தியாகராஜா நாவல் அச்சில் இருக்கிறது. டிசம்பர் பதினைந்துக்குள் வெளிவந்து விடும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அதற்கும் மேல் ஆகும் போல் தெரிகிறது. சில நண்பர்கள் என் பிறந்த நாளுக்குள் (டிசம்பர் 18) வந்து விட்டால் நல்லது என்றார்கள். அது சாத்தியமில்லை. காரணம் நான்தான். அச்சகத்திடமும் லேஅவ்ட் ஆர்ட்டிஸ்டிடமும் நான் நடைமுறை சாத்தியமில்லாத விஷயங்களையெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தேன். உதாரணமாக, வானத்தை வில்லாக வளைக்க வேண்டும். அது முடியாது என்பார்கள். அமெரிக்காவில் ஒரு பதிப்பகம் அப்படிச் செய்திருக்கிறதே என்று என்னிடம் உள்ள அந்தப் புத்தகத்தைக் காண்பிப்பேன். இதெல்லாம் இந்திய வானத்தில் சாத்தியமே இல்லை; இங்கே அப்படி வளைக்க முடியாது; மீறி வளைத்தால் உடைந்து விடும் என்பார்கள். விட்டு விடுவேன்.

ஆனாலும், கோல்ட் ஃபாய்ல், எம்பாஸிங் போன்ற அலங்காரங்களெல்லாம் இருக்கும். இரண்டு புத்தகங்கள், இரண்டையும் உள்ளடக்கிக் கொண்டிருக்கும் ஒரு அட்டைப் பெட்டி. இத்தனையும் செய்ய வேண்டும். கடைசி நேரத்தில் அட்டைப் பெட்டிக்கு உள்ளேயும் இரண்டு பக்கங்களிலும் இரண்டு ஓவியங்கள் வேண்டும் என்று சொன்னேன். அதுவும் உருவாக்கப்பட்டது. பெட்டியைத் திறந்தால் அது தானாகவே மூடிக்கொள்ள வேண்டும் என்றேன். அது எப்படி? ஒரு பக்கம் காந்தம், இன்னொரு பக்கம் இரும்பு. இப்படியெல்லாம் நான் செய்த அக்குறும்புகள் காரணமாக, நாவல் என் பிறந்த நாளின்போது வராமல் என் தலைவனின் பிறந்த நாள் அன்றுதான் வரும்போல் தெரிகிறது. தலைவனின் பிறந்த நாளை அகில உலகமே கொண்டாடுகிற்து என்பதால் என் வருத்தம் தீர்ந்தது.
ஆக, இன்னும் ஒரு மாதத்தில் நாவல் வந்து விடும். ஏதாவது அதிசயம் நடந்து அதற்கு முன்பாகவும் வரலாம்.
முன்பதிவுத் திட்டம் இன்னும் அமலில் இருக்கிறதா, முடிந்து விட்டதா என்று தெரியவில்லை. பதிப்பகத்திடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.