15. மொழி எனும் மந்திரம்

சித்தர்கள் பற்றிப் படித்திருக்கிறீர்களா?  தகரத்தைத் தங்கமாக்கும் விஞ்ஞானமெல்லாம் அவர்களிடம் இருந்திருக்கிறது.  உணவு உண்ணாமலேயே பல காலம் இருப்பார்கள்.  உடலை பிறர் கண்ணுக்குத் தெரியாமல் மறைக்கும் சித்தர்களும் உண்டு.  போகர் உருவாக்கிய நவபாஷாணத்தை நாம் அறிவோம்.  ஒன்பது வகை பாஷாணத்தை வேதியியல், இயற்பியல் முறைப்படி கட்டினால் கிடைப்பது நவபாஷாணம்.  விறகு மற்றும் ஒன்பது வகை வறட்டி மூலம் நவ பாஷாணங்களையும் திரவமாக்கி, பிறகு ஒன்பது முறை வடிகட்டி திடமாக்குவார்கள்.

புடம் போடுதல் என்பது பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  வறட்டியின் அளவுக்கேற்ப எட்டு வகைப் புடங்கள் உள்ளன.  ஒரு வறட்டியால் புடம் போட்டால் அதன் பெயர் காடைப்புடம்.  மூன்று வறட்டி கௌதாரிப் புடம்.  குக்குடப் புடம் எட்டு முதல் பத்து வறட்டி.  வராகப் புடம் ஐம்பது வறட்டி.  யானைப் புடம் ஐநூறிலிருந்து ஆயிரம் வறட்டி.  கன புடம் எழுநூறு முதல் எண்ணூறு.  மணல் மறைவுப் புடம் எண்ணூறு வறட்டி.  கோபுடம் ஆயிரம் வறட்டி. 

சில மூலிகைகளைப் பறிக்கும்போது குறிப்பிட்ட சில மந்திரங்களை உச்சாடனம் செய்துதான் பறிக்க வேண்டும்.  அதிலும் சில குறிப்பிட்ட நேரங்களில்தான் பறிக்க வேண்டும்.  சில பாஷாணங்களைச் செய்யும் போது கை முழுவதும் பொசுங்கி விடும்.  என் நண்பர் பாஸ்கரனின் சித்தப்பாவுக்கு அப்படி ஒருமுறை ஆகி விட்டது என்று சொல்லியிருக்கிறார். 

எதற்காக இதையெல்லாம் சொல்கிறேன் என்றால், உலகம் பூராவும் பழங்குடி இனங்களில் விஷக்கடிகளை வெறும் மந்திர உச்சாடனங்களால் சரியாக்கி விடுவதைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.  பாம்புக் கடியைக் கூட அப்படி சரியாக்குவார்கள்.  நானே பார்த்திருக்கிறேன்.

எனக்கு நான் எழுதும் ஒவ்வொரு வார்த்தையும் மந்த்ரம்.  பாம்புக்கடி விஷமே மந்திரச் சொற்களால் சரியாகி விடுகிறது என்கிறபோது என் மந்திரச் சொற்களால் சமூகத்தின் நச்சுத்தன்மைகள் விலகிவிட வாய்ப்பு உண்டு என்று நான் நம்புகிறேன்.  “நான் எனக்காகவே எழுதுகிறேன், மானுடர் பற்றிக் கவலையில்லை” என்று நான் சொன்னாலும் அது அங்கே, இது இங்கே.  எல்லா இடத்திலும் ஒரே மாதிரி பஜனை பண்ணிக்கொண்டிருக்க முடியாது.   

லா.ச.ரா.வின் ஒவ்வொரு சொல்லும் மந்திரம்.  ஆனால் லா.ச.ரா.வின் மந்திரச் சொற்கள் தாந்த்ரிக் யோகிகளும் ஆன்மீகவாதிகளும் பயன்படுத்துவது.  இன்னொருவர் இருக்கிறார்.  அவருடைய கதைகள் எனக்குப் பிடிக்காது.  ஆரம்பத்திலிருந்தே பிடிக்காது.  இருபது வயதில் முதல் முறை படித்ததிலிருந்து இந்த எழுபது வயது வரையிலும் அவர் கதைகளை எனக்குப் பிடிக்காது.  ஆனாலும் இந்த ஐம்பது ஆண்டுகளில் அவர் கதைகளை நான் திரும்பத் திரும்ப வாசித்துக்கொண்டிருக்கிறேன்.  காரணம், அவரும் வார்த்தைகளை மந்திரமாகப் பயன்படுத்தினார்.  ஆனால் லா.ச.ரா.வைப் போல் அல்ல.  தத்துவத்திலும் உயர் கணிதத்திலும் இசையிலும் பெரும் ஞானம் உள்ளவர் என்பதால் அவருடைய வார்த்தைகள் கவித்துவமாகவும் அறிவியல் பூர்வமாகவும் தத்துவார்த்தமாகவும் இருந்தன.    

ஆனானப்பட்ட புதுமைப்பித்தனாலேயே “சிறுகதையின் திருமூலர்” என்று வர்ணிக்கப்பட்ட மௌனியே அவர். மௌனி ஒரு வயலின் கலைஞர்.  வீட்டில் சும்மா இருக்கும்போது வயலின் வாசிப்பதும், கணிதங்களைப் போட்டுக்கொண்டிருப்பதும்தான் அவர் பொழுதுபோக்கு.

ஏன் எனக்கு மௌனியைப் பிடிக்காது என்றால் – அதற்கு முன்னாலேயே சொல்லி விடுகிறேன் – மௌனி fake அல்ல.  மௌனி தன் வாழ்நாள் முழுவதுமே இருபத்து நான்கு சிறுகதைகள்தான் எழுதினார்.  அது மட்டுமே அவருடைய ஒட்டுமொத்த இலக்கியப் பங்களிப்பு.  ஆனால் அந்த எல்லா சிறுகதைகளிலுமே கரு ஒன்றுதான்.  ஒருத்தன் ஒருத்தியைக் காதலிப்பான்.  காதல் நிறைவேறாது.  அவன் காலம் பூராவும் காதலியை நினைத்து உருகுவான்.  இல்லாவிட்டால் காதலி செத்துப் போய் விடுவாள்.  இந்த ஃபார்முலாவிலிருந்து விலகி மௌனி ஒரு கதை கூட எழுதவில்லை. 

மௌனியின் கதைகள் எனக்குப் பிடிக்காவிட்டாலும் அவருடைய வாழ்க்கை பற்றி நான் எப்போதுமே மிகுந்த ஆர்வத்துடன் சிந்தித்து வந்திருக்கிறேன்.  அவருடைய வாழ்க்கை ஒரு நீண்ட நாவலுக்கான சம்பவங்கள் நிறைந்தது.  அவருக்கு நான்கு மகன்கள், ஒரு மகள்.  அவர்களில் இரண்டு மகன்கள் இளம் வயதில் விபத்தில் இறந்து போகிறார்கள்.  ஒரு மகன் எம்.ஏ. தத்துவம் படித்தவர் மனநிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்தார்.  இன்னொரு மகன் அமெரிக்கா போய் விட்டார். 

எப்படிப்பட்ட வாழ்க்கை பாருங்கள்!

மௌனியின் பக்கத்து வீட்டில் வசித்த மோகன் என்ற இளைஞனை மௌனி தன் சக வயதுத் தோழனாகவே மதித்துப் பழகிய கதையையெல்லாம் மோகன் நான் தில்லியில் வசித்தபோது மணிக்கணக்கில் சொல்வார்.  மூன்று நான்கு ஆண்டுகள் மோகனும் நானும் தில்லியில் தினமுமே சந்தித்துக் கொள்வது வழக்கமாக இருந்தது. 

ஒருமுறை யாரோ ஒரு எழுத்தாளர் மௌனியிடம் “என்ன நீங்கள், எழுத்தாளராக இருந்து கொண்டு பூணூல் எல்லாம் போட்டுக்கொண்டிருக்கிறீர்கள்?  அதை அறுத்துப் போடுங்கள்” என்று அறிவுரை சொல்லியிருக்கிறார்.  அதற்கு மௌனி சற்றும் யோசிக்காமல், “I would rather cut my cock off and hang it up” என்று சொன்னாராம்.  இப்படி ஆயிரம் கதைகள் மௌனி பற்றி. 

மௌனியை சந்தித்துக்கொண்டிருந்த ஏராளமான எழுத்தாளர்களில் – தி.ஜானகிராமன் போன்ற பலரில் – மௌனி மட்டுமே மது அருந்தும் பழக்கம் உடையவராக இருந்திருக்கிறார்.  (இது ஒன்றே மௌனியின் கதைகள் பிடிக்காவிட்டாலும் எனக்கு மௌனியைப் பிடித்துப் போக எனக்குக் காரணமாக இருந்தது.) 

வீட்டில் பிரச்சினை பண்ண மாட்டார்களா என்று கேட்டேன்.

அதற்கு நண்பர் சொன்னார்.  மௌனி தனது எழுத்தாளர் குழாமுடன் பேசியபடி நடந்து வந்து கொண்டிருக்கும்போதே ஒரு இடம் வந்ததும், நீங்களெல்லாம் போய்க்கொண்டே இருங்கள், நான் ஒரு இதோ வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு இறக்கத்தில் இறங்கிப் போகிறவர் சொன்னபடி இதோ வந்து விடுவாராம்.

மௌனியை நான் சந்திக்க நேர்ந்திருந்தால் எத்தனை மில்லி அடித்தீர்கள் என்று கேட்டுத் தெரிந்து கொண்டிருப்பேன்.  அவர் குடிப்பது பட்டை சாராயம். 

மறுபடியும் கேட்டேன்.  வீட்டில் தெரிந்து விடாதா? சாராயம் நாறுமே?

”மாமிக்கு வெளி உலகம் தெரியாது.  ஒருவேளை ஆண்களின் வாசனையே இதுதான் என்று நினைத்திருக்கலாம்.  தவிரவும், மௌனி புகையிலையோடு வெற்றிலைப் பாக்கு போடுவார். அதில் சாராய வாடை தெரிந்திருக்காது.  மேலும், சாராயம் பற்றித் தெரிந்தால்தானே சாராய வாடை என்று தெரியும்?”   

சரி, மௌனியின் மொழிக்கு வருவோம்.  எம்.ஏ. நுஹ்மான் மௌனியைச் சந்தித்தது பற்றி எழுதியிருக்கிறார்.  அதிலிருந்து சில பகுதிகள்:

”30-12-1984 மாலை 5 மணி அளவில் மௌனியைப் பார்க்கப் போனேன்.  (மௌனி இறந்தது 1985.  வயது 77)

(சிதம்பரத்தில்) முதலில் கீழவீதியும் வடக்கு வீதியும் சந்திக்கும் இடத்துக்குப் போனேன். இரண்டொருவரிடம் விசாரித்தேன். அவர்கள் மௌனி பெயரைக் கேள்விப்பட்டதில்லை. தி.மு.க. அலுவலகத்தில் போய்   விசாரித்தேன். அவரின் சொந்தப் பெயர் மணி, பழைய எழுத்தாளர் என்று சொல்லியும் அவர்களுக்கும் தெரியவில்லை. கிழக்கு வீதி தெற்கு வீதிச் சந்தியிலும் நிரந்தர வாசிகள் சிலரை விசாரித்தேன். அவர்களுக்கும் தெரியவில்லை. தெற்கு வீதி மேலை வீதிச் சந்தியிலும் அதன் முடுக்குகளிலும் சற்றுப்படித்தவர்கள் போல் தெரிந்த சில முதியவர்களைக் கேட்டுப் பார்த்தேன். நாலாம் இலக்க வீடு ஒன்றைத் தட்டி விசாரித்துப் பார்த்தேன். அவர்களுக்கும் மௌனியைத் தெரியவில்லை.

கடைசியாக மேலவீதி வடக்கு வீதிச் சந்தியில் பிரியும் தெருவில் இறங்கினேன். எப்படியும் இங்கு மௌனியைப் பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் தெருவில் சிறிது தூரம் போய் அது கிளை பிரியும் ஒரு சந்தியில் ஒரு வீட்டுக்காரரிடம் விசாரித்தேன். அவரும் மணி, மௌனி என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கவில்லை. அங்கிலருந்து ஒரு மூன்று நான்கு வீடு தள்ளிச் சென்றேன்.  நான்காம் இலக்கத்தில் ஒரு மாடி வீடு இருந்தது. கேற்றைத் திறந்து கொண்டு போனேன். ஒரு வயதான அம்மா வந்தார். மௌனி இருக்கிறார் என்று விசாரித்தேன். ‘உள்ளே வாங்க’ என்றார். மௌனி சிதம்பரத்தில் இருபத்தைந்து முப்பது வருடங்களுக்கு மேலாக இருக்கிறார் என்று நினைக்கின்றேன். அந்தச் சிறு நகரத்தில் அவரை, அவரது இருப்பிடத்தை அறிந்த ஒருவர் எனக்குச் சுலபத்தில் அகப்படவில்லை. மில் மணிஐயர் என்று விசாரித்திருந்தால் சில வேளை தெரிந்திருப்பார்கள் என்று பின்னர்தான் எனக்குத் தெரியவந்தது.”

மில் மணி ஐயர் என்பதை விட சிதம்பரத்தில் மௌனியை எல்லோரும் ரைஸ் மில் ஐயர் என்றே அறிவார்கள்.  அவர் அங்கே ரைஸ் மில் வைத்திருந்தார்.  அதை கவனித்துக் கொள்வதற்காகத்தான் கும்பகோணத்திலிருந்து சிதம்பரம் வந்து குடியேறினார். 

இனி நுஹ்மான்:

”எனினும் காதல் கொண்டான் அல்ல, காதல் கண்டான் என்றுதான் நான் எழுதுவேன் என்றார். மௌனி கதைகள் நூலில் சில பக்கங்களைப் புரட்டி அப்படிப்பட்ட சில இடங்களைக் காட்டினார். ‘பிரக்ஞை வெளியில்’ கதையை இப்படி முடிக்கிறர். “அப்பிடியாயின் ஒரு வகையில் காதல் கண்டபெண் கலியாணமாகாத கைம்பெண் என்ற அபத்தம்தானே?” காதல் சாலையின் முடிவையும் எடுத்துக் காட்டினார். அது இப்படி முடிகிறது. “நேருக்கு நேரே காதலைக் கண்டதே போறும், கண்டதன் கதிபோறும். கண்டவரின் கதிபோலும்”.

***

மௌனி தான் கையாளும் மொழியில் புதுவிதமான வாக்கிய அமைப்புகளைக் கையாண்டார்.  உதாரணம்:

”அவ்வேளைகளில் அவன் தவறாது மேற்குப் பார்த்த அந்த ஜன்னலின் முன் நிற்பான். சிலசமயம் அவன் பார்வையில் குறுக்காக அவளைக் கோவிலுக்குப் போகப் பார்க்க நேரிடுவதும் உண்டு”. (மனக்கோலம்)

மௌனியின் பதிப்பாளர் கி.அ. ச்ச்சிதான்ந்தம் சொல்கிறார்:

“(மௌனி) எழுதுவதற்கு நிரம்ப கால அவகாசம் எடுத்துக்கொள்வார். ஒவ்வொரு சொல்லையும் சுண்டிச் சுண்டிப் பார்ப்பார். ஒரு நாளைக்கு ஒரு வாக்கியத்தோடு நிறுத்திக் கொண்டதும் உண்டு. தமிழில் முதலில் வரவில்லை என்றால் ஆங்கிலத்தில் எழுதிவிடுவார். பின்னால் தமிழ்ப்படுத்துவார். ஒரு கதைக்கு இருபது டிராப்ட் கூடப் போட்டிருக்கார்.”

பின்வருவது மௌனி எழுதும் முறை பற்றி தர்மு சிவராமு சொல்வது:

”மௌனி எழுத உட்கார்ந்தால் கடுமையாக உழைப்பவர். பலமுறை திரும்பத் திரும்பத் திருத்தி எழுதுவார். ஏனெனில் பேனாவை எடுத்து எழுத உட்கார்ந்தால் அவர் தனது வேலையில் மிகத் தீவிரமான சிரத்தை கொள்பவர். ஏதோ ஒன்றை ஒருமுறை எழுதி, அத்துடன் அவர் திருப்தி அடைந்தார் என் ஒருமுறை கூட நிகழ்ந்ததில்லை. கடைசித்தேறி நெருங்கும் வரை, அது அனுமதிக்கும் வரை, பிரசுர கர்த்தரின் பொறுமை எல்லை கடந்து சோதிக்கப்படும் வரை திருத்தம் செய்துகொண்டே இருப்பார்.”

***

எங்கிருந்தோ வந்தான் என்ற கதையில் மௌனி:

‘‘…நடு இரவில் நான் விழித்துக் கொண்டேன். ஒருகால் நான் தூங்காமலேயே விழித்துத்தான் படுத்திருந்தேனோ என்னவோ? பக்கத்து அறையிலிருந்து, கேட்டதும் கேட்காததுமாக, அடித்தொண்டையிலிருந்து அவன் பாடிக்கொண்டிருந்தான்… பாட்டும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிட்டது. அது மறைந்த இடத்திற்கு என்னை இழுத்துச் சென்றதுபோலும்… என்னையே, என்னுடைய சவத்தையே நான் வெகு தூரத்திற்கப்பால் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். நானே உணர்ந்த என் இறப்பு, வருத்தம், ஆத்திரம், ஓர் அருவருப்பு, ஒருங்குகூடின… ஒரு கேலி நகைப்பு எங்கேயோ கேட்டது… மறுபடியும் என் சவத்தையே நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இறப்பு..? இறப்பு…? அடைய ஆவல் கொண்டு ஒரு ஸ்வரத்தை எட்டி எட்டிப்பிடிக்க மேலிருந்தும் கீழிருந்தும் முயலும் அவன் பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

ஒரு சோகமானகீதம் அவன் பாடிக் கொண்டிருந்தான். என் உணர்வை உயர்த்தி, கனவிற்கும் நினைவிற்கும் உள்ள நுண்ணிய எல்லைக்கோட்டைத் துடைக்கவல்ல அவனது கானம் சாதாரணமானதல்ல. ஆழித் தண்ணீரில் எல்லை பிரித்துக் கோடிட்டதுதானா நம் வாழ்க்கை..?அசைந்து அசைந்து மிதக்கும் தோணி (மனம்) எல்லை கடக்க அறியாது கடந்தது போலும்! கனவின் கரையைத் தாண்டி அவன் பாடிக் கொண்டிருப்பதைத் தான் நான் கேட்டுக் கொண்டிருந்தேன் போலும். நான் கனவு கண்டு கொண்டிருந்தேன் என்றால் எப்போது நான் விழிப்படைந்தேன்?’’

மனக்கோட்டை என்ற கதையில்:

‘‘…. மேற்கு அடிவானத்தில் மறையவிருக்கும் பிறைச்சந்திரன், அரையிருட்டைத்தான், அழகுடன் அளித்துக் கொண்டிருந்தது. ஆகாயத்தில் தெரிந்த எண்ணிலா நக்ஷத்திரங்கள், மொத்தமாக சிறு ஒளி கொடுக்க இருந்தன. ஸ்டேஷனில் இறங்கியவன், சிறிது நேரம் அப்பிராந்தியத்தைச் சுற்றி பார்வை கொண்டு நின்றிருந்தான். மங்கிய ஒளித்திரையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெரியும் அநேக மலைக் குன்றுகள், பல ரூபத்தில் பதிந்திருக்கக் கண்டான். தேவாசுர யுத்தத்தில், ஒருவருக்கொருவர் மலைகளைப் பிடுங்கி அடித்துக் கொண்டதில், சிதறித் தெறித்தனவென, ஆங்காங்கே தோன்றித் தெரிந்தனவே போலும். உயிரற்ற அவைகளுக்கு, எல்லையிலா கற்பனையில், ஜீவன் கொடுக்க, இச்சிறு ஒளிபோதும். மேலே வானத்தில் எண்ணிலா நக்ஷத்திரங்கள் தெரிவதும் கீழே பூமியில் கண்ணுக்கெட்டிய வரையில் ஆங்காங்கே தெளிக்கப்பட்டுத் தெரியும், சிறு குடிசைகளின் விளக்கொளியும் போதும் போலும். புதைவு கொண்ட அமைதி விட்டுவிட்டு, விம்முதலில் காணும் மௌனக் குமுறலின் ஓலமென எல்லாவற்றையும் பார்த்து, சிறிது நின்றிருந்தான்…’’

மௌனி பற்றி அவர் எப்போதும் காதல் தோல்வி கதைகளை மட்டுமே எழுதியிருக்கிறார் என்று காட்ட்டியில் ஒதுக்கி விட முடியாது போல என்று நினைக்கவும் அவருடைய இருபத்து நான்கு கதைகளில் இடம் இருக்கிறது.  அதனால்தானோ என்னவோ கடந்த ஐம்பது ஆண்டுகளாக அவர் கதைகளை நான் திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டிருக்கிறேனோ என்னவோ?  எனக்கு சரியாக அனுமானிக்க முடியவில்லை. 

மௌனி பற்றி தமிழ்மணி 1990இல் ஒரு அருமையான கட்டுரை எழுதியிருக்கிறார்.  அதன் இணைப்பு இது:

https://azhiyasudargal.blogspot.com/2008/09/blog-post_8076.html

”இருள், வானம், மரங்கள், மலைகள், வெப்பம், காற்று, வெயில், நிழல் போன்ற இயற்கையின் அம்சங்கள் மௌனியிடம் அலாதியாக உருக்கொள்கின்றன. இவற்றை உள்ளடக்கி மௌனி எழுதியிருக்கும் பகுதிகள் விசேஷ அழகுடன் திகழ்கின்றன. சூழ்நிலை உருவாக்கத்திற்காக மட்டுமல்லாது இந்த அம்சங்களை மௌனி வாழ்க்கைப் பற்றிய தன் தயக்கங்களின், தனது சோகங்களின் தீவிரத்தை வெளிப்படுத்தவும் பிரயோகிக்கிறார். விவரங்களின் தொகுப்பில் காணப்படும் நேர்த்தி மௌனியின் குரலை அழகாக வெளிப்படுத்தி விடுகிறது. உதாரணமாக மனக்கோட்டை என்ற அவரது கதையில் வரும் கீழ்க்காணும் பகுதியைப் பார்க்கலாம்.”

தமிழ்மணி சொல்லும் காட்சிதான் மனக்கோட்டை கதையில் மேலே கொடுக்கப்பட்ட மேற்கோள். 

தமிழ்மணியின் கட்டுரையில் இன்னொரு பகுதி:

”மௌனி வார்த்தைகளை மிகுந்த பொறுப்புணர்வுடனும் நேர்மையுடனும் உபயோகித்தவர். வார்த்தைகளின் பொருளுக்கும் அவற்றின் ஒலிக்கும் உள்ள இசைவை மௌனியைப் போல் வேறு எவரும் உணர்ந்து கையாண்டிருப்பதாகத் தெரியவில்லை. ‘‘இருட்டு’’, ‘‘இருள்’’ ஆகிய ஒரே பொருளைச் சுட்டும் இரு சொற்களைக்கூட அவற்றின் சக்தியுணர்ந்தே பிரயோகப்-படுத்துபவர். ‘இருட்டு’ என்ற சொல் யதார்த்தமான ஒரு சூழ்நிலையைக் குறிப்பதாகவும், ‘இருள்’ என்ற சொல்லின் பொருளும் அதன் ஒலியும் யதார்த்தமான ஒரு சூழ்நிலையைக் குறிப்பதுடன் வேறு பல பரிமாணங்களையும் கொண்டதாகவும் இருப்பதை அவரைப் போன்றே நம்மாலும் உணர முடியும்.”

மீண்டும் தமிழ்மணி:

”மௌனியின் கதைகள் வடிவச் சிறப்பு மிக்கவை. மொழி நடையைச் சிறப்பாகக் கையாள்வதுடன், தன் ஒவ்வொரு கதையிலும் மௌனி, அவற்றின் யதார்த்த தளத்திற்கும் உளவியல் தளத்திற்குமான இடையுறவை நுட்பமாகவும் லாவகமாகவும் ஏற்படுத்துகிறார். இதில் குறிப்பாக உளவியல் தளங்களில் திகழும் பகுதிகள் மிக உயர்ந்த அழகியல் நுட்பம் மிகுந்தவையாக உள்ளன. ஒவ்வொரு கதையிலும் உளவியல் மற்றும் யதார்த்த தளங்களின் தொகுப்பே கூட ஒருவிதத்தில் குறியீட்டுத் தன்மையுடன் துலங்குவதைக் காணலாம். நிதர்சனத்திற்கும், லட்சியத்திற்கும் உள்ள இடைவெளியைக் குறிப்பதாக இவை அமைந்துள்ளன. இவ்விரு தளங்களுக்கும் அவர் மாறி மாறி செல்வதும், இவை சேரும் பிரியும் இடங்கள் உறுத்தாதபடி கட்டமைக்கப்பட்டிருப்பதும், காணப்படும் முக்கியச் சிறப்புகள். இன்னும் சொல்லப்போனால் மௌனி கதைகள் தரும் அடிப்படை வாசக அனுபவத்தை அளிப்பவை இக்கூறுகளே! மேலும், குறியீடுகளென தோன்றும்படி அவர் யதார்த்தத்தின் பல கூறுகளை உருமாற்றம் செய்து விடுவதும், அதன் மூலம் ஸ்தூலத்திற்கும் அருவத்திற்கும் அவர் போடும் முடிச்சுகளும் மிக அழகானவை.

‘‘காலத்தைக் கையைப் பிடித்து நிறுத்தி கனிந்த காதலுடன் கட்டித் தழுவினாலும் அது நகர்ந்து சென்றுகொண்டேதான் இருக்கும்’’ என்று மௌனி கூறும்போது நம்மால் ஏற்க முடியாமற் போகாது. இன்னும், இவ்வாக்கியத்தின் கட்டமைப்பு ரீதியான இலக்கிய நயத்தைப் போலவே, அதன் பொருளில் காணப்படும் ஆழ்ந்த சோகத்தையும் நம்மால் உணர முடியும். மௌனியின் கதைகளில் இவ்வாறான சோகங்கள் நிறைய உள்ளன. மௌனி உணர்த்தும் சோகங்கள் நமக்கும், நம் சமூகத்திற்கும் பொதுவானவை.”

இதையெல்லாம் ஒருசேரப் பார்க்கும்போது என் மொழிக்கு நான் லா.ச.ரா.வைப் போலவே மௌனிக்கும் கடன்பட்டிருக்கிறேன் எனத் தோன்றுகிறது.

***

நண்பர்களே, இதுவரை சந்தா அனுப்பாதவர்கள் அனுப்பி வையுங்கள். குறைந்த பட்ச சந்தா 300 ரூ. அதற்கு மேலும் அனுப்பலாம். அது உங்கள் விருப்பத்தைப் பொருத்தது.

ஜீ.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்:  ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே தயக்கமின்றி அனுப்பலாம்.)

***

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

வங்கி விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. 

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai