்தனைப்படலம் கலையவில்லை.

“என் அம்மா செத்த விதம் உங்களுக்குத் தெரியுமோ?”

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. திடீரென்று அப்படி அவள்…

காலடியில் பூமி விட்டது.

“ராப்பூரா தேடியலைஞ்சுட்டு – எந்தக் காரியம் எப்படியானாலும் காலை பூஜை நடந்தாகணுமே! சுவாமி தலையில் தண்ணியைக் கொட்டியாகணுமே! – அப்பா குடம் ஜலத்துடன் மலையேறிவந்தால், லிங்கத்தைக் கட்டிண்டு அம்மா செத்துக் கிடக்கறா.”

இழுத்துவிடுத்த நாண் செவியோரம் ‘பூம் பூம்’, ‘பூம் பூம்’…

கண்ணுக்குமீறிய ராக்ஷஸங்கள் எவையெவையோ எங்கெங்கோ முறிந்து, இருள்தூலங்கள் என்மேல் சாய்கையில், எங்கிருந்தோ ஒரு குரல்:

“… சுவாமிக்குக் கும்பாபிஷேகம் பண்ணும்படி ஆயிடுத்து. குருக்கள் வீட்டைத் தூத்தாதவாள் கிடையாது. மத்த நாள் கோவிலுக்கு மலையேறி வரவாள் பக்தி தட்டுக்கெட்டுப் போயிடறது ஒண்ணுமில்லாட்டாலும், ஊரே ‘கொல்’லுனு ஆயிடுத்து.  ‘செத்தும் கெடுத்தாள் பாவின்னு’ அப்பா சபிப்பார்.” 

***

(அபிதாவிடம் மானசீகமாகப் பேசுகிறான் அம்பி)

கைகளைப் பிசைந்து கொண்டு, காற்றிலாடும் புஷ்பப்புதர் போல், குன்றி நீ இப்படி நிற்கையில் நீ செத்தாய் என்று உன் வாயாலேயே நீ சொல்லும் விந்தை என்ன? நீ கெட்டவளா என்று என்னையே கேட்கும் அர்த்தம் என்ன? என்னிடம் என்ன சத்தியத்தைக் கேட்டு வாங்குகிறாய்? எனக்கு ஒண்ணுமே புரியல்லியேடி!

இருகைகளாலும் நெற்றிப் பொட்டைப் பற்றிக் கொள்கிறேன். கன்னங்களில் கண்ணீர் சுட்டது. பற்றியெரிகிறேனா? எரிநீரில் மூழ்குகிறேனா? இரண்டுக்கும் வித்யாசம் என்ன?

அவள் குரல் சொல்லும் கதை செவியில் பாய்கையில், மூடிய கண்களுக்குள் விழித்திரையில், கோலங்கள் நெய்த ஜமக்காளத்தை விரித்துப் போட்டாற்போல் செத்தவள், உயிர் பெற்று எழுகிறாள்.

ம்ருதங்கத்தை ஸ்ருதி கூட்டுவதுபோன்று இவள் குரலின் தன்மையிலேயே ஒரு சிறு முனகல், உச்சரிப்பில் ஒருமனமின்மை, சொல்லுக்குச் சொல், கொக்கி, ஓசைகளின் பிகுவை அவ்வப் போது இழுத்துத் தனக்குத்தானே தெரிந்து கொள்வதுபோல்.

“… அம்மா சதா சர்வகாலமும் அழுதுண்டேயிருப்பாளாம். வாய்விட்டு அல்ல, மோனக் கண்ணீர் வழிந்தபடியிருக்கும். காரணம் சொல்லமாட்டாள். கண்ணில் கோளாறோன்னு வைத்தியம், ஏவல், சூன்யமோன்னு மந்திரம் தந்திரம் வேப்பிலை, பூஜை எல்லாம் பண்ணிப் பார்த்தாச்சு. உள்ளே ஏதோ உடைஞ்சு போச்சு. மருந்துக்குப் பிடிபடல்லே மந்தரத்துக்குப் பிடிபடல்லே. ஒருசமயம் இல்லாட்டா ஒருசமயம் அடக்க முடியாத ஆத்திரத்தில் அடி உதை கூட – ஊஹும். கண்ணீர் நின்ற பாடில்லை. அதைப்பத்தி அழறவாளுக்கே அக்கறையில்லை.

ஓரொரு சமயம் அம்மாவைப்பத்தி அப்படி நினைக்கையில் எனக்கே ஆத்திரம் வரது; கூடவே மனம் பரிதவிக்கறது.

தாத்தா சொல்வார்: ‘உன் அம்மா கண்ணீராவே கரைஞ்சு போயிட்டான்னு.  தாத்தாவை நன்னா நினைவிருக்கு. திண்ணையில்தான் எப்பவும் வாசம்.  தாத்தாவுக்கு கண் தெரியாது. தலையைத் தடவி என்னைத் தெரிஞ்சுப்பார்.

கதையெல்லாம் நல்லா சொல்வார். ‘இப்போ என் கைதான் அம்மா என் கண்’ என்பார்.  ‘வாலு போச்சு கத்தி வந்தது டம் டம்; குரங்குக்கு ஒண்ணுபோனால் ஒண்ணு வந்தது டம்டம். உன் தாத்தாவுக்குக் கண்ணுபோச்சு பொண்ணு போச்சு எல்லாம் போச்சு உசிர் போகல்லே டம்டம்’னு ஏதோ சிரிப்பு வரமாதிரி சொல்லி முடிப்பார். சிரிப்பு கேக்காமல் வந்துடும். சிரிச்சப்புறம் சிரிச்சது தப்புன்னு தெரிஞ்சு பயமாயிருக்கும். ஆனால் ஏன் தப்புன்னு தெரியாது.

ஒரொரு சமயம் கண்ணிலிருந்து சதையை உரிச்சா போல், கண்ணே திடீர்னு தெரிஞ்சுட்டாப் போல் ஒரு திக்கா முறைச்சுப் பார்த்திண்டிருப்பார். அப்படி என்னத்தைப் பார்க்கறார்னு அந்தப் பக்கம் திரும்பிப் பார்ப்பேன். எனக்கு ஒண்ணும் தெரியாது. ஆனால் அவருக்கு மாத்திரம் ஏதோ தெரியும் போல இருக்கு.

‘இப்போ தெரியறது’ என்பார். திரும்பவும் அந்தத் திசையைப் பார்ப்பேன். அங்கு ஒண்ணுமில்லை.

‘என்னது தாத்தா?”

‘இப்போ புரியறது.”

‘எது தாத்தா?”

‘ஏன் அப்படி கண்ணீரா உருகி, காற்றில் கற்பூரமா காணாமலே போயிட்டான்னு.’

‘ஏன் தாத்தா?”

‘ஆனால் இப்போ புரிஞ்சு ப்ரயோஜனம்? புரிஞ்சதை சொல்லித்தான் ப்ரயோஜனம்?

அப்பவே புரிஞ்சிருந்தாலும் அதனால் நடக்கப்போற காரியமும் இல்லை. ரகளைதான் கூட. நன்னா புரியறது. புரியறதுக்குமேலே ப்ருவ் ஆறது. கிட்டிமுட்டிப் போனால் யாருக்கு யார்? நீயாரோ நானாரோ யார் யாரோ ஆரிராரோ…ன்’னு கட்டைக் குரலில் தாலாட்டுப் பாட ஆரம்பித்துவிடுவார்.

***

அற்ப விஷயம் சொற்ப சம்பவம் அடிவயிறு வெள்ளி வீச கடல் வயிற்றில் மீன்குட்டி துள்ளி விழுந்து தனிப்படுகையில், கடலென்றும் மீனென்றும் கண்ட தனிப்பேதம் பொருளா? பொருள் காட்டும் மருளா? அல்ல பொருள் காண்பதே மருளா?

அவிழ்த்து அவிழ்த்துப் போட்டு எடுத்தெடுத்துக் கட்டிக் கொள்ளும் பொருளே!

சமயமே சிற்பமாகிவிட்டபின் சிற்பத்தில் எது அல்பம் எது சொல்பம்?

ஆனால் சக்கு, நீ சக்குவா? அபிதாவா?

மலையேறுமுன் சக்கு. மலையிறங்கியதும் அபிதா.

ஆனால் நீ யாராயிருந்தால் என்ன? இனி உன்னைக் கவனிப்பதன்றி எனக்கு வேறு ஜோலியில்லை. நீ காத்த மலையாகிவிட்டாய். உன்னைக் கவனிக்கக் கவனிக்க உன் செயல், அசைவுகளின் நுணுக்கம் ஒவ்வொன்றும் நீ அபிதாவோ சக்குவோ, நீயெனும் கவிதையின் தனித்தனி அங்கமாய், ஒவ்வொரு தனிமையும் அதனதன் முழுமை பெற்று, அதன் இரக்கமற்ற கொக்கி என்மேல் விழுந்து கவ்வி, கழுவில் நான் நெளிகிறேன். தரிசனத்தின் பயங்கரம் இதுதான். தரிசனத்திற்கு இரக்கமில்லை. எந்த தரிசனமும் அஞ்சத் தக்கதே. என்னை எனக்கில்லாமல் எல்லாம் தனக்காக்கிக் கொண்டு விட்ட தரிசனி.

***

தாம்பு நுனியில் குடம் விடுவிடென இறங்கித் தொப்பென்று ஜலத்தில் விழுந்து மொண்டெழுந்த வேகத்தில் ஜலம் அதன் கண்ணாடி கலங்கி, சிற்றலை அதிர்ந்து அடங்கும் மிளிர்வில் அதோ சக்கு முகம் தோன்றிச் சிரித்து நலுங்குகிறது.

‘விர்’ரென்று மேலேறி வரும் குடத்தை வசியமுற்றவனாய்க் கவனிக்கிறேன்.

கழுத்தில் கயிறுடன் தொங்குவது குடமா? நானா? எனக்கு ஏன் இப்படித் தோன்றுகிறது.

பிடிச் சுவர்மேல் குடத்தை இறக்கி, சுருக்கைக் கழற்றி, அவள் குடத்தை இடுப்பில் ஏற்றிக்கொண்ட வேகத்தில், ஜலம் அவள் முகத்தில், உடல் முகப்பில் விசிறி நனைத்தது.

ஜலமா? நானா?

குடத்தை ஒரு கை அணைக்க, மறுகையால் முகத்தைத் துடைத்துக் கொள்கிறாள்.

சிரிக்கிறாள்.

அவள் நடக்கையில் குடத்தில் ஜலம் துளும்பிச் சிரிக்கிறது.

நானா? என்னைப் பார்த்து நானேயா?

வான் விளிம்பில் ஒரு நக்ஷத்ரம் அர்த்தத்துடன் பார்த்துக் கண் சிமிட்டுகிறது.

அவள் முன் செல்கிறாள்.

நான் பின் செல்கிறேன். அவள் நடையில் இடுப்பின் கடையலில் என் மனம் பறிபோகின்றது.

குடத்தின் நசுங்கலிலிருந்து ஜலம் மத்தாப்பூக் கொட்டிக் கொண்டே போகிறது.

அவள் நடக்கையில் ஜலம் தெளித்த இடம் பூமிக்குக் குளிர்ச்சி. ஆனால் அவள் நடை என் நெஞ்சுக்குத் தீ.

***

அபிதா, உன் வெளிச்சம் கண் கூசுகிறது.

உன்னோடு கண்ணைப் பொத்திக் கொண்டுதான் நடக்கிறேன். எனக்கு என்ன தோன்றுகிறது? ஏன் தோன்றுகிறது? என்ன புரிகிறது? புரிந்தால்தானே?

புரிவதற்கே எதுவுமில்லை என்பதுதான் புரிகிறது. அது அது அந்தந்த சமயம் எப்படி எப்படித் தோன்றுகிறதோ அதுதான் உண்டு. தொன்றுதொட்டு இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. ஒன்று என்று ஒன்று, நீயும் நானுமென இரண்டாய்ப் பிரிந்து, பிரிந்தபின், பிரிந்தது திரும்ப ஒன்ற நீயும் நானும் படும் ஓயாத வேதனையில், நீயும் நானும் வெட்டியும் ஒட்டியும் ஒவ்வியும் ஒருவரோடொருவர் ஒப்பிட்டுப் பார்ப்பதும் –

இதுதான் கண்டது!

***

கண்களை மெதுவாய்த் திறக்கிறேன்.

எதிரே, தம்ளரை என்னிடம் நீட்டிய வண்ணம், தன் புன்னகையில் திவ்யத்தில் ஒளி வீசிக்கொண்டு நிற்கிறாள்.

தம்ளரை வாங்கிக் கொள்கையில், என் விரல் அவள் மேல் படாதா?

எண்ணத்தையும் செயலையும் இம்மியிலிருந்து எல்லை வர, நம் அறிவுக்கெட்டாது தன் வழியில் ஆளும் ஆதிக்கத்தின் கட்டளையில், பாத்திரம் கைமாறும் தருணம், எங்கள் விரல்கள் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொண்டாற்போல் எவ்வளவு

நெருக்கமாய் தம்ளரைப் பற்றியும் –

தொட்டுக்கொள்ளவில்லை.

அவள் ஏந்தி வந்த ஜலமே, அவள் கன்னித் தூய்மையை, தன் சத்தியத்தின் சக்தி கொண்டு, அவளுக்குக் காப்பாற்றித் தருவதாய் எனக்குத் தோன்றுகிறது.

கானலின் நலுங்கல் போல் என் ஏக்கம், கண்கூடாய் என் முன் எழுகிறது. பற்று ஒன்றின் மேல் விழுந்துவிட்டால் –

பற்று, ஆசை, அன்பு, பாசம், பக்ஷம், காதல், காமம், வேகம், விரகம், ஏக்கம், இன்பம், வேதனை, சோகம், சுகம், சொர்க்கம், நரகம், உயிர், ஊசல், கூடல், பிரிதல் – இன்னும் எத்தனை எத்தனையோ.

அத்தனையும் ஒரே சாயம் பிடித்துக் கொண்ட கெட்டியின் ரகங்களைக் காட்டும் பெயர்கள்தானே! பற்று ஒன்றின் மேல் விழுந்துவிட்டால், தொடல் என்பது ஏன் அவ்வளவு அவசியமாகிவிடுகிறது?

தொடல்.

உடைமையின் முத்திரை.

உறவின் வழித் துணை.

உணர்வின் பழி ரேகைக்கு ரேகை பாயும் மந்த்ர சக்தி என்ன?

அவள் கொடுத்த ஜலம் தொண்டை அடியில் உவர்த்தது. அந்தக் கிணற்று ஜலம் கற்கண்டாய்த் தித்துக்குமே, இதற்கு இந்த உவர்ப்பு எப்படி வந்தது? ஒருவேளை என் தாபம்தான் கொடுமையோ?

சக்கு, நீ சாகவில்லை. உன்னையே பலிகொடுத்து என்னை வாங்கும் பழியைக் கரடிமலைக் கருவேலநாதனிடம் வரமாக வாங்கிக் கொண்டாயா?

நீ வாங்கும் பழி இவ்வளவு பயங்கரமா?

சக்கு என்னால் தாங்க முடியல்லேடி! சக்கு என்னை மன்னிச்சூடடி!

மன்னிப்பு.

இது ஒரு பெரும் பொய். மன்னித்ததால், தீங்கின் பங்கு குறைந்து விடுமா?

வேதனையிலிருந்து விடுதலை கிடைத்து விடுமா? நினைவால் இன்னும் கூடுதலேயன்றி குறைவு ஏது? மார் வெடிக்க அழுகை பீறிடுகிறது.

அபிதாவுக்குக் கேட்டுவிட்டால்?

***

இரண்டாயிரம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் பணம் அனுப்பியிருக்கும் நண்பர்கள் அவர்களின் மின்னஞ்சல் முகவரியை அனுப்பினால் திருவண்ணாமலை பயிலரங்கின் ஒளிப்பதிவை அனுப்பி வைக்க முடியும். எழுதுங்கள்: charu.nivedita.india@gmail.com

சந்தா இதுவரை அனுப்பாதவர்களை அனுப்பி வைக்குபடி கேட்டுக் கொள்கிறேன். குறைந்த பட்ச சந்தா 300 ரூ. அதற்கு மேல் அனுப்புவது உங்கள் விருப்பம். ஜீ.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்:  ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே தயக்கமின்றி அனுப்பலாம்.)

***

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

வங்கி விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. 

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai