16. சத்தியத்தின் திறவுகோல்

ஒரு முறை ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் வைத்து தெஹல்கா பத்திரிகையாளர் என்னிடம் ரேபிட் ஃபயர் பேட்டி எடுத்தார்.  முதல் கேள்வி. 

எழுத்து என்றால் என்ன? 

மது அருந்தாமல் நான் நிதானமாக இருக்கும்போது இப்படியெல்லாம் மடக்கினால் சுருண்டு விழுந்து விடுவேன்.  ஆனால் அந்தச் சமயம் பின்நவீனத்துவ சரஸ்வதி என் பக்கம் வந்து நின்று என் செவியில் மேஜிக் என்று ஓதினாள்.  நானும் ஒரு க்ஷணமும் யோசியாமல் மேஜிக் என்றேன்.

யோசித்துப் பார்த்தால் பி. சரஸ்வதி என் செவியில் ஓதியது சரிதான் எனத் தோன்றுகிறது.

இப்போதைய என் தொடருக்கு மிகப் பயங்கரமான ஒரு நீண்ட பதில் எழுதிக்கொண்டிருப்பதாக கொஞ்ச நேரம் முன்பு அராத்து ஃபோன் பண்ணி பயமுறுத்தினார்.  நான்தான் விவாதத்துக்கே வராத ஆள் ஆயிற்றே?  நான் தாலிபான் மாதிரி.   சொன்னதையேதான் சொல்லிக்கொண்டிருப்பேன்.  மொழியைத் தாண்டி வேறு எதுவும் இல்லை. 

இது பின்நவீனத்துவத்துக்கு எதிராயிற்றே?

அப்படியா?  அதிகார குண்டாந்தடியை எடுத்துக்கொண்டு வந்தால் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி விடுவதுதான் பின்நவீனத்துவம். 

நான் எங்கே அதிகாரத்தை எடுத்துக்கொண்டு வந்தேன்?  லா.ச.ரா.வும் மௌனியும்தானே பிராமண அழகியல் என்ற அதிகார குண்டாந்தடியோடு செத்தும் கெடுத்தான் சீதக்காதி என்று அலைகிறார்கள்?

அவரவர் காலத்தில் அவரவர் செய்தது கலகம்.  மொட்ஸார்ட்  கலகம்.  தியாகராஜர் கலகம்.  லா.ச.ரா., மௌனி, தி.ஜானகிராமன் எல்லாரும் கலகம்.  அட்லீஸ்ட், ஒரு கலகக்காரனான எனக்கு மொழி என்ற ஆயுதத்தைக் கூர் தீட்டித் தந்தார்கள் இல்லையா?  அது போதும்.

இன்னொன்றும் வலுவாகச் சொல்லி விடுகிறேன்.  நான் வைக்கும் விவாதங்கள் பலஹீனமானவைதான்.  அது எனக்கே தெரிகிறது.  ஆனால் நண்பர்களே, நான் சத்தியத்தின் பக்கம் நிற்கிறேன்.  சத்தியம் பலஹீனமாகத்தான் இருக்கும்.  உங்களுக்கு நியாயம் என்று தோன்றினால் இந்த சத்தியத்தின் திறவுகோலை எடுத்துக்கொள்ளுங்கள். 

நான் சொல்கிறேன், விலங்குகளையும் மனிதனையும் பிரிப்பது இந்த மொழிதானே ஐயா?  இன்றைய தினம் தமில் மஹாஜனங்களுக்கு எத்தனை வார்த்தைகள் தெரியும்?  இதை வாசிக்கும் நண்பர்களே, நான் சொல்வதற்குக் கோபித்துக் கொள்ளாமல் உங்கள் பிள்ளைகளிடம் ”எனக்கு ஒரு கடிதம் எழுது குழந்தாய்” என்று சொல்லிப் பாருங்கள்.  அன்புள்ள அப்பா அல்லது அன்புள்ள அம்மா எனத் தொடங்கி நாலே நாலு வாக்கியம் எழுதச் சொல்லுங்கள்.  எத்தனை குழந்தைகள், எத்தனை பிள்ளைகள் எழுதுகின்றன என்று எனக்கு எழுதுங்கள்.  என் மகனே எனக்கு ஆங்கிலத்தில்தானே எழுதுகிறான்?  அசோகமித்திரனின் பேத்தி அவரிடம் ஆங்கிலத்தில்தான் பேசிக்கொண்டிருந்தாள்.  மௌனியின் கொள்ளுப்பேத்தியும் என்னிடம் ஆங்கிலத்தில்தான் பேசுகிறாள்.  (என் பக்கத்துத் தெரு).  மணித் தாத்தா இத்தனை பெரிய எழுத்தாளரா என்று என்னிடம் ஆச்சரியத்துடன் கேட்டாள். 

அந்தச் சம்பவம் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?  மௌனியின் பேரன் என் நண்பர்.  அவரும் நானும் மௌனி பற்றிப் பேசிக்கொண்டிருப்போம்.  ஒருநாள் அவள் அதை கவனித்து “நீங்கள் மணித் தாத்தா பற்றியா பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்றாள்.  நான் அப்போது ஒரு பல்கலைக்கழகத்துக்கு அரசாங்கம் மௌனி பெயரைச் சூட்ட வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தேன்.  அப்போதுதான் அந்தக் கேள்வியைக் கேட்டாள்.  (ஏன் மைலாப்பூரிலேயே இருக்கிறீர்கள், ஏன் மைலாப்பூரிலேயே இருக்கிறீர்கள் என்று அசோகமித்திரனும் அராத்துவும் என்னை நூற்றுக்கணக்கான முறை கேட்டிருப்பார்கள்.  இம்மாதிரி அதிசயங்களெல்லாம் வேளச்சேரியில் நடக்காது.)

உன் தாத்தாதான் தமிழ்ச் சிறுகதையின் சூப்பர் ஸ்டார் என்றதும் ஆரவாரித்தாள்.  அன்றைய தினம்தான் அவளுக்கு மணித் தாத்தா ஒரு எழுத்தாளர் என்பதே தெரியும்.

எங்கே தொடங்கினேன்?  ஆங், எத்தனை குழந்தைகளுக்கு தமிழ் எழுதத் தெரிகிறது?  ஆனால் நான் ஸ்பானிஷ் கற்றுக் கொண்டபோது ஆறே மாதத்தில் என் ஊர் என்ற தலைப்பில் என்னை என் ஆசிரியர் சொந்தமாக ஒரு பத்து வாக்கியம் எழுத வைத்தார். 

சரி, ஆங்கிலத்துக்கு வருவோம்.  ஐ.டி.யில் பெரிய உத்தியோகத்தில் இருப்பார்கள்.  மாதம் நாலு லகரம் சம்பளம்.  உலகத்தையே சுற்றி வருவார்கள்.  அமெரிக்க ஆங்கிலம் பேசுவார்கள்.  ஆனால் ஓர்ஹான் பாமுக்கின் புத்தகத்தைக் கொடுத்தால் ஒரு பக்கம் பெயராது.  அவர்களுக்கு அது புரியாது.  அர்த்தத்தைச் சொல்லவில்லை.  நாவலைச் சொல்லவில்லை.  அதில் உள்ள வார்த்தைகளையே அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.  அவர்களின் உலகம் நூறே வார்த்தைகளால் ஆனது.  இதுதான் மராட்டியிலும்.  இதுதான் ஹிந்தியிலும்.  இதுதான் தெலுங்கிலும். 

இந்தச் சூழ்நிலையில் படித்து வரும் ஒரு தமிழ் இளைஞன் எழுத்தாளனாகவும் ஆகிறான் என்றால், அவன் சுந்தர ராமசாமி, பிறகு ஜெயமோகன் என்ற இரண்டு பேரைப் பிடித்துக்கொண்டு ஜல்லியடித்துக்கொண்டிருக்கிறான்.  ஒரு மாதிரியான ஜாங்கிரி மொழியைக் கற்றுக்கொண்டு சுற்றிச் சுற்றிப் பிழிந்துகொண்டே இருக்கிறார்கள். 

மொழியில் வலு இல்லாமல் எப்படி ஐயா எழுத வருகிறீர்கள்?  அராத்துவுக்கு மிக நன்றாக எழுதத் தெரியும்.  அவர் எழுதிய புனைவுகளை நான் வாசித்திருக்கிறேன்.  ஒரு பிழை இருக்காது.  அவர் வேண்டுமென்றேதான் அ-புனைவுகளில் கலாட்டா பண்ணிக்கொண்டிருக்கிறார். 

ஆகவே இப்போதைய என் கட்டுரைத் தொடரை இப்போது எழுத வரும் இளைஞர்கள் நன்கு பயிலுங்கள்.  இது ஒரு எழுத்துப் பயிற்சித் தொடர் என எடுத்துக்கொள்ளுங்கள்.  நம் மூதாதைகள் எப்படியெல்லாம் நிலத்தை உழுதிருக்கிறார்கள் என்று நான் கற்பித்து வருகிறேன்.  இதைப் பிடித்துக்கொண்டால் உங்களுக்கு நல்லது.  இல்லாவிட்டால் உங்கள் விருப்பம். 

மௌனியின் மனக்கோலம் மிகவும் சிலாகிக்கப்பட்ட கதை.  அந்தக் கதையின் தொடக்கம் இது:

”இரவு வெகுநேரம் கழிந்த பின்பு, சிறிது அயர்ந்தவன் ஒரு ஓலக்குரல் கேட்க, திடுக்கிட்டு விழித்தெழுந்தான். கடிகாரம் அப்போது இரண்டு மணிதான் அடித்தது.  கனவு என்பதாக எண்ணி, அவன் மனது நிம்மதி கொள்ளவில்லை.  சஞ்சலத்திலும், ஒரு நிகழ்ச்சி நேரப் போவதை எதிர்பார்த்தலிலும், நிசியைத் தாண்டி வெகுநேரம் நின்றிருந்தவனுக்குக் கொஞ்சம் அயர்வு தோன்றுகிறது.  சாமக்கோழி அப்போது இரண்டு தரம் கூவிவிட்டு நிசப்தமாகியது.” 

இந்தச் சம்பவத்தை நீங்கள் எப்படி எழுதுவீர்கள்? 

இரவு வெகுநேரம் கழிந்த பின்பு – கவிதை

சிறிது அயர்ந்தவன் – கவிதை

ஒரு ஓலக்குரல் கேட்க – கவிதை, கவிதை. 

இங்கே இலக்கணக் குண்டாந்தடிகள் ஓர் என்று போட வேண்டும் என்று சொல்லும்.  போடக் கூடாது.  லயம் போய் விடும்.  அதனால்தான் நான் எழுதும் எதையுமே பதிப்பகத்தின் பிழை திருத்துவோரிடம் கொடுப்பதில்லை.  என் எழுத்தில் யாரும் கையே வைக்க்க் கூடாது.  ஒரு எழுத்து மாறக் கூடாது.  குமுதத்தில் எழுதும் போதும் இப்படித்தான் நடக்கும்.  எனக்கு மட்டும் அந்தச் சலுகை.

கனவு என்பதாக எண்ணி, அவன் மனது நிம்மதி கொள்ளவில்லை.  – கவிதை, கவிதை. 

”கனவு என்று நினைத்து” என்று இன்றைய எழுத்தாளர்கள் எழுதுவார்கள். 

”மனது நிம்மதி கொள்ளவில்லை.”  மனம் என்று எழுதியிருந்தால் அது கவிதை இல்லை.  மனது, நிம்மதி – து, தி என்பதுதான் கவிதை. லயம். 

”நிசியைத் தாண்டி வெகுநேரம் நின்றிருந்தவனுக்கு” –  அந்தச் சம்பவத்தில் அவன் நின்றுகொண்டிருக்கவில்லை.  நடுநிசியில் விழித்து விட்டான்.  இன்னும் படுத்துக்கொண்டுதான் இருக்கிறான்.  ஆனால் நிசியைத் தாண்டி வெகுநேரம் நின்றிருந்தவன் என்று வருவது கவிதை.  இங்கே நானாக இருந்தால் நிசியைத் தாண்டி நெடுநேரம் நின்றிருந்தவன் என எழுதியிருப்பேன். 

அடுத்து, அயர்வு.  இப்போது என்றால் டயர்டாக இருந்தான் என எழுதுவார்கள்.  டல்லாக இருந்தான் என எழுதுவார்கள்.  இதுதான் தமிழை வன்கலவி செய்வது என்கிறேன். 

ஏன் இப்படி எழுதுகிறார்கள் என்றால், அயர்வு என்ற வார்த்தை அவர்களின் உலகில் இல்லை.  இல்லாவிட்டால் சோர்வு என்று எழுதுவார்கள்.  அங்கே கவிதையும் லயமும் இருக்காது.    

சாமக்கோழியை விட்டு விடுவோம்.  அது என்ன ப்ராய்லர் சிக்கனில் ஒரு வகையா என்று கேட்பார்கள்.  வேண்டாம். 

***

நண்பர்களே, இதுவரை சந்தா அனுப்பாதவர்கள் அனுப்பி வையுங்கள். குறைந்த பட்ச சந்தா 300 ரூ. அதற்கு மேலும் அனுப்பலாம். அது உங்கள் விருப்பத்தைப் பொருத்தது.

ஜீ.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்:  ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே தயக்கமின்றி அனுப்பலாம்.)

***

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

வங்கி விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. 

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai