மேற்கத்திய செவ்வியல் இசை – தொடர் பற்றி

அன்புள்ள சாரு
மேற்கத்திய செவ்வியல் இசை குறித்த தொடர் தளத்தில் வெளிவரத தொடங்கியிருப்பதை கவனித்தேன். அண்மையில் மேற்கத்திய செவ்வியல் இசையை அறிமுகப்படுத்திக் கொள்ளலாம் என்று இணைய வகுப்பு ஒன்றில் சேர்ந்தேன். அதனைத தொடராமல் வேறு வழிகளில் கவனம் மாறி அப்படியே வைத்திருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் தமிழில் யாராவது அறிமுகப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். 

இப்போதைக்கு நேர் வகுப்பில் ஜெயமோகனின் மகனும் எழுத்தாளருமான அஜி அண்ணா இசை அறிமுகம் நடத்துகிறார். அதில் கலந்து கொள்ள 400 கிலோமீட்டர் பயணித்து ஈரோட்டில் வெள்ளிமலைக்குச் செல்ல வேண்டும். என் உடல்நிலைக்கு இந்தப் பயணங்கள் கடுமையானவை. முடிந்தவரை குறைத்துக் கொள்கிறேன். தற்சமயம் விடாப்பிடியாக ஜெ வின் வெள்ளிமலை இந்துத் தத்துவ வகுப்புகளுக்குச் சென்று கொண்டிருக்கிறேன். இன்றும் கூட அப்படியாக ஒரு வகுப்புக்க் கிளம்பும் ஆயத்தப் பணிகளில் இருக்கிறேன்.
ஆனால் ஆசைப்படும் பிற வகுப்புகளுக்கெல்லாம் எளிதில் சென்றுவிட முடிவதில்லை. எனவே என்னைப் போன்றவர்களுக்கு இந்தக் கட்டுரைத தொடர் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு கட்டுரையையும் முறையாகப் படித்து, அதில் கொடுக்கப்பட்டிருக்கும் இசைக்கோர்ப்புகளைக் கேட்டு ரசிக்கும் பணியை இன்னும் தொடங்கவில்லை. இருப்பினும் இத்தொடரை சில இடங்களில் படித்து இசையைக் கேட்டு பார்க்கையில் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அந்த இசையுலகத்திற்குள் எளிதில் ழைய முடிகிறது.

இந்த வாரம் தத்துவ வகுப்பிற்குச் சென்று விடுகிறேன். அடுத்த வாரத்தில் இருந்து தொடரை முறையாக வாசித்து உங்களுடன் வருவேன் என்று உறுதி கூற முடியும். ஆகவே என்னைப் போன்ற தொலைதூரக் கற்றலில் இருப்பவர்களுக்காகத் தொடர்ச்சியாக இத்தொடரை எழுத வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். வரும் வாரங்களில் என் அனுபவங்களை எழுதுகிறேன்.
அன்புடன்

சக்திவேல் 

நன்றி சக்திவேல். செவ்வியல் இசை குறித்து நேரடியான வகுப்புகள் எடுக்கலாம் என்றே நினைத்தேன். ஆனால் இசை குறித்த வகுப்புகளை திரைப்பட வகுப்புகளைப் போல கல்லூரிகளில் வைத்து நடத்த இயலாது. அதற்கு ஏற்காடு போன்ற ஒரு மலைப்பகுதிதான் தகுதியான இடம். ஆனால் மார்ச் இறுதி வரை அது சாத்தியம் இல்லை. நடத்தினால் ஏப்ரலில்தான் நடத்த வேண்டும். ஒரு நாளில் ஐந்து மணி நேரம் என்று இரண்டு தினங்கள் வகுப்புகளை வைத்துக்கொண்டால் போதும். ஒரே ஒரு நிபந்தனை. தமிழ் சினிமாப் பாடல்களை அந்த இரண்டு தினங்களும் மறந்து விட வேண்டும். ஏனென்றால், தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதிருந்து நாம் தமிழ் சினிமாப் பாடல்களைக் கேட்டே வளர்ந்திருக்கிறோம். ஆகவே, அந்த இரண்டு தினங்களுக்காவது அந்த இசைக்கு நாம் விடுப்புக் கொடுக்க வேண்டும்.

பார்க்கலாம்.

சாரு