அடிக்‌ஷன்


என்னை வாசிக்கும் யாரும், என்னோடு பழகும் யாரும் என்னைப் பின்பற்றாதீர்கள் என்று நான் அடிக்கடி சொல்வது வழக்கம்.  ஏனென்றால், நான் அசாதாரணன். இந்த உலகிலேயே அதிக அடிக்‌ஷன் குணத்தைக் கொண்டது அந்த இலை.  அதை இந்தியா உட்பட பல நாடுகள் தடை செய்து வைத்திருக்கின்றன.  ஆனாலும் மலைப்பிரதேச மக்கள் அதைப் புகைக்கிறார்கள்.  இமாலயத்தில் தெருவோரங்களில்கூட அந்தச் செடி முளைத்துக்கிடக்கும். 

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பான கதை இது.  அப்போது எனக்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் அந்த இலையைப் புகைப்பார்.  அவரை நான் ஒவ்வொரு சனி ஞாயிறும் சந்திப்பேன்.  அந்த தினங்களில் அவர் வீட்டில்தான் இருப்பேன்.  அவரோடு சேர்ந்து அந்த இலையைப் புகைப்பேன்.  இப்படி இரண்டு ஆண்டுகள்.  பிறகு நட்பு விட்டுப் போயிற்று.  இலையும் என்னை விட்டு அகன்றது.  நான் அந்த இலைக்கு அடிக்ட் ஆகவில்லை.  பிறகு மலைப்பிரதேசங்களுக்குச் செல்லும்போது கிடைத்தால் புகைப்பேன்.  சென்ற ஆண்டுகூட திருவண்ணாமலையில் என் உரை முடிந்த பிறகு ஒரு மலைப்பிரதேசத்தில் அந்த இலையைப் புகைத்தேன்.

அவ்வளவுதான் அந்த இலைக்கும் எனக்குமான உறவு. 

மதுவும் அப்படியே.  இந்த உலகிலேயே எனக்குப் பிடித்த விஷயம் மது.  அதற்குப் பிறகுதான் எல்லாமே.  ஆனாலும் நான் மதுவுக்கு அடிமை இல்லை.  கொரோனா சமயத்தில் இரண்டு ஆண்டுகள் மதுவின் நினைப்பே எனக்கு வரவில்லை.  இத்தனைக்கும் என் பக்கத்து வீதியில் வசித்த என் நண்பரிடம் முப்பது வைன் போத்தல்கள் இருப்பதாகச் சொன்னார்.  வேண்டாம், அதற்கான மனநிலை இல்லை என்று சொல்லி விட்டேன்.  ஏனென்றால், மது என்றால் கொண்டாட்டம்.  வீட்டில் வைத்து வைன் குடித்துக் கொண்டாடினால் வீடே பற்றி எரியும்.  அது தேவையில்லை. 

மற்றொரு சமயம், ஒரு ஐந்து ஆண்டுக் காலம் மதுவை விட்டிருந்தேன்.  காரணம், ஜெயமோகன்.  ஜெ. அதிகம் எழுதுகிறார், அதை விட அதிகம் எழுதக்கூடிய நாம் மதுப் பழக்கத்தினால்தான் கம்மியாக எழுதுகிறோம் என்று நினைத்து மதுவை விட்டேன்.  ஆனால் எப்போதும் எழுதுவதை விட கம்மியாகத்தான் எழுத முடிந்தது என்பதை விட மற்ற பல விசேஷங்களையும் இழக்க வேண்டிப் போனதுதான் பெரும் துக்கம்.    

சில உதாரணங்களைச் சொல்கிறேன். 

எனக்கு ஸக்கரியாவுடன் ஒரு முறையாவது குடிக்க வேண்டும் என்பது ஒரு கனவாக இருந்தது.  அதை ஸக்கரியாவிடமே சொல்லியும் இருக்கிறேன். பெரிதாகச் சிரித்து விட்டு, இதெல்லாம் ஒரு விஷயமா, உடனே புறப்பட்டு திருவனந்தபுரம் வாருங்கள் என்றார்.  ஐயோ, இப்போது நான் குடிப்பழக்கத்தை நிறுத்தியிருக்கிறேனே என்றேன்.  சரி, ஆரம்பித்ததும் வாருங்கள் என்றார். 

அந்தக் காலகட்டத்தில் ஒரு இலக்கிய விழாவுக்காக திருவனந்தபுரம் சென்றிருந்தேன்.  மாலையில் ஸக்கரியாவும் நானும் ஒரு நட்சத்திர விடுதியில் சந்தித்தோம்.  அவரோடு ஒரு அழகிய இளம் பெண் இருந்தார்.  ஸக்கரியா குடித்தார்.  நான் குடிக்கவில்லை.  நான்தான் குடிப்பழக்கத்தை நிறுத்தியிருந்தேனே?  எவ்வளவோ சொன்னார்.  நான் கேட்கவில்லை. அதற்குப் பிறகு எத்தனையோ முறை அவரை மதுபான விருந்துகளில் சந்தித்திருக்கிறேன்.  குடித்திருக்கிறேன்.  ஆனால் நானும் அவரும் தனியாகக் குடிக்கும் என் கனவு நிறைவேறவில்லை.  இனியும் நிறைவேற சாத்தியம் இல்லை.  பெரும் கூட்டத்தில் வைத்து அவரோடு குடிப்பது என் கனவு அல்ல.  அவரோடு தனியாகக் குடிக்க வேண்டும்.  ஏன் இந்தக் கனவு என்றால், அவர் எழுத்தில் குடி ஒரு கொண்டாட்டமாக வெளிப்படும். 

அதேபோல் தருண் தேஜ்பாலுடன் ஒருமுறை குடிக்க வேண்டும் என்பது என் கனவு.  தருண் ஒரு விஸ்கி பிரியர்.  பணம் செல்லாது என்று நரேந்திர மோதி அறிவித்திருந்த அன்றைய தினம் நான் தில்லியில் இருந்தேன்.  மாலையில் தருணை அவர் வீட்டில் சந்திப்பதாக ஏற்பாடு.  எனக்குப் பஞ்சாபி உணவு அதிவிருப்பம் என்பதால் அன்றைய தினம் பஞ்சாபி உணவு விருந்து. வீட்டில் விதவிதமான மதுபானங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.  இரவு முழுவதும் பேசி, குடித்துக் களிக்கலாம்.  துரதிர்ஷ்டவசமாக அப்போது நான் குடிப்பழக்கத்தை நிறுத்தியிருந்தேன்.  தருண் மட்டும் விஸ்கி அருந்தினார்.  நான் கோக் குடித்தேன். 

இன்று வரை தருணோடு குடிக்கும் என் ஆசை நிறைவேறவில்லை.  இனியும் நிறைவேறுவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்று தோன்றவில்லை.    

தமிழின் அந்த உச்ச இயக்குனர் என்னைப் போலவே ஒரு மதுப்பிரியர்.  அவரை இரண்டு மூன்று முறை சந்தித்திருக்கிறேன்.  அதிகாலை மூன்று மணி வரை பேசிக்கொண்டிருப்போம்.  மூன்று மணிக்கு டிரைவரை அழைத்து வண்டியை எடுக்கச் சொல்லி, அவரும் என்னுடனேயே என் வீடு வரை வந்து கொண்டு வந்து விட்டுவிட்டுத்தான் திரும்புவார்.  துரதிர்ஷ்டவசமாக அவரைச் சந்தித்துக்கொண்டிருந்தபோதும் நான் குடிப்பழக்கத்தை நிறுத்தியிருந்தேன்.  அவர் வற்புறுத்துவார்.  கிளாஸில் ரெமி மார்ட்டினை ஊற்றிக்கொண்டு குடிப்பது போல் காலை மூன்று மணி வரை நடிப்பேன். 

இப்படி பல சம்பவங்கள்.

இப்படிப்பட்ட என்னிடம் வந்து அளவாகக் குடியுங்கள் என்கிறார் நண்பர்.  நான் மூன்று விஷயங்களுக்கு அடிக்டாக இருக்கிறேன்.  காஃபி, மீன் குழம்பு, இன்னொன்று.  மூன்றாவது மட்டும் என் கையில் இல்லை; வாய்ப்பைப் பொருத்து இருக்கிறது. 

இந்தப் பட்டியலில் எழுத்து இல்லையே என்று யோசிக்கக் கூடாது.  எழுத்து எனக்கு சுவாசம் மாதிரி.  சுவாசத்தை இந்த அடிக்‌ஷன் பட்டியலில் சேர்க்கலாகாது.  காஃபியும் மீன் குழம்பும் இல்லாவிட்டால் பைத்தியம் பிடிக்கும்.  ஆனால் ஒரு நாளில் மூன்று காஃபிதான் குடிப்பேன்.  அதுவும் அரை டம்ளர்தான்.  அதுவும் ஸ்ட்ராங் காஃபி அல்ல.  மீடியம்.  மீன் குழம்பு வாரம் ஒருமுறையாவது சாப்பிட்டு விட வேண்டும்.  இப்போது வீட்டில் அசைவம் சமைப்பதில்லை என்பதால் வாரம் ஒருமுறை வெளியிலிருந்து வரவழைத்துச் சாப்பிடுகிறேன்.  சென்னையில் அது கழிவுநீர் போல் உள்ளது. 

அதனால் இப்போதைய நிலையில் நான் மீன் குழம்புப் பைத்தியமாகவே திரிந்து கொண்டிருக்கிறேன்.  அதிலும் விரால் மீன் என்றால் ரொம்ப இஷ்டம்.

ஒருமுறை ஏற்காடு சென்றிருந்தேன்.  முதல் நாள். மதியம் பன்னிரண்டு மணிக்கு எழுந்து குளித்து விட்டு சாப்பிடப் போனால் சாம்பாரும் ரசமும் இருந்தது.  அழுகை வந்து விட்டது.  என்னய்யா இது என்று கேட்டால் அராத்துதான் சொன்னார், அசைவத்தை இரவு பார்த்துக் கொள்ளலாம் என்றார் என்கிறார் சமையல்கார்ர். அடப்பாவிகளா, இரவு நான் சாப்பிட மாட்டேனே ஐயா என்று கண்ணீர் விட்டு அழுதேன்.  அதனால் மாலை ஆறு மணி அளவில் ஏதோ ஒரு அசைவ ஐட்டத்தை வறுத்துக் கொண்டு வந்து வைத்தார் சமையல்காரர்.  நான் மும்முரமாகப் பேசிக்கொண்டிருந்தேன்.  இதோ எடுத்துக்கொள்ளலாம் என்று பேசி முடித்துவிட்டுப் பார்த்தால் தட்டு காலி. 

ஐயா பெரியோரே, இனிமேல் ஏற்காடு வந்தால் யார் பேச்சையும் கேட்காமல் மதியமே கொஞ்சம் அசைவ உணவுக்கு ஏற்பாடு செய்து விடுங்கள்.  வாழ்நாள் முழுவதும் நன்றி உடையவனாக இருப்பேன்.  காரணம், மற்ற ஊர் என்றால், நீங்கள் சாம்பார் சாப்பிடுங்கள், நான் மிலிட்டரி ஓட்டல் போகிறேன் என்று சொல்லிவிட்டுக் கிளம்பி விடலாம்.  ஆனால் ஏற்காட்டில் என்ன செய்வது?  சேலத்துக்கு இறங்கவே இரண்டு மணி நேரம் ஆகி விடுமே? 

மூன்றாவதாக ஒன்றைச் சொன்னேன் இல்லையா?  அது என்ன என்று சொல்வதற்குரிய சுதந்திரமான சூழல் தமிழ்ச் சமூகத்தில் இல்லை.  அந்த மூன்றாவது அடிக்‌ஷன் பற்றி நான் அதிகம் கவலைப்படுவதும் இல்லை.  காரணம், எழுத்தே பிரதானம்.  எழுத்தைத் தவிர வேறு எதற்காகவும் பிரயாசை எடுப்பது எனக்கு ஒவ்வாத விஷயம்.  அதனால்தான் முடிந்த வரை அந்த மூன்றாவதைத் தள்ளியே வைத்திருக்கிறேன். 

இந்த நிலையில் சமீபத்தில் ஒருநாள் அவந்திகா என்னிடம் வந்து ”நான் ஒன்று கேட்பேன், கோபித்துக்கொள்ளக் கூடாது” என்று ஆரம்பித்தாள்.  இப்படி ஆரம்பித்தால்தான் எனக்குப் பிடிக்காது.  இப்படி ஆரம்பித்தால் எனக்கு ஏதோ ஆகாத காரியம் என்று பொருள்.  அதை நான் சொல்லி விட்டு “சரி, கேள்” என்றேன்.

”இத்தனைக் காலம்தான் குடி குடி என்று குடித்துக் கொண்டாடித் தீர்த்து விட்டாய்.  இன்னமும், இத்தனை வயதுக்கு அப்புறமும் குடிக்கத்தான் வேண்டுமா?”

“உனக்குப் பிடிக்காத எதையுமே நான் செய்வதில்லையே?  அதனால்தான் நான் சென்னையில் குடிப்பதை நிறுத்தி விட்டேன்.  எந்தச் சூழ்நிலையிலும் எந்தக் கட்டாயத்திலும் சென்னையில் நான் குடிப்பதில்லையே?”

“அதைச் சொல்லவில்லை.  வெளியூர் போனால் ஏன் குடிக்க வேண்டும்?  அதுதான் இத்தனைக் காலம் குடித்துக் கொண்டாடியாயிற்றே?  இந்த வயதிலாவது குடிப்பதை விட்டுவிட்டு எழுத்தில் கவனம் செலுத்தலாம் இல்லையா?”

இது எப்படி இருக்கிறது?  150 நூல்களை எழுதி உலக சாதனை நிகழ்த்தியிருக்கும் ஒருவனிடம் வந்து இந்தப் பேச்சு?  அதிலும் பெட்டியோ என்ற நாவலை ஒரே மாதத்தில் எழுதினேன்.  உலகில் வேறு எவராவது அம்மாதிரி ஒரு நாவலை இத்தனைக் குறைந்த காலத்தில் எழுதி விட முடியுமா?  இன்னும் ஒருத்தர்தான் இருக்கிறார்.  அதுவும் தமிழ்நாட்டில்.  எங்கள் இருவரை விட்டால் உலகில் வேறு யாரும் இல்லை. 

ஒரு மாதத்தில் இருபத்து நான்கு நாட்கள் தினமும் எட்டு மணி நேரம் எழுதுகிறேன்.  மீதி நான்கு நாட்கள்தான் வெளியூர், குடி எல்லாம்.  அதையும் விட்டால் என்ன ஆகும்?

”உன் அண்ணன் போல் ஆகி விடுவேன் அம்மா.”

விளக்கினேன்.  அவந்திகாவின் அண்ணனுக்கு மனைவி இல்லை.  அன்பான மகள் மட்டுமே.  கூட்டுக் குடும்பம்.  தங்கைகள்.  அவரது அறுபத்திரண்டாவது வயதில் ப்ரெய்ன் ஹேமராஜ்.  மூளையில் ரத்தக் கசிவு.  எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாதவர். உடம்பு சரியாகி வந்த பிறகு அவரிடம் ஏன் என்று கேட்டபோது “ஃபேமிலி” என்றார்.

அவந்திகா ஒன்றும் பதில் பேசாமல் போய் விட்டாள்.

எனக்கு ஃபேமிலி இல்லை.  ஆனால் உலகமே என் குடும்பம்.  அது தரும் மன உளைச்சல் அநேகம்.  காரணம், நான் மானுட இனத்தின் துயரத்தை என் தோளில் சுமந்து கொண்டு திரிகிறேன். 

நான் ஏதோ வார்த்தை ஜாலம் பண்ணுகிறேன் என்று நினைக்கிறீர்கள்.  இல்லை.  உதாரணம் தருகிறேன்.

என் இளம் நண்பர், தான் பத்மா சேஷாத்ரி பள்ளியில் படித்ததாகச் சொன்னார்.  எனக்கு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பள்ளியின் நீச்சல் குளத்தில் காலை ஒன்பது மணிக்குக் கொடுக்கப்பட்ட நீச்சல் பயிற்சியின்போது நீரில் மூழ்கி இறந்து போன ஒன்பது வயதுச் சிறுவனின் ஞாபகம் வந்து விட்டது.  இத்தனைக்கும் அவனுடைய தங்கையும் அதே பள்ளியில்தான் படித்தாள்.  குடும்பத்தால் பள்ளியின் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.  இன்னொரு குழந்தை அங்கே படிக்கிறது.  அரசும் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பள்ளி முதல்வர் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் தோழி. 

எந்த நீச்சல் குளத்தைப் பார்த்தாலும் எனக்கு அந்தச் சிறுவன்தான் ஞாபகம் வருகிறான்.

அடிக்கடி சவேராவில் உள்ள ப்ரூ ரூமுக்குப் போகிறேன்.  சரி.  ஆனால் அங்கே உள்ள மதுபான விடுதிக்குப் போனால் பக்கத்தில் உள்ள நீச்சல் குளம் தெரியும்.  பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது மேடை சரிந்து மூன்று பேரைக் காவு வாங்கியது அதே நீச்சல் குளம்தான்.

உங்களுக்கு ரயிலைப் பார்த்தால் என்ன தோன்றும்?

இப்போது தொண்ணூறு வயதான ஒரு ஜெர்மானியனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டுப் பாருங்கள்.  அவரது கைகால்கள் ஒரு நிமிடம் ஆடி அடங்குவதைக் காண்பீர்கள்.  1940களில் ரயில் பெட்டிகளில்தான் யூதர்கள் வதை முகாமுக்கு எடுத்துச் செல்லப்பட்டார்கள்.  இப்போதும் ஜெர்மானிய முதியவர்களுக்கு அந்த ஞாபகம் மறந்திருக்கவில்லை.  அவர்கள் பார்த்திராவிட்டாலும் கதைகளைக் கேட்டிருப்பார்கள்.  சிறு பிராயத்தில் பார்த்தும் இருக்கலாம். 

ஆயிரக்கணக்கான யூதர்களைச் சுமந்து சென்ற அந்த ரயில் பெட்டிகளெல்லாம் ஜெர்மானிய சினிமாவின் மூலம் என் மனதில் ஆழமாகப் பதிந்து விட்ட துயரச் சித்திரங்கள்.  ஒருபோதும் மறக்காது.

இன்னும் ஒரே ஒரு காட்சி.  ரயிலில் சாமான்களை வைப்பதற்கென்று ஒரு தனிப்பெட்டி இருக்கும்.  வட இந்தியாவிலிருந்து வந்த அந்த ரயில் செண்ட்ரலுக்கு வந்து மூன்று நாள் ஆகி விட்டது.  அப்போது சாமான் பெட்டியிலிருந்து ஒரு நாயின் ஓலம்.  பார்த்தால் மனித ஓநாய்கள் சில தாங்கள் வளர்த்த டால்மேஷன் நாயை அந்த சாமான் பெட்டியில் போட்டு விட்டுப் போயிருக்கின்றன.  அந்த இருட்டு அறையில் தண்ணீர்கூட இல்லாமல் அந்த நாய் நான்கைந்து தினங்களாகத் துன்பப்பட்டுக் கிடந்திருக்கிறது. அந்த நாயின் கண்களில் தெரிந்த அவலத்தை, துயரத்தை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என்னால் மறக்க இயலாது. 

இப்படியாகத்தான் நான் மானுட துயரத்தை மட்டுமல்லாமல் சக உயிரிகளின் துயரத்தையெல்லாமும் சுமந்து கொண்டு அலைகிறேன். அன்பு, அருள், தயை, இரக்கம், பரிவு – சுருக்கமாகச் சொன்னால், empathy – இதுதான் என் பலம்.  என் பலவீனமும் அஃதே. 

இன்னொரு உதாரணம்.  செப்டம்பர் 2019இல் நடந்தது.  தோழி எக்ஸ் ஒரு பெண்ணை அறிமுகப்படுத்தினாள். இருபத்தோரு வயது இருக்கும். பச்சைக் கண்.  என் தொலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டு என்னென்ன புத்தகங்கள் படிக்கலாம், ஆலோசனை சொல்லுங்கள் என்று மெஸேஜ் வந்தது.  சொன்னேன்.  அக்டோபரில் லெபனான் சென்றேன்.  அப்போது ஒருநாள் இரவு பத்து மணி இருக்கும். பச்சைக்கண்ணிடமிருந்து மெஸேஜ்.  ஐயோ, இப்போது அவளுக்கு நள்ளிரவைத் தாண்டியிருக்க வேண்டுமே என்று நினைத்துக்கொண்டே மெஸேஜைப் பார்த்தேன்.  ஒரு சிறுகதை மாதிரி இருந்தது மெஸேஜ்.

“சாரு, இந்த மெஸேஜைப் பார்த்து என்னைத் தவறான பெண்ணாக நினைத்து விடாதீர்கள்.  இப்போது இதை செண்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து தட்டிக்கொண்டிருக்கிறேன். நான் எந்த ஊருக்கும் போகவில்லை.  இருந்தாலும் இங்கே இந்த ஸ்டேஷனில் அமர்ந்திருக்கும் காரணம் என்ன தெரியுமா? எங்கேயுமே எனக்குப் பாதுகாப்பு இல்லை.  நான் தங்கியிருந்த வீட்டில் பாதுகாப்பு இல்லை என்று என் தோழியிடம் கேட்டு அவள் அறைக்குப் போனேன்.  மூன்று நாட்களாக அவள் என்னை எப்படியெப்படியெல்லாம் செக்‌ஷுவல் டார்ச்சர் கொடுக்கிறாள் என்பதை ஒருநாள் உங்களிடம் தனியாகச் சொல்கிறேன்.  அவள் லெஸ்பியனாக இருந்து தொலையட்டும்.  அதற்காக விருப்பமில்லாத பெண்ணையா போட்டு டார்ச்சர் பண்ணுவார்கள்?  இன்று அவள் தொந்தரவு தாங்க முடியாமல் பெட்டியைத் தூக்கிக்கொண்டு செண்ட்ரல் ஸ்டேஷன் வந்து விட்டேன்.  மெயின் ஹால்.  பகல் போல் விளக்குகள் எரிகின்றன.  யாரும் என்னைத் தொட முடியாது.  ஆனால் காலையில் நான் எங்கே போவேன்?  ஒரு நல்ல வீடு பார்த்திருக்கிறேன். பத்தாயிரம்தான் வாடகை.  ஆனால் அட்வான்ஸ் ஒரு லட்சம் கொடுக்க வேண்டும்.  கையில் பைசா கிடையாது.  உங்களால் இப்போது அந்த ஒரு லட்சம் ரூபாயைத் தந்து உதவ முடியுமா?  ஒரு வருடத்திற்குள் திருப்பிக் கொடுத்து விடுவேன்.  ஒரே தவணையாக முடியாது.  கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்து விட முடியும்.  எனக்கு இதைத் தவிர வேறு வழியே தெரியவில்லை.  அதனால்தான் உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.”

எனக்குப் பலவிதமான யோசனைகள் எழுந்தன.  ஒரு இருபத்தோரு வயதுப் பெண்ணுக்கு ஒரே ஒருமுறை பார்த்த என்னைத் தவிர வேறு யாருமே இல்லையா என்பதே எனக்கு முன் தோன்றிய கேள்வி.

அந்தப் பெண் அந்த ஒரு லட்சத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவாள் என்று எனக்கு நிச்சயமாகத் தெரிந்தது.  ஐந்தே நிமிடத்தில் ஒரு லட்சத்தை அனுப்பி வைத்தேன்.

ஐந்தாயிரம் ஐந்தாயிரமாக அந்தக் கடனை அடைத்தாள்.  இறுதித் தவணையில் ஒரு பெரிய தொகையைப் போட்டு நிரவி விட்டாள்.  சொன்ன சொல் பிசகாமல் ஒரே வருடத்தில் ஒரு லட்சத்தையும் கொடுத்து விட்டாள். 

அதன் பிறகு அவளிடம் ஒரு கேள்வி கேட்டேன். 

என் எழுத்து எதையும் படித்திருக்கிறாயா?  

இல்லை. 

எக்ஸைல் நாவலைக் கொடுத்து ஆறு மாதம் அவகாசம் கொடுத்தேன்.  அப்படியும் படிக்கவில்லை.  என் எழுத்தையே படிக்காத உன்னோடு பழக விரும்பவில்லை என்று குட்பை சொல்லி விட்டேன். 

என்ன ஆச்சரியம் என்றால், நான் செய்த உதவிக்காக அவள் நன்றிக்கடன் படவில்லை.  படக் கூடாது.  சராசரி மனிதர்கள் படுவார்கள்.  அவள் படவில்லை.  சாதாரணமாக எடுத்துக்கொண்டு போய் விட்டாள்.  அதுதான் இன்றைய தேவை.  எனக்கு உதவி செய்திருக்கிறார் என்பதற்காக ஒருவர் என்னை assfuck செய்வதை என்னால் அனுமதிக்க முடியாது. 

நீங்கள் நினைப்பீர்கள், பெண் என்பதால், அதிலும் பச்சைக்கண் என்பதால் உதவி செய்தேன் என்று.  இல்லை.  உதவியில் ஆண் பெண் பேதம் பார்ப்பதில்லை.  ஆண் என்றாலும் செய்வேன்.  வட்டிக்குக் கடன் வாங்கி இரண்டு தடிமாடுகளைப் படிக்க வைத்தேன்.  படித்து வேலைக்குப் போனதும் ஸீரோ டிகிரி நாவலை நாங்கள் இரண்டு பேரும்தான் எழுதிக்கொடுத்தோம் என்று என் முதுகில் குத்தினார்கள். 

ஜெயமோகனும் என்னைப் போன்றவர்தான்.  ஒரே ஒரு வித்தியாசம்.  அவர் எதிரிகளுக்கும் உதவி செய்வார்.  நான் அதை மட்டும் செய்ய மாட்டேன்.  இன்னொரு வித்தியாசம், அவர் பற்றி எழுத செல்வேந்திரன் போன்ற நண்பர்கள் இருக்கிறார்கள்.  எனக்கு யாரும் இல்லை.  நானேதான் என் பெருமையை இப்படி எழுதிக்கொள்ள வேண்டும். 

இந்த விஷயங்களையெல்லாம் நவீன கால போதகரான ஓஷோதான் தொட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். தமிழில் கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக இதைத் தொட்டது அடியேன்தான். எனவே இந்தக் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தட்சணையாக சந்தா/நன்கொடையை அனுப்பி வையுங்கள்.

சந்தா மற்றும் நன்கொடை அனுப்புவதற்கான விவரம் கீழே:

ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்:  ராஜா (ராஜா தான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. 

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai