சில வேண்டுகோள்கள் என்றுதான் போட வேண்டும். இருந்தாலும் வேண்டுகோள்கள் என்றால் அதில் லயம் இல்லை. அதனால் இலக்கணப் பிழை பரவாயில்லை என ஒரு வேண்டுகோள் என்று கொடுத்திருக்கிறேன்.
முதல் வேண்டுகோள். சில தினங்களில் நான் இரண்டு மூன்று கட்டுரைகளையோ கவிதைகளையோ இந்த இணையதளத்தில் வெளியிடுகிறேன். சில நண்பர்கள் அதில் மேலே இருக்கும் ஒரு கட்டுரையையோ கவிதையையோ மட்டும் படித்து விட்டு என்னிடம் பேச வருவார்கள். நான் அதற்கு முந்தைய கவிதை பற்றிப் பேசினால், நான் தினமும் படிக்கிறேனே, அந்தக் கவிதையை விட்டு விட்டேனே என்பார்கள். “தேதியைப் பார்த்து நேற்று எழுதிய எல்லாவற்றையும் படித்து விட்டு அழையுங்கள்” என்று சொல்லி பேச்சைத் துண்டித்து விடுவேன். என் எழுத்தை முழுசாகப் படிக்காமல் என்னோடு பேச விரும்புபவர்களோடு நான் என்ன பேச முடியும்? எதற்குச் சொல்கிறேன் என்றால், இதற்கு முந்தைய ஃபினாலே ஆஃப் அ ஸிம்ஃபனி என்ற கவிதையை எழுதுவதற்கு நான் முழு நாளைச் செலவிட்டேன். அதை எழுதியவன் ஒரு பைத்திய மனநிலையில் எழுதியிருக்கிறான் என்பதை அதைப் படிக்கும்போது நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். ஒரு இரவு உறக்கம் தொலைத்து, ஒரு பகல் பூராவும் எழுதிய அந்தக் கவிதையை வாசிக்க உங்களுக்கு ஐந்து நிமிடம் போதும். அந்த ஐந்து நிமிடத்தையாவது எனக்குத் தாருங்கள் என்பதுதான் நான் உங்களிடம் கேட்கும் யாசகம். அதற்கு அப்புறம்தான் நீங்கள் எனக்கு அனுப்பும் சந்தா அல்லது நன்கொடை. அது ஒன்றும் கட்டாயம் இல்லை அல்லவா?
அதனால் இந்த வேண்டுகோள்களைப் படிப்பதற்கு முன் ஃபினாலே ஆஃப் அ ஸிம்ஃபனி கவிதையைப் படித்து விட்டு இதைப் படியுங்கள்.
இரண்டாவது வேண்டுகோள்: இது கொஞ்சம் முக்கியம். இதை நீங்கள் கடைப்பிடித்தால் உங்கள் வாழ்க்கை வளம் பெறும். அதை விட முக்கியம், உங்களைச் சுற்றியிருப்பவர்கள் உங்களால் மகிழ்ச்சி அடைவார்கள். இதை நான் முந்தைய தலைமுறையின் மனநிலையிலிருந்து, கலாச்சாரப் பழக்கத்திலிருந்து எழுதுகிறேன். எனக்கு வயதாகி விட்டது என்று நீங்கள் நினைத்தாலும் பரவாயில்லை. எனக்கு வயதாகி விட்டதுதான். ஆனால் வயோதிகம் வந்து விடவில்லை. ஆங்கிலத்தில் செனிலிட்டி என்கிறார்களே, அது எனக்கு வரவில்லை. வரவும் வராது.
என் மகன் எனக்கு ஆண்டு தோறும் டிசம்பர் பதினெட்டாம் தேதி பிறந்த நாள் வாழ்த்து அனுப்புவான். எப்படி? இப்படி: ஹேப்பி பர்த்டே. ஏண்டா, ஹேப்பி பர்த்டே டாடி என்று அனுப்பினால் என்ன தேய்ந்து போயிற்று? (அவன் என்னை நேரில் டாடி என்றுதான் அழைப்பான். நான் அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவதில்லை என்பதால் அப்பா என்று அழை என்று சொன்னதில்லை. மேலும், அவனை நான் முதல் முதலில் பார்த்ததே அவனுடைய ஒன்பதாவது வயதில்தான். அதனால் என் கருத்துக்களை அவன் மீது திணிக்க ஒருபோதும் விரும்பியதில்லை) உண்மையில் ஒரு அம்பதாயிரம் பணம் அனுப்பி வாழ்த்து சொல்ல வேண்டும். அதுதான் லபிக்கவில்லை எனக்கு. கூட ஒரு வார்த்தையைச் சேர்த்து அனுப்பினால் என்ன குறைந்து போய் விடும்?
என் மகன் என்று இல்லை. இன்றைய இளைய தலைமுறை அனைவருமே ஓகே என்றால் கே என்று அனுப்புகிறார்கள். ஓகே சாரு என்று அனுப்பினால் என்ன தேய்ந்து விடும்? என்னைப் பெயர் சொல்லியோ அல்லது சார் என்றோ அல்லது டார்லிங் என்றோ பேபி என்றோ எப்படியாவது அழைத்துத் தொலையுங்கள் என்பதே என் வேண்டுகோள்.
ஒருவரிடம் ஒரு வேலை சொல்கிறேன். ஓகே என்ற பதிலே வருகிறது. ஏன் ஓகே சாரு என்று சொல்வதில்லை. யாரிடமும் ஒற்றை வார்த்தையில் பேசுவது மூர்க்கத்தனம் என்று நினைக்கிறேன். அது ஒரு அவமரியாதை. நாளை சந்திக்கலாமா? ஓகே என்று பதில் சொன்னால் அது அவமரியாதை. ஓகே சாரு, ஓகே சார், ஏதாவது ஒன்று வர வேண்டும். இதனால் பல முறை பல நண்பர்களோடு எனக்கு மனமுறிவும் ரத்தக் களரியும் ஏற்பட்டிருக்கிறது.
நான் ஒன்றும் உங்கள் பிரச்சினை பற்றித் தெரியாதவன் இல்லை. நீங்கள் ஒரு வகுப்பில் அமர்ந்திருக்கலாம். அல்லது, அலுவலகத்தில். அப்போது நீட்டி முழக்கி பதில் சொல்ல முடியாது. அதை அன்புடனே அனுமதிப்பேன். ஆனால் சிலர் எப்போதுமே இப்படி ஒற்றை வார்த்தையில் பதில் சொல்கிறார்கள்.
இப்படி விளங்கிக் கொள்ளலாம். முதலில் நீங்கள் முடிந்த வரை வாட்ஸப் மெஸேஜை தவிர்க்கப் பாருங்கள். ஏனென்றால், எழுத்து ஒரு தீ. அது தன்னுள்ளே ஒரு வன்முறையைக் கொண்டிருக்கிறது. அதனால்தான் எல்லோரும் எழுத்தாளர்களை வெறுக்கிறார்கள். உலக அளவிலேயே சொல்கிறேன். ஒரு பிஸினஸ் பார்ட்னரோடு உங்களுக்குப் பிரச்சினை. அதற்கு நீங்கள் ஒரு வாட்ஸப் மெஸேஜ் அனுப்பிப் பாருங்கள். பிரச்சினை பெரிதாகத்தான் ஆகும். ஆனால் ஒரு வாய்ஸ் மெஸேஜ் அனுப்பினால் அத்தனை பிரச்சினை ஆகாது. பல காதல்களில் வாட்ஸப் மெஸேஜ்களால் ப்ரேக் அப் ஆகியிருக்கிறது. ஆகிக் கொண்டிருக்கிறது. பேசும் சொற்களுக்கு ஒரு மென்மை இருக்கிறது. எழுத்து தீ. அது ஆளை அடிக்கும். இருவருக்குள் கொஞ்சம் பிணக்கு இருந்து அது வாட்ஸப் மெஸேஜ்கள் மூலம் பரிமாறப்பட்டால் ப்ரேக் அப்தான். ஒரு காதலன் காதலியை எடுத்துக் கொள்வோம். காதலன் காதலியை சமாதானப்படுத்துவதற்காக வாட்ஸப் மெஸேஜ் அனுப்பினால் செத்தான். அவன் என்ன நினைத்தானோ அதற்கு எதிராகப் போகும் மெஸேஜ். காதலிக்கும் அதேதான்.
அதனால் கூடிய வரை வாட்ஸப்பில் எழுத்து மெஸேஜைத் தவிர்த்து விட்டு வாய்ஸ் மெஸேஜ் அனுப்புங்கள். முடியாவிட்டால், சொற்களை கவனமாகப் பயன்படுத்துங்கள். கவனம் இல்லையேல் வெட்டுக்குத்துதான். இதை நான் அனுபவத்தில் சொல்கிறேன். என்ன நான் சொன்னாலும் இளைய தலைமுறை இதைப் புரிந்து கொள்வதாக இல்லை.
நான் சில ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு என் கவிதைகளை ஆங்கிலத்தில் அனுப்பினேன். எதை அனுப்பினாலும் சுமார் 3000 ரூ. அனுப்ப வேண்டியிருக்கிறது. அனுப்பினால்தான் அவர்கள் படிப்பார்கள். படிப்பதற்கே கட்டணம். பின்னர் அது வெளிவந்தால் பத்தாயிரம் இருபதாயிரம் தருவார்கள். ஆனால் படிப்பதற்குக் கட்டணம் கட்ட வேண்டும். தமிழில் நிலைமை எப்படி இருக்கிறது என்று உங்களுக்கே தெரியும். பேய் மாதிரி எழுதிக் குவித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் என் மொழிபெயர்ப்பாளருக்குக் கொடுக்க வேண்டிய தொகையில் இன்னும் ஒரு லட்சம் ரூபாய் பாக்கியிருக்கிறது. முடிந்தவர்கள் அனுப்பி வைத்தால் நன்றி உடையவனாவேன்.
நன்கொடை அனுப்புவதற்கான விவரம் கீழே:
ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566
பெயர்: ராஜா (ராஜா தான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)
வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai