சாரு – மௌனி – எஸ்.ரா – கவித்துவ ஸ்டாக்கிங்
சாரு மௌனி பற்றி எழுதியிருந்ததைப் படித்தேன். சூட்டோடு சூடாக மௌனி பற்றி எஸ்.ரா எழுதியிருந்ததையும் பகிர்ந்திருந்தார். இரண்டையும் அடுத்தடுத்து படித்ததும் குபுக் என சிரிப்பு வந்து விட்டது. இந்த இடத்தில் நான் குபீர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை என்பதை யாரேனும் 100 வருடம் கழித்து கண்டுபிடித்து இலக்கியக் கட்டுரை எழுதலாம் !
என்னடா இது சாருவே நமக்கு லட்டு லட்டாக மேட்டர் தருகிறாரே எனத் தோன்றியது.
மௌனியின் கதைகள் பெரும்பாலும் ஆட்டோ ஃபிக்ஷன் தான். ஆனால் அதில் ஆட்டோவும் இருக்காது , ஃபிக்ஷனும் இருக்காது என்று வையுங்கள். வாருங்கள் சாருவும் எஸ்.ராவும் வியந்து பாராட்டும் அழியாச்சுடர் கதைக்கு போகலாம்.
ஒரு 18 வயசு எளவட்டப்பய (அதான் மௌனி) கோயிலுக்கு போயிட்டு வெளில வரான். வெளில வர்ரப்ப 13 வயசு சின்னக்குட்டி ஒண்ணு கோயிலுக்குள்ள போவுது. இந்த பய, அதப்பாத்துட்டு பின்னாலேயே போறான். ரெண்டு பேருக்கும் நடுவுல தூரமும் ரொம்ப கம்மியாம். தொடக்கூடிய தூரத்துக்கு அடிக்கடி போனாராம்.மௌனியே சொல்றாரு. அந்தக்காலத்துல ஸ்டாக்கிங்க்னா யாருக்கும் தெரியாது. அது வேற சின்னக் குட்டி. அதுக்கு என்னா தெரியும்? அது சும்மா சீட்டிப் பாவாட கட்டிக்கிட்டு ஜாலியா வெளாடிகிட்டு கோயிலுக்கு வந்திருக்கும். அதுகிட்ட தலைவர், அதுக்கு மட்டும் கேக்கற மாதிரி என்னா சொன்னாராம் – “உனக்காக நான் எது செய்யவும் காத்திருக்கிறேன்; எதையும் செய்ய முடியும்”
அந்தச்சிறுமி கொழம்பிப்போய், அட பைத்தியக்காரப்பயலேன்ற மாதிரி பாத்துட்டு போயிடுது.
அடப்பாவிகளா… பச்ச மண்ணுய்யா அது. அதுங்கிட்ட போயி காலிப்பய மாதிரி என்னென்னா பேசறான் பாருங்க.
இதைத்தான் கவித்துவமான மொழியில் (விரிவாக நாளை) வளைச்சி வளைச்சி எழுதி வச்சிருக்காரு. நடு நடுவே கொஞ்சம் தத்துவம் மாதிரி பஞ்சாமிர்தம். சாரு இதைப்பாராட்டி இருந்ததைப் படிச்சிட்டு,
இதைப்படிச்சிட்டு எஸ்.ரா எழுதியிருந்ததுக்கு போனேன்.
எஸ்.ரா மொதல்ல இதே கதய படிச்சிட்டு, ஒரு மசிரும் இல்லன்னு தூக்கிப்போட்டுடறாரு.
அப்பறம் ஒரு நாள் எளவட்டப்பயலா இருக்குறப்ப, அதிகாலைல ஶ்ரீ வில்லிப்புத்தூர் கோயிலுக்கு போறாரு. அதிகாலை இருட்டுல, சாரி இருளுல ரெண்டு பொண்ணுங்க ஆண்டாள் பாசுரம் பாடிட்டு போறாங்க. நம்மாளு எஸ்.ரா வுக்கு அவங்க மூஞ்ச பாக்கணும்னு ஆச. இருட்ட அல்லது இருளத் திட்டறாரு.
அப்புறம் ஒரு வழியா ஃபாலோ பண்ணிகிட்டே போயி கோயில்ல மூஞ்ச பாத்துடறாரு. அப்பதான் தெரியிது அவங்க ரெண்டு பேரும் ஆத்தாளும் பொண்ணும்.
அந்தப்பொன்ணு, எவண்டா அவன் காலங்காத்தால பின்னாலயே வந்து நின்னுகிட்டு மொறச்சிகிட்டே இருக்கானு லைட்டா சிரிச்சிடுது.
அப்புறம் மௌனி கதைல வர்ர பொண்ணு மாதிரியே கோயிலுக்குள்ள போக, எஸ்.ரா வும் போக, அந்த கதைல வர்ர மாதிரியே இதுவும் சாமி கும்புட்டுட்டு வெளில போயிடுது. அம்புட்டுதான்.
இப்ப எஸ்.ரா வுக்கு மௌனி கத ஞாபகம் வந்து, ஆஹா அழியாச்சுடர் அற்புதம்னு தோண ஆரம்ப்பிச்சிடுது.
****
ரெண்டு பேரும் இளவயசுல சின்னப்பொண்ண சைட் அடிச்சிகிட்டே ஃபாலோ பண்ணிட்டு போயிருக்காங்க. அந்த பொண்ணுங்க கோயிலுக்குள்ள போயி சாமி கும்டுட்டு , அதுங்க வேலய பாத்துட்டு போயிடிச்சிங்க. நடுவுல எவண்டா இவன்னு பாத்திருக்காலாம். நக்கலா ஒரு சிரிப்பு கூட சிரிச்சி இருக்கலாம்.
இந்த சம்பவத்த வச்சிகிட்டு, அதக் கதை ஆக்கி, அதன் பின் அதை இலக்கிய உன்னதம்னு ஆக்கி விட்டுட்டாங்க.
அந்தக் காலத்துல 18 வயசுல பொண்ணுங்கள கோயில்ல மட்டும் தான் பாக்க முடியும். பீச், பார்க், பார், பப்பு லேது.
ஈக்குவல் வயசு பொண்ணை கரக்ட் பண்றது கஷ்டம்.
அதனால குட்டிப்பொண்ணுங்க மேல வர்ர கண நேர ஈர்ப்பை காவியக் காதல்னு நெனச்சிகிட்டாங்க போல.
கைய புடிக்கிறது, கட்டிப்புடிக்கிறது, கிஸ் அடிக்கிறது, எல்லாம் அந்தக்கால 18 வயசு வாலிபனுக்கு வாய்ப்பே இல்ல. அதனால கோயில்ல பாக்குற சின்னஞ்சிறுமிகள் மேல் கண நேர காதல் கொண்டு, அதிகாலை, ஈரத்தலை, யாளி அது இதுன்னு உருட்டி வச்சிருக்காங்க.
பி.கு: ஆனா அந்தக்காலத்துல யார் கிட்டயாவது மேட்டர் ஈஸி. காதல்தான் கஷ்டம்.
இந்த கவித்தமிழ், தத்துவம், அது இத எல்லாம் விரிவா அப்புறம் பாக்கலாம்.
நன்றி நணக்கம்.
இன்னொரு பி.கு : ஷேக்ஸ்பியர் காலத்தில் 12 வயசு பொண்ணை காதலிக்கிறது எல்லாம் கேஷுவல்னு சாரு சொல்லாகாது என சொல்லிக்கொண்டு… காதல் வேற ஸ்டாக்கிங் வேற , எந்த காலத்துலயும் என்பதையும் சொல்லிக்கொண்டு…
***
அராத்து நேற்று எழுதியிருந்த இந்தக் கருமத்தைப் படித்து விட்டு அவர் மீது இரக்கப்பட்டேன். முன்பாக இருந்தால் மம்மி ரிட்டர்ன்ஸ் என்று நூறு பக்கம் எழுதி அவருக்கும் எனக்கும் உள்ள நட்பையே காலி பண்ணியிருப்பேன். ஆனால் இப்போது எனக்குள் மௌனம் இறங்கி விட்டது. ஒருசில தியான முறைகளைக் கற்பித்தால் அராத்துவின் சிந்தனையோட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். எனக்கு இந்த வியாதி முப்பது வயது வரை இருந்தது. தி. ஜானகிராமனின் வீட்டில் வைத்து அவரிடம் “You are masturbating through your writings” என்றும், “You are a refined Balakumaran” என்றும் சொல்லி நான் ஒரு மடையன் என்று நிரூபித்தவன் நான். அப்படிச் சொன்னபோது எனக்கு வயது இருபத்தெட்டு. அராத்துவுக்கு இப்போது நாற்பத்தெட்டு. ஆனால் நானுமே ஒரு நாற்பத்தெட்டு வரை புதுமைப்பித்தன் ஒரு சாதியவாதி என்றே சொல்லி அவரைக் கூறு போட்டுக்கொண்டிருந்தேன். அராத்துதான் எனக்கு புதுமைப்பித்தனை நல்ல முறையில் அறிமுகம் செய்து வைத்தார். ஒரு நண்பர் அராத்துவுக்கு எழுதிய பின்னூட்டத்தில் மௌனியின் சாதியம் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.
அப்படிப் பார்த்தால் கடுமையான பெண்ணடிமைத்தனத்தை எழுதியிருக்கும் வள்ளுவரைத் தூக்கிப் போட்டு விடலாம். கறுப்பின மனிதர்களைக் கீழ்மைப்படுத்தியிருக்கும் ஷேக்ஸ்பியரைக் கொளுத்தி விடலாம். அவ்வளவு ஏன்? அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் என்று எழுதிய கம்பனையும் சேர்த்துக் கொளுத்தலாம். அப்படி நோக்கிய போது அவள் வயது ஆறு!
சமூகத்தில் நிலவும் இன்றைய மதிப்பீடுகளை வைத்து அப்போதைய இலக்கியத்தை மதிப்பிடுவது கடைந்தெடுத்த முட்டாள்தனம். அதைத்தான் மாவோ செய்தார். பெரியார் செய்தார். ருஷ்யக் கம்யூனிஸ்டுகளும் செய்தார்கள்.
பாரதிக்குப் பிறகு தமிழை நவீனப்படுத்தியவர் சாரு நிவேதிதா, புதுமைப்பித்தன் கூட அல்ல என்று இரண்டு பேர் சொல்லியிருக்கிறார்கள். போகன் சங்கரும், அராத்துவும். அப்படிப்பட்ட சாரு எழுதுவது குப்பை என்று இப்போதும் சில இளைஞர்கள் சொல்கிறார்கள். தவிர, பலரும் என்னைப் பைத்தியம் என்கிறார்கள்.
ஞானியும், பிச்சைக்காரனும், பைத்தியமும் தோற்றத்தில் ஒரே மாதிரிதான் இருப்பார்கள். நான் என்னை ஞானியாக உணர்கிறேன். சிலர் என்னைப் பைத்தியமாக நினைக்கிறார்கள். யாருக்கு நஷ்டம்? அராத்து எழுதுவது இலக்கியமே அல்ல, குப்பை என்றுதான் இன்றைய சக இலக்கியவாதிகளில் பலர் கருதுகிறார்கள். போங்கடா மயிரு என்று அதைப் புறங்கையால் ஒதுக்கித் தள்ளுகிறார் அராத்து.
ஆனால் அராத்துவும் லா.ச.ரா., மௌனி போன்ற பலரை அதே மாதிரிதான் மதிப்பீடு செய்கிறார்.
ஒரு காட்டருவியின் முன்னே நின்று கொண்டு மூத்திரம் அடிக்கும் ஒரு சிறுவன் இது சாக்கடை என்கிறான். அராத்து செய்வது அதே வேலையைத்தான்.
இதில் நான் என்ன விவாதிக்க முடியும்? இல்லை தம்பி, அது சாக்கடை அல்ல, காட்டருவி என்றா? அதை நான் எப்படி அவனுக்கு என் வாதத்திறமையால் நிரூபிக்க முடியும், சொல்லுங்கள்?
இருந்தாலும் ஏன் இதையெல்லாம் இப்படி வரிந்து வரிந்து எழுதுகிறேன் என்றால், உங்களில் சிலருக்கு இது பயன்படுமே என்றுதான். ஒரு வாசகி எழுதுகிறார், சாரு எழுதுவது நன்றாக இருக்கிறது, நீங்கள் (அராத்து) எழுதுவது சிந்திக்க வைக்கிறது என்று. நன்றாகச் சிந்தியுங்கள். சிந்தித்து உங்கள் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளுங்கள். தமிழ்நாடு பூராவும் இனி சிந்தனையாளர் ஜனத்தொகை பெருகப் போகிறது, கவனம்!
பெண்ணைப் பின் தொடர்ந்தார்களாம்! அதைக் கதையாக உருட்டி விட்டார்களாம்!
அதையேதான் நானும் சொல்கிறேன். கலைஞன் ஒரு பெண்ணை கண்கொண்டு பார்த்தாலே அதைக் காவியமாக்கி விடுவான். பின்னே என்ன? தன் காதலிக்காகத் தன் காதை அறுத்துக்கொடுத்தவனின் காதறுந்த ஓவியம் இன்று மகத்தான கலைப்படைப்பாக மிளிர்கிறது. ஆனால் ஒரு அரசியல் தலைவருக்காகவும் ஒரு சினிமாக்காரனுக்காகவும் தன் உடல் உறுப்பில் ஒன்றை அறுத்துக் கொடுப்பவன் பைத்தியக்காரன். இரண்டுக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரிகிறதா இல்லையா? சாமானியன் செய்தால் அது பைத்தியக்காரத்தனம். அதே பைத்தியக்காரத்தனத்தைத்தான் செய்தான் வான்காக் (வான்கோ இல்லையாம்.) பைத்தியக்காரன் செய்த ஒரு வேலையை ஒரு கலைஞன் செய்ததால் அது மகத்தான கலையாயிற்று!
சாதாரணமாக ஒரு பெண்ணைப் பார்த்து அவள் பின்னே தொடர்ந்து போவதைத்தான் ஒரு உலக மகா கதையாக மாற்றுகிறார் மௌனி. அதுதான் கலைஞனின் சிறப்பு. ”ஹிஹி, அது stalking” என்று பரிகசிப்பவனுக்கு கலைஞனுக்கும் பைத்தியக்காரனுக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்றே பொருள் கொள்ள வேண்டும்.
***
நண்பர்களே, இதுவரை சந்தா அனுப்பாதவர்கள் அனுப்பி வையுங்கள். குறைந்த பட்ச சந்தா 300 ரூ. அதற்கு மேலும் அனுப்பலாம். அது உங்கள் விருப்பத்தைப் பொருத்தது.
ஜீ.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566
பெயர்: ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே தயக்கமின்றி அனுப்பலாம்.)
***
வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:
வங்கி விவரம்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai