பிரதீத்ய சமுத்பாதம்


கடவுள் வந்தார்
கேட்டார்
ஏன் அழைத்தாய் சொல்
தீர்க்க முடிந்தால் தீர்ப்பேன்

நன்றி சொன்னேன்
“ஆனால், அது என்ன ‘முடிந்தால்’?
பிரபஞ்சத்தைப் படைத்தவர் நீர்,
உம்மால் முடியாதது உண்டோ?”

மானுடரின் புலம்பல்கள் புரிவதில்லை
புரிந்தாலும்
சிலவற்றைத் தீர்ப்பது
என் சக்திக்கு மீறியது
நேற்று ஒரு பெண் அழைத்தாள்
அவளுக்கு உடலின்பம் வேண்டும்
இணையனுக்கோ இஷ்டமில்லை
இஷ்டமில்லையா இயலவில்லையா
தெரியவில்லை
என்னால் என்ன செய்ய முடியும்?
கை விரித்து
மன்னிப்புக் கேட்டேன்
இப்போது ஒரு பயம்
என் மன்னிப்பை வைத்து
அவள் என்னை
மீட்டூவில் போட்டு விடுவாளோ?

சரி நீ சொல்
என்றார்

’மோகினிக்குட்டி ப்ளூ டிக்கை
மறைத்து விட்டாள்
நித்திரை தொலைந்து
மனம் தற்கொலையுணர்வில் தவிக்கிறது
அடுத்தவர் சுதந்திரத்தில்
தலையிட்டதில்லை
அதையும் மீறி ஒருமுறை கேட்டு
மொக்கை வாங்கினேன்
அதோடு மௌனமானேன்’

‘நீயும் ப்ளூ டிக்கை
மறைத்து வை’

’அதுதானே தெரியவில்லை
செயற்கை நுண்ணறிவிடம் கேட்டு
ஒரு நாள் முழுதும் முயன்று
நண்பனுக்கு ஒரு மெஸேஜ்
அனுப்பினேன்
ப்ளூ டிக் தெரிகிறது என்றான்
அப்புறம்தான் மனம் நொந்து
உம்மை அழைத்தேன்’

‘ப்ளூ டிக் வேறு துறை
அதில் எனக்கு ஞானமில்லை
மற்றபடி
பிரபஞ்சத்தின் தோற்றம்
பிரபஞ்ச ஒழுங்கு
கர்மா
மரணத்துக்குப் பிறகான வாழ்வு
மறுபிறவி
மோட்சம்
பிரபஞ்சத்தில் மனித இருப்பு
மனித இருப்பின் சாரம்
அறம்
பொருட்களுக்கு சுயாதீனமான இருப்பு
உண்டா இல்லையா
மனிதன் எனது நிழலின் நீட்சியா
நான் இருக்கிறேனா இல்லையா
ஏன் தீர்க்கதரிசிகளை அனுப்பினேன்
இவை கேள் சொல்கிறேன்
ஆனால்
காதலனின் குறி வேலை செய்யவில்லை
காதலி ப்ளூ டிக்கை மறைக்கிறாள்
இதற்கெல்லாம் என்னை அழைக்காதே
பால்வீதிகள் மோதாமல் இருக்கவும்
பறங்கி விதை பறங்கியாகவும்
சுரை விதை சுரையாகவும்
முளைக்கப் பண்ண வேண்டும்
மனித இனம் அழியாமலிருக்க
தீர்க்கதரிசிகளையும்
ஞானிகளையும்
அனுப்பியாக வேண்டும்
இப்படியெல்லாம் எனக்குப் பல ஜோலி உண்டு’

’தீர்க்கதரிசிகளால்தானே தேவரீர்
மனித இனம் அழிந்து கொண்டிருக்கிறது’
என்று சொல்ல நினைத்தேன்
ஆனால் மௌனமானேன்
காரியம் ஆக வேண்டுமே?

அதற்குள்-
‘கவலை வேண்டாம்
தொழில்நுட்பம் தெரிந்தவனைப் பிடி
நீயும் ப்ளூ டிக்கை மறை’
எனச் சொல்லி
மறைந்தார் மாயனார்