ஒற்றையெழுத்து பதில்

நேற்றுதான் எழுதியிருந்தேன், ஒற்றையெழுத்து பதில் கொடுத்து மற்றவர்களின் மண்டை காய வைப்பது பற்றி. நான் எழுதி ஈரம் காய்வதற்குள் அதே விஷயம் நடந்தது.

ஒருவருக்கு ஒரு முக்கியமான விஷயம் பற்றி நாலு வாக்கியங்களில் அவர் பெயரையும் விளித்து விளக்கமாக ஒரு கடிதம் எழுதினேன். ஓகே என்று பதில் மின்னஞ்சல் வந்தது. செருப்பால் அடித்தது போல் இருந்தது. ஓகே சாரு என்று எழுதுவதற்கு உங்களுக்கு என்ன குடியா முழுகி விடும்? இப்படிப்பட்டவர்களோடுதான் நான் பேச வேண்டியிருக்கிறது. இதற்குக் கோபித்துக் கொண்டு வேறு நபரோடு பேசினால் இதை விட அவமானகரமாக செய்கிறார்கள். எனவே வேறு வழியில்லை.

இனிமேல் எனக்கு மின்னஞ்சல் செய்பவர்கள், வாட்ஸப் மெஸேஜ் அனுப்புபவர்கள் என்னை சாரு என்றோ சார் என்றோ அல்லது உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அப்படி அழைக்காமல் மெஸேஜ் அல்லது மின்னஞ்சல் அனுப்பினால் உங்களோடு நான் மேற்கொண்டு தொடர்பே வைத்துக் கொள்ளப் போவதில்லை. ஒருவரை அட்ரஸ் பண்ணாமல் மெஸேஜ் செய்வது மூர்க்கத்தனமானது. அப்படிச் செய்தால் உலகம் உங்களை வெறுக்கும். அந்த வெறுப்பை நீங்கள் சம்பாதிக்க விரும்பினால் உங்கள் விருப்பப்படி இருங்கள். ஆனால் என்னைத் தொடர்பு கொள்ளாதீர்கள். டியர் சாரு என்றெல்லாம் கூட அன்பு கொண்டு அழைக்க வேண்டாம். வெறுமனே சாரு என்று மட்டுமே அழைத்தால்கூட போதும். அது கூட இல்லாமல் ஓகே என்று பதில் சொல்வதெல்லாம் அடுத்தவரை அவமானப்பத்தும் செயல். it’s very rude.