மேற்கத்திய செவ்வியல் இசையை ரசிப்பது எப்படி? – 5. நாம் அறிந்திராத நாம்


ராக்மானினோஃப் ரஷ்யாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர், பியானோ கலைஞர், இசைக்குழு நடத்துநர்.  மேற்கத்திய செவ்வியல் இசையின் பிற்கால ரொமாண்டிக் மரபைச் சேர்ந்த மிக முக்கியமான இசைக்கலைஞர்களில் ஒருவர்.

ராக்மானினோஃபின் இசையின் தனித்தன்மை அதன் ஆழமான உணர்ச்சியும், ஏக்கமும், பிரம்மாண்டமான இசைக் கட்டமைப்பும் ஆகும். அவருடைய இசையில் சில இடங்களில் துயரம் நிரம்பியிருக்கும். சில இடங்களில் பேரெழுச்சி ஏற்படும். ஆனால் அந்தத் துயரத்துக்குள்ளேயே ஒரு அபாரமான அழகையும் காண முடியும்.  

ராக்மானினோஃப் மிகச் சிறந்த பியானோ கலைஞராகவும் விளங்கினார். பெரிய கைகளும் அசாதாரணமான விரல் விரிப்பும் கொண்டவர். அவருடைய சில பியானோ இசைப்படைப்புகளை வாசிப்பது இன்றும் கலைஞர்களுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது.

1897இல் அவருடைய முதல் சிம்ஃபனி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து கடுமையான மனச்சோர்வுக்கு ஆளானார். பின்னர் சிகிச்சையின் உதவியுடன் மீண்டு, 1901இல் தனது புகழ்பெற்ற இரண்டாவது பியானோ கான்செர்ட்டோவை நிறைவு செய்தார்.

1917இல் ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு நாட்டைவிட்டு வெளியேறினார். பின்னர் அமெரிக்காவில் வாழ்ந்தார். 1943இல் கலிஃபோர்னியாவில் காலமானார்.

மேற்கத்திய செவ்வியல் இசைக்குக் கொஞ்சமும் அறிமுகம் இல்லாதவர்களைக்கூட ராக்மானினோஃபின் இந்தப் பியானோ கான்செர்ட்டோவைக் கேட்கச் சொல்லுவேன். ஏனென்றால், உங்களுக்குப் பிடித்த ஹாலிவுட் திரைப்படங்களின் பின்னணி இசை, மேற்கத்திய பாப் இசை, சினிமா இசை போன்றவற்றையெல்லாம் மிஞ்சக்கூடிய வசீகரம் கொண்டது ராக்மானினோஃபின் இசை. உதாரணத்துக்கு அவரது மூன்று படைப்புகள்.  

முதலாவது, Piano Concerto No. 2 in C minor, Op. 18 (1901).

இது பியானோ கான்செர்ட்டோ.  சிம்ஃபனி வகையைச் சேர்ந்த இசையல்ல. சிம்ஃபனியில் பொதுவாக முழு இசைக்குழுவே பிரதானமாக இருக்கும். கான்செர்ட்டோவில் ஒரு தனி இசைக்கருவிக்கும் இசைக்குழுவுக்கும் இடையிலான இசை உரையாடல் நிகழும்.  

ஒரு விஷயத்தைச் சொன்னால் உங்களுக்கு மிகையாகத் தோன்றலாம். ஆளில்லாத ஒரு தனித்தீவில் நான் மாட்டிக்கொண்டால்கூட ராக்மானினோஃபின் இசை மட்டும் என்னுடன் இருந்தால், பல ஆண்டுகளைத் தனிமை உணர்வின்றிக் கழித்துவிடுவேன்.  ஏனென்றால், ராக்மானினோஃபின் இசை நம்முடைய செவிகளுடன் மட்டும் உரையாடுவதில்லை. அது நம் ஆன்மாவுடன் உரையாடுகிறது.

தனிமை என்றால் என்ன? நம்மைச் சுற்றி மனிதர்கள் இல்லாமல் இருப்பதா? அப்படியானால், காட்டிலும் மலையிலும் குகைகளிலும் பல ஆண்டுகள் தனியாக வாழும் துறவிகளை என்னவென்று சொல்வது? அவர்கள் தனிமையில் வாடிக்கொண்டிருக்கிறார்களா? அல்லது, நாம் அறிந்திராத வேறொரு உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்களா?

ஒரு துறவி மலைக்குகையில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு முன்னால் ஒரு பாறை. பாறைக்கு அப்பால் பள்ளத்தாக்கு. பள்ளத்தாக்குக்கு அப்பால் வானம். காலையில் சூரியன் உதிக்கிறது. மாலையில் மறைகிறது. இரவில் நட்சத்திரங்கள் தோன்றுகின்றன. அவரிடம் பேசுவதற்கு யாருமில்லை. ஆனால் அவருடைய மனதில் ஓர் உரையாடல் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அந்த உரையாடலில் அவர் ஒருபோதும் தனியாக இல்லை.

அவருடைய உலகத்தை நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடியாது.  ஆனால் ராக்மானினோஃபின் இசை அந்த உலகத்துக்குள் நுழைவதற்கான ஒரு கதவைத் திறக்கிறது.

இங்கே ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. இசை நம்முடைய தனிமையைப் போக்குகிறது என்று சொன்னால், அது வெறும் பொழுதுபோக்காகிவிடும். ஒரு வானொலிப் பெட்டியோ தொலைக்காட்சியோகூட அந்த வேலையைச் செய்துவிடலாம். ராக்மானினோஃப் செய்வது அதுவல்ல. அவர் தனிமையிலிருந்து நம்மைத் திசைதிருப்புவதில்லை. தனிமையின் இயல்பையே மாற்றுகிறார்.

நம்மைச் சுற்றி யாருமில்லை என்ற உணர்வுக்கும், நமக்குள் யாருமில்லை என்ற உணர்வுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இரண்டாவதுதான் மனிதனை அதிகமாக வதைக்கிறது. ராக்மானினோஃபின் இசை நமக்குள் நாம் இதுவரை சந்தித்திராத ஒருவரைச் சந்திக்க வைக்கிறது.

அந்த ஒருவர் வேறு யாருமல்ல. நாம்தான்.  ஆனால் நமக்கே அறிமுகமில்லாத நாம்.

கிரேக்கப் புராணத்தில் ஓர்ஃபியஸ் (Orpheus) என்ற ஓர் இசைக்கலைஞன் வருகிறான். அவன் தன்னுடைய யாழை மீட்டிப் பாடினால் மரங்களும் பாறைகளும்கூட அவனுடைய இசையால் ஈர்க்கப்படும். காட்டு விலங்குகள் தங்கள் இயல்பான மூர்க்கத்தை மறந்து அவனருகில் வந்து அமரும்.

அவனுடைய காதலி யூரிடிசி (Eurydice) (இங்கே நம் எல்லோருக்கும் பழகிய ஆங்கில உச்சரிப்பையே பின்பற்றுகிறேன்.  கிரேக்க உச்சரிப்பு – எவ்ரிடிகே) இறந்துவிடுகிறாள். அவளை மீட்டுக்கொண்டு வருவதற்காக ஓர்ஃபியஸ் இறந்தவர்களின் உலகத்துக்குள் செல்கிறான். அங்கே அவன் தன்னுடைய இசையை நிகழ்த்துகிறான். அந்த இசையைக் கேட்டு மரணத்தின் உலகத்தைக் காக்கும் தெய்வங்கள்கூட மனம் இரங்குகின்றன. யூரிடிசியை அவனுடன் அனுப்பச் சம்மதிக்கின்றன. ஆனால் ஒரு நிபந்தனை. இருவரும் பூமியை அடையும்வரை அவன் திரும்பிப் பார்க்கக்கூடாது.

கடைசி நொடியில் ஓர்ஃபியஸ் திரும்பிப் பார்த்துவிடுகிறான். யூரிடிசியை மீண்டும் இழக்கிறான்.

(இந்தக் கதை ஒரு ப்ரஸீலியத் திரைப்படமாக வந்துள்ளது.  Black Orpheus (1959) இந்தத் திரைப்படம் பற்றி என்னுடைய Third Cinema என்ற நூலில் விரிவாக எழுதியிருக்கிறேன்.)

இந்தக் கதையில் என்னை மிகவும் கவர்வது ஓர்ஃபியஸ் தன்னுடைய காதலியை இழந்துவிட்டான் என்பதல்ல. அவனுடைய இசை மரணத்தின் உலகத்துக்குள்ளேயே நுழைந்து அங்கிருப்பவர்களின் மனதையும் மாற்றிவிடுகிறது என்பதுதான்.

இசையால் மரணத்தை வெல்ல முடியவில்லை. ஆனால் மரணத்தின் உலகத்தில்கூட இசையால் ஓர் உரையாடலைத் தொடங்க முடிகிறது.

ராக்மானினோஃபின் பியானோ கான்செர்ட்டோ – இரண்டைக் கேட்கும்போது எனக்கு இந்தக் கதை நினைவுக்கு வருகிறது. காரணம், அவருடைய இசை ஓர்ஃபியஸின் இசையைப் போல இருக்கிறது என்பதல்ல. ஓர்ஃபியஸ் நுழைந்தது மரணத்தின் உலகத்துக்குள். ராக்மானினோஃப் நுழைவது நம்முடைய அக உலகத்துக்குள். நாம் பல ஆண்டுகளாகப் பூட்டிவைத்திருக்கும் கதவுகளை அவர் ஒவ்வொன்றாகத் திறக்கிறார்.

இந்தக் கான்செர்ட்டோவின் ஆரம்பத்தை கவனியுங்கள்.

பியானோவில் சில ஆழமான ஒலிகள் எழுகின்றன. தேவாலயத்தின் மணியோசைகளை நினைவூட்டும் ஒலிகள். ஒவ்வொரு ஒலியும் அதற்கு முந்தைய ஒலியைவிட அதிக வலிமையுடன் எழுகிறது. ஒரு பிரம்மாண்டமான கதவை யாரோ மெதுவாகத் தட்டுவதுபோல் இருக்கிறது.

பிறகு இசைக்குழு நுழைகிறது.  அதுவரை தனியாக ஒலித்துக்கொண்டிருந்த பியானோ, திடீரென்று ஒரு பெரும் இசை உலகத்தின் பகுதியாகிவிடுகிறது.

இதை வெறும் இசையியல் நிகழ்வாக மட்டும் பார்க்க முடியவில்லை. மனிதனின் அக உலகத்தில் நிகழும் ஒரு மாற்றமாகவும் பார்க்கலாம். தனியாக நின்றுகொண்டிருக்கும் ஒருவன், தன்னைவிடப் பெரிய ஒன்றுடன் தொடர்புகொள்ளும் தருணம் அது.

முதல் இயக்கத்தில் இசை சில இடங்களில் நம்மை இழுத்துச் செல்கிறது. சில இடங்களில் நம்மை எதிர்த்தும் நிற்கிறது. அந்த இசையைக் கேட்கும்போது வாழ்க்கையின் போராட்டங்களும் தோல்விகளும் நினைவுக்கு வரலாம். ஆனால் இசை எந்த ஒரு குறிப்பிட்ட சம்பவத்தையும் நமக்குச் சொல்வதில்லை. நம்முடைய அனுபவங்களை நாமே அதற்குள் கொண்டுவருகிறோம்.

இரண்டாவது இயக்கமான Adagio sostenuto தொடங்கும்போது முற்றிலும் வேறொரு உலகத்துக்குள் நுழைகிறோம்.

முதல் இயக்கத்தின் கொந்தளிப்புக்குப் பிறகு இசை மென்மையாகிறது. பியானோவும் புல்லாங்குழலும் கிளாரினெட்டும் இணைந்து உருவாக்கும் அந்த இசைவெளியில் காலம் மெதுவாக நகர்வதுபோல் தோன்றுகிறது.

இந்த இசையைக் கேட்கும்போது எனக்குத் துயரம் ஏற்படுகிறது என்று சொல்ல முடியாது. மகிழ்ச்சி ஏற்படுகிறது என்றும் சொல்ல முடியாது. இரண்டையும் கடந்த ஓர் உணர்வு.

நம் வாழ்க்கையில் சில தருணங்களை  நினைத்தால் துக்கமாக இருக்கும். ஆனால் அந்தத் தருணங்களை நம் வாழ்க்கையிலிருந்து நீக்கிவிடவும் விரும்ப மாட்டோம். ஏனென்றால், அந்தத் துக்கங்களும் சேர்ந்துதான் நம்மை உருவாக்கியிருக்கின்றன.

ராக்மானினோஃபின் இசை அப்படிப்பட்ட நினைவுகளின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது.

சில நேரங்களில் நாம் இழந்த மனிதர்களை நினைத்துக்கொள்கிறோம். சில நேரங்களில் நாம் வாழாமல் விட்டுவிட்ட வாழ்க்கையை நினைத்துக்கொள்கிறோம். இன்னும் சில நேரங்களில் காரணமே தெரியாமல் கண்கள் கலங்குகின்றன.

கான்ஸர்ட்டோ இரண்டின் இரண்டாவது இயக்கம் நம்மை அழ வைக்கிறது என்பதல்ல இதன் பொருள். நாம் இதுவரை வெளிப்படுத்த முடியாமல் வைத்திருந்த உணர்ச்சிகளுக்கு அது ஒரு வடிவம் கொடுக்கிறது.

உளவியலில் மனிதனின் மனம் தன்னுடைய எல்லா அனுபவங்களையும் ஒரே விதமாகப் பதிவு செய்வதில்லை. சில அனுபவங்கள் நினைவுகளாக இருக்கின்றன. சில அனுபவங்கள் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத உணர்ச்சிகளாகத் தங்கிவிடுகின்றன. ஒரு குறிப்பிட்ட மணம், ஒரு காட்சி, ஒரு பழைய பாடல் ஆகியவை பல ஆண்டுகளுக்கு முன்பு நாம் அனுபவித்த ஓர் உணர்ச்சியைத் திடீரென்று மீட்டுக்கொண்டுவருவதை நீங்கள் கவனித்திருக்கலாம்.

இசைக்கும் அந்த ஆற்றல் உண்டு.

ஆனால் ராக்மானினோஃபின் இசையில் இன்னொரு விஷயமும் நிகழ்கிறது. அது பழைய நினைவுகளை மட்டும் மீட்டுக்கொண்டு வருவதில்லை. நாம் ஒருபோதும் அனுபவித்திராத ஏதோ ஒன்றுக்காகவும் ஏங்க வைக்கிறது.

அதுதான் இந்த இசையின் மிகப் பெரிய மர்மம்.

நாம் சந்தித்திராத ஒருவரைப் பிரிந்திருப்பதுபோல் உணர்கிறோம். நாம் சென்றிராத ஓர் இடத்துக்குத் திரும்பிச் செல்ல விரும்புகிறோம். நாம் வாழ்ந்திராத ஒரு வாழ்க்கையை நினைத்து ஏங்குகிறோம்.

இந்த ஏக்கத்துக்கு என்ன பெயர் கொடுப்பது?

எனக்குத் தெரியவில்லை.

மூன்றாவது இயக்கமான Allegro scherzando தொடங்கும்போது இசை மீண்டும் வேகம் பெறுகிறது. ஆனால் முதல் இயக்கத்தில் கேட்ட அதே மனிதனாக நாம் இப்போது இல்லை. இரண்டாவது இயக்கத்தின் வழியாக நாம் வேறொரு அனுபவத்தைப் பெற்றிருக்கிறோம். இசை உற்சாகமும் வலிமையும் பெற்று, இறுதியில் பிரம்மாண்டமான உச்சத்தை அடைகிறது.

இந்த மூன்று இயக்கங்களையும் ஒன்றாகக் கேட்க வேண்டும். அப்போதுதான் இந்தக் கான்செர்ட்டோவின் முழு அனுபவமும் கிடைக்கும்.

இதைக் கேட்கும்போது நீங்கள் ஒரு கதையைக் கேட்பதில்லை. இசை உங்களுக்கு எந்தக் கதையையும் சொல்வதில்லை. ஆனால் உங்களுடைய வாழ்க்கையே ஒரு கதையாக மாறுவதை உணர்வீர்கள்.

அதனால்தான் ஆளில்லாத தனித்தீவில் ராக்மானினோஃபின் இசையுடன் பல ஆண்டுகள் வாழ்ந்துவிட முடியும் என்று சொன்னேன்.  அங்கே மனிதர்கள் இருக்க மாட்டார்கள். நகரங்கள் இருக்காது. புத்தகங்கள்கூட இல்லாமல் போகலாம்.  ஆனால் ஒவ்வொரு முறை இந்தக் கான்செர்ட்டோவைக் கேட்கும்போதும் நான் வேறொரு மனிதனைச் சந்திப்பேன்.  அவன் நானாகவும் இருக்கலாம்.  இதுவரை நான் அறிந்திராத நானாகவும் இருக்கலாம்.

ஒரு சிறிய இசையியல் குறிப்பு: இந்தக் கான்செர்ட்டோவின் இரண்டாவது இயக்கத்தில் பியானோவுடன் புல்லாங்குழலும் கிளாரினெட்டும் முக்கியமான மெலடிகளைப் பகிர்ந்துகொள்கின்றன. எனவே பியானோ மட்டுமே அந்த இயக்கத்தின் மென்மையை உருவாக்குகிறது என்று நாம் நினைக்கக்கூடாது.  , இந்த இரண்டாவது இயக்கத்தில் மூன்று கருவிகளுக்கும் இடையிலான ஓர் இசை உரையாடல் நிகழ்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.    

அடுத்து, ராக்மானினோஃபின் ராப்ஸடி.  ராப்ஸடி என்பது மேற்கத்திய செவ்வியல் இசையில் சுதந்திரமான கட்டமைப்பைக் கொண்ட ஓர் இசை வடிவம். ராக்மானினோஃபின் Rhapsody on a Theme of Paganini என்பது பியானோவுக்கும் முழு இசைக்குழுவுக்குமாக எழுதப்பட்ட படைப்பு. இதை ஒரு வகையான பியானோ கான்செர்ட்டோ என்றும் சொல்லலாம். ஆனால் வழக்கமான கான்செர்ட்டோவைப் போல மூன்று இயக்கங்களாகப் பிரிக்கப்படவில்லை. பகனீனியின் ஒரு சிறிய வயலின் இசைக்கருவை எடுத்துக்கொண்டு, அதை 24 விதமாக மாற்றி அமைத்திருக்கிறார் ராக்மானினோஃப். அதில் பதினெட்டாவது மாறுபாடு உலக இசை வரலாற்றின் மிக அழகான மெலடிகளில் ஒன்று. இந்தப் பதினெட்டாவது மாறுபாடு (Variation 18 – Andante cantabile) மிகவும் இனிமையானது. தனியாகக் கேட்டாலும் ரசிக்க முடியும். 

ராக்மானினோஃபின் இந்த ராப்ஸடி எனக்குள் ஏற்படுத்தும் உணர்வுகளை வார்த்தைகளால் விவரிப்பது கடினம். ஏனென்றால், இந்த இசை என்னை ஒரே உணர்வில் நிலைத்திருக்க விடுவதில்லை. ஒவ்வொரு கணமும் வேறோர் உலகத்துக்கு அழைத்துச் செல்கிறது.

ஒரு கணம் த்தாங்கோ நடனம் ஆடிக்கொண்டிருக்கிறேன். அடுத்த கணம் பாலே நடனத்தின் மென்மையான அசைவுகளில் மிதக்கிறேன். பிறகு இருளில் ஆயிரக்கணக்கான மின்மினிப்பூச்சிகள் அலைந்து திரிவதைப் பார்த்து அவற்றோடு நானுமொரு மின்மினிப்பூச்சியாய் மாறுகிறேன்.  அவற்றின் ஒளி இசையின் தாளத்துக்கேற்பத் தோன்றி மறைகிறது. திடீரென்று வானம் விரிகிறது. நட்சத்திரங்கள் என்னுடன் உரையாடத் தொடங்குகின்றன.

நள்ளிரவு. நிலவொளியில் ஒரு நதிக்கரையில் தனியாக அமர்ந்திருக்கிறேன். சுற்றிலும் மனித நடமாட்டமே இல்லை. நதியின் மீது நிலவு உடைந்து சிதறிக்கிடக்கிறது. நீருக்குள் இறங்குகிறேன். ஆனால் மூழ்கவில்லை. நீரின் மீது நடக்கிறேன். சிறிது நேரத்தில் என் கால்கள் தரையைத் தொடுவதில்லை. காற்றில் மிதக்கிறேன். மரங்களின் உச்சிகளைத் தாண்டிச் செல்கிறேன்.

அப்போது ஒரு விசித்திரமான விஷயம் நிகழ்கிறது. என்னைச் சுற்றியுள்ள உலகம் இனி மௌனமாக இல்லை. மரங்கள் என்னுடன் பேசுகின்றன. செடி கொடிகளும் பேசுகின்றன. பறவைகளும் விலங்குகளும் பேசுகின்றன. அவற்றின் மொழி எனக்குப் புரிகிறது. நானும் அவற்றுக்குப் பதில் சொல்கிறேன். மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே இதுவரை இருந்த எல்லைகள் மறைந்துவிடுகின்றன.

மழை பெய்யத் தொடங்குகிறது. மழைத்துளிகள் என் உதடுகளில் விழுகின்றன. அவை நீராக இல்லை. தேனாக இனிக்கின்றன.

பசியில்லை. தாகமில்லை. உடலின் பாரமே இல்லாமல் போய்விடுகிறது.

இதை மகிழ்ச்சி என்று சொல்வதா? பரவசம் என்பதா? அல்லது, தியானத்தில் கிடைப்பதாகச் சொல்லப்படும் ஓர் அனுபவத்துடன் ஒப்பிடலாமா?

எனக்குத் தெரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். ராக்மானினோஃபின் இந்த ராப்ஸடியைக் கேட்கும்போதெல்லாம் நான் அன்றாட வாழ்க்கையின் எல்லைகளுக்குள் இருப்பதில்லை. காலமும் வெளியும் தங்கள் வழக்கமான பொருளை இழந்துவிடுகின்றன. நான் அறிந்த உலகம் மறைந்து, அதன் இடத்தில் இன்னொரு உலகம் தோன்றுகிறது.

அந்த உலகத்துக்குச் செல்வதற்கு நான் எங்கும் பயணம் செய்ய வேண்டியதில்லை. கண்களை மூடிக்கொண்டு ராக்மானினோஃபின் ராப்ஸடியைக் கேட்டால் போதும்.

மூன்றாவது உதாரணமாக, ராக்மானினோஃபின் இந்த ப்ரெலூட்.

Prelude in G minor, Op. 23 No. 5 (1901)

உலகப் புகழ்பெற்ற பியானோ கலைஞர் யூஜா வாங் வாசிக்கிறார். Deutsche Grammophon நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ காணொலி.

இது சுமார் நான்கு நிமிடங்கள் நீடிக்கும் தனிப் பியானோ படைப்பு. இசைக்குழு கிடையாது.

இதன் ஆரம்பத்தில் வரும் வலிமையான, அணிவகுப்பை நினைவூட்டும் தாளத்தையும், நடுப்பகுதியில் திடீரென மலரும் மென்மையான மெலடியையும் கவனியுங்கள். ஒரே சிறிய படைப்புக்குள் இரண்டு முற்றிலும் மாறுபட்ட உணர்வுகளை ராக்மானினோஃப் உருவாக்குகிறார்.