பெட்டியோ நாவலை நான் எப்படி எழுதினேன் என்று எனக்கே தெரியவில்லை. இலங்கையிலிருந்து திரும்பியதும் உடனே எழுதினேன். ஒரு மாதத்தில் முடித்தேன் என நினைக்கிறேன். ஸ்ரீராம் சரியாகச் சொல்வார். அதில் உள்ள பல சம்பவங்கள் பெட்டியோ நாவலுக்கு முன்னதாக நடக்கவில்லை. ஆனால் அதே சம்பவங்கள் இலங்கைக்கு நான் இரண்டாவது முறை சென்ற போது நடந்தேறின. எனக்கு இன்னமும் நம்ப முடியாத ஆச்சரியம் அது. எப்படி ஒருவன் தன் வாழ்க்கை வரலாற்றை, அது நிகழ்வதற்கு முன்கூட்டியே எழுத முடியும்? அது எப்படி அவன் எழுதியபடியே ஒருசில மாதங்களில் நடக்கும்?
பெட்டியோவின் கடைசி அத்தியாயத்தை மொழிபெயர்த்து முடிக்கத் தனக்கு ஒரு வாரம் ஆனதாகச் சொன்னார் நந்தினி. அதனால் ஆர்வமுற்று, சற்று நேரம் முன் அந்தக் கடைசி அத்தியாயத்தைப் படித்தேன். உடனடியாக அதை உங்களுக்கு வாசிக்கத் தர வேண்டும் என்று தோன்றியதால் இங்கே வெளியிடுகிறேன்.
பெட்டியோ நாவல் ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் கிடைக்கும். ஆங்கில மொழிபெயர்ப்பு இன்னும் சில மாதங்களில் வெளிவரும்.
இந்தக் கடைசி அத்தியாயம் நயநதினியால் எழுதப்படுகிறது. இந்த நாவலில் இரண்டு விதமான மொழியைப் பயன்படுத்தியிருக்கிறேன். ஒன்று, கதைசொல்லி எழுதுவது. இன்னொன்று, நயநதினியின் கடிதங்கள். இந்தக் கடிதங்களின் மொழி சமகாலத் தமிழ் உரைநடைக்கு சற்றே புதிது. சமகாலத் தமிழ் உரைநடைக்கு என்னுடைய பங்களிப்பு.
இனி நயநதினி:
எனக்குத் தாயுமில்லை, தகப்பனுமில்லை. சகோதரனும் இல்லை, சகோதரியும் இல்லை. மனைவியும் இல்லை, மக்களும் இல்லை. சிநேகிதனுமில்லை, சத்ருவும் இல்லை. எனக்கு ஜனனமும் இல்லை, மரணமும் இல்லை. எனக்கு சுகமும் இல்லை, துக்கமும் இல்லை. எனக்கு மழையும் இல்லை, வெயிலும் இல்லை. எனக்கு வரமும் இல்லை, சாபமும் இல்லை. எனக்குக் கடவுளும் இல்லை, சாத்தானும் இல்லை. எனக்கு சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை. எனக்குப் பாவமும் இல்லை, புண்ணியமும் இல்லை. எனக்கு அன்பும் இல்லை, துவேஷமும் இல்லை. எனக்குக் கண்ணீரும் இல்லை, காதலும் இல்லை.
நான் என் எழுத்தில் வாழ்கிறேன்.
***
52.
உன்னையே நினைத்துக் கொண்டிருப்பது ஒரு நோயாக மாறி விட்டது. இந்த நிலையை வெறுக்கிறேன்.
தனிமையில் வாழ்ந்து விடலாம் என்று நம்பினேன். இப்போது அதுவே பெரும் துக்கமாக மாறி விட்டதைக் காண்கிறேன். தனிமை என் அன்னையை மது அடிமையாக்கியதையும் கடைசியில் தற்கொலைக்குத் தூண்டியதையும் கண்டு அசூயை அடைந்த நான் இப்போது அதே நிலையில் இருப்பதைக் கண்டு நாணுகிறேன். இது எனக்கு சரணடைதல் போலவும், எனக்கான ஆளுமையை இழந்து விட்டதாகவும் தோன்றுகிறது.
காதல் என்னிடமிருந்த விசையையெல்லாம் பிடுங்கிக் கொண்டு, நடனத்திலும் நாடகத்திலும் வாழ்ந்த என்னை பலஹீனமானவளாகவும் செயலிழந்தவளாகவும் ஆக்கி விட்டதை உணர்கிறேன்.
உன் மீது கொண்ட அன்பு அல்லது காதல் அல்லது ஏதோ ஒன்றுதான் இதற்குக் காரணம் என்பதால் அந்த உணர்வையும் உன்னையும் வெறுக்கிறேன். ஆனால் அந்த வெறுப்பே என்னுள் ஒரு வெறுமையை உருவாக்குகிறது. அந்த வெறுமையைப் போக்கிக் கொள்ள குடிக்கிறேன். இதிலுள்ள நகைமுரண் என்னவென்றால், அந்த வெறுமையையும் அதன் காரணமாக எழும் துக்கத்தையும் என் மனம் விரும்புகிறது என்பதுதான்.
எந்த அளவுக்கு நான் ஒரு கலகக்காரியாக விளங்கினேனோ அந்த அளவுக்கு நான் ஒரு அடிமையாக மாறி விட்டேன். அதனால்தான் இதற்குக் காரணமான உன்னையும் உன்னிடம் தோற்றுப் போன என்னையும் வெறுக்கிறேன். இந்தத் தோல்வியின் வலியிலிருந்து மீளவே குடிக்கிறேன்.
குடித்தால் வலி குறைகிறது.
அதிகம் குடித்தால் வலி இல்லாமலே போகிறது.
அந்த வலியை வார்த்தைகளால் விளக்க முடியாது போல் தோன்றுகிறது. அந்தோனின் ஆர்த்தோவைப் போல் கத்திக் கத்தித்தான் என் வலியை உலகத்துக்குச் சொல்ல வேண்டும். ஆர்த்தோவைப் படித்துப் படித்து நானே ஆர்த்தோவாக மாறி விட்டேனா என்ன?
அன்றொரு நாள் குடிபோதையில் எங்கோ தெருவோரத்தில் கிடந்த என்னை எவனோ ஒருவன் புணர்ந்து வீசி விட்டுப் போயிருக்கிறான். அது கூட எனக்கு நீண்ட நேரம் சென்று பிரக்ஞை வந்த பிறகுதான் தெரிந்தது.
பெண்ணுடல் தேடி அலையும் ஆண் உடல். ஆடையெல்லாம் கிழிந்திருந்தது. என் துளையில் விட்டு வெறியைத் தணித்துக் கொள்வதற்கு ஆடைகளைக் கிழிக்க வேண்டுமா என்ன? போதையில் பிரக்ஞையிழக்காமல் இருந்திருந்தால் போராடியிருப்பேன். கற்பைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அல்ல. என் அனுமதியின்றி என் அந்தரங்கத்தில் அத்துமீறுவதற்காக.
துடைத்துப் போட்டு விட்டு வீட்டுக்குத் திரும்பினேன். ஆடை கிழிந்து போனது தவிர வேறு எந்த இழப்பும் இல்லை.
***
மூச்சு முட்டும் அளவுக்கு, போதும் போதும் என்று உனக்கு என்னைத் தந்தேன். இப்போது, பெட்டியோ, நான் இருப்பதும் இல்லாமலிருப்பதும் ஒன்றுதான் என்றும், என்னுடைய சுயம் முழுவதையும் – என் கதை, கவிதை, நாடகம் என்று என்னிடமிருந்த அனைத்து வார்த்தைகளும் உட்பட எல்லாவற்றையும் அமிர்த பானமாக்கி உன்னிடம் பருகக் கொடுத்து விட்டது போலவும், இனிமேல் ’நான்’ என்று எதுவும் இல்லை என்பது போலவும், அதன் காரணமாக, என் கலகம் – என் ஆக்ரோஷம் – என் திமிர் – என் அடங்காமை – என் அக்கினி எல்லாமே என்னிடமிருந்து விலகிச் சென்று விட்டது போலவும், இப்போது என் சூன்யம் மட்டுமே மிஞ்சியிருப்பதாகவும் அதையும் உனக்குக் கொடுத்து விட வேண்டும் என்றும், அதைவிடச் சிறந்ததாகத் தருவதற்கு இனி என்னிடம் ஏதுமில்லை என்றும் தோன்றுகிறது.
***
நான் ஒரு போராளியாகவே வாழ்ந்தேன். என் சுயம் இடம் மாறிய போது என் போர்க்குணமும் உன்னிடம் போய் விட்டதால் இப்போது நான் பலஹீனமானவளாக உணர்கிறேன். ஆனாலும் எனக்கு மரணமில்லை பெட்டியோ, நான் உன் எழுத்தில் வாழ்கிறேன்.
***
நீ என்னை வாழ வேண்டும் என்பதற்காகவே நான் மரணம் விழைகிறேன்.
***
சூன்யத்தில் சூன்யமாய்க் கரைகிறேன்.
***
பிரபஞ்சம் ஒரு நாடக மேடை. நிலவும் நட்சத்திரங்களும் கோள்களும் கிரகங்களும் இருளும் ஒளியும் சப்தமும் மௌனமும் இருப்பும் இருப்பின்மையும் இதன் நடிகர்கள். சூன்ய வெளியிலிருந்து இதை இயக்கும் சூத்ரதாரியிடம் நான் உரையாடிக் கொண்டிருக்கிறேன்.
***
நான் கடவுள். நான் உன்னையும் என்னையும் மற்ற ஜீவராசிகளையும் ஜீவனற்ற ராசிகளையும் சிருஷ்டித்தேன். இல்லை, நான் சைத்தான். கடவுளாக நம்பிக் கொண்டிருக்கும் சைத்தான். அதனால்தான் நான் மரணத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன். கடவுளாக இருந்தேனானால் நான் உன்னை வாழ்வை நோக்கிக் கொண்டு போயிருப்பேன் இல்லையா? இது மரணம்.
***