18. கலையும் வாழ்க்கையும்…

வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் யாரும் சந்தா/நன்கொடை அனுப்பவில்லை. ஒரே ஒரு நண்பரைத் தவிர. ஒருவேளை திருவண்ணாமலை பயிலரங்குக்கு அனுப்பியதால் மீண்டுமா என சோர்வடைந்து இருக்கலாம்.  எப்போது முடியுமோ அப்போது அனுப்பி வையுங்கள்.  ஒன்றை மட்டும் வலியுறுத்திச் சொல்லி விடுகிறேன்.  நீங்கள் எனக்கு அனுப்பும் பணம் என் பயணங்களுக்கு மட்டுமே பயன்படும்.  என் பயணங்களின் அத்தாட்சியாக நிலவு தேயாத தேசம் நூலும், சீலே பற்றி நான் எழுதியுள்ள ஆயிரக்கணக்கான பக்கங்களும் நிற்கின்றன.   

அந்த நண்பர் ரேஸர் பே மூலம் அனுப்பியுள்ளார்.  அதில் அவரது மின்னஞ்சல் முகவரி இல்லை.  பெயரும் விலாசமும் மட்டுமே இருந்தன.  அவர் பெயரைப் பார்த்தபோது எனக்குப் பழைய ஞாபகங்கள் விரிகின்றன.  பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு – நான் சின்மயா நகரில் வசித்தபோது என்னைச் சந்தித்தவர்.  முதல் சந்திப்பு வடபழனி நூறு அடி சாலையில் உள்ள ஒரு பப்பில்.  நண்பர் அளவாகக் குடிப்பவர் எனத் தெரிந்தது.  அடிக்கடியும் குடிக்க மாட்டார்.  அன்றைய இரவு செலவு பன்னிரண்டாயிரத்தையும் தாண்டியது கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.  நான் அப்போது ஏழெட்டு ரவுண்டுகள் டக்கீலாவாக இறக்கியிருந்தேன்.  செலவைப் பார்த்து நான் வருத்தமுற்றபோது அவர் “உங்களுக்காக எத்தனை வேண்டுமானாலும் செலவு செய்யலாம்” என்று அன்புடன் சொன்னார்.  ஆனால் அதற்குப் பிறகு அந்த பப்புக்கு செல்ல நான் அனுமதிக்கவில்லை. மாதம் ஒருமுறை சந்திப்போம்.  இரண்டு ஆண்டுகள் மிகவும் நெருங்கிப் பழகினோம்.  இனிமையான நண்பர். 

என் நண்பர் குழாமில் செல்வாதான் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். இத்தனைக்கும் பிராமணர். அதுவும் கும்மோணத்துக்காரர்.  ஆனால் பார்த்தாலோ பழகினாலோ பேசினாலோ தெரியாது.  சமீபத்தில் அவரை நான் போரூரில் அவரது விருந்தினர் விடுதியில் சந்தித்தபோது மேஜையில் பத்து விதமான காய்கனிகளை நறுக்கி வைத்திருந்தார்.  அவரே செய்தது.  கூடவே எனக்கு மிகவும் பிடித்த எலந்த வடை.  அவரிடம் உள்ள இன்னொரு இனிமை நான் காலை ஒன்பது மணிக்கு எழுந்த போது (முதல் நாள் இரவு பத்து மணிக்குத் தூங்கப் போனேன்.  முதல் முதலாக பதினோரு மணி நேரம் உறங்கியிருக்கிறேன்.  அத்தனை களைப்பு.) மேஜையில் அற்புத ருசி மிகுந்த கேழ்வரகு கூழும் உரித்த சின்ன வெங்காயமும் மோர் மிளகாயும் இருந்தன.  ஐந்து டம்ளர் குடித்தேன்.  போரூரில் இதெல்லாம் கிடைக்கிறது போல.  சீனியிடம் சொன்னால் மைலாப்பூரிலும் கிடைக்கிறது சாரு, அதற்கு நீங்கள் உங்கள் அறையை விட்டுக் கொஞ்சம் வெளியே வர வேண்டும் என்பார்.

உண்மைதான்.  என் வீட்டுக்கு அடுத்த கட்டிடத்தில் கோஸ்டல் டேஸ்ட் என்று ஒரு கேரள உணவு விடுதி உள்ளது.  முதல் மாடி.  நன்றாக இருக்கும்.  அதன் கீழே கார்கள் நிறுத்துமிடம். வந்து ஒரு இரண்டு ஆண்டுகள் இருக்கும்.  கார் நிறுத்திமிடத்தின் ஓரத்தில் ஒரு பழச்சாறு கடை.  அதுவும் உணவு விடுதியின் பகுதிதான்.  அந்தப் பழச்சாறு கடையில் ஈரானியத் தேநீரும் உண்டு.  நான் பொதுவாக தேநீர் அருந்துவதில்லை என்றாலும் ஈரான் தேநீர் பிடிக்கும்.  ஆனாலும் அங்கே குடித்ததில்லை.  மைலாப்பூரில் நான் வீட்டில் இருந்தால் மூன்று முறை காஃபிதான்.

சமீபத்தில்தான் அவந்திகா சொன்னாள், அந்தத் தேநீர் மற்றும் பழச்சாறு கடை இருபத்து நான்கு மணி நேரமும் திறந்திருக்குமாம்.  அடக் கடவுளே, அவந்திகா சொல்லாமல் இருந்திருந்தால் இது எனக்கு எப்போதுமே தெரிந்திராது.

ஒருமுறை அவந்திகா மும்பை சென்றிருந்தபோது வீட்டில் என்னைச் சந்திக்க சீனி வந்திருந்தார்.  மாலை நேரம் என்பதால் காஃபி குடிக்க வேண்டும்.  சீனியும் காஃபி குடிப்பார்.  வீட்டில் பால் இல்லை.  தீர்ந்து விட்டது போல.  அவந்திகா இருந்தால் பால் இல்லை என்ற பேச்சே இல்லை.  எல்லாம் பக்காவாக இருக்கும்.  கீழே இறங்கிப் போய் வாட்ச்மேனிடம் பால் வாங்கித் தர முடியுமா என்று கேட்டேன்.  ஸ்விக்கியில் போட்டால் வர நேரம் ஆகும்.  வாட்ச்மேனுக்கு முழுமையாகவே காது கேட்காது.  அதனால் சத்தமாகவே சொன்னேன். 

“சாரி சார், செக்யூரிட்டி வேறு யாரும் இல்லை” என்று அன்புடன் மறுத்து விட்டார்.  பொதுவாக இரண்டு பேர் இருப்பார்கள்.

வந்து வருத்தத்துடன் சீனியிடம் சொன்னேன்.  இதோ நான் வாங்கி வருகிறேன் என்று கீழே இறங்கியவர் ரெண்டே நிமிடத்தில் பாலோடு வந்தார். 

ஆச்சரியத்துடன் எங்கே வாங்கினீர்கள் என்று கேட்டேன்.  கீழே உள்ள மளிகைக்கடையில்தான் என்றார்.  வீட்டுக்கு வலது புறம் அடுத்த கட்டிடம் மளிகைக்கடைதான்.  ரொம்பச் சிறிய மளிகைக்கடை.  இடது புறம்தான் கோஸ்டல் டேஸ்ட்.  அப்போதுதான் எனக்குத் தெரிந்தது, ரொம்பச் சிறிய மளிகைக்கடைகளில் கூட பால் பாக்கெட்டுகள் கிடைக்கும் என்பது. 

பிறகு வாட்ச்மேனிடம் கேட்டேன்.  என்னங்க இது, இதோ பக்கத்தில்தானே இருக்கிறது கடை என்று.

அவர் பாலை மாவு என்று நினைத்து விட்டாராம்.  மாவு கடை ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.  அதை விடுங்கள்.  இந்த வீட்டில் நான் ஏழு ஆண்டுகளாக இருக்கிறேன்.  வீட்டுக்குக் கீழே இருக்கும் மளிகைக்கடையில் பால் கிடைக்கும் என்பது தெரியாமல் அவந்திகா இல்லாத மூன்று மாதங்களும் சிரமப்பட்டிருக்கிறேன். பால் இல்லாவிட்டால் ஸ்விக்கியில் ஆர்டர் கொடுப்பேன்.  இருபது ரூபாய் பாலுக்கு அவன் நூறு ரூபாய் எடுத்துக் கொள்வான்.  சில சமயங்களில் காஃபியையே ஆர்டர் பண்ணி குடித்திருக்கிறேன்.

வீட்டுக்குக் கீழே பால் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள, அவந்திகா மும்பை சென்று, அந்த சைக்கிள் ’இடைவெளி’யில் சீனி என் வீட்டுக்கு வந்து சொல்ல வேண்டியிருக்கிறது.

சரி, விஷயத்துக்கு வருவோம்.  பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அந்த இனிமையான நண்பர் குடும்பத்தோடு அமெரிக்கா சென்றார்.  அதோடு தொடர்பே அறுந்து விட்டது.  மின்னஞ்சல் முகவரியும் தெரியாது.  ஃபோனில் தொடர்பு கொண்டால் பதில் இல்லை.  மிகவும் நெருங்கிப் பழகி விட்டு இப்படிக் காணாமல் போனால் கொஞ்சம் வருத்தம் ததும்புகிறது. 

அந்த நண்பரின் பெயரும் இப்போது பணம் அனுப்பியரின் பெயரும் ஒன்றாக உள்ளது.  அதனால் இதெல்லாம் ஞாபகம் வந்தது.

வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் இதை வாசிப்பதற்கான நன்கொடையை வழங்கி உதவுங்கள்.

மற்றொரு விஷயம்.  திருவண்ணாமலை உலக சினிமா பயிலரங்குக்கு நான் எதிர்பார்க்காத அளவில் இருநூறு பேர் வந்திருந்து அந்த நிகழ்வை மிகப் பெரிய வெற்றியாக மாற்றினார்கள்.  ஆனால் அந்த ஒளிப்பதிவை விற்க முயன்றால், ஒன்றிரண்டு பேரைத் தவிர வேறு யாரும் ஈடுபாடு காண்பிக்கவில்லை.  1978இலிருந்து தொடங்கி இன்று வரை – சரியாக 46 ஆண்டுகள் உலக சினிமாவைப் பயின்று கொண்டிருக்கிறேன், அந்த அனுவத்தையெல்லாம் ஏழு மணி நேரம் பேசியிருக்கிறேன், மிக முக்கியமான உலகத் திரைப்படங்களிலிருந்து மிக முக்கியமான காட்சிகளை எடுத்துக் காண்பித்திருக்கிறேன், எல்லாம் அந்த ஒளிப்பதிவில் இருக்கின்றன – ஆனால் அதை வாங்க யாரும் முன்வரவில்லை என்பது அதிசயமாக இருக்கிறது.  அந்தப் பயிலரங்கின் ஒளிப்பதிவைக் காண விருப்பமுள்ளவர்கள் 2000 ரூ. கட்டணம் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம்.  வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு 50 டாலர்.  பணம் அனுப்புவதற்கான விவரம் இக்கட்டுரையின் இறுதியில் தந்திருக்கிறேன்.  எனக்கு எழுதுவதாக இருந்தால்,

charu.nivedita.india@gmail.com

மேலே குறிப்பிட்டேன், நீங்கள் அனுப்பும் பணம் என் பயணங்களுக்கு உதவுகிறது என்று.  இதில் சில கசப்பான கதைகள் இருப்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.  2000இன் குளிர்காலத்தில் நான் ஃப்ரான்ஸ் சென்றிருந்த போது ஸீரோ டிகிரி செல்ஷியஸில் எனக்கு வேர்த்துக் கொட்டியதைப் பார்த்து ஃப்ரெஞ்சுக்காரர்களெல்லாம் விழி பிதுங்கிப் பார்த்தார்கள்.  உணவு விடுதியில் அமர்ந்திருந்தால் நெற்றியிலிருந்து வியர்வை ஓடும்.  எங்கோ அமர்ந்திருப்பவர்களெல்லாம் என் அருகில் வந்து வேறு எங்கோ பார்ப்பது போல் என்னைப் பார்த்து விட்டுப் போவார்கள்.  என் நண்பர்கள் எனக்கு உடல் கோளாறு என்று சந்தேகப்பட்டார்கள்.  அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.  அதிலும் எனக்கு ஒரு சமயத்தில் உடலின் ஒரு பாதியில்தான் வியர்க்கும்.  ஒரு மணி நேரம் சென்று அடுத்த பகுதியில் வியர்த்துக்கொட்டும்.  இப்படி மாறி மாறி நடக்கும்.

இலங்கையில் ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது கடை முதலாளியே பதறியடித்து என்னிடம் வந்து ”ஏதும் பிரச்சினையா?” என்று கவலையுடன் விசாரித்தார்.  அப்படி வியர்த்துக் கொட்டியது.  குளித்து விட்டு வந்தது போல் வியர்த்தது.   என்னைப் பார்த்தால் மழையில் நனைந்தவன் போல் இருந்தது.   

இதன் காரணமாகத்தான் கனடா எனக்கு ஒரு கனவு தேசமாகவே இருந்து வருகிறது.  கனடாவும், அலாஸ்காவும்.  அந்தப் பனியில் கொஞ்ச நாட்களாவது வாழ வேண்டும்.  2000இல் கனடாவில் வசிக்கும் என் நண்பர் எனக்கு ஒரு அழைப்பு அனுப்பியிருந்தார்.  அதை கனடா தூதரகத்தில் குப்பையில் கடாசி விட்டார்கள். அவரே அகதி.  என்னையும் அப்படி நினைத்து விட்டார்கள்.  ஒரு அமைப்பிலிருந்து வரும் முறையான அழைப்பையே அவர்கள் ஏற்கிறார்கள். 

கனடாவில் ஏழெட்டு இலக்கிய அமைப்புகள் உள்ளன.  இங்கே தமிழ்நாட்டில் உள்ள ஐம்பது வயதுக்கு மேற்பட்ட எழுத்தாளர்கள் யாவரும் கனடாவுக்குப் பலமுறை சென்று வந்து விட்டார்கள். எனக்கோ எழுபது வயது ஆகிறது.  இன்னும் ஒருமுறை கூட அந்த அமைப்புகளிலிருந்து அழைப்பு வரவில்லை.  இத்தனைக்கும் என்னுடைய நீண்ட நாள் நண்பரான அ. முத்துலிங்கமெல்லாம் அந்த அமைப்பில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். 

இனிமேல் அந்தத் தமிழ் அமைப்புகளிலிருந்து அழைப்பு வந்தால் தீர்மானமாக மறுத்து விடுவது என்று இருக்கிறேன்.

ஏனென்றால், அசோகமித்திரன் சொன்னதுதான்.  ஒருநாள் அவரிடம் சொன்னேன், சார், உங்களை நான் ஞானபீடப் பரிசுக்கு சிபாரிசு செய்திருக்கிறேன் என்று.  அப்போது அவருக்கு எழுபது வயது இருக்கும்.  “ஐயோ ரவி, அதெல்லாம் தொண்ணூறு வயதுக்கு மேல் நடை தளர்ந்து, மூளை செயலிழந்து, நமக்கு நம்முடைய பெயரே மறந்து போன பிறகல்லவா கொடுப்பார்கள்?” என்றார். 

ஐம்பது வயது எழுத்தாளர்களெல்லாம் இதோடு ஏழெட்டு முறை கனடா போய் வந்திருக்கும் நிலையில் என்னுடைய எழுபது வயதுக்கு மேல் கனடாவிலிருந்து அழைப்பு வந்து என்ன பயன்?

சென்ற ஆண்டு ஜப்பான் சென்ற போது தோக்யோவில் உள்ள பெரிய பார்க்குக்கு செந்தில் என்னை அழைத்துச் சென்றார்.  கிட்டத்தட்ட கால்வாசி சென்னை இருக்கும் அந்த பார்க்.  என்னால் நடக்க முடியவில்லை.  வெளியே போய் விடலாம் என்று சொல்லி விட்டேன்.  ஆனால் வெளியே செல்வதற்கே இரண்டு கிலோமீட்டர் நடக்க வேண்டியிருந்தது.  ஜப்பானுக்கு நான் பத்து ஆண்டுகள் முன்னால் சென்றிருக்க வேண்டும், தாமதமாகி விட்டது என்று நினைத்துக்கொண்டேன். 

அமெரிக்காவும் அப்படித்தான்.  நான்கு முறை வீசா மறுக்கப்பட்டது எனக்கு.  நான்கு முறையுமே முறையான அழைப்பு இல்லை.  எல்லாம் என் நண்பர்களின் தனிப்பட்ட அழைப்பு.  அம்மாதிரி அழைப்புகளை தூதரங்கள் மதிப்பதில்லை. 

போயும் போயும் ஜெர்மன் விசா கூட மறுக்கப்பட்டது.  பெர்லின் போய் அங்கிருந்து காரிலேயே கிழக்கு ஐரோப்பிய நாடுகளைப் பார்க்கலாம் என்று திட்டமிட்டிருந்தேன்.  பெர்லின் நண்பர் தமிழ் என்றாலும் ஜெர்மானியக் குடியுரிமை பெற்றிருப்பவர்.  அவருடைய அழைப்பையே ஜெர்மன் தூதரகம் மறுத்து விட்டது.  

இதேபோல் யு.கே. வீசாவும் மறுக்கப்பட்டது.

எல்லாமே முறையான அழைப்பு இல்லாததால்.  அதனால்தான் நானே பணம் சேர்த்து (உங்கள் பணம்தான்) ஒவ்வொரு தேசமாகப் போய்க்கொண்டிருக்கிறேன்.

இப்போது கூட செப்டம்பர் மாதம் தாய்லாந்து போக வேண்டும்.  ஆனால் அங்கே போகும்போது பாங்காக்கில் உள்ள தமிழ்ச் சங்க நண்பர்களைச் சந்திக்க மாட்டேன்.  ஏனென்றால், நான் செல்வது என்னுடைய நண்பரின் செலவில்.  என்னைச் சந்திக்க வேண்டும் என்றால், தமிழ்ச் சங்க நண்பர்கள் செலவு செய்ய வேண்டும்.  இல்லாவிட்டால், நான் தாய்லாந்து போக வர ஆகும் ஒரு லட்சம் ரூபாயை அந்தத் தமிழ்ச் சங்க நண்பர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். 

இதேதான் அமெரிக்காவுக்கும்.  நான் என்னுடைய நண்பர்களின் காசில் அமெரிக்கா வருவேன்.  ஆனால் அமெரிக்காவில் வசிக்கும் என் வாசகர்கள் என்னை ஓசியில் சந்திப்பார்களா?  என்னய்யா விளையாட்டு இது? முடியாது.  என் நண்பர்கள் செலவில் நான் அமெரிக்கா வந்தால் என் சந்திப்புக்கு ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் நூறு டாலர் கொடுக்க வேண்டியிருக்கும்.  இல்லாவிட்டால் என் நெருங்கிய நண்பர்களையும், அமெரிக்காவில் நான் பார்க்க வேண்டிய இடங்களையும் பார்த்து விட்டுத் திரும்பி விடுவேன்.  ஆனால் அமெரிக்கா வருவதற்கான சாத்தியம் தொலைதூரத்தில் கூட தெரியவில்லை. 

இந்த ஆண்டு இறுதிக்குள் சீலே, கொலம்பியா பயணம் உண்டு.  அமெரிக்க வீசா இருந்தால் தென்னமெரிக்காவிலும், மத்திய அமெரிக்காவிலும் சுமார் இருபது நாடுகளுக்கு வீசா இல்லாமல் செல்லலாம்.    

***

இப்போது நானும் அராத்துவும் சம்வாதம் செய்து கொள்வதைப் பார்த்து, உண்மையிலேயே முட்டிக்கொள்ளப் போகிறது என்றும், ரெண்டு பேரும் சொல்லி வைத்துக்கொண்டு ஆடுகிறார்கள் என்றும் இரண்டு விதமான அபிப்பிராயங்கள் நிலவுகின்றன.  உண்மையில் இந்த விவாதம் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக மாதம் இரண்டு மூன்று இரவுகள் வீதம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.  மாலை ஏழுக்கு ஆரம்பித்தால் காலை ஐந்து மணி வரை ஓடும்.  மாதம் மூன்று முறை வீதம் பதினைந்து ஆண்டுகளுக்குக் கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள். 

இதனால் பலன் உண்டா என்றால் உண்டு.  அது பற்றி அராத்துவும் செல்வாவும்தான் எழுத வேண்டும். 

ஆனால் தமிழின் முன்னோடிகள் பற்றிப் பேச்சு வந்தால், அராத்து ஒருமணி நேரம் பேசுவார்.  சமயத்தில் ஒன்றரை மணி நேரம்.  நானோ பேச்சில் விவாதிக்கத் தெரியாதவன்.  லேசான போதை வேறு.  தூக்கம் வருகிறது என்று சொல்லிவிட்டுத் தப்பி ஓடி விடுவேன்.  இறை சக்தி இருக்கிறது என்று என்னால் பேச்சினால் நிரூபிக்க இயலாது.  ஆனால் எழுத்தில் முடியும்.  எழுத்து என் இடம்.  எழுத்து என் விளையாட்டு.  அதில் என்னால் அடித்து ஆட முடியும்.  அதைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன்.  அதைத்தான் பார்த்து சிலர் இப்படியெல்லாம் அபிப்பிராயம் கொள்கிறார்கள்.  நல்லதுதான்.

இப்போது ஃபேஸ்புக்கில் அராத்து பின்வருமாறு எழுதியிருக்கிறார். 

கலைஞனும் பைத்தியக்காரனும் – சாருவுக்கு பதில்

சாரு, உங்கள் எழுத்தைக் குப்பை என்றும், மலம் என்றும் உங்களை போர்னோ ரைட்டர் என்றும் இலக்கிய உலகம் சொல்லிக்கொண்டு இருந்தபோது, உங்களை நிறுவுவதற்கு நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கின்ற உங்கள் முன்னோடிகள் யாரும் உதவவில்லை.

வெளிநாட்டு எழுத்தாளர்களைச் சொல்லித்தான், அவர்கள் எழுத்தைக் காட்டித்தான் உங்களை நிறுவிக்கொள்ள வேண்டியிருந்தது. இதைக்கூட நான் சொல்லவில்லை. என்னிடம் பேசிக்கொண்டிருந்த போது செல்வா சொன்னது.

உங்கள் பதில் விவாதங்கள் இப்போது  யூ டர்ன் அடித்து தனி டிராக்கில் போய்க்கொண்டு இருக்கிறது.

அடுத்து, கலைஞன், பைத்தியக்காரன் என தலைப்பிட்டு வான்காகை உதாரணம் காட்டியிருக்கிறீர்கள்.

இங்கே நவீன  தமிழிலக்கியத்தில் அப்படி எல்லாம் யாரும் மேட்நெஸ்ஸில் எழுதுவதில்லை. நல்ல நினைவுடன், திட்டமிடலுடன் ஆனால் பைத்தியக்காரத்தனமாக எழுதுகிறார்கள் என்பேன். வாசிப்பவர்களுக்கு அது ஒரு மேட்நெஸ் என்ற தோற்ற மயக்கம் ஏற்படலாம்.

மௌனி இருபத்தைந்து முறை கூட அடித்துத் திருத்தி தன் பிரதியை மேம்படுத்துவார் என நீங்கள் உட்பட பலரும் எழுதிருக்கிறார்கள். இதில் எங்கே கலையும் மேட்நெஸ்ஸும் வருகிறது. ஒரு அக்கவுண்டண்ட் குமாஸ்தா திரும்பத் திரும்ப கணக்குப் பார்த்து கிரெடிட் டெபிட் சரி செய்து டேலி சமன் செய்வதற்கும் இதற்கும் என்ன பெரிய வித்தியாசம் ? (திருத்தல் என்னுடையது – சாரு)

வான்காக் மாதிரி காதை எல்லாம் அறுத்துகொடுக்க வேண்டாம். தாங்கள் பின்தொடரும் பெண்ணின் காதை அறுக்காமல் இருந்தால் போதும்.

இங்கே இருக்கும் எழுத்தாளர்களுக்கு என்ன மேட்நெஸ் இருக்கிறது? நீங்கள் எதைக் கண்டுகொண்டீர்கள் என்றே தெரியவில்லை.

நன்கு டை அடித்து வெள்ளையும் சொள்ளையுமாய், கஞ்சி போட்ட  ஜிப்பாவோடு அல்லது டெரிகாட்டன் பேண்ட் போட்டு இன் செய்து கொண்டு, க்ளீன் ஷேவ் செய்து கொண்டு ஃபேர் அண்ட் லவ்லி மற்றும் கோகுல் சாண்டல் டால்கம் பவுடர் அடித்துக்கொண்டு சுற்றுகிறார்கள். இவர்களிடமா மேட்நெஸ் இருக்கிறது என்கிறீர்கள்? நல்ல காலம், துரை முருகன் போல லிப்ஸ்டிக் போட்டுக்கொள்வதில்லை.

இல்லை, இல்லை, அவர்கள் கலையில், எழுத்தில் மேட்நெஸ் இருக்கிறது என்று சொல்லாதீர்கள். இங்கே இருக்கும் பெரும்பாலானவர்கள் அடித்து அடித்து திருத்தித் திருத்தி எழுதுபவர்கள்தான்.

“It is not purely art; it is managed art. There is no element of madness in this type of art-making.”

***

அராத்து இங்கே சொல்வது சரிதான்.  இது பற்றி யோசிக்கும்போது எனக்கு சில திரைப்படங்கள் ஞாபகம் வருகின்றன.

இப்போதைக்கு லா.ச.ரா., மௌனி ஆகிய இருவரையும் நிறுத்தி வைத்து விட்டு சில திரைப்படங்களை எட்டிப் பார்த்துவிட்டு மீண்டும் இருவருக்கும் வருவோம்.

Reinhard Hauff இயக்கிய Slow Attack (1980) படத்தில் ஒரு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நிக் எட்டு ஆண்டு சிறைத்தண்டனைக்குப் பிறகு வெளியே வருகிறான்.  அவன் தன் அனுபவங்களை நாவலாக எழுதுகிறான்.  இந்தப் படத்தில் நடிப்பதற்காக ரெய்னார்ட் ஹாஃப் கிராமத்திலிருந்து ஒரு சிறுவனை அழைத்து வருகிறார்.  இந்தப் படத்தில் நடித்த பிறகு கிராமத்துச் சிறுவனால் தன் கிராமத்துக்குத் திரும்ப முடியவில்லை.  கிராம்ம் அவனைப் பழையபடி பார்க்க மறுக்கிறது.  இப்போது அவன் ஒரு சினிமா நடிகன்.  ஆனால் அவனால் நகரத்திலும் ஒட்ட முடியவில்லை.  ரெய்னார்ட் ஹாஃபை நேரில் சந்தித்துப் புலம்புகிறான்.  என் வாழ்வை நாசமாக்கி விட்டீர்களே என்று கோபப்படுகிறான்.  ஒருநாள் தன்னுடைய படம் ஓடும் தியேட்டரில் கையெறி குண்டை வீசுகிறான்.  ஒரு தெருவில் வரிசையாகக் கார்கள் நிற்கின்றன.  ஐம்பது நூறு கார் இருக்கும். 

இளைஞன் (இப்போது அவன் பதின்பருவத்தின் முடிவில் இருக்கிறான்) தன் பாக்கெட்டில் வைத்திருக்கும் ஒரு கத்தியை எடுத்து வரிசையாக அந்தக் கார்களில் கீறிக்கொண்டே போகிறான். 

1980இல் இந்தப் படத்தைப் பார்த்தேன்.  நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஆகியும் அதில் இடம் பெற்ற இது போன்ற பல காட்சிகள் எனக்குத் துல்லியமாக ஞாபகம் இருக்கின்றன. 

இளைஞனின் இப்போதைய கதையைக் கேட்ட ரெய்னார்ட் ஹாஃப் அதையும் ஒரு திரைப்படமாக்கினார்.  அதில்தான் இந்தக் காட்சிகள் இடம் பெறுகின்றன. 

நான் எழுத்துக்காக பிரேதங்களின் மீது நடந்து செல்கிறேன் என்று அடிக்கடி சொல்வது வழக்கம் இல்லையா?  ரெய்னார்ட் ஹாஃப் செய்ததும் அதுதான்.  தன்னுடைய கலைக்காக ஒரு கலைஞன் தன்னையும், தன் வாழ்க்கையையும், சமயங்களில் மற்றவர் வாழ்க்கையையும் பலி கொடுக்கிறான்.

உலகப் பிரசித்தி பெற்றிருக்கும் வெர்னர் ஹெர்ஸாக் அவருடைய படங்களில் தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்த க்ளாஸ் கின்ஸ்கி ஃபிட்ஸரால்தோ படத்தின் படப்பிடிப்பின்போது ஒருநாள் படப்பிடிப்புக்கு வர முடியாது என்று மறுத்த போது கின்ஸ்கியின் நெற்றியில் தன் கைத்துப்பாக்கியை வைத்து “வராவிட்டால் சுட்டு விடுவேன்” என்று மிரட்டிய வரலாற்றை எல்லோரும் அறிவோம்.

நேற்று நான் பெர்த்தோலுச்சி இயக்கிய தெ ட்ரீமர்ஸ் (2003) என்ற படத்தைப் பார்த்தேன். (Mubi).  செக்ஸைக் கையாண்ட திரைப்படங்கள் என என் ஞாபகத்தில் இருப்பவை:

பெர்த்தோலுச்சியின் லாஸ்ட் டாங்கோ இன் பாரிஸ் (1972).

பஸோலினியின் Salò, or the 120 Days of Sodom (1975).

Christophe Honoré  இயக்கிய ஜார்ஜ் பத்தாயின் நாவலான Ma Mère (2004).

கேதரீன் ப்ரேயா (Catherine Breillat) இயக்கிய அனைத்து படங்களும்.

ரியூ முராகாமி இயக்கிய அனைத்து படங்களும். 

இவை எல்லாவற்றிலும் சிறந்ததாக தெ ட்ரீமர்ஸ் படத்தைச் சொல்லலாம். 

இப்போது நாம் மேற்கண்ட படங்கள் அனைத்தையும் ஒரு ஆய்வுக்கு உட்படுத்தி விட்டு மீண்டும் லா.ச.ரா., மௌனிக்கு வருவோம்.  இன்னும் சில கட்டுரைகள் இந்தப் படங்களைப் பற்றி.

எல்லாம் அராத்துவுக்கு ஆதரவான பதிவுகள்.  கொஞ்ச நாளைக்கு அனார்க்கிஸ்டுகளின் பயமின்றி நிம்மதியாக இருக்கலாம்.     

***

நண்பர்களே, இதுவரை சந்தா அனுப்பாதவர்கள் அனுப்பி வையுங்கள். குறைந்த பட்ச சந்தா 300 ரூ. அதற்கு மேலும் அனுப்பலாம். அது உங்கள் விருப்பத்தைப் பொருத்தது.

ஜீ.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்:  ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே தயக்கமின்றி அனுப்பலாம்.)

***

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

வங்கி விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. 

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai