உயிர் வாதை

அன்பே
நீ என்னருகில் தொடுகின்ற
தொலைவில் இருக்கிறாய்
அவ்வப்போது
உன் கூந்தலின் நறுமணம்
என்னுயிரைத் தழுவுகிறது
உன் பின்னங்கழுத்தின் ஒளி
என்னைப் பித்தனாக்குகிறது
உன் வதனத்தின் திவ்யம்
என்னுள்ளத்தை வெறியூட்டுகிறது

உன் கைவிரல்களின் நடன பாவம்
என் சுயத்தை மறக்கச் செய்கிறது
உன் சுவாசத்தின் தீண்டல்
என் முகத்தில் ஒளியூட்டுகிறது
ஆனாலும் இறைவியே
நீ
தொட முடியாத தூரத்தில் இருக்கிறாய்
உன் முத்தத்தில் எனை இழந்து
காலத்தை மறந்து வாழ முடியாதோ?
உன் பாதக்கமலத்தில் முகம் பதித்து
பக்தியில் திளைக்க முடியாதோ?
உன் நிதம்பச் சுவையினிலே
எனை மறக்க முடியாதோ?

இத்தனை துயர் தாங்கி
இந்த உயிர் வாழ வேண்டுமா?
காதலினால் உயிர் மாய்த்தோர்
கதைகள் பல கேட்டதுண்டு
ஆனால், இறைவியே,
இன்று அவர்களில்
நானும் ஒருவனாவேனென
ஒருபோதும் நினைத்ததில்லை

இந்த வாதை தாங்க முடியவில்லை
என் உள்ளம் உருகுவது
உனக்கு விளங்கவில்லையா?
உனக்கு என் மீது
கடுகத்தனை அன்பு இருந்தால்
ஒன்று
வானிலிருந்து இறங்கி வந்து
என்னைத் தழுவிக்கொள்
இல்லையேல்
இந்த உயிரை எடுத்து விடு