கயிற்றின் மேல் நடைப்பயிற்சி

அவன் என் உயிர்த் தோழன்
அழகன்
அழகைத் தன் பெயரிலும் கொண்டவன்
பப்பில் சந்தித்தோம்
மனையாளையும் அழைத்து வந்தான்
அவளை முதல்முதலில் பார்க்கிறேன்
என் தோழியுடன் நான்

கிளம்பும் போது
அவள் ஆடையைப் புகழ்ந்தேன்

மறுநாள் தோழி சொன்னாள்
’நீ சொன்னது தவறு
நானாக இருந்தால் சங்கடமடைவேன்’
என் மனம் சுருங்கியது

நண்பனிடம் ஆரம்பத்திலேயே
சொல்லியிருந்தேன்
’ஒரு அழகனைச் சந்திக்கப் போவதால்
தோற்றத்தில் அதிக கவனமெடுத்தேன்
அதுதான் கொஞ்சம் தாமதம்’
ரசித்தான்
பெரிதாகச் சிரித்தான்

தோழியின் சொல் கேட்டு
எனக்கோர் சந்தேகம்
ஆணின் அழகைப் புகழலாம்,
பெண்ணின் ஆடையைக் கூட பாராட்டலாகாதா?

நாளை மீண்டும் அந்த ஜோடி
தோழியும் இருப்பாள்
வாயை எப்படிக் கட்டுவது?
இப்போதே யோசனை தொடங்கியது

மது கையில் இருந்தாலும்
சொல்கட்டு இருக்க வேண்டும்
நூறு முறை சொல்லிக்கொண்டேன்