என் பெயர் ரோஷ்ணி என்று சொல்ல வேண்டிய தேவையில்லை. தலைப்பிலேயே என் பெயர் வந்து விட்டது. நான் கண்ட கொடுங்கனாவுக்குள் செல்வதற்கு முன்னால் என்னைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்.
என் வயது இருபத்தாறு. திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது என்ற தீவிரமான முடிவில் இருக்கிறேன். அதற்கான காரணத்தை ஆராய்ந்தால் இது நாவலாகப் போய் விடும். அது இப்போது நமக்குத் தேவையில்லை. எப்போதாவது நான் ஒரு நாவல் எழுதினால் அதற்காக இந்த விஷயத்தை நான் பாதுகாத்து வைத்திருக்கிறேன். நம்முடைய இப்போதைய விஷயம் நான் கண்ட கொடுங்கனா.
கணவன் பெயர் அபிநந்தன். விசேஷமாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. எனக்கு எந்தப் பிரச்சினையும் தர மாட்டான். என் விருப்பங்களுக்குக் குறுக்கே நிற்க மாட்டான். அதுவே பெரிய வரம் இல்லையா, இந்தக் காலத்தில்? அந்த வரைக்கும் நான் நம்பாத கடவுளுக்கு நன்றி. ஏன் நம்பிக்கை இல்லையா? அதுவும் நாவலுக்கான விஷயம்தான். இப்போது தேவையில்லை.
நான் யுபிஎஸ்ஸி தேர்வுக்காகப் படிக்கிறேன். அதைப் பற்றி என்ன சொல்வது? ஏற்கனவே இரண்டு பேர் என்னை மெண்டல் என்று சொல்லி விட்டார்கள். ஒன்று அபி. இன்னொன்று, என் ஆசானின் உற்ற நண்பன். ஆனால் இவர்கள் சொன்னது பற்றி எனக்கு மயிர் அளவு கூட கவலையில்லை. ஏனென்றால், என்னைப் பொருத்தவரை இந்த இரண்டு பேருமே முழு மெண்டல்கள் என்பதில் ஒரு சிறிதும் சந்தேகமே இல்லை. ஆனால் என் கவலை என்னவென்றால், இந்தத் தேர்வை முடிப்பதற்குள் நான் மெண்டலாகி விடுவோமோ என்பதுதான். அப்படி இருக்கிறது, இந்தத் தேர்வுக்குப் படிப்பது.
இந்தப் படிப்பு சமாச்சாரத்தால் அபி ஒரு அறையிலும் நான் ஒரு அறையிலுமாகத்தான் உறக்கம். இரவு எத்தனை மணி வரை விழித்திருந்து படிப்பேன் என்பதற்கு எந்தக் கணக்கும் இல்லை. சமயங்களில் அதிகாலை வரை கூட ஆகி விடுகிறது. ஆனால் எப்போது படுத்தாலும் ஐந்து மணி நேரம் தூங்கி விடுவது என்று வைத்திருக்கிறேன். அபியும் கடுமையான ஒத்துழைப்பு தருகிறான். ஆனால் எப்போது பார்த்தாலும் படி படி என்று நச்சரிக்கும்போதுதான் கடுப்பு மயிராகிறது. டேய் எருமை, உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போடா என்று கத்தி விடுகிறேன் சமயங்களில். நல்லதுக்குக் காலமில்லை என்று முணகிக்கொண்டே எஸ்கேப் ஆகி விடுவான்.
இப்போது பிரச்சினை என்னவென்றால், நான் ஐந்து மணி நேரம் தூங்குகிறேனா? அந்தத் தூக்கத்துக்கு ஒரு கேடு வந்து சேர்ந்திருக்கிறது. ஐந்து மணி நேரமும் மாற்றி மாற்றி கொடுங்கனாக்கள். கனவு நிகழும்போது அது நிஜம் போலவே இருப்பதுதான் இன்னொரு கொடுமை. தினமுமே இந்த வதைதான் என்றாலும், கடந்த இரண்டு தினங்களின் கனவுகளை மட்டும் சொல்லி விடுகிறேன். இரண்டுமே கொலைக் கனவுகள்தான்.
முந்தாநாள் கனவில் ஒரு பெரிய கூட்டம் என்னைக் கொலை செய்ய ஓடி வருகிறது. இது ஒரே ஒரு வாக்கியம்தானே? இதை வாசிக்க உங்களுக்கு ஒருசில நொடிகள்தானே ஆகியிருக்கும்? ம்ஹும். இதுவே என் ஆசானாக இருந்தால் பத்து பக்கங்களில் எழுதியிருப்பார். நான் அப்படிப்பட்ட பிறவி எழுத்தாளர் இல்லையே? சும்மா மழைக்கு ஒதுங்கியது போல் அல்லவா எழுத்தின் பக்கம் ஒதுங்கியிருக்கிறேன்? அதுகூட என் ஆசான் பயிற்றுவித்ததுதான். எழுது. எழுத்தே ஔஷதம். எழுத்தே நம்மை உய்விக்கும். எப்படி என்று கேட்டேன். அவர் சொன்ன உதாரணத்தைக் கேட்டால் உங்களுக்கு அருவருப்பாக இருக்கும். இருந்தாலும் சொல்லி விடுகிறேன். எழுத்து என்பது நம் உள்ளே இருக்கும் நஞ்சைக் கக்குவது போலவாம். ஐயோ, நஞ்சை எப்படி வாசகர்கள் படிக்க முடியும் என்று கேட்டேன். நமக்குத்தான் அது நஞ்சு. வெளியே வந்து விழுந்து விட்டால் அது அமிர்தம் என்றார் ஆசான். நாகத்தின் மாணிக்கத்தைப் போல என்று வேறோர் உதாரணமும் கொடுத்தார்.
ஆனால் ஆசானின் எழுத்தையே பலரும் நஞ்சென்றுதானே தூற்றுகிறார்கள்? நினைத்துக்கொண்டேன். கேட்கவில்லை. கேட்டால் அதற்கும் ஒரு பதில் கிடைக்கும். வேண்டாம்.
அந்தக் கொலைச் சம்பவத்தை ஒரே ஒரு வாக்கியத்தில் எழுதி விட்டேனா? ஆனால் அது பல மணி நேரம் நடந்தது. துரத்துகிறார்கள். துரத்துகிறார்கள். துரத்திக்கொண்டே இருக்கிறார்கள். நானும் ஓடிக்கொண்டே இருக்கிறேன். நிஜத்தில் எப்படி நடக்குமோ, அப்படியே நடக்கிறது கனவில். அதே பயம். அதே பதற்றம். ஐயோ, இந்தத் தேர்வில் வெற்றி பெற்று என்னென்னவெல்லாமோ செய்யலாம் என்று நினைத்தோமே, இப்படி ஒரு கொலைகாரக் கூட்டத்திடம் மாட்டி சாகப் போகிறோமே என்றெல்லாம் நினைக்கிறேன். நெஞ்சு தடக் தடக் என்று அடித்துக்கொள்கிறது. இந்த பயத்திலேயே செத்து விடுவேனோ என்று இருக்கிறது. ஓ, நிறைய பேர் உறக்கத்திலேயே சாகிறார்களே, அது இப்படித்தானோ? பிரேதப் பரிசோதனையில் தெரியும், அன்னார் ஹார்ட் அட்டாக்கில் போனார் என்று. அப்படித்தான் இன்று எனக்கு நடக்கப் போகிறது. இருபத்தாறு வயதெல்லாம் சாகிற வயதா என்ன? ஒன்று, இந்தக் கொலைகாரர்களின் கையில் மாட்டிச் சாகப் போகிறேன். அல்லது, இந்த பயத்திலேயே நெஞ்சு வெடித்து சாகப் போகிறேன்.
எப்படியோ அந்தக் கனவிலிருந்து தப்பி எழுந்தேன். உடம்பெல்லாம் தொப்பலாக வியர்த்துப் போயிருந்தது. காலை ஆறு மணி. சுத்தமாகத் தூக்கமே இல்லை. அப்புறம் என் யோகா மாஸ்டர் சௌந்தர் சொல்லிக் கொடுத்திருந்த யோக நித்ராவை இருபது நிமிடம் செய்து விட்டுக் கொஞ்சம் தெளிந்தேன்.
அடுத்த நாள், நேற்றும் கொலைச் சம்பவம்தான். ஆனால் கொலை செய்தது நான். ஏன் கொன்றேன், எதற்காகக் கொன்றேன், எப்படிக் கொன்றேன் என்றெல்லாம் கனவில் வரவில்லை. ஆனால் கொன்று விட்டேன். ஒரு ஈ எறும்புக்குக் கூட தீங்கு நினைக்காத நான் ஒரு மனிதனைக் கொன்று விட்டேன். நன்றாகவே தெரிகிறது. நான்தான் கொன்றேன். அடக் கடவுளே, (வேறு என்ன வார்த்தையைப் போட்டுத் தொலைப்பது?) போயும் போயும் இந்த இருபத்தாறு வயதில் கொலைகாரி என்ற பட்டத்துடன் தூக்கிலா தொங்க வேண்டும்? என்னவெல்லாம் கனவுகள் வைத்திருந்தேன்? அதையெல்லாம் இப்படி ஒரு நிஜக் கனா வந்து தகர்த்து எறிந்து விட்டதே? இப்போது நான் சட்டத்தின் பிடியிலிருந்து தப்புவதற்காக ஓடுகிறேன்.
ஐயோ, என்னை யாராவது காப்பாற்ற மாட்டார்களா? அபீ……….. என் உதவிக்கு வாடா, என்னை உன்னால் காப்பாற்ற முடியுமாடா? அபிக்கு ஒரு ஃபோனைப் போடு. ஐயோ என்ன இது? என்னுடைய இரண்டு ஃபோன்களையும் காணோம். என்ன செய்வேன் இப்போது? மீண்டும் ஓடுகிறேன். திடீரென்று சந்தேகம் வந்து விட்டது. நான்தான் கொலை செய்தேனா? அல்லது, வேறு யாரோ செய்து விட்டு என்னை மாட்டி விட்டு விட்டார்களா?
ஓடிக்கொண்டே இருந்த போது ஜீன்ஸ் பேண்ட்டில் ஒரு ஃபோன் இருப்பது தட்டுப் பட்டது. இவ்வளவு நேரம் தேடிய போது கிடைக்காதது இப்போது மட்டும் எங்கிருந்து வந்தது? இந்த இரவுக் கனவுகளுக்கு எந்த தர்க்கமும் கிடையாது. அதன் இஷ்டம்தான். கேட்கவே நாதியில்லை.
எனக்கு இரண்டே இரண்டு தொலைபேசி எண்கள்தான் மனப்பாடமாகத் தெரியும். அபியை அழைத்தேன். அந்தப் படுபாவி எடுக்கவில்லை. உனக்காக என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் கண்ணே. இதை மட்டும் அவன் என்னிடம் இந்த மூன்று ஆண்டுகளில் மூவாயிரம் முறை சொல்லியிருப்பான். ஆனால் என்ன தெரியுமா? எல்லோருமே, ஆண் பெண் பாகுபாடு இல்லாமல், தங்களுடைய ’சௌகரிய வட்டத்துக்குள்’ இருக்கும்போதுதான் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்? அந்த சௌகரிய வட்டத்துக்குக் கொஞ்சம் வெளியே இருந்தாலும் மயிர் கூடக் கிடைக்காது.
’என்ன வேண்டுமானாலும் செய்வேன்’ என்றால் என்ன தெரியுமா? ஆசானின் நாவல் ஒன்றில் வரும். ஆசானுக்கு இருதய அறுவை சிகிச்சை. சின்ன கோடரியால் நெஞ்செலும்பைப் பிளந்து செய்யும் ஓபன் ஹார்ட் சர்ஜரி. அவர் மூன்று மலையாள வாரப் பத்திரிகைகளுக்குத் தொடர் அனுப்புகிறார். இவருக்கு நடந்த அறுவை சிகிச்சையின் காரணமாக ஒரு வாரம்கூட தொடர்கள் நிற்கவில்லை. வாயாலேயே சொல்லி, அவர் மனைவியையும் நண்பர்களையும் எழுதச் செய்து மொழிபெயர்ப்பாளருக்கு அனுப்புகிறார்.
ஆசான் செய்ததில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அவர் ஒரு ராட்சசன். அந்த மொழிபெயர்ப்பாளர் செய்ததுதான் செயல். மொழிபெயர்ப்பாளருக்குக் கடும் ஆஸ்துமா. அன்றைய தினம் கதையின் ஒரு அத்தியாயம் பத்திரிகைக்குப் போக வேண்டும். மூச்சு விட முடியவில்லை. ஐசியூவில் அனுமதிக்கப்பட வேண்டும். ”ஒரே ஒரு மணி நேரம் தர முடியுமா? அதுவரை தாங்குவேனா?” என்று மருத்துவரிடம் கேட்கிறார்.
ஒரு மணி நேரம். அவ்வளவுதான்.
அந்த ஒரு மணி நேரத்தில் இண்டர்நெட் செண்டருக்குப் போய் அந்த அத்தியாயத்தை மொழிபெயர்த்துத் தட்டச்சு செய்து அனுப்பி விட்டுப் போய் ஐசியூவில் அட்மிட் ஆகியிருக்கிறார்.
என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்றால் அதுதான்.
அபி இப்போது தூங்கிக்கொண்டிருப்பான். தூங்காமல் என்ன செய்வான்? நான் இன்னொரு அறையில் படித்துக்க்கொண்டிருக்கிறேன். என் படிப்புக்கு இடைஞ்சல் இல்லாமல் ஃபோனை சைலண்ட் மோடில் வைத்து விட்டுத் தூங்குவார் தலைவர்.
ஞாபகத்தில் இருக்கும் இன்னொரு எண். ஆசான். ஆசானை நான் எந்தக் காரணத்துக்காகவும் அழைப்பதில்லை. அவருக்கு ஆயிரத்தெட்டு வேலை. என்னால் எந்த இடைஞ்சலும் வரக் கூடாது. ஆனால் இப்போது ஆபத்துக்குப் பாவம் இல்லை. உயிராபத்து. அவரை அழைத்தேன். உடனே வந்தது யார் தெரியுமா?
மிஸ்டர் சிக்மண்ட் ஃப்ராய்ட் அவர்களே? இந்தக் கேவலமான கனவுக்கெல்லாம் என்னதான்யா அர்த்தம்? வந்தது யார் தெரியுமா? ஆசானை மீட்டூவில் போட்டுக் கொடுத்து விடுவேன் என்று என்னைப் பற்றி அவதூறு செய்து கொண்டிருந்த ஆசானின் பழைய தோழி. அப்படியென்றால் என்ன அர்த்தம்? நான் ஒரு பிட்ச். இல்லையா? எப்படி நாயே நமக்குத் தெரியாத இன்னொரு பெண்ணைப் பற்றி இம்மாதிரி ஒரு அவதூறு கிளப்புவாய்? ஆசானை அழைத்தால் ஏன் அந்தப் பேய் வந்து நிற்கிறது?
எனக்கு உள்நாக்கு ஒட்டிக் கொண்டு விட்டது. அச்சத்தில். இது எப்படி சாத்தியம்? ஆசானை அழைத்தால் இந்த மங்க்கி எப்படி வந்து நிற்கிறது? ஏதாவது மாந்த்ரீக வேலையா? எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கையே இல்லை. ஆசான்தான் அப்படியெல்லாம் இருக்கத்தான் செய்கிறது என்று சொல்லிக்கொண்டிருப்பார். நான் அந்த மங்க்கியிடம் என்னவென்று சொல்வேன்? திருதிருவென்று முழிக்கிறேன்.
அந்த மங்க்கி என்ன செய்தது தெரியுமா? Vas-y, dis-moi ce que tu veux, ma petite.என்று படு நக்கலான தொனியில் என்னிடம் கேட்டு விட்டு வலது கண்ணை அடித்து விட்டு மறைந்தது.
கொலைவெறியில் அபியை மீண்டும் அழைத்தேன். இந்த முறை வந்தது ஆசான். ஆசானிடம் என் நிலையை விளக்குகிறேன். கேட்டு விட்டுக் கீழே குனிந்து தன் பூட்ஸை எடுத்து என் மீது வீசுகிறார். அதிலும் அவர் அணிந்திருப்பது Spiked shoes. காலணியின் ஆணி என் ஒரு கண்ணைப் பதம் பார்த்து கண்ணிலிருந்து ரத்தம் கொட்டுகிறது. இனிமையின் மொத்த உருவான ஆசானிடமிருந்து இப்படியொரு வன்செயல்? இப்படிச் செய்யும் அளவுக்கு நான் உங்களுக்கு என்ன துயர் கொடுத்தேன் ஆசானே எனக் கத்துகிறேன். கனவு, கனவு, fucking dream. இதற்கெல்லாம் அர்த்தமே இல்லை.
உண்மையிலேயே கண்ணில் ஆணி கிழித்தால் என்ன ஆகுமோ அப்படி ஒரு வலியில் கதறிக் கொண்டே எழுந்தேன். வழக்கம் போல் தொப்பலாய் வியர்வை. முதல் வேலையாகக் கண்ணாடியில் கண்களைப் பார்த்தேன். உறக்கமில்லாமல் கண்கள் இரண்டும் கோவைப்பழமாகச் சிவந்திருந்தன.
கதை இதோடு முடியவில்லை. காலையில் எழுந்து தினமும் ஒரு அரை மணி நேரம் நடப்பேனா? இன்று நடந்த போது தலை சுற்றி மயக்கம் போட்டு விழுந்து விட்டேன். உடனே என்னை மருத்துவமனைக்கு அழைத்துப் போய் மூன்று பரிசோதனைகளையும் செய்தான் அபி. ஷுகர் நார்மல், ரத்த அழுத்தம் நார்மல். மூன்றாவது பரிசோதனைக்கு அவசியமே இல்லை. கிளம்பும் வேளையில் ”எதாவது காயம் பட்டதா கண்களுக்கு?” என்று கேட்டார் டாக்டர்.
“இல்லையே…” என்று சொல்லப் போய் நின்றுவிட்டேன்.
டாக்டர் மீண்டும் கேட்டார்: ”ரொம்ப சிவப்பா இருக்கு… irritation மாதிரி இல்லை… வேற மாதிரி…”
நான் அபியைப் பார்த்தேன். “என்ன ரோஷ்ணி? ஏதாவது வேணுமா?”
நான் கண்ணாடி கேட்டேன். கண்ணாடியை கையில் எடுத்தேன்.
என் வலது கண்ணின் உள்ளே — மிகவும் நுணுக்கமாக — ஒரு மெல்லிய சிவப்புக் கோடு. ஒரு scratch போல.
நேற்று இரவு வரை அப்படி ஒரு கோடு இல்லையே?
அப்படியானால்—
பின்குறிப்பு: ஆசான் ஆசான் என்று குறிப்பிட்டிருப்பது பற்றி யாரும் ஆட்சேபிக்க வேண்டாம். ஊரில் என்ன ஒரு ஆசான்தான் இருக்க முடியுமா? நான் குறிப்பிட்டிருக்கும் ஆசான் நீங்கள் நினைப்பவர் அல்ல. இவர் வேறு. திறமையிருந்தால் கண்டு பிடித்துக் கொள்ளுங்கள்.