புருஷனில் இதுவரை ரசித்தவை: ஸ்ரீராம் & சாரு

புருஷன் நாவலை மற்றவர்கள் படிக்கும் போது, அவர்களுக்கு வாசிப்பின்பம் குறையாமல் இருப்பதற்காக, சுருக்கமாகச் சொல்கிறேன்.

* குழந்தைகள் முன் குடிக்கும் நவயுக தம்பதிகள் பற்றிய விமர்சனம்.

*நேற்று சாரு சொன்ன, பேரிளம் மாதுக்கள், மதுக்கூடங்களில் செய்யும் அக்குறும்புகள் மற்றும் அவர்கள் பள்ளிப்பெண்கள் போல் பாவனை செய்து, உடுத்திக்கொள்ளும் உடைகளின் அபத்தம் பற்றிய நான்கு பக்கங்கள்.

* ஹொடொரோஸ்கி படங்களில் வரும் shamanism போன்ற ‘ஸ்பெஷல்’ மேகலாவை மீட்கும் கதையில், ‘ஸ்பெஷல்’, மேகலாவின் பிருஷ்டங்கள் பற்றிச் சொல்கிறான், LAS = RAS என்று. நாம் பள்ளி, கல்லூரிகளில் படித்திருப்போமே, left hand side (LHS) = right hand side (RHS).இங்கே a என்பது ass எனக் கொள்க.

* ரகுராம் அரம்யாவைப் புணர முற்படுகிறான். அடிவயிற்றுக்குக் கீழே யோனியை நோக்கி முன்னேறும் இவன் கையை எல்லாப் பெண்களும் போல அரம்யா தட்டி விடுகிறாள். அப்பொழுது ரகுராம் சொல்கிறன்: இதுவே ஆண் என்றால், என் கண்ணையே உன்னிடம் ஒப்படைக்கிறேன் என்று தன் ஆணுறுப்பைப் பெண்ணின் கைகளுக்குத் தள்ள ஆண் முயற்சிப்பான். புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, ஐந்து நிமிடம் சிரித்துக்கொண்டே இருந்தேன்.

* ரகுராமின் அத்தைப்பெண்ணை முன்வைத்து அராத்து ‘நாடகக்’ காதலை முழுவதும் அலசியுள்ளார். ரசமான பகுதி.

* சாரு சொல்லாமல் விட்ட, பதினேழாம் அத்தியாயத்தின் கடைசி. அதில் ழழிழு சொல்லும் ஆறு தத்துவப் பார்வைகள் வருகின்றன. அதில் மூன்றாவது: “பிரம்மத்தின் பகுதியே அனைத்து உயிர்களும். பிரம்மத்தில் இருக்கமுடியாமல் பிரிந்ததுதான் இப்பிறப்பு. பிரம்மத்தில் இருந்து பிரிந்தவர்கள் இனி பிரம்மத்தை அடையவே முடியாது. இனி, பிறவி எடுக்காமல் இருக்க பிரம்மத்தை நாடலாம். ஆனால் ஒருபோதும் பிரம்மமாக முடியாது.”

பேருண்மை.

இதை எல்லாம் சொல்லிவிட்டு, அடுத்தப் பக்கத்தில், அந்தப் பேருண்மையை மறுத்து பகடி ஆக்குகிறார் ழழிழு. Irreverence, பின்நவீனத்துவக் கூறுகளில் ஒன்று.

***

ஸ்ரீராம் சொல்லியிருப்பதில் ஒரே ஒரு திருத்தம். ”மதுக்கூடங்களில் பேரிளம் பெண்கள் செய்யும் அக்குறும்புகள்” என்பது தவறு. மதுக்கூடங்களில் பதினெட்டு வயதிலிருந்து முப்பது வயது வரை உள்ள எல்லா பெண்களுமே இந்த அக்குறும்பில் அடக்கம். பேரிளம் பெண்களையெல்லாம் எவன் பார்க்கிறான்?

இன்னொரு முக்கிய விஷயம். என்னிடம் பெண் தன்மைகள் உள்ளன என்று எப்போதும் எழுதிக்கொண்டிருக்கிறேன். சிகரெட்டில் கூட பென்ஸன் அண்ட் ஹெட்ஜஸ் லைட்ஸ் என்ற சிகரெட்டைத்தான் முன்பு குடிப்பேன். அது பெண்கள் குடிப்பது. ஆண்களால் அதைத் தொடவே முடியாது. அத்தனை ’மென்மையாக’ இருக்கும்.

என்னுள் இருக்கும் அந்தப் பெண் தன்மையின் காரணமாகவோ என்னவோ, மதுக்கூடத்தில் இளம் பெண்கள் செய்யும் அக்குறும்புகள்/சேஷ்டைகள் அனைத்தையும் நானும் செய்வேன். யாராவது பெண்கள் கவனிப்பதாகத் தெரிந்தால். நானும் இதைத் தவிர்க்க வேண்டும் என்றே நினைக்கிறேன். ஆனால் முடிவதில்லை. உதாரணத்துக்கு சினிமாவிலிருந்து சொல்ல வேண்டுமானால், புதிய பறவை படத்தில் ஒரு மதுக்கூடத்தில் சிவாஜி கணேசன் மது அருந்தியபடி சிகரெட் குடிக்கும் அக்குறும்பு. இது நான் செய்யும் பல நூறு அக்குறும்புகளில் ஒன்று. சாதாரண சமயங்களில் சாதாரணமாக வேப் குடிக்கும் நான் யாராவது பெண் ஒருத்தி என்னை கவனிக்கிறாள் என்றால் சிவாஜி ஸ்டைலில் குடிக்க ஆரம்பித்து விடுவேன். கோவா, தாய்லாந்து, ஜப்பான் ஆகிய பிரதேசங்களில் பெண்கள் நேரிலேயே நெருங்கிப் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். காரணம், அராத்து விவரித்திருக்கும் அக்குறும்புதான். நாவலில் பெண்கள். என் வாழ்வில் நான்.

எல்லாம் ஒரு மௌன நாடகம் போல் இருக்கும். புருஷன் நாவலில் அந்த இடம் பிரமாதமாக வந்துள்ளது.