இப்போது என்னால் ஒரு அமெரிக்க, ப்ரிட்டிஷ் எழுத்தாளரைப் போலவே வெகு சரளமாக ஆங்கிலத்தில் நாவலோ சிறுகதையோ எழுத முடியும். சில பிழைகள் இருக்கும். அதை ஒரு எடிட்டரால் சரி செய்து விட முடியும். இதற்கு நான் செயற்கை நுண்ணறிவை நாடுவதில்லை. அந்த எந்திர மொழிபெயர்ப்பினால் இலக்கிய உலகில் எந்தப் பயனும் இல்லை. நீங்கள் நாலு வாக்கியத்தை எழுதி அதை செயற்கை நுண்ணறிவால் மொழிபெயர்த்து பதிப்பகத்திடம் கொடுத்தால் ஒரு நிமிடத்தில் அது செயற்கை நுண்ணறிவு என்று கண்டு பிடித்து விடுகிறார்கள். அதற்கு ஒரு மென்பொருள் இருக்கிறதாம். கடந்த ஏழெட்டு ஆண்டுகளாகப் போராடி நானேதான் ஆங்கிலத்தில் எழுதக் கற்றுக் கொண்டு விட்டேன். சான்று, நான் எழுதிய My Life, My Text. ஆங்கில மொழிபெயர்ப்பின் மூலம் கிடைக்கும் சாருவை விட இந்த நேரடியான சாரு எனக்கு நெருக்கமாக இருக்கிறார், இதுதான் நான் அறிந்த சாரு என்று சொன்னார் தருண் தேஜ்பால். ஆங்கிலமும் எளிமையாகவும், நேரடியாகவும், மனதைத் தொடுவதாகவும் இருப்பதாகச் சொன்னார். ஆனால் இப்போதும் என்னால் காம்ப்ளெக்ஸ் வாக்கியங்கள் எழுத முடியாது. சல்மான் ருஷ்டியின் ஆங்கிலத்தில் ஒரு பக்கம் முழுக்கவும் கூட முற்றுப்புள்ளியே இருக்காது. ஒரே வாக்கியம் ஒரு பக்கம். அப்படியெல்லாம் என்னால் எழுத இயலாது. ஆனால் வெகு அழகான ஆங்கிலம் என்று பெயர் எடுக்கும் அளவுக்கு எழுத முடியும். கடிதம் அல்ல. கதைகள். நாவல்கள்.
இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால், நேற்று ஒரு நண்பரோடு நான் ஆங்கிலத்திலும், ஃப்ரெஞ்சிலும், ஜெர்மன் மொழியிலும் செல்ல வேண்டிய அவசியம் பற்றிப் பேச வேண்டி நேர்ந்தது. நானாக ஆரம்பிக்கவில்லை. அப்படி ஒரு கட்டாயம் ஏற்பட்டது. மொழிபெயர்ப்புக்காக நான் லட்சக்கணக்கில் செலவழிப்பதாக நண்பர் வருத்தப்பட்டார். உண்மையான வருத்தம். ஆனால் அந்த வருத்தம் எனக்குப் பெரும் எரிச்சலையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியது.
காரணம்,
நான் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக என் நாவல்கள் ஆங்கிலத்திலும் ஃப்ரெஞ்சிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று கடும் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறேன். அதற்காகப் பெரும் பணம் செலவாகிக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட நாற்பது லட்சம். ஸ்பானிஷ், ஃப்ரெஞ்ச், ஆங்கிலம் – கடைசியில் எல்லாம் குப்பைக்குப் போய் விடும். ஃப்ரெஞ்ச்தான் செம ரகளை. பதினைந்து ஆண்டுகள் இருக்கும். ஃப்ரான்ஸிலேயே பிறந்து வளர்ந்த ஒரு பாண்டிச்சேரி அம்மாளின் அறிமுகம் ஒரு நண்பர் மூலம் கிடைத்தது. அந்த அம்மாள் ஒரு மொழிபெயர்ப்பாளர். அவரை எனக்கு அறிமுகப்படுத்திய நண்பருக்கு ஃப்ரெஞ்ச் தெரியும். அம்மாள் ஸீரோ டிகிரியை மொழிபெயர்க்க ஆரம்பித்தார். ஒரு சில அத்தியாயங்களை மாதிரிக்கு அனுப்பினார். அவரை எனக்கு அறிமுகப்படுத்திய நண்பரிடம் அத்தியாயங்களைக் கொடுத்து, மேற்கொண்டு செல்லலாமா என்று பார்க்கும்படி சொன்னேன்.
நண்பருக்கு நேரம் இல்லை. ஆனால் பிக் பாஸ் பற்றி என்னிடம் மணிக்கணக்கில் பேசுவார். முன்பணம் அம்பதாயிரம் கொடுக்க வேண்டும். நண்பரிடம், ஓரிரு அத்தியாயங்களைப் படித்துப் பார்க்கும்படி மீண்டும் சொன்னேன். நண்பருக்கு நேரம் இல்லை. ஆனால் பரத நாட்டியம் கற்றுக் கொள்ள, கன்னடம் கற்றுக் கொள்ள, கராத்தே கற்றுக் கொள்ள என்று எல்லாவற்றுக்கும் நேரம் இருந்தது.
நாவலை முடித்துக் கொடுத்தார் அந்தத் தமிழ் ஃப்ரெஞ்ச் அம்மாள். நானும் மீதி அம்பதாயிரத்தைக் கொடுத்தேன். மொத்தம் ஒரு லட்சம். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்.
குப்பை என்று சொல்லக் கூட லாயக்கில்லை என்ற மதிப்பீட்டுடன் அந்த மொழிபெயர்ப்பு வைபவம் முடிவுக்கு வந்தது.
வளர்த்திக்கொண்டு செல்ல விரும்பவில்லை. இப்படியே நாற்பது லட்சம் குப்பைக்குப் போயிற்று. சமீபத்தில், அதாவது, கடைசியில் நடந்ததை மட்டும் சொல்லி இதை முடிக்கிறேன். என் படைப்புகள் பல சிங்கள மொழியில் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. அற்புதமான மொழிபெயர்ப்பு என்றார்கள். ஆனால் பிரசுரிக்க பதிப்பகம் இல்லை.
தவிர, தேகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. பதிப்பகம் ஏற்கவில்லை. மொழிபெயர்ப்பு தேறவில்லை. அன்பு நாவல் ஃப்ரெஞ்சில் மொழிபெயர்க்கப்பட்டது. செப்பனிடுவதற்குக் கூட லாயக்கில்லை என்று நிராகரிக்கப்பட்டது. நல்லவேளை, இவர்கள் என் நெருங்கிய நண்பர்கள். பணத்துக்காக செய்யவில்லை. அதனால் நான் பிழைத்தேன். ஆனால் அவர்களின் அரிதான நேரம் வீணாயிற்று. ஒன்றிரண்டு அத்தியாயங்களைக் கொடுத்து அபிப்பிராயம் கேட்டிருந்தால் நேரத்தை மிச்சம் செய்திருக்கலாம்.
கடைசி கடைசியாக, நந்தினியின் மூலமாகத்தான் ஆங்கில மொழிபெயர்ப்பு பிரமாதமாகப் போய்க்கொண்டிருக்கிறது. வட இந்தியா முழுவதும் மொழிபெயர்ப்பைப் புகழ்கிறார்கள்.
இப்போது ஒரு நண்பர் என் மொழிபெயர்ப்புச் செலவு பற்றிக் கவலைப்படுகிறார். அவருக்கு நான் ஒரு பத்தொன்பது நிமிட வாய்ஸ் மெஸேஜ் அனுப்பினேன். அதன் சுருக்கத்தை இங்கே சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.
இப்போது தமிழில் எழுதும் சுமார் ஐம்பது எழுத்தாளர்களின் நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. மிகப் பிரபலமான ஆங்கிலப் பதிப்பகங்கள் அதை வெளியிட்டிருக்கின்றன. ஆனால் இவர்களில் நானும் ஜெயமோகனும் மட்டுமே இந்தியா முழுவதும் ஆங்கில வாசகர்களால் அறியப்பட்டிருக்கிறோம். அதிலும் ஸீரோ டிகிரி ஆங்கில மொழிபெயர்ப்பு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் ஐம்பது முக்கிய நூல்கள் என்ற பட்டியலிலும் இடம் பெற்றிருக்கிறது. அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் மாடர்ன் ஏஷியன் கிளாஸிக் என்று வரிசைப்படுத்தப்பட்டு கற்பிக்கப்படுகிறது.
Tomaž Šalamun ஸ்லோவேனியக் கவிஞர். பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு இலக்கியச் சந்திப்பின்போது அவரோடு மூன்று நாள் தங்கியிருக்கிறேன். அவர் ஸீரோ டிகிரியை வாசித்தவர். அவர் பெயர் சில முறை நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. இப்போது அவர் இல்லை. அவர் தீர்மானமாக ஒரு விஷயம் சொன்னார். ”உங்கள் எழுத்து ஆங்கிலத்திலோ ஃப்ரெஞ்சிலோ வந்து எந்தப் பயனும் இல்லை. ஆனால் ஜெர்மன் மொழியில் வந்தால் அந்த நாட்டில் நீங்கள் ஹெர்மன் ஹெஸ்ஸே அளவுக்குக் கொண்டாடப்படுவீர்கள்.”
அதை நான் புரிந்து கொண்டேன். ஏனென்றால், நான் ஜெர்மன் சினிமாவும், ஃப்ரெஞ்ச் தத்துவமும்தான் என் எழுத்தின் ஆதார சக்தி, என் எழுத்தின் மூல ஆதாரம். அதிலிருந்துதான் நான் பிறந்தேன்.
என் செலவு பற்றிக் கவலைப்பட்ட நண்பரிடம் துயருற்றுக் கேட்டேன். என் வயது எழுபத்து மூன்று. இன்னும் எத்தனை ஆண்டுகளில் என் நாவல்கள் ஆங்கிலத்தில் வந்து, இன்னும் எத்தனை ஆண்டுகளில் அது ஆங்கிலத்திலிருந்து ஜெர்மன் மொழிக்கு மொழிபெயர்க்கப்படும்? தொமாஸ் சொன்னது எப்போது நடக்கும்?
ராஸ லீலாவும், அன்புவும், ஜோடிப்புறாவும் உடனடியாக ஆங்கிலத்தில் வர வேண்டும். அதற்காக நான் லட்சங்கள் அல்ல, கோடி ரூபாய்கூட செலவு செய்யத் தயார். என் மரணத்துக்குள் நான் ஃப்ரெஞ்சிலும் ஜெர்மன் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டாக வேண்டும்.
ஏனென்றால், நான் ஹரூகி முராகாமியை விடப் பல மடங்கு உயரத்தில் நிற்பவன். ஆனால் ஹரூகியின் நாவல்கள் இன்று கோடிக்கணக்கில் விற்பனையாகின்றன. பன்னிரண்டு கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஜப்பானில் அவர் நூல்களை மூன்று கோடி பேர் வாங்குகிறார்கள். மாரத்தன் ஓட்டக்காரரான அவரால் இன்று சாலையில் நடக்கவே முடியவில்லை, மக்கள் சூழ்ந்து கொள்கிறார்கள், நான் ஐரோப்பா போய் விடப் போகிறேன், என் ப்ரைவஸி போய் விட்டது என்று அழுகிறார் ஹரூகி.
இன்னொரு முராகாமி இருக்கிறார். ரியூ முராகாமி. ஹரூகி அளவுக்கு சர்வதேசப் புகழ் பெற்றவர் அல்ல. ஆனாலும் அவர் நூல்கள் ஒரு கோடி விற்கின்றன. பெங்களூர் புத்தக விற்பனை நிலையங்களில் என் நாவல்கள் இல்லை. ஆனால் ரியூ முராகாமியின் அத்தனை நாவல்களும் உள்ளன. கல்லூரி மாணவிகள் வாங்கிச் செல்கிறார்கள்.
தன்னுடைய ஒவ்வொரு புத்தகம் விற்றதும் கிடைக்கும் ராயல்டியில் அந்தப் புத்தகத்தை ரியூ முராகாமி ஒரு திரைப்படமாக இயக்கி விடுகிறார். அந்தப் படம் உடனடியாக ஜப்பானிலும் சர்வதேச அக்ரஹாரமான ஆஸ்திரேலியாவிலும் தடை செய்யப்பட்டு விடுகின்றன. ஜப்பானில் புத்தகமாகப் படிக்கலாம். படுதாவில் சலனச் சித்திரமாகப் பார்க்கக் கூடாது. கலாச்சாரம் கெட்டு விடும்.
என்னைப் போல் இன்று ஆட்டோஃபிக்ஷன் எழுதுகிறார் ஒரு நார்வேஜிய எழுத்தாளர். பெயர் Karl Ove Knausgaard. குனௌஸ்கார்ட் என்பது உச்சரிப்பு. இவர் ஆறு தொகுதிகளில் தன் வாழ்வை வைத்து மை ஸ்ட்ரகிள் என்று ஒரு ஆட்டோஃபிக்ஷன் நாவல் எழுதியிருக்கிறார். மொத்தம் 3700 பக்கம். நார்வேஜியன் மொழியில்தான் எழுதினார். என்னைப் போல் ஆங்கிலம் கற்றுக் கொண்டு ஆங்கிலத்தில் எழுதவில்லை. அது நார்வேயில் ஐந்து லட்சம் பிரதிகள் விற்றது. நார்வேயின் மக்கள் தொகை 56 லட்சம். அதாவது, பதினோரு பேரில் ஒருத்தர் ஒரு பிரதியை வாங்கியிருக்கிறார். கணக்குப் போட்டுப் பாருங்கள். 56 லட்சம் பேர் மக்கள் தொகை. புத்தகம் விற்றது ஐந்து லட்சம். நார்வே தேசத்துக்குள். சர்வதேச அளவில் விற்றது கோடிக்கணக்கில். ஏனென்றால், உலகின் நம்பர் ஒன் பதிப்பகமான Simon & Schuster மூலம் ஆங்கிலத்தில் வெளியானது.
நேற்று வர்ஷாவிடம் பேசினேன். ஜோடிப்புறா எத்தனை பிரதிகள் விற்றிருக்கிறது என்று கேட்டேன். நாற்பது என்றார்.
ஒன்பது கோடிக்கு நாற்பது பிரதி. 56 லட்சம் மக்கள் தொகைக்கு 5 லட்சம் பிரதி விற்பனை. அதனால்தான் அமெரிக்காவின் ஸைமன் ஷுஸ்டர் பதிப்பகத்தில் வெளியிடுகிறார்கள். இங்கே சொந்த நாட்டில் நாற்பது பிரதி விற்றால் எவன் ஈடுபாடு காட்டுவான்? இத்தனைக்கும் ஜோடிப்புறா பற்றி சுரேஷ் பிரதீப் ஒரு அருமையான மதிப்புரை வேறு எழுதியிருக்கிறார். நாவலைக் கூட விடுங்கள். அதன் தயாரிப்பு பற்றி அவரது வார்த்தைகள்:
”நூலின் வடிவமைப்பு பற்றி ஒன்று சொல்ல வேண்டும். தனிப்பதிவாகவே எழுதத்தான் நினைத்தேன். கொஞ்சம் இங்கு சொல்கிறேன்.
நான் பயணிக்கும் ரயில் கோடை விடுமுறை என்பதால் கூட்டமாகத் தொடங்கிவிட்டது. தரையில் உட்காரகூட இடம் கிடைப்பதில்லை. இப்படியான சூழலில் இந்நாவலை காலையில் நின்று கொண்டே நூற்றி இருபது பக்கங்கள் வாசித்தேன். காரணம் இதன் வடிவமைப்பு. ஒற்றைக் கையில் நூலினை விரித்துப் பிடித்துவிட முடிகிறது. இன்னொரு கையால் ரயில் கம்பியை பிடித்தபடி நின்றுகொண்டே வாசிக்க முடிகிறது. கெட்டி அட்டையில் நல்ல வடிவமைப்புடன் கூடிய நூல்.”
இந்த வடிவமைப்புக்கான பாராட்டு முழுவதும் வர்ஷாவுக்கும் இதைத் தயாரித்துக் கொடுத்த சுதர்ஸன் க்ராஃபிக்ஸ் நிறுவனத்துக்கும் லே அவ்ட் ஆர்ட்டிஸ்ட் காளத்திக்கும்தான் சேர வேண்டும்.
ஒரு பைசா லாபம் இல்லாமல் அடக்க விலையிலேயே விலை வைத்திருக்கிறார்கள்.
இருந்தும் நாற்பது பிரதிதான் விற்றிருக்கிறது.
அதனால்தான் நான் தமிழில் எழுதுவதை விரும்பவில்லை. ஆங்கிலத்தில் செல்ல வேண்டும் என்று தீவிரமாக முயற்சிக்கிறேன். ஏனென்றால், நான் எழுதுவது தமிழ்ச் சமூகத்துக்கு மட்டும் அல்ல. சர்வதேச வாசகர்களுக்காகவே எழுதுகிறேன்.
எக்ஸைல் வெளிவந்த போது நிலைமை இத்தனை மோசமாக இல்லை. முன்பதிவிலேயே 800 பிரதிகள் விற்றது. டிசம்பர் முதல் தேதியிலிருந்து ஏழாம் தேதி வரைதான் முன்பதிவு. 2014இல்.
புத்தகம் வெளியானது ஜனவரி 5, 2015. விற்பனை 300 பிரதிகள்.
ஜனவரி புத்தக விழாவில் 300 பிரதிகள்.
தமிழ் இந்து கிழக்கு பத்ரியிடம் எத்தனை பிரதிகள் விற்றது என்று கேட்ட போது பத்ரி 300 பிரதிகள் என்றார். அவர் சொல்லியிருக்க வேண்டியது 1200. ஏன் இப்படிச் சொன்னார்? மிகவும் நல்லவர்.
பிறகு, ஸீரோ டிகிரி பதிப்பகம் மூலமும் எக்ஸைல் 500 பிரதிகள் விற்றது.
இப்போது ஜோடிப்புறா நாவல் நாற்பது பிரதிகள் விற்றிருக்கிறது. 56 லட்சம் மக்கள் தொகை கொண்ட நார்வேயில் குனௌஸ்கார்டின் 3700 பக்க நாவல் ஐந்து லட்சம் பிரதி விற்பனை. இங்கே ஒன்பது கோடி மக்கள் தொகை கொண்ட இந்தத் தமிழ்நாட்டில் நான் நாற்பது பிரதி விற்றிருக்கும் என் நாவல் விற்பனைக்கு ப்ளோஜாப் பண்ண வேண்டிய நிலை. தமிழ் எழுத்தாளனாகப் பிறந்ததன் தலையெழுத்து.