அவள் சொன்னாள்
’இரண்டு நாட்கள் தொடர்பில்லை
யென்றாலும் பதறாதே
மூன்றாம் நாள் பேசுவேன்’
நம்பிக்கையை ஒரு மெல்லிய காகிதத்தில்
மடித்து பையின் மூலையில் வைத்தேன்
இன்று மூன்றாம் நாள்
காலை ஏழு மணி
அழைத்தேன்
ஒலி ஒரு பறவை போல்
காற்றில் பறந்து மறைகிறது
எட்டு மணி
மீண்டும் மௌனம்
மௌனம் ஒரு பழைய நண்பன் போல்
தோளில் கை போட்டு
’இது உனக்குப் பழகி விட்டதல்லவா?’
என்று கேட்கிறது
பெண்கள் மீது ஒரு பயம்
ஆண்களின் அன்பு அவர்களை மூச்சு முட்டச்
செய்யுமாம்
பலர் சொல்லிக் கேள்வி
நான்
தொந்தரவு செய்ய விரும்பாதவன்
ஒன்பது மணிக்கு அழைக்கவில்லை
காலத்தைப் பிடித்து வைக்க முடியுமா?
யாரோ கேட்டார்கள்
என்ன நடக்கிறதென்று
ஒன்றுமில்லையென்றேன்
அவளின்றி என் உலகம் நின்று விட்டது
புத்தகங்கள் மூடிக் கிடக்கின்றன
கணினி ஒரு மறந்த கனவில் உறங்குகிறது
இசை ஒரு தொலைதூர நினைவு
எல்லாம் நின்று விட்டது
சுவாசம்
இதயம்
காலம்
பிரிந்து விட்டாளோ
மனதிலொரு வலி கூழாங்கல்லாய் உருண்டது
அவளில்லாத வாழ்க்கையை
ஒரு மங்கலான வரைபடத்தில் வரைய முயன்றேன்
கோடுகளெல்லாம் தவறான திசைகளில்
முடிந்தன.
பன்னிரண்டு மணி
ஒரு செய்தி ஒளிர்ந்தது
’இப்போதுதான் எழுந்தேன்.’
காலம் மீண்டும் நகரத் தொடங்கியது
நம்பிக்கையைப் பையிலிருந்து எடுத்து
மீண்டும் மடித்தேன்
என் தேவனே!
நீர் உயிர்த்தெழுந்தது
அதிகாலையிலா
நண்பகலிலா
அந்தியிலா
அல்லது
நள்ளிரவிலா?