பேச்சு

தெரியாத மனிதர்களிடம் நான் ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை.  ஒரு நண்பர் சமீபத்தில் சொன்னார்.  அவர் வீட்டுக்கு வந்த அண்டை வீட்டுக்காரர் ஒருவர் அரை மணி நேரம் இடைவெளியே இல்லாமல் பேசிக்கொண்டேயிருந்திருக்கிறார். ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே என் நண்பருக்கு அவர் என்ன பேசுகிறார் என்றே ஒரு வார்த்தை கூட மனதில் பதியவில்லை. வெறுமனே தலையைத் தலையை ஆட்டிக்கொண்டிருந்தாராம். ஜெயமோகன் ஒருமுறை தன் நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்த போது நண்பரின் அண்டை வீட்டுக்காரர் இவரிடம் வந்து பல மணி நேரம் மொக்கை போட்டுக் கொண்டிருந்த கதையை எழுதியிருந்தார்.  நானாக இருந்தால் எழுந்து வெளியே போ என்று சொல்லியிருப்பேன்; அது என் நண்பரின் வீடாக இருந்தாலும் அதைப் பொருட்படுத்த மாட்டேன்.  

ஒருமுறை ரஷ்யன் செண்டரில் நடந்தது ஞாபகம் வருகிறது.  நானும் என் மொழிபெயர்ப்பாளரும் வேலை செய்துகொண்டிருந்தோம்.  அப்போது அங்கே வந்த ஒரு கனவான் என் பக்கத்தில் அமர்ந்து பேச ஆரம்பித்து விட்டார்.  பார்ப்பதற்கு பெரிய பிஸினஸ்மேன் மாதிரி இருந்தார்.  என் வாசகர் என்று சொல்லிக்கொண்டார்.  உடனடியாக, மிகவும் காட்டமான குரலில், என் வலது கை ஆள்காட்டி விரலைக் காண்பித்து, இங்கிருந்து கிளம்புங்கள், என்னிடம் பேசி அனுமதி பெற்றுக்கொண்டு வாருங்கள், எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம் என்று சொன்னேன்.  அதிர்ந்து போனார்கள் இருவரும்.  

என் நண்பருக்கு அறிவுரை சொன்னேன்.  இம்மாதிரி ஆட்களிடம் மூர்க்கமாக நடந்து கொள்ளுங்கள்.  இல்லாவிட்டால் உங்கள் வாழ்க்கையில் பாதி நேரத்தை இவர்கள் திருடிக்கொண்டு விடுவார்கள்.  மிக சுலபமாகத் தப்பிக்கலாம்.  நான் கொஞ்சம் வெளியே கிளம்ப வேண்டும், பிறகு பார்க்கலாம் என்று சொல்லி நாம் எழுந்து கொண்டு விட்டாலே போதும்.  கிளம்பி விடுவார்கள்.  ஆனால் வேடிக்கை என்னவென்றால், என்னிடம் சம்பவத்தைச் சொன்ன நண்பர் என்னிடமும் மனைவியிடமும் மற்ற நெருங்கிய நண்பர்களிடமும் மூர்க்கமாக நடந்து கொள்வார்.  நகைமுரண்!

இதெல்லாம் இன்று காலை சங்கீதா உணவகத்தில் காஃபி குடித்துக்கொண்டிருந்த போது ஞாபகம் வந்தது. என் எதிரே ஒரு முதியவர் தோசை சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.  சாம்பார் கேட்டார்.  யாரும் கவனிக்கவில்லை.  திரும்பத் திரும்பக் கேட்டார்.  அப்போதும் யாரும் கவனிக்கவில்லை.  அப்போது அந்தப் பக்கமாக ஒரு பரிசாரகரிடம் நான் சற்று உரத்த குரலில் “இவர்களுக்கு சாம்பார் கொடுங்கள்” என்று சொன்னேன்.

முதியவர் என்னிடம் ஏதோ பேசினார்.  நான் வழக்கம் போல் காதுகளில் ஏர்பாட் போட்டு She’s Gone கேட்டுக்கொண்டிருந்ததால் அவர் என்ன சொன்னார் என்று தெரியவில்லை.  இருந்தாலும் மரியாதைக்குத் தலையை அன்புடன் ஆட்டி வைத்தேன்.  

அவர் மேலும் ஏதோ கேட்டார்.  நான் ஏர்பாடைக் கழற்றி விட்டேன்.  நீங்கள் சாப்பிடவில்லையா என்று கேட்டார்.  அப்போது மணி எட்டு.  இன்று நான் தாமதமாகச் சென்றிருந்தேன். வழக்கமாக ஏழரைக்கு வருவேன்.  இல்லை என்றேன்.  எட்டு மணி ஆயிற்றே, வெறும் காஃபிதான் காலை ஆகாரமா என்றார்.  இல்லை, வீட்டுக்குப் போய் சாப்பிடுவேன் என்றேன்.  ஏன், ஷுகரா என்றார்.  இல்லை என்றேன்.  அப்புறம் என்ன பிரச்சினை, இங்கேயே சாப்பிட்டு விடலாமே, எட்டு மணி ஆயிற்றே என்றார் சிரித்தபடி.  எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.  மௌனமாக இருந்தேன்.  வயது என்ன என்றார்.  எழுபத்து மூன்று என்றேன்.  ஓ என்றார்.  குரலிலும் முகத்திலும் ஆச்சரியம் தெரிந்தது.  எனக்கும் எழுபத்து மூன்றுதான் என்றார்.  ஆனால் தோற்றம் எண்பத்து மூன்றைக் காட்டியது.  அதற்கப்புறம் என்னென்னவோ பேசினார்.  காதுகளில் ஏர்பாட் இல்லாமலேயே அவர் பேசியது எதுவும் என் காதுகளில் விழவில்லை.  

அவர் காஃபிக்கு ஆர்டர் கொடுத்தபோது நான் எழுந்து நின்று வருகிறேன் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.    .