சொர்க்கம் நரகம் மற்றும் ஒரு கால்ஃப் மைதானம்

நாவலோ சிறுகதையோ எழுதுவது வேறு. ஆனால் கவிதை எழுதுவது இதுவரை இல்லாத வேறு ஏதோ ஓர் அனுபவமாக இருக்கிறது. நான் இருபத்தைந்து வயதிலிருந்து கவிதையில் வாழ்கிறேன். ஸீரோ டிகிரியில் பல கவிதைகள் உண்டு. தேகத்தில் உண்டு. பெட்டியோ நாவலாக இருந்தாலும் அதில் முக்கால்வாசி கவிதைதான். கவிதை என்று தனியாக இருக்காது. ஆனால் கவிதையாக எழுதப்பட்ட நாவல்.

ஆனால் இப்போதுதான் ஒரு முழுமையான கவிஞனாக வாழ்கிறேன். கவிதையில் வாழ்வது வேறு. கவிஞனாக வாழ்வது வேறு. கவிதையே எழுதாமல் கவிதை படித்துக்கொண்டே இருப்பது கவிதையில் வாழ்தலாகும். கவிஞனாக வாழ்வது வேறோர் அனுபவம். நித்திரையில் கவிதை தன் பாட்டுக்கு எழுதிக்கொண்டே போகும். பக்கத்திலேயே மொபைல் ஃபோன் வைத்திருப்பேன். கனவில் தோன்றிய கவிதையை வரி மாறாமல் வாய்ஸ் மெஸேஜாகப் பதிவு செய்து விட்டுத் தூங்குவேன்.

தலைக்கு மேல் வேலை இருக்கும். எதையும் செய்ய இயலாமல் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும் கவிதையைத்தான் எழுதத் தோன்றும். ஒரு நண்பரிடமிருந்து பத்து நாட்களுக்கு முன் ஒரு கடிதம் வந்தது. உடனடியாக பதில் எழுதியிருக்க வேண்டும். எழுத முடியவில்லை. மனசு பூரா கவிதை. சிந்தனை பூராவும் கவிதை. உணர்ச்சித் தெறிப்பில், உயிரின் வாதையில் எழுதப்ப்படும் கவிதைகள். சுருக்கமாகச் சொன்னால், தற்கொலை உணர்வைத்தான் என் கவிதைகளின் மூலம் தள்ளிப் போடுகிறேன். பதில் வராதது கண்டு நண்பர் என்னை ஃபேஸ்புக்கில் நட்புத் துறப்பு செய்து விட்டார். நன்மனம் கொண்டவர். ப்ளாக் செய்திருந்தால்தான் நியாயம்.

ஒரு கவிதையை எழுதி முடிக்க நான்கு மணி நேரம் கூட ஆகிறது. எழுதி முடித்த பிறகு பத்து கிலோமீட்டர் மாரத்தான் ஓட்டம் ஓடியது போல் உடம்பும் மனசும் களைப்புறுகிறது. ஐம்பது கிலோமீட்டர் மாரத்தான் முடிந்ததும் ஹருகி முராகாமி ரெண்டு போத்தல் பியர் குடிப்பாராம். நமக்கு அந்த வசதி இல்லை. நான் ஸிம்போர்ஸ்கா அல்லது ஜாக் ப்ரேவர் கவிதைகளை வாசிக்க ஆரம்பித்து விடுவேன்.

மீண்டும் சொல்கிறேன். உலகப் புகழ் பெற்ற ஸிம்போர்ஸ்கா, ஜாக் ப்ரேவர் போன்ற கவிகளை என் கவிதைகளில் தாண்டியிருக்கிறேன். நானொரு சீரிய வாசகனும் கூட என்பதால் இதை நான் உறுதியாகச் சொல்ல முடியும். இது ஒன்றும் தற்பெருமை அல்ல. ஒரு வாசகனாக நான் அறிந்து கொண்டதைப் பகிர்கிறேன், அவ்வளவுதான். போலித் தன்னடக்கம் என்னிடம் கிடையாது.

நான் சொல்வதில் சந்தேகமிருந்தால் ஸிம்போர்ஸ்கா எழுதிய கல்லுடன் ஒரு உரையாடல் என்ற கவிதையை வாசியுங்கள். என்னுடைய கல் உரையாடல் மிகப் பெரிய உயரத்தில் நிற்பதைக் காண்பீர்கள். இத்தனைக்கும் என்னுடைய கல் உரையாடலை நான் எழுதிய போது ஸிம்போர்ஸ்காவும் கல்லுடன் உரையாடியிருக்கிறார் என்ற விஷயமே எனக்குத் தெரியாது. நேற்றுதான் ஸிம்போர்ஸ்காவின் அந்தக் கவிதையைப் படித்தேன். ஸிம்போர்ஸ்கா நோபல் விருது பெற்றவர். போலந்தில் மட்டும் இரண்டு பேர் கவிதைக்காக நோபல் பெற்றிருக்கிறார்கள். இன்னும் பல சிறந்த கவிகள் போலந்தில் உண்டு. தொடர்ந்து நான் போலந்துக் கவிகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். கவிதைத் தொகுதிகள் மட்டும் கடந்த இரண்டு மாதங்களில் நூறு வாங்கியிருக்கிறேன். அவை இணையத்தில் கிடைக்காதவை.

ஏன் கவிஞர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று எனக்கு இப்போதுதான் புரிகிறது. மற்றவர்களுக்கு ஆட்டாம்புழுக்கையாகத் தெரியும் விஷயம் கவிஞருக்கு இமயம் போல் தெரிகிறது. அவ்வளவுதான். தலாக் தலாக் தலாக் என்று மூன்று முறை சொன்னால் மண உறவு முற்றுப் பெறுகிறது. இதை ஃபோனில் கூட சொல்லலாம். அப்படி ஒரு சட்டம். ஒரு பெண் தன் காதலனிடம் இனி நாம் சந்திக்க முடியாது என்று சேட்டில் சொன்னாள். அவன் தற்கொலை செய்து கொண்டான். இந்தச் செய்தியை என்னிடம் கூறியவர் ஒரு நண்பர். நண்பரிடம் நான் சொன்னேன், அவன் கவிஞனாகத்தான் இருக்க வேண்டும் என. அவன் தற்கொலை செய்யும் முன் இவரிடம் பேசியிருக்கிறான். தற்கொலை பற்றிப் பேசவில்லை. ஆனால், ஒரு விஷயத்தை மிகவும் பரிதாபமாகச் சொன்னானாம். இத்தனை பெரிய விஷயத்தை அவள் நேரில் கூடச் சொல்ல நினைக்கவில்லை. ஃபோன் செய்து கூட சொல்ல நினைக்கவில்லை. ஒரு சேட்டில் சொல்கிறாள். அதைத்தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அத்தனை fragileஆன மனம் கவிஞனுடையது.

அதைத்தான் இந்தத் தொகுப்பில் எழுதியிருக்கிறேன். ரெண்டு மாதங்களில் எழுதியது. ஒரு நாளில் ஆறு கவிதைகள்.

தொகுப்பு பிரமாதமாக வந்திருக்கிறது. கெட்டி அட்டையில் போட்டிருக்கிறார்கள். ராம்ஜி, காயத்ரி மற்றும் ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் நண்பர்கள் அனைவருக்கும் நான் கடன்பட்டிருக்கிறேன். 570 ரூபாய் விலையுள்ள இந்தத் தொகுதியை 450 ரூபாய்க்கு முன்பதிவு செய்யலாம். கிட்டத்தட்ட மலிவுப் பதிப்பு போல் விலை வைத்திருக்கிறார்கள். 475 பக்கங்கள் கொண்ட இந்தத் தொகுதிக்கு தாராளமாக 900 ரூ விலை வைத்திருக்கலாம். இப்போது 450 ரூ. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஜாக் ப்ரேவரின் கவிதைத் தொகுதி ஐந்து லட்சம் பிரதிகள் விற்றிருக்கிறது. ஃப்ரான்ஸில் அது சாதனை. இங்கே வணிக நாவல்கள்தான் ஒரு லட்சம் பிரதி விற்கும்.

இந்தக் கவிதைத் தொகுப்புக்கு ஆயிரம் பேர் முன்பதிவு செய்தால் அது என் செயலுக்குக் கிடைத்த தகுந்த சன்மானமாகக் கருதுவேன். ஒவ்வொரு கவிதையையும் நான் என் ஆன்மாவை உருக்கி எழுதியிருக்கிறேன் என்பதை அக்கவிதைகளை வாசிக்கும்போது நீங்கள் உணர்வீர்கள்.

முன்பதிவு செய்வதற்கான இணைப்பு:

https://tinyurl.com/PREBOOK-SORGAM-NARAGAM