இன்று என்ன கிழமை? என்ன மாதம்?

அது எப்படி எல்லா நாளும்
ஒரே நாளைப் போல் இருக்கிறது?

ஐந்து மணிக்கு எழுகிறேன்
காலைக்கடன் முடித்து
இருபது நிமிட தியானம்
பூனைகளுக்கு உணவிடுகிறேன்
சில கவிதைகளைப் படிக்கிறேன்
ஓரிரு கவிதைகள் எழுதுகிறேன்
ஏழரை மணி
அதே சாலைகளில் நடை
அதே மனிதர்கள்
ஏர்ப்பாடில் அதே இசை

ஏழே முக்கால்
சங்கீதா உணவகம்
மீடியம் காஃபி
கடைசி வாயில் இனிப்பு

எட்டு மணி
அவள் அழைக்கிறாள்
நடந்தபடி ஒன்பது வரை பேசுகிறேன்

வீடு திரும்பி
பூனைகளின் மலம் அள்ளி
பைகளில் போட்டு
வெளியே வைக்கிறேன்

சின்ன வெங்காயம் நறுக்கி
பழைய சோறில் உப்பிட்டு
நீராகாரம் அருந்துகிறேன்

ஒன்பதரை
மனையாள் எழுந்து வருகிறாள்
வீடு பெருக்கி சுத்தம் செய்கிறாள்
அவளுக்கும் நீராகாரம்

பத்து மணி
இட்லி வைத்து
இருவரும் சாப்பிடுகிறோம்
பால் காய்ச்சி காஃபி குடிக்கிறேன்

கணினி முன் அமர்ந்து
கவிதைகள் படிக்கிறேன்
கவிதையெழுதுகிறேன்

பன்னிரண்டு மணி
காய்கறி கீரை நறுக்குகிறேன்
அதே பழைய கத்தி
வெண்ணெய் கூட வெட்ட முடியாது
சாணை பிடிப்பவன் வரும்போது
நான் நடைப்பயிற்சியில் இருப்பதால்
ஒரு வருடமாக முனை மழுங்கிய கத்தி
கீரை நறுக்கும்போது
ஏதோ முரட்டுக்காளையை அடக்குவது போலவும்
பாறாங்கல்லைப் புரட்டுவது போலவும்
அழுத்தம் கொடுக்க வேண்டும்

இரண்டு மணி
குளியலறை
பல் துலக்குகிறேன்
முகச்சவரம்
கரமைதுனம்
எதிலும் மாற்றமில்லை

மீண்டும் கவிதைகள் படிக்கிறேன்
கவிதையெழுதுகிறேன்

மூன்று மணி
சாப்பிடுகிறேன்

திரும்பி வந்து கவிதைகள் படிக்கிறேன்
கவிதையெழுதுகிறேன்

எப்போதாவது வெப்சீரீஸில்
ஒரு எபிசோட் மட்டும் பார்க்கிறேன்

ஆறு மணி
பால் காய்ச்சி காஃபி
இடைவெளியேயில்லாமல்
சுவாசம் போவது போல்
ப்ளூ டிக்கை மறைத்ததன் காரணத்தை
ஏன் சொல்ல மறுக்கிறாள்
நாம் இதுவரை மாட்டேனெனச்
சொன்னதேயில்லையே
யாரிடமிருந்தும் கேட்டதும் இல்லையே
இவள் ஏன் சொல்ல மாட்டேனென்கிறாள்
நம் காதலை விடவும் உயிரை விடவும் உயிரின் வாதையை விடவும்
அவள் ரகசியம் பெரிதா?
முன்கூட்டியே தெரியாத தருணத்தில்
உயிர் பிரியும் போதுகூட
இதை என்னிடம் சொல்லாமல் மூடி வைத்ததன்
காரணத்தைக் கேட்க நினைப்பேன்
ஆட்டாம்புழுக்கையை விட
மூக்கிலுள்ள முடியை விடச்
சிறிய இந்த அபத்தம்
என் உயிரைக் குடிக்கிறது

மீண்டும்
எப்போதும் போல்
எதுவுமே நடவாதது போல்
கவிதைகள் படிக்கிறேன்
கவிதையெழுதுகிறேன்
அவளுக்கு அனுப்புகிறேன்
ப்ளூ டிக் மறைந்ததால்
படித்தாளா இல்லையா – தெரிவதில்லை
ஆயாசமடைகிறேன்
பிறகு
அவளது பாராட்டு
எப்போதும்போல்
மனதைத் துள்ள வைக்கிறது

எட்டு மணி
பூனைகளுக்கு உணவு
பழங்களை வெட்டி உண்கிறேன்
எப்போதும்போல் மனையாளுக்கு
மாதுளம் பழம் உரித்துக் கொடுக்கிறேன்
எப்போதும்போல் பூனைகளின்
மலஜலம் அள்ளுகிறேன்

ஒன்பது மணி
கவிதைகள் படிக்கிறேன்
கவிதையெழுதுகிறேன்

பத்தரை மணி
தியானம் செய்து
கண்களை மூடுகிறேன்

ஆனால்
நாள் முடிவதில்லை
கண்களை மூடியதும்
கனவுகள் ஓடி வருகின்றன
ப்ளூ டிக்கை நீ மறைத்த காரணம்
என் இரவுகளைத் தின்னும்
பைசாசமாகிறது
நித்திரையில் கனவும்
கனவில் நித்திரையுமாக இருந்து
எழுந்து கொள்கிறேன்
காலைக்கடன் முடித்து
இருபது நிமிடம் தியானம்
பூனைகளுக்கு உணவிடுகிறேன்…