சண்முகம் மாமாவும் குட்லியும்…

அக்கார அடிசிலும் மாசிக் கருவாடும் என்ற தலைப்பில் என் கட்டுரைத் தொகுப்பு தயாராகி விட்டது. இன்னும் இரண்டொரு வாரத்தில் விற்பனைக்கு வரும். இப்படியாக வரும் அக்டோபருக்குள் என்னுடைய ஐம்பது நூல்கள் வெளியாகும். இதுவரை ஐந்தோ ஆறோ வந்திருக்கிறது. எல்லாம் ராஸலீலா பதிப்பகம். இத்தனைக்கும் காரணம், ஸ்ரீராம். அவர்தான் எல்லா கட்டுரைகளையும் அதன் உள்ளடக்கத்தை வைத்துத் தொகுத்தார். அது சாதாரணமான வேலை அல்ல. ஏழெட்டு ஆண்டுகளாக இதைச் செய்திருக்கிறார். மேற்கத்திய எழுத்தாளர்களுக்கு அவர்களின் வாசகிகள்தான் செய்வார்கள். இங்கே பெண்களுக்கு வேறு வேலை இருப்பதால் அது நடக்கவில்லை. ஸ்ரீராம் மூலம் நடக்கிறது. அதிலும் அவர் ஒரு மருத்துவர். அந்தப் பணிக்கு இடையே இதைச் செய்திருக்கிறார்.

இத்தனை நூல்களும் வெளிவருவதற்கு இன்னொருவரும் காரணம். அவர் பவானியைச் சேர்ந்த வர்ஷா தேவி. வர்ஷாவிடம் என் நண்பர் ஒருவர் புத்தக விற்பனையில் ஈடுபட்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டு அவரது தொலைபேசி எண்ணைக் கொடுத்துத் தொடர்பு கொள்ளச் சொன்னேன். அந்த நண்பரோ வர்ஷாவிடம் எகிடுதகிடாகப் பேசியிருக்கிறார். இந்தத் துறைக்கு வராதீர்கள், புத்தகங்களை விற்பனைக்குக் கொடுத்தால் பணம் வரும் என்று நினைக்கவே நினைக்காதீர்கள், ஒருத்தர் கூட பணம் கொடுக்க மாட்டார்கள், இத்யாதி.

நண்பர் இறை பக்தி மிகுந்தவர். அவருக்கு ஒரு வாய்ஸ் மெஸேஜ் அனுப்பினேன். இன்னமும் நான் பழைய ஆட்கள் மாதிரி “இறை பக்தி உள்ளவர்கள் அறம் சார்ந்துதான் வாழ்கிறார்கள்” என்று நம்புபவனாக இருக்கிறேன் என்பது என் செய்தியில் ஒரு வாசகம்.

பதிலுக்கு நண்பர் இரண்டு வாய்ஸ் மெஸேஜ் அனுப்பினார். அதில் அவர் பணம் பற்றிய என் புகார் பற்றி வாயே திறக்கவில்லை. புத்தகம் விற்பவர்கள் யாருமே பணம் கொடுக்க மாட்டார்கள் என்று பதிப்பகத் துறைக்குப் புதிதாக வரும் ஒருவரிடம் யாராவது சொல்வார்களா? வர்ஷா என்ன உங்களிடம் ஆலோசனையா கேட்டார்? நீங்கள் எங்கள் பதிப்பக நூல்களை வாங்கி விற்பீர்களா? இதுதான் வர்ஷா கேட்டது.

ஆனால் நண்பரின் வாய்ஸ் மெஸேஜில் ஒரு பாதகமான, ஆட்சேபணைக்குரிய ஒன்றை கவனித்தேன். அவர் வர்ஷா பற்றிக் குறிப்பிட்ட நாலைந்து இடங்களிலும் தவறாமல் அந்தம்மா என்றே சொன்னார். சொல்லி விட்டு, நாலைந்து தடவையும் மேடம் என்று மாற்றினார். அந்தம்மா என்று சொல்லி விட்டு உடனே அந்த மேடம் என்று மாற்றினார். இப்படியே ஒரு முறை கூடத் தவறாமல் நாலைந்து முறையும் சொன்னார். அந்தம்மா என்பது எத்தனை பாரதூரமான பிரயோகம் என்று அவருக்குத் தெரிந்திருக்கிறது. அதனால்தான் உடனே உடனே மேடம் என்று மாற்றிக் கொள்கிறார். நாம் யாரையாவது குறிப்பிடும்போது அந்த ஆள் என்போமா?

இது என்ன பிராமணத் திமிரா? அல்லது, பெண்களை அந்தம்மா என்றே குறிப்பிட்டுப் பழக்கமா?

வர்ஷாவிடம் கேட்டேன், கவுண்டர் பெண்களெல்லாம் வீரத்துக்கும் துணிச்சலுக்கும் பேர் போனவர்களாயிற்றே? ஏன் சும்மா விட்டீர்கள்?

உங்களுடைய நண்பர் என்று சொன்னதால் நான் எதுவும் பேசவில்லை என்றார் வர்ஷா.

இதை நான் வர்ஷா சொல்லி மட்டும் எழுதவில்லை. இருவருக்கும் நடந்த உரையாடல் பதிவைக் கேட்ட பிறகே எழுதுகிறேன்.

போகட்டும். இப்போது அக்கார அடிசிலும் மாசிக் கருவாடும் நூலிலிருந்து ஒரு சிறிய கட்டுரையை இங்கே தருகிறேன். ஒன்பது ஆண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரை. தலைப்பு: சண்முகம் மாமாவும் குட்லியும்…

சண்முகம் மாமாவும் குட்லியும்… 

வெட்கம் மானம் சூடு சொரணை ரோஷம்… இந்த ஐந்து நற்குணங்களும் என்னிடம் நினைவு தெரிந்த நாளிலிருந்தே கிடையாது.  ஏன் என்றெல்லாம் யோசித்ததில்லை.  இதனால் எனக்குப் பல வழிகளிலும் லாபமாக இருந்ததால் அப்படியே இருக்கட்டும் என்று விட்டு விட்டேன்.  ஆனால் ஒரே ஒரு விதிவிலக்கு.  என் எழுத்தை மட்டமாகப் பேசுபவர்களை மட்டும் என் நட்பு வட்டத்திலிருந்து விலக்கி விடுவேன்.  அவ்வளவுதான்.  அவ்வளவேதான்.  அவர்களோடு பகைமை பாராட்டுவதோ திட்டுவதோ எல்லாம் கிடையாது.  விலகி விடுவேன்.  நமக்கு எழுத்துதான் வாழ்க்கை, உயிர், உடல், மூச்சு, பிராணன் எல்லாமே.  அப்படிப்பட்ட எழுத்தை நண்பன் மதிக்கவில்லை என்றால் அவனை நம் நட்பு வட்டத்தில் வைத்திருப்பதா, விலகி விடு என்ற மனோபாவம்.  அவ்வளவுதானே தவிர வேறு எந்தவிதப் பகையோ புகைச்சலோ கிடையாது

மனுஷ்ய புத்திரன் என்னைத் திட்டி ஃபேஸ்புக்கில் எவ்வளவோ எழுதியிருக்கிறார்.  ஃபேஸ்புக்கில் நான் அவரை விலக்கி வைத்திருப்பதால் அதையெல்லாம் படித்து இன்புறும் வாய்ப்பு எனக்குக் கிடைப்பதில்லை என்றாலும் நண்பர்கள் சொல்வார்கள்.  அப்படிச் சொல்லும் நண்பர்களையும் விலக்கி விடுவேன் என்று சொன்னதால் இப்போது அந்த நண்பர்களும் என்னிடம் சொல்வதில்லை.  ஆனால் ஃபேஸ்புக்கில் மனுஷ்ய புத்திரன் என்னைத் திட்டுவதைக் கண்ணுறும் போதெல்லாம் எனக்குக் கோபமே வராது.  ஏனென்றால், அதில் எதுவுமே என் எழுத்தின் மீதான விமர்சனமாக இருக்காது.  அபிப்பிராய பேதம் பற்றின காய்ச்சலாக இருக்கும்; அது சம்பந்தமான வசையாக இருக்கும்.  அதையெல்லாம் நான் பொருட்படுத்துவதே இல்லை.  சாரு ஒரு பொய்யன், சாரு ஒரு கோழை என்றெல்லாம் எழுதுவது என்னைப் பொருத்தவரை பாராட்டு வார்த்தைகள்.  ஆனால் ஊட்டியில் ஒரு கானகத்தில் வைத்து மனுஷ்ய புத்திரன் என் எழுத்து பற்றி மட்டமாகப் பேசி விட்டார் என்பதாக நான் புரிந்து கொண்டேன்.  அவர் அப்படித்தான் உண்மையிலேயே நினைக்கிறாரா, சும்மா விவாதத்தின் உஷ்ணத்தில் சொன்னாரா என்றெல்லாம் பல பிரச்சினைகள் அதில் இருக்கின்றன என்றாலும் நமக்குப் புரிவதைத்தானே நாம் எடுத்துக் கொள்ள முடியும்?

வாழ்க்கையில் முதல்முதலாக மனுஷ்ய புத்திரன் விஷயத்தில் ஆசுவாசம் அடைந்தேன்.  அப்பாடா, ராகு விட்டு விட்டது.  நம் எழுத்தைப் பற்றி நண்பன் படுமட்டமாக நினைக்கிறான்.  இனிமேல் நமக்குப் பூரண சுதந்திரம் கிடைத்து விட்டது.  இனிமேல் வாழ்க்கையில் வசந்தம்தான்.  இப்படியெல்லாம் நினைத்து மனுஷ்ய புத்திரன் என்ற பெயரை என் வாழ்வின் நினைவுப் பெட்டகத்திலிருந்து தூக்கி விட்டேன்.

என்னைப் பொருத்தவரை நான் மிகவும் கொண்டாடிய ஒரு நட்போ, உறவோ பிரிந்து விட்டால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.  துயரம் கொள்ள மாட்டேன்.  மற்றவர்களுக்கென்றால் பைத்தியமே பிடித்து விடும்.  இதனால் நட்பாக இருந்த போது பொய் நட்பு பாராட்டினேன் என்றும் அர்த்தமல்ல.  உயிருக்குயிராக நேசிப்பேன்.  விலகி விட்டால் அடடா, என்ன ஒரு பேரின்பம் என்று ஓடி விடுவேன்.

இந்த இடத்தில் என்னுடைய முதல் நாவலான எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் என்ற நாவலில் ஒரு இடம்.  அந்த நாவலை நான் விரிவாக எழுதும் திட்டத்தில்  அப்படியே விட்டு வைத்திருக்கிறேன்.  அதனால்தான் மறுபதிப்பு இல்லாமல் இருக்கிறது.  மேலும், அதிலிருந்து ஒரு அத்தியாயத்தை உருவி எக்ஸைலில் போட்டு விட்டேன், அவசியம் கருதி.  அதனாலும் அந்த நாவலுக்கு மறு பதிப்பு இல்லாமல் இருக்கிறது.  அதில் சண்முகம் மாமா என்று ஒரு பாத்திரம் வருவார்.  சூர்யாவின் தாய் மாமா.  அவருடைய குடி நண்பர் குட்லி.  இருவரும் தினமும் குடிப்பார்கள்.  ஒருநாள் சண்முகம் மாமாவை கள்ளுக்கடையில் வைத்து குட்லி வெட்டி விட்டார்.  உடம்பில் இருபத்து நான்கு இடங்களில் வெட்டு.  எங்கள் வீடு பூராவும் ரத்த வெள்ளம்.  அம்மாதான் மருத்துவமனையிலேயே இருந்து சிசுருக்ஷை செய்து பிழைக்க வைத்தார்கள்.

வீட்டுக்குத் திரும்பிய சண்முகம் மாமா செய்த முதல் வேலை குட்லியைப் பார்க்கப் போனதுதான்.  அப்போதுதான் அம்மா எனக்கு அந்த வார்த்தைகளை அறிமுகப்படுத்தினார்.  ஏண்ணே, உங்களுக்குக் கொஞ்சமாச்சும் வெக்கம் மானம் சூடு சொரண ரோஷம் இருக்கா?  சண்முகம் மாமாவிடம் என் அம்மா கேட்ட கேள்வி.

என்ன இருந்தாலும் மாமாவின் ‘ஜீன்’தானே என்னிடமும் ஓடும்?  அதனால்தான் எனக்கும் அந்த ஐந்து நற்குணங்களும் இல்லாமல் போனதோ என்னவோ.

ஊட்டி சம்பவத்துக்குப் பிறகும் கொஞ்சம் கூட வெட்கம் மானம் சூடு சொரணை ரோஷம் எதுவும் இல்லாமல் நாளை கவிக்கோ அரங்கில் நடக்க இருக்கும் மனுஷ்ய புத்திரன் கவிதை வெளியீட்டு நிகழ்வுக்கு வரலாம் என்று முடிவு செய்து விட்டேன்.  ஒரே காரணம்தான்.  இந்த இலக்கிய உலகில் என்னைப் போலவே இன்னொருத்தரும் வெட்கம் மானம் சூடு சொரணை ரோஷம் எதுவும் இல்லாமல் இருக்கும் விஷயம் எனக்குத் தெரிந்து விட்டது.  வேறு யாருமல்ல; மனுஷ்ய புத்திரன்தான் அது.

இவ்வளவு நடந்த பிறகும் என்னைத் தன் விழாவுக்கு அழைத்து ஒரு கடிதம் எழுதியிருந்தார் மனுஷ்ய புத்திரன்.  அப்போதுதான் அவரும் என்னைப் போல்தான் என்று எனக்குத் தெரிய வந்தது.  இதன் விசேஷம் உங்களுக்குப் புரிகிறதா?  உலகிலேயே இப்படி வெட்கம் மானம் சூடு சொரணை ரோஷம் எதுவும் இல்லாமல் மனிதர்கள் வாழ்வது மிகவும் அரிது.  அப்படிப்பட்ட நிலையில் ஒரே மொழியில் இரண்டு படைப்பாளிகள் அதிலும் பக்கத்துப் பக்கத்துத் தெருவில் வாழ்வது அரிதிலும் அரிது.  எனவேதான் அவர் என் எழுத்து பற்றி சொன்ன கெட்ட வார்த்தைகளை ஒரு ‘புறாக் கூண்டில்’ போட்டு விட்டுப் பழையபடியே நட்பாகி விடுவது என்று முடிவெடுத்து விட்டேன்.

ஒரே ஒரு சோகம்தான்.  இனிமேலாவது நிம்மதியாக வாழலாம் என்று நினைத்தேன்.  இரண்டே மாதம்தான் அந்த நிம்மதி நீடித்தது.  ம்… சூடு சொரணை இல்லாத உலகம்…

நாளை கவிக்கோ அரங்கில் சந்திக்கலாம்.  ஆனால் மேடைக்கு அழைத்தால் வர மாட்டேன்.  Beware!

***

பின்குறிப்பு:  சண்முகம் மாமா, குட்லி பற்றிக் குறிப்பிட்டதற்குக் காரணம் புரிகிறதா, அல்லது அதையும் விளக்க வேண்டுமா?  சண்முகம் மாமா தான் சாரு நிவேதிதா.  குட்லிதான் மனுஷ்ய புத்திரன்.

***

மே 28, 2017