மோடுமுட்டிகளே, கொஞ்சம் விலகியிருங்கள்…

கொஞ்ச நேரத்துக்கு முன்னால் எனக்கு ஒரு வாட்ஸப் மெஸேஜ் வந்தது. என் பெயர் இன்னது. ஊர் இன்னது. (சென்னைக்கு அருகில் உள்ள ஒரு ஊர்) நீங்கள் கோவா செல்லும் தேதி என்ன?

சாலையில் செல்லும் ஒருவரை அழைத்து அவர் கன்னத்தில் அறைந்தால் அந்த ஆள் என்ன ஆவான்? அதேபோல் இருந்தது எனக்கு. எனக்கு ஏதாவது ஆபத்து வந்தால் நான் அந்த ஆபத்தை சீனி பக்கம் தள்ளி விட்டு விடுவேன். ஊசித் துளையில் ஒட்டகத்தை அல்ல, காண்டாமிருகத்தையே நுழைத்துப் பிரித்து விடும் ஆள் சீனி என்று எனக்கு ஒரு நம்பிக்கை.

இப்படியெல்லாம் உங்களுக்கு ஏன் தோன்ற வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். சொல்கிறேன். நண்பரை எனக்குத் தெரியாது. இவர் எப்படி எனக்கு அறிமுகம் என்று முதலில் சொல்லியிருக்க வேண்டும். என் நம்பர் எப்படித் தெரியும் என்பதையும் சொல்லியிருக்க வேண்டும். நான் கோவா செல்லும் தேதியை ஏன் கேட்கிறார் என்றும் சொல்லியிருக்க வேண்டும். இவர் கோவா வருகிறார் என்றால் இவரைப் போன்ற மனிதர்களால் மற்றவர்களுக்குத் துன்பம் மட்டுமே நிகழும். ஏனென்றால், நான் ஒரு மாதத்துக்கு முன்பே கோவா செல்லும் தேதியையும், வர விரும்புவோர் எனக்கு எழுதுங்கள் என்றும் எழுதி விட்டேன். அதிலேயே கடைசியில் வந்து கழுத்தை அறுக்காதீர் என்றும் எழுதி விட்டேன். ஏனென்றால், யார் யார் வருகிறார், எத்தனை நாள் தங்குகிறார் என்று தெரிந்தால்தான் அறைக்கு ஏற்பாடு செய்ய முடியும். இதற்கு சீனி ஒரு ட்ராவல் ஏஜெண்ட் போல் செயல்பட வேண்டும். அது சாதாரண வேலை அல்ல. ஏனென்றால், ஒருவர் மூணு நாள் இருப்பேன் என்பார். நான் ஆறு நாள் இருப்பேன் என்பேன். இதற்குத் தகுந்த மாதிரியெல்லாம் அறை தேட வேண்டும். பாருங்கள், என் நண்பர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று ஒரு உதாரணம் சொல்கிறேன். நான் ஜப்பான் செல்லும்போது எனக்கு ட்ராவல் இன்ஷூரன்ஸ் போட வேண்டும். எனக்கோ ஒரு எழவும் தெரியாது. (உங்களுக்குத் தெரியாதது போல்தான் எனக்கும் தெரியாது என்று நீங்கள் சொல்லக் கூடாது. நான் இன்று ஆறு கவிதைகள் எழுதியிருக்கிறேன். இது உலக சாதனையில் வரும் காரியம். ஒரு கவிதை எழுதவே ஒரு வாரம் ஆகும். என்னால் இன்னும் ஆறு கவிதைகள் கூட ஒரே நாளில் எழுத முடியும். அதனால்தான் எனக்கு லௌகீக காரியங்கள் தெரியாது. அதனால் என்னோடு நீங்கள் சேரலாகாது.) இன்ஷூரன்ஸ் போட்ட நண்பர் அம்பது ரூபாய் என்றார். எனக்கு ஆச்சரியம். சீனியை அழைத்தேன். அடக் கடவுளே, இதற்கும் நான் தானா என்று வந்தார். பார்த்தால் பத்து நாட்களுக்குப் போட வேண்டிய இன்ஷூரன்ஸை என் நண்பர் ஒரு நாளைக்குப் போட்டிருக்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் ஏழெட்டு பேருக்கு அறை ஏற்பாடு செய்வதன் சிரமங்களை யோசித்துக்கொள்ளுங்கள்.

என் கோவா பயணத் தேதியைக் கேட்ட அன்பரிடம் நான் “அராத்துவைத் தொடர்பு கொள்ளுங்கள்” என்று சொல்லி விட்டேன். சீனி கொஞ்ச நேரத்துக்கு முன்னால் என்னை அழைத்து, ”நீங்கள் சொல்லியிருக்க மாட்டீர்கள் என்று தெரியும். இருந்தாலும் கேட்கிறேன், இன்ன மாதிரி ஒருத்தர் தொடர்பு கொண்டு தேதி கேட்கிறார், அவர் கோவா வர விரும்புகிறார்” என்றார். நான் தான் மடை மாற்றினேன் என்று ஒப்புக்கொண்டேன். ஆனாலும் அந்த அன்பர் மேல் வந்த கோபத்தை அடக்க முடியவில்லை. அதனால்தான் இந்த ராத்திரியில் இதைத் தட்டிக்கொண்டிருக்கிறேன்.

யோவ், நீங்களெல்லாம் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? சீனி என்ன ட்ராவல் ஏஜென்ஸியா நடத்துகிறார்? ”நானும் உங்களோடு சேர்ந்து கொள்கிறேன்” என்று மெஸேஜ் அனுப்பினாராம் அன்பர். அங்கே அறை கொடுப்பவன் என்ன நமக்கு மச்சானா? முன்பு ஆறு பேர் சொன்னோம். இப்போது ஏழு பேர் என்றால் ஆஹா வாருங்கள் என்பானா அவன்? நீங்களும் என்ன என் முதுகிலா படுத்துக்கொள்வீர்கள்? ஒரு மாதத்துக்கு முன்பே கேட்டும் எப்படி ஊருக்குச் செல்லும் முதல் நாள் வந்து தாலி அறுக்கிறார்கள் பார்த்தீர்களா? இதுதான் இந்தியனின் புத்தி.

இவரைச் சுற்றியிருக்கும் மனைவி மக்கள் உற்றார் உறவினரை எண்ணி அச்சம் கொள்கிறேன்.