ஊருக்குப் போயிருந்தாள் மனையாள்
ஒரு மாதம்
உன் நண்பர் யாரும் இங்கே
வரலாகாது, இதுயென் உத்தரவென்றாள்
சரியென்றேன்
வேறென்ன சொல்ல?
மனையாள் சொல்வதெதையும்
கேட்டதில்லை
நண்பர்கள் வந்தார்கள்
இருவர்
இரண்டு நாள் தங்கி விட்டுச்
சென்றார்கள்
பிறகுதான் கண்டேன்
படுக்கையறைத் திரைச்சீலை
முன்பக்கம் பின்பக்கமாகி
யிருந்தது
கவனமாகக் கேளுங்கள்
திரைச்சீலை ஒன்றல்ல
இரண்டு
ஒரு திரைச்சீலை மட்டும்
மாறியிருந்தது
இடப்பக்கத் திரைச்சீலை
ஒரு வண்ணம்
வலப்பக்கத் திரைச்சீலை
இன்னொரு வண்ணம்
புரளாமல் இருந்திருந்தால்
இரண்டும் ஒரு வண்ணம்
மனையாள் வந்தால்
இது என்னவென்று கேட்பாளா
மாட்டாளா
இது என்னடா சங்கடமென்று
நண்பர்களிடம் கேட்டேன்
தெரியாதே என்றனர்
இந்தச் சிக்கலை
விடுவிப்பதெப்படியென
சாளரத்தில் வந்தமர்ந்த
மைனாவிடம் கேட்டேன்
இதெல்லாம் ஒரு பிரச்சினையா
ஒரு தச்சனையழைத்து
சரி செய்யென்றது
மைனா சொன்னபடி
செய்தேன்
மறுநாள் பார்த்தால்
திரைச்சீலை முன்னைப் போலவே
புரண்டிருந்தது
இதைச் சொன்னால்
மனையாள் நம்ப மாட்டாள்
ஏற்கனவே அவளென்னைப்
பைத்தியமென்கிறாள்
மீண்டும் மைனாவிடமே
கேட்டேன்
வெரி சிம்பிள்
தற்கொலை செய்து
கொண்டு விடு என்றது மைனா
இதோ பாருங்கள்
பறவைகளைப் போன்ற
கொலைகார ஜந்துக்கள்
வேறில்லை
கவிஞர் கூட்டமே பறவைகள்
பற்றி உருகியுருகி
எழுதுகிறது
எதார்த்தத்தில் அவை
சிறு குழந்தைகளைக்கூட
தூக்கிக்கொண்டு செல்பவைதான்
பருந்துகள் மட்டுமல்ல
எல்லாம் அப்படித்தான்
மைனா குயில் எல்லாம்
அப்படியா என்பீர்
அவையும் தம் அளவுக்கேற்ப
கொலைத் தொழில் புரிபவைதாம்
யோசித்துப் பாருங்கள்
கோழி மட்டுமே மானிடர்க்கு
உணவாகும் தியாகச் செம்மல்
இப்படி யோசித்தாலும்
மைனாவின் யோசனை
என் மனதில் தங்கத்தான் செய்தது
திரைச்சீலையைவிட அற்ப
விஷயம்
குடி
என் நண்பன் ஒரு குடிப்பிரியன்
புத்திசாலி
புத்தி அவனைக் கோடீஸ்வர
னாக்கியது
குடியை நிறுத்தென்றாள்
மனையாள்
இவன் நிறுத்தவில்லை
தினந்தோறும் ரகளை சண்டை
ஒருநாள் அவள் குழந்தைகளோடு
பிறந்தகம் சென்றாள்
அன்றிரவு அவன்
போதையில் தூக்கில்
தொங்கினான்
அதைவிட திரைச்சீலை
பெரிய விஷயம்
ஆனாலொரு பிரச்சினை
எனக்கு சிறுபிராயம்தொட்டு
முடிச்சு போடத் தெரியாது
இதெல்லாமா பிரச்சினை
மாத்திரையைப் போட்டு மாய்ந்து
போ என்றது மைனா
அதிலொன்றும் சிக்கலில்லை
ஆனால்
விடுபடாத புதிரோடு
சாவது எங்ஙனம்?
திரைச்சீலை புரண்டது
எப்படி?
ஒப்புக்கொள்கிறேன்
இரு புதிர்கள் தருகிறேன்
அதில்தான் இருக்கிறது
திரைச்சீலைப் புதிரென்ற
மைனா சொன்னது:
ஒருவன் தூண்டில் வாங்கக்
கடைக்குப் புறப்பட்டான்
வழியில் வந்த ஒருவன்
அவனிடம் தந்தான் ஒரு
கூடை மீன்கள்
இன்னொரு நாள்
இன்னொருவன் அவனிடம்
தந்தான் ஒரு தூண்டில்
இருவரில் எவனை
அவனுக்குப் பிடிக்கும்?
இருவர் டேபிள் டென்னிஸ்
ஆடுகின்றனர்
தூண்டில்-மீன்-மனிதன்
டென்னிஸ் ஆடும் இருவர்-பந்து
நீர், டென்னிஸ் டேபிள்
இரண்டின்
இருப்பும் இன்மையும்
நானொன்று கேட்டால்
நீயொன்று உளறுகிறாய்
இதற்கும் திரைச்சீலைக்கும்
என்ன சம்பந்தம்?
நீ நான் உன் மனையாள்
திரைச்சீலையும் தண்ணீரும்
டென்னிஸ் டேபிளும்
ஒன்றுதான் என்று சொல்லிப்
பறந்தது மைனா
***
ஒரு மாதம் கழித்து
வந்த மனையாள்
திரைச்சீலை பற்றி
எதுவும் பேசவில்லை
புதிர் கொஞ்சம் பெரிதாகி
நானே திரைச்சீலை பற்றிப்
பேசலானேன்
’இது வண்ணம் மங்கி விட்டது,
மாற்றலாமா?’
‘நீ என்ன பைத்தியமா?
புத்தம் புதிய திரைச்சீலை
இது’வென்றாள்.
’ஒரு பக்கம் ஒரு வண்ணம்
இன்னொரு பக்கம் இன்னொரு வண்ணம்
நன்றாக இல்லை இது’
எல்லாப் பக்கமும் ஒரே வண்ணம்தான்
உனக்குக் கலர் ப்ளைண்ட்னெஸ்
என்று விஷயத்தை முடித்தாள்