1.அறிமுகம்
தேவி!
இதை ஒரு மனநோய் விடுதியிலிருந்து
எழுதுகிறேன்
இங்கு நானாவித பைத்தியங்கள் வசிக்கிறோம்
சிலர் மௌனத்தின் ஆழத்தில் மூழ்கியவர்கள்
வார்த்தைகள் தொலைத்து விழிகளால் பேசுவர்
சிலர் நெஞ்சில் புயல் கொண்டு நடுங்குவர்
கிட்டத்தில் போனால் கோபத்தின் கூச்சலோடு தாக்குவர்
சிலர் கண்ணுக்குப் புலனாகா உலகில் வாழ்பவர்
மாயக் குரல்களோடு உரையாடுவர்
நவரசமும் அவர் நாவில் நடனமிடும்
சிலர் உடைந்த கண்ணாடியாய் உள்ளனர்
கண்ணீரில் கரைந்து வலியில் தவிப்பர்
சிலர் ஒளி மறந்து இருளில் மூழ்குவர்
படுக்கையில் புதைந்து மௌனத்தில் தவிப்பர்
சிலர் மாயப் புயலில் தொலைந்தவர்கள்
கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் போரிடுவர்
சிலர் எரியும் நெருப்பு, தாக்கத் துடிப்பர்
சிலர் வெடிக்கும் எரிமலை, திடீரென மோதுவர்
நானோ புதுவகைப் பைத்தியம், தேவி!
கவிதையில் சுயநினைவு
வெளியே பைத்தியம்
2. என் பெயர்
மருத்துவர் கேட்டார்
உன் பெயரென்ன?
தேவி
அது பெண்ணின் பெயர், உண்மையில் நீ யார்?
தேவி
அது உன் காதலியின் பெயரா?
கடவுளின் பெயர்
நீ கடவுளா?
இல்லை, மானுடன்
தேவி யார்?
கடவுள், என் கடவுள்.
நீ எந்த ஊர்?
தேவி வசிக்கும் ஊர்
தேவி எங்கே வசிக்கிறாள்?
தூணிலும் துரும்பிலும்
உங்கள் இதயத்திலும்
என் இதயத்திலும் வசிக்கிறாள்
எங்கும் தேவி
எதிலும் தேவி மயம்
தேவி
தேவி
தேவி
தேவி
தேவி
போதும், நிறுத்து. நீ ஏன் கவிதை எழுதுகிறாய்?
பைத்தியம் பிடிக்காமலிருக்க, தேவி.
அப்புறமேன் மனநோய் விடுதியில்?
தேவியின் ஸிம்ஃபனியே காரணம், தேவி!
3. ஃபினாலே இல்லாத ஸிம்ஃபனி
அது என்ன ஸிம்ஃபனி?
அதை நானும் கேட்க விரும்புகிறேன்.
முடியாது. அது தேவியின் தனிப்பட்ட பரிசு
எனக்கு மட்டுமே அருளியது.
அந்த ஸிம்ஃபனியில் ஃபினாலே இல்லை
மூன்று பாகங்களே, முடிவற்ற பயணமாய்.
முதல் பாகத்தில் தேவி
எனக்கு மானுடத் தொடர்பு வேண்டாமெ
ன்கிறாள்
இரண்டாம் பாகத்தில் பூனை நாய் முயல் போதுமெனக்கெ
ன்கிறாள்
மூன்றாம் பாகத்தில் உன் துதிப்பாடலெனக்குத் தேவையில்லையெ
ன்கிறாள்
இந்த தர்க்கத்திலிருந்து பெறக்கூடிய நான்காம் பாகமான
ஃபினாலே
போடா சுன்னியென்பதுதான்
இறைவியென்பதனால் கெட்ட வார்த்தை
தவிர்த்தாள் போலும்
4. தேவியின் ஸிம்ஃபனிக்கு பைத்தியக்காரனின் பதில்
முந்தின பிறவியில் தேவிக்குப் பிடிக்குமென
முயலாய்ப் பிறந்தேன்
பிரபஞ்சத்தை ஆளும் உனக்கு நான் புலப்படவில்லை
காட்டுப் பூனையின் உணவாகி முடிந்தேன்
அடுத்த பிறவியில் பூனையாய்ப் பிறந்தேன்
அதுவொரு பெருங்கதை, சுருக்கிச் சொல்கிறேன்
பெண் பூனை
தெரிந்து தொலைத்திருந்தால் ஆண் பூனையாய்ப்
பிறந்திருப்பேன்
யோனி தேடியலையும் ஆண் பூனைகளால் துரத்தப்பட்டு
நிரந்தர கர்ப்பிணியானேன்
குட்டிகளைக் காப்பாற்ற நான் பட்ட பாட்டை
இதிகாச நாயகியே பட்டிருக்க மாட்டாள்
குட்டிகளைக் கவ்விக்கொண்டு போய்
ஒரு மறைவிடத்தில் வைப்பேன்
படைபடையாய் வரும் கொசுக்களைத்
துரத்தியே என் ராத்திரிகள் கழியும்
ஒருபோதும் உறக்கம் கொண்டதில்லை
கால் முளைத்த குட்டிகள்
நான் உணவு தேடச் செல்லும்போது
வாகனத்தில் அடிபட்டுச் சாகும்
ஒவ்வொரு குட்டிக்கும் ஒவ்வொரு வாரம்
பிலாக்கணம் வைத்து மறப்பேன்
ஐந்தும் போய் விடும்
அடுத்த கர்ப்பம் ரெண்டே வாரத்தில்
தொடங்கும்
அடுத்தது ஐந்து குட்டி
அதே கதை
அடுத்தது ஐந்து குட்டி
அதே கதை
ஐந்து கர்ப்பங்கள்
இருபத்தைந்து குட்டிகள்
கடைசியில் நானுமொரு வாகனத்தில்
உடல் துறந்தேன்
அனுபவம் கொண்டதால்
அடுத்த பிறவியில் ஆண் பூனை
இழிவினும் இழிவான அந்தக் கதையை
எப்படிச் சொல்வேன்?
அந்தப் பிறவியிலும் தேவியின்
பார்வைக்குள் வரவில்லை
எப்போதும் காமம்
எப்போதும் யோனி வெறி
யோனி யோனி யோனி யோனி
யோனி தவிர வேறேதும் நினைவில்லை
பேயாய் அலையும் உடலும் மனமும்
நித்திரைக் காலம் தவிர மற்ற
பொழுதெல்லாம் யோனி வெறி பிடித்து
பைத்தியமாய் அலைந்தேன்
பூனை ஆர்வலர் கண்ணில் பட்டால்
அடித்து விரட்டுவர்
பெண் பூனையைப் படுத்துகிறோமாம்
எல்லாம் தொலையட்டுமென்று
யானையாய்ப் பிறந்து
காட்டுக் கொசுக்களுக்கு குழந்தைகளைப்
பறி கொடுத்து ஓலமிட்டு ஓலமிட்டு
வாழ்ந்து முடிந்த கதையது
அதனாலே ஒரு நல்ல முடிவெடுத்து
மானுடனாய்ப் பிறந்தால்
தேவிக்கு மானுடத் தொடர்பு வேண்டாமாம்
என் துதிப்பாடலும் தேவையில்லையாம்
5. வேண்டுதல்
தேவி!
தற்போதைய நின் தோற்றம்
உடலெங்கும் ரத்தம் ரத்தம்
தொங்கும் நாக்கு
பீதியூட்டும் கண்களெல்லாம்
என்னை அச்சமூட்டுகிறது
நீ பழையபடி
தேன்சிட்டின் ரூபம் கொண்டு
என் தோளில் வந்து அமர்ந்து அருள் புரிவாய்!
அதற்கு நானென்ன செய்ய வேண்டும், கூறாய்!
பிள்ளைக் கறியமுது வேண்டுமா? பிள்ளையில்லை!
என் கறியை சமைத்து உனக்குப் படைப்பேன்
என் கண்களைப் பிடுங்கித் தருவேன்
என் உயிர் வேண்டுமா உனக்கு
அதுவும் உன்னுடையதே, தேவீ!
6. முடிவு
கனவில் வந்த தேவி
உன் உயிர் எனக்கு மயிரென்றாள்
இதுவே நான் இந்த மனநோய்
விடுதிக்கு வந்த கதை