அவள் ஒரு பாடல் அனுப்பினாள்
கேட்டேன்.
நெஞ்சில் வந்து குடிகொண்ட நிலவு
பரவசம் பரவசம் என்றது
ஐயோ, இது சோகப்பாட்டு என்றாள்
நான் சிரித்தேன்
சோகமா? எங்கே இருக்கிறது?
இசையில் சோகம் உண்டா?
அது ஒரு பறவையின் றெக்கை,
காற்றைத் தழுவி எல்லைகளைத் தாண்டுவது
காதல் இசையின் நிழல்
எப்போதும் தொடரும்
எப்போதும் மாறும்
இசை பிரபஞ்சத்தின் முதல் சொல்
அதற்கு முன் மௌனம் கூட இல்லை
சோகமென்று அவள் அழைத்தாலும்
எனக்கு அது ஒரு மெல்லிய அழைப்பு
எங்கோ ஒரு நட்சத்திரத்தின் கிசுகிசுப்பு.
காதலும் இசையும் சொல்வதென்னவென்றால்.
சோகம் ஒரு பெயர் மட்டுமே
ஆனால் பரவசம் தேன்மழை
என் உயிரை உருக்கி
நின் காதலில் மூழ்கி
என் ஆன்மா தேனுகந்து பாடும் உன் அமுது.