சாம்பார் காவியம்

இருபத்தைந்து வயது வரை
அம்மாவின் சமையல்
அம்மியும் விறகு அடுப்பும்
பிறகு?
பிறர் சமைத்துச் சாப்பிட்டது
விடுதிகளிலும் தோழிகளின் இல்லங்களிலும்

என் வீட்டுச் சமையலில் என் பங்கு எண்பது சதவிகிதம்
மனையாள் சிரிக்கிறாள்
’எண்பது என்னுடையது!’
மீதி இருபதுதான் என் மனையாள்
நேரக் கணக்கு வைப்போம்
ஒன்றரை மணி நேரம் நான்
இருபது நிமிடம் அவள்
கணிதத்தில் நான் ‘வீக்’
அதனால் சதவிகிதங்கள் சற்றே
தடுமாறலாம்

வாரத்தில் இரண்டு நாள்
சாம்பார் ஒரு பெருஞ்சட்டியில்
மதியம் சாம்பார்
இரவு சாம்பார்
மறுநாள் இட்லிக்கு சாம்பார்
மறுபடி மதியம் சாம்பார்
மறுபடி இரவு சாம்பார்
மறு மறுநாள் இட்லிக்கு சாம்பார்
மறு மறுநாள் மதியம் முழித்துக்கொள்வேன்
ஸ்விக்கியில் ஆட்டுக்கறி
அவள் சைவம்
சாம்பாரே தொடரும்

ஓத்தாம் பாட்டு நிச்சயம்
‘இனிமேல் சமைக்கவே மாட்டேன்
சாம்பார் பூராவும் வீண்.’

ஒவ்வொரு வேளையும் சாம்பார் சூடாகும்
நான் பதற்றத்தில் தவிப்பேன்
கொஞ்சம் அசந்தால் அடிப்பிடித்து நாறும்

இன்று
சாம்பார் சூடாகும் வேளையில்
ஒரு அழைப்பு
‘ஏன் பதற்றம்?’ என்றார் நண்பர்
நான் ’சாம்பார், சாம்பார், கருகிவிடும்’ என்றேன்.
’அப்படியானால் சீக்கிரம் சொல்லி விடுகிறேன்.’
ஓடிப் போய்ப் பார்த்தால் சாம்பார்
அடிப்பிடித்தாயிற்று

கனவிலும் இதே தொல்லை
சாம்பார் அடிப்பிடித்து
அடித்துப் பிடித்து அலறி எழுந்து
பார்த்தால்
கனவு!
ஹார்ட் அட்டாக் வந்தாலும்
ஆச்சரியமில்லை

விக்தர் யூகோ ஆடை களைந்து
நிர்வாணமாய் எழுதினார்
காலத்தும் மிஸ்ஸியும் 1907இல்
மேடையில் முத்தமிட்டுத்
உலகை உலுக்கினார்கள்

நூற்றியறுபது நூல்கள் எழுதிய நான்
சாம்பாரின் சாபத்தால்
அடுப்புக்கு அடிமையாகி
சாம்பார் காவியம் எழுதுகிறேன்.