எனது நிறைவேறாத கனவு ஒன்று உண்டென்றால் அது பியானோ கலைஞனாக வேண்டும் என்பதுதான். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கூட அது பற்றி மிகவும் யோசித்தேன். சாந்தோமில் என் வீட்டுக்கு எதிரே பியானோ கற்பிக்கும் பள்ளி இருந்தது. அலையவே வேண்டாம். ஆனால் தினமும் நான்கு மணி நேரம் பயிற்சி எடுக்க வேண்டும். ஆரம்பப் பயிற்சி ஸ்கேல்ஸ், விரல் பயிற்சி மற்றும் டெக்னிக். இரண்டாவதுதான் கடினம், ஸைட் ரீடிங். இது முன்னதாகவே பயிற்சி எடுக்காமல் கண் முன்னே நோட்ஸை வைத்துக்கொண்டு உடனுக்குடன் வாசிப்பது. அதாவது, ஒரு கவிதையை அல்லது கதையை வாய் விட்டு வாசிப்பதற்காக எடுத்துக்கொண்டால், முன்னதாகவே அதை பலமுறை வாய்விட்டு வாசித்துப் பயிற்சி எடுக்கிறோம். அப்படியில்லாமல் எடுத்த எடுப்பிலேயே வாசிப்பது போன்றதுதான் ஸைட் ரீடிங். நோட்ஸைப் பார்த்தபடியே சரளமாக வாசிப்பது.
இதற்காக தினமும் நான்கு மணி நேரம் என்று ஏழெட்டு ஆண்டுகள் பயிற்சி செய்தால் ஒரு நடுத்தர பியானோ கலைஞனாக ஆக முடியும். அதிலும் சோப்பினின் Études மாதிரியான கடினமான இசைக்கோர்வைகளை வாசிக்க பத்து வருடப் பயிற்சி தேவை.
விட்டு விட்டேன். ஆசையும் ஆர்வமும் நிறைவேறாக் கனவாகி விட்டது.
நான் சமையல்கட்டில் கழித்த நேரத்தை பியானோவில் செலவழித்திருந்தால் இந்நேரம் நானே Mariage d’Amour போன்ற பல இசைக் கோர்வைகளை உருவாக்கியிருக்க முடியும். ஏனென்றால், என் மனதில் எப்போதுமே ஏதோ ஒரு இசை ஜீவ தாரையாக ஓடிக்கொண்டே இருக்கிறது. அதன் லயத்தினால்தான் அடிக்கடி நானே கையையும் தேகத்தையும் அசைத்துக் கொள்கிறேன். பார்ப்பவர்களுக்கு பைத்தியம் எனத் தோன்றும்.
நேற்று ஸ்ரீ கேட்டாள், நான் ஒரு கவிதைதானே கேட்டேன், நீங்கள் தினமும் ஒரு கவிதை எழுதுகிறீர்களே, எப்படி அது சாத்தியம் என்று. மூன்று மணி நேரம் இசை கேட்பேன், கவிதை வரும் என்றேன்.
ஒருமுறை அவந்திகா என்னிடம் குடியின் தீமைகள் பற்றி போதனை செய்து கொண்டிருந்த போது “குடிக்காவிட்டால் எனக்குப் பைத்தியம் பிடித்து விடும்” என்றேன். நீ கேட்கும் ம்யூசிக்குக்கு உனக்கு என்றைக்குமே பைத்தியம் பிடிக்காது, அவ்வளவு நேரம் ம்யூசிக் கேட்கிறாய் என்றாள். அது ஒரு அங்கீகாரம்.
இந்த ப்யானோவைக் கேட்டுப் பாருங்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் மூன்றாவது கவிதையோடு வருகிறேன்.
https://www.youtube.com/watch?v=GIu8S5m0ytk&t=56s