இன்று ஆசிரியர் தினம் என்று தெரிந்தது பல வாசகர்கள் எனக்கு ஆசிரியர் தின வணக்கம் அனுப்பியதால். இல்லாவிட்டால் இன்று ஆசிரியர் தினம் என்றே எனக்குத் தெரிந்திராது. பிறகு ஆசிரியர் தினம் என்றால் என்ன, இன்று ஏன் ஆசிரியர் தினம் என்று பார்த்தேன். சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் நினைவாக இன்று ஆசிரியர் தினமாம். நான் இளம் வயதில் தத்துவம் பயின்ற போது ராதாகிருஷ்ணனைப் படித்து அவரை நிராகரித்திருக்கிறேன். இந்தியாவின் இருபதாம் நூற்றாண்டுப் பிரமுகர்களில் எனக்கு அம்பேத்கரைத் தவிர வேறு எவரையுமே பிடிக்கவில்லை. காந்தி மீது மரியாதை உண்டு. ஆனால் அம்பேத்கர் மீது மட்டுமே எனக்கு இண்டெலக்சுவலான ஈர்ப்பு இருந்து வந்தது. அதற்குமே சமூகவியல் சார்ந்த காரணங்கள்தானே தவிர தத்துவரீதியாக ஈர்த்தவர்கள் சமகாலத்தில் இந்தியாவில் யாருமே இல்லை என்றுதான் சொல்வேன்.
ஆனால் ஒரு காலத்தில் உலகத்துக்கே தத்துவத்தை போதித்த நிலமாக இருந்தது இந்த தேசம். விதவிதமான தத்துவப் பள்ளிகளும் சிந்தனைப் பிரிவுகளும் இங்கே இருந்தன. சாக்ரடீஸுக்கே தத்துவம் பயிற்றுவித்த பிராமணர்கள் இங்கே இருந்தார்கள். (2500 ஆண்டுகளுக்கு முந்தைய பிராமணருக்கு அர்த்தம் வேறு.) ஆதி சங்கரர் எனக்கு ஆகப் பிடித்த தத்துவ ஞானி. ஆகப் பிடித்த கவி. இந்திய மண்ணில் அவரைத்தான் என்னுடைய ஒரே ஆசான் எனக் கொள்ளலாம். நிச்சயமாக புத்தர் அல்ல. தற்கால அறிவுஜீவிகள் பலர் புத்தரைப் பிடித்துக்கொண்டு தொங்குவதைப் பார்க்கிறேன். அவர்கள் புத்தரைக் கொண்டாடும் காரணங்கள் எதுவுமே புத்தரின் தத்துவத்திலும் வாழ்விலும் இல்லை. உதாரணமாக, புத்தரை நாத்திகர் என்கிறார்கள். ஆனால் புத்தரோ ஜென்மம், கர்மா எல்லாவற்றையும் நம்புகிறார். மேலும், பௌத்தம் பரவியது தத்துவத்தினால் அல்ல. அதிசயங்களை நிகழ்த்திக் காட்டியதாலும், அரசு பலத்தினாலும் அரசு அதிகாரத்தினாலும் மட்டுமே பௌத்தம் பரவியது. அரசு அதிகாரம் பறி போனதும் பௌத்தமும் இந்தியாவிலிருந்து காணாமல் போனது.
எனக்கு யாரும் ஆசிரியர்கள் இல்லை என்றே தோன்றுகிறது. அல்லது, எல்லோரும் எனக்கு ஆசிரியரே.
ஆசிரியர் தினம் என்றெல்லாம் ஒரு தினத்தை வைத்துக் கொள்ளாதீர்கள். காரணம், உங்கள் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் நீங்கள் கற்றுக்கொண்டே இருக்கிறீர்கள்.
எனக்கு என்று அல்ல, யாருக்குமே ஆசிரியர் என்று யாரும் இருக்க முடியாது என்றே தோன்றுகிறது. ஏனென்றால், நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு மனிதரிடமிருந்தும், உயிர்களிடமிருந்தும், ஏன், உயிரிலிகளிடமிருந்தும் கூட கற்றுக்கொண்டே இருக்கிறோம். ஃபெலினியின் திரைப்படம் La Stradaவில் கூழாங்கல்லை முன்வைத்து அதில் வரும் கோமாளி சொல்லும் வசனத்தை நீங்கள் நினைவு கூரலாம். நாம் நன்றியும் வணக்கமும் சொல்ல வேண்டுமானால் காலையில் எழுந்ததும் சூரியனைத் தொழுவதிலிருந்து இரவு துயில் கொள்ளும் வரை வணங்கிக் கொண்டும் நன்றி செலுத்திக்கொண்டுமே இருக்கலாம்.
அதை விட சிறப்பான ஒன்றைச் செய்தால் என்ன?
நம்முடைய வாழ்வையே இந்த அற்புதமான வாழ்வுக்குக் காரணமாக இருக்கும் உயிர்கள், உயிரிலிகள் ஆகியோருக்கு, ஆகியவற்றுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் அமைத்துக்கொண்டால் என்ன?
எப்படி அமைத்துக் கொள்வது?
யாருக்கும் தீங்கு செய்யாதிருத்தல். யாரையும் துன்புறுத்தாதிருத்தல்.
தெரிந்தே செய்வதைச் சொல்லவில்லை. தெரியாமல் கூட செய்யலாகாது என்கிறேன்.
இன்று காலை என் மாணவி ஒருத்தி எனக்கு ஒரு புத்திமதி கூறினாள். அந்த புத்திமதியைக் கேட்டு நடந்தால் எனக்குப் பைத்தியம் பிடித்து விடும். நான் தற்கொலை செய்து கொள்வேன். பாருங்கள். அமிர்தம் என நினைத்து எனக்கு விஷம் தருகிறாள் என் மாணவி.
அப்படிச் செய்யாதிருங்கள். அது போதும். அதுவே வாழ்வை நிறையச் செய்யும். இந்த பூமியும் இந்த பூமியில் வாழும் உயிரினங்களும் உங்கள் ஆசிரியர்களும் இந்தப் பிரபஞ்சமும் உங்களை வாழ்த்தும். உங்களை ஆசீர்வதிக்கும்.