மேற்கத்திய செவ்வியல் இசையை ரசிப்பது எப்படி? – 3 – துக்கத்தின் பேரின்பம்

3. துக்கத்தின் பேரின்பம்

என்னுடைய பெட்டியோ நாவலைப் படித்திருப்பீர்கள் என்றால் அடாஜியோ என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். பெட்டியோ நாவலின் லீட்மோடிஃப் அடாஜியோதான்.

பொதுவாக எனக்கு ஆகப் பிடித்த இசைக்கருவி எது என்று கேட்டால் பியானோ என்று சொல்வேன். அடுத்த இடத்தில் வருவது சாக்ஸஃபோன்.

பியானோவின் ஒலியில் என்னை அத்தனை வசீகரிப்பது எது என்று பலமுறை யோசித்திருக்கிறேன். அதற்கு என்னிடம் ஒரு திட்டவட்டமான பதில் இல்லை. ஒரு பியானோவில் எத்தனை விதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடிகிறது! அதன் ஒலி சில சமயங்களில் ஒரு குழந்தையின் குரலைப் போல இருக்கிறது. சில சமயங்களில் யாரிடமும் சொல்ல முடியாத துயரத்தைத் தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும் மனிதனின் குரலைப் போல இருக்கிறது. பல சமயங்களில் பியானோ பரவசத்தின் உச்சத்தில் நிற்கிறது.  

குறிப்பாக, மெதுவாக வாசிக்கப்படும் பியானோ இசை என்னை மிகவும் பாதிக்கிறது.  இங்கேதான் அடாஜியோ வருகிறது.

அடாஜியோ (Adagio) என்பது இத்தாலிய இசைச்சொல். மெதுவாக, நிதானமாக வாசிக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. மேற்கத்திய செவ்வியல் இசையில் ஒரு படைப்பின் வேகத்தைக் குறிப்பிடுவதற்கு இத்தாலியச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. அலெக்ரோ (Allegro) என்றால் வேகமாக. ஆண்டான்டே (Andante) என்றால் நடக்கும் வேகத்தில், மிதமாக. அடாஜியோ என்றால் மெதுவாக.

ஆனால் அடாஜியோ என்பது வெறும் வேகத்தைக் குறிக்கும் சொல் மட்டும்தானா?

இசையியல் அடிப்படையில் அப்படித்தான். ஆனால் ஒரு ரசிகனாக எனக்கு அடாஜியோ என்பது வேறொரு அனுபவம்.

மெதுவாக நகரும் இசையில் ஒவ்வொரு ஸ்வரத்துக்கும் இடையே ஒரு வெளி உருவாகிறது. அந்த வெளியில் நம்முடைய நினைவுகள் நுழைகின்றன. மறந்துவிட்டதாக நினைத்த மனிதர்கள் திரும்பி வருகிறார்கள். கடந்துபோன காலம் மீண்டும் நம் முன்னால் நிற்கிறது.

ஆனால் எல்லா அடாஜியோக்களும் துக்கமானவை அல்ல. சில அமைதியைத் தருகின்றன. சில பிரார்த்தனையைப் போல இருக்கின்றன. சில பேரின்பத்தைத் தருகின்றன. சில இசைகளில் துக்கமும் பேரின்பமும் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்க முடியாதபடி கலந்திருக்கின்றன.

பீத்தோவனின் அடாஜியோ

Beethoven — Pathétique Sonata, 2nd Movement (Adagio cantabile)

மன அமைதியைத் தேடி எத்தனையோ பேர் எத்தனையோ விதமான வழிகளில் முயற்சி செய்கிறார்கள். மலைகளுக்கும் காடுகளுக்கும் செல்கிறார்கள். ஆன்மீகத் தலைவர்களை நாடுகிறார்கள். எனக்குத் தெரிந்து மன அமைதியைத் தருவதற்கு பீத்தோவனின் இந்த அடாஜியோவை மீறிய ஒன்று இந்தப் பிரபஞ்சத்திலேயே இல்லை என்று சொல்வேன்.

ஐந்து நிமிடங்கள்கூட இல்லை. அதற்கும் குறுகிய காலத்தில் பிரபஞ்ச வெளியில் உங்களைச் சஞ்சரிக்க வைத்துவிடுகிறார் பீத்தோவன்.

பலருக்கும் மனதைக் கொந்தளிக்க வைக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. பயம், பீதி, கட்டுக்கடங்காத கோபம், பதற்றம் என்று எத்தனையோ எதிர்மறையான உணர்வுகள் மனதை அலைக்கழிக்கின்றன. அதையெல்லாம் நொடியில் காணாமல் அடிக்கக்கூடிய இசை இந்த அடாஜியோ.

இப்போது பீத்தோவனின் அடாஜியோ பற்றிய என் வார்த்தைகளைப் படித்ததும் உங்களுக்குத் தோன்றலாம். இந்த இசையைக் கேட்கும்போது நமக்கு எதுவும் புதிதாகக் கிடைப்பதில்லை. நம்முடைய பிரச்சினைகள் தீர்ந்துவிடுவதில்லை. ஆனால் சில நிமிடங்களுக்கு அவற்றின் பிடியிலிருந்து விடுபடுகிறோம் என்று.

அதுதான் இல்லை.

இந்த இசையைக் கேட்ட பிறகு உங்கள் பிரச்சினைகளை நீங்கள் நோக்கும் விதம் மாறிவிடுகிறது. ஏனென்றால், இந்த இசை உங்களுக்குள் ஓர் ஆழமான உருமாற்றத்தை (Transformation) ஏற்படுத்துகிறது.

மன அமைதி என்பது பிரச்சினைகள் இல்லாத நிலை என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் பிரச்சினைகள் இல்லாத மனிதன் இந்த உலகத்தில் உண்டா? பீத்தோவனின் இசை எனக்குக் கற்றுக்கொடுத்தது பிரச்சினைகளிலிருந்து தப்பிப்பதை அல்ல. அவற்றுக்கு நான் கொடுக்கும் முக்கியத்துவத்தை மாற்றிக்கொள்வதை. நேற்று என்னைப் பெரிதும் பாதித்த ஒரு சம்பவம் இன்று அற்பமாகத் தோன்றுகிறது. சம்பவம் மாறவில்லை. நான்தான் மாறியிருக்கிறேன்.

என்னோடு பழகும் அத்தனை பேரும் என்னிடம் கேட்கும் கேள்வி ஒன்று இருக்கிறது.

“எப்படி நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறீர்கள்?”

அதற்கு இந்த இசைதான் காரணம்.

ஒருவித பேரின்பத்தில் திளைத்திருப்பவனை லௌகீகத் துன்பங்களோ, ஏன், அகவயமான பிரச்சினைகளோ என்ன செய்துவிட முடியும்?

ஆடைகளைக்கூடத் துறந்துவிட்ட ஒரு திகம்பர ஞானியிடம் சென்று, “எங்களுக்கெல்லாம் trauma இருக்கிறது, டிப்ரஷன் வருகிறது, உங்களுக்கு அப்படியெல்லாம் வருவதில்லையா?” என்று கேட்பதைப் போலத்தான் இருக்கிறது என்னிடம் “எப்படி நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறீர்கள்?” என்று கேட்பதும்.

இது துன்பங்களே இல்லாத வாழ்க்கையைப் பற்றிய பேச்சு அல்ல. துன்பங்களுக்கும் நமக்கும் உள்ள உறவு மாறிவிடுவதைப் பற்றியது.

பீத்தோவனின் இந்த அடாஜியோவைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தின் Tintern Abbey கவிதை நினைவுக்கு வருகிறது.

Until, the breath of this corporeal frame
And even the motion of our human blood
Almost suspended, we are laid asleep
In body, and become a living soul:
While with an eye made quiet by the power
Of harmony, and the deep power of joy,
We see into the life of things.

உடலின் மூச்சும் ரத்தத்தின் ஓட்டமும்கூட ஏறக்குறைய நின்றுவிட்டதைப் போன்ற ஓர் அமைதி. உடல் உறங்குகிறது. ஆனால் ஆன்மா விழித்திருக்கிறது. இசைவின் ஆற்றலாலும் ஆழ்ந்த ஆனந்தத்தினாலும் அமைதியடைந்த கண்களால் நாம் பொருள்களின் உள்ளார்ந்த வாழ்வைக் காண்கிறோம்.

இங்கே வேர்ட்ஸ்வொர்த் சொல்லும் the deep power of joy என்ற சொற்களைக் கவனியுங்கள்.

ஆனந்தத்துக்கு ஓர் ஆற்றல் இருக்கிறது. அது நம்முடைய பார்வையை மாற்றுகிறது.

இதற்கு இன்னொரு உதாரணம் ஜென் மரபில் இருக்கிறது.

திருட முடியாத நிலவு

ஜப்பானில் வாழ்ந்த ஜென் துறவி ரியோகான் ஒரு சிறிய குடிசையில் வசித்துக்கொண்டிருந்தார். அவரிடம் சொல்லிக்கொள்ளும்படியாக எந்தப் பொருளும் இல்லை.

ஒருநாள் இரவு அவரது குடிசைக்குள் ஒரு திருடன் நுழைந்தான். குடிசை முழுவதும் தேடிப் பார்த்தான். திருடுவதற்கு எதுவுமே இல்லை.

அப்போது அங்கே வந்த ரியோகான் திருடனைப் பார்த்தார்.

“இவ்வளவு தூரம் வந்திருக்கிறாய். வெறுங்கையோடு திரும்பிச் செல்வதா? என்னிடம் இருப்பது இந்த உடைதான். இதையாவது எடுத்துக்கொண்டு போ.”

தன்னுடைய உடையையும் திருடனுக்குக் கொடுத்துவிட்டார்.

திருடன் திகைத்துப்போனான். உடையை வாங்கிக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

ரியோகான் குடிசையில் அமர்ந்தார்.

ஜன்னலுக்கு வெளியே முழுநிலவு.

அதைப் பார்த்தபடி அவர் நினைத்தார்:

“பாவம், அந்த மனிதன். இந்த அழகான நிலவையும் அவனுக்கு என்னால் கொடுக்க முடிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!”

பிறகு அவர் ஒரு சிறிய கவிதை எழுதினார்.

திருடன் விட்டுச் சென்றுவிட்டான்
என் ஜன்னலில்
நிலவை.

இந்தக் கதையில் என்னை வசீகரிப்பது ரியோகானின் வறுமையோ, அவரது துறவோ அல்ல. அவருடைய பார்வை.

திருடுவதற்கு எதுவுமில்லாத ஒரு குடிசையில் வாழும் மனிதன் தன்னை ஏழையாக நினைக்கவில்லை. மாறாக, நிலவையே இன்னொருவனுக்குப் பரிசாகக் கொடுக்க நினைக்கும் பேரரசனாக விளங்குகிறான்.  

நீரில் விழுந்த நிலவு

இன்னொரு ஜென் கதை.

சியோனோ என்ற பெண் பல ஆண்டுகளாக ஞானத்தைத் தேடிக்கொண்டிருந்தார்.

ஒருநாள் இரவு ஒரு பழைய மூங்கில் வாளியில் தண்ணீர் எடுத்துக்கொண்டு நடந்தார். வாளியில் முழுநிலவின் பிரதிபலிப்பு தெரிந்தது.

நடந்துகொண்டிருந்தபோது வாளியைப் பிணைத்திருந்த மூங்கில் பட்டைகள் உடைந்தன.  வாளி சிதறியது. தண்ணீர் தரையில் கொட்டியது. அதில் தெரிந்த நிலவும் மறைந்தது.

அந்தக் கணத்தில் அவருக்கு ஞானோதயம் ஏற்பட்டதாகக் கதை சொல்கிறது.

அவர் எழுதியதாக வழங்கப்படும் கவிதையின் கருத்து:

வாளி உடைந்தது.
தண்ணீர் இல்லை.
தண்ணீரில் தெரிந்த நிலவும் இல்லை.

வாளியில் தெரிந்த நிலவு மறைந்துவிட்டது. ஆனால் வானத்தில் இருக்கும் நிலவு மறையவில்லை.

நாம் பற்றிக்கொண்டிருக்கும் ஒன்றை இழக்கும்போது, அதைவிடப் பெரிய ஒன்று நமக்கு வெளிப்படக்கூடும்.

ரியோகானிடம் எதுவுமே இல்லை. ஆனால் அவர் தன்னை எதுவுமில்லாதவராக நினைக்கவில்லை. சியோனோவிடம் ஒரு வாளி இருந்தது. அது உடைந்தபோதுதான் அவருக்கு ஒரு பேருண்மை புலப்பட்டது. ஒருவர் எதுவுமில்லாத நிலையிலேயே நிறைவைக் காண்கிறார். இன்னொருவர் தன்னிடமிருந்த ஒன்றை இழந்தபோது நிறைவைக் காண்கிறார்.

இரண்டு கதைகளும் வெவ்வேறு பாதைகளில் ஒரே இடத்துக்கு வந்து சேர்கின்றன.  இந்த இரண்டு கதைகளிலும் மனிதர்களுடைய வாழ்க்கைச் சூழ்நிலைகள் மாறவில்லை. மாறியது அவர்களுடைய பார்வை.

பீத்தோவனின் அடாஜியோ எனக்குச் செய்வதும் அதைத்தான்.

நான் இந்த இசைக்கலைஞர்களை வெறும் பொழுதுபோக்குக்காகக் கேட்கவில்லை. அவர்கள் என்னுடைய ஆளுமையின் ஒரு பகுதியாகிவிட்டார்கள். பீத்தோவன் எனக்கு ஒரு தத்துவஞானி. ஷோப்பா(ங்) ஒரு கவிஞன். மாலர் (Gustav Mahler)  மனித வாழ்க்கையின் துயரங்களையும் பேரானந்தத்தையும் ஒரே நேரத்தில் எனக்கு உணர்த்துபவர். இவர்கள் மூவரும் எனக்கு இசைக்கலைஞர்கள் மட்டுமல்ல. வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்று கற்றுத்தரும் ஆசான்களும்கூட.

அதற்காக எனக்கு ஏற்பட்ட அனுபவமே உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது இல்லை. ஒரே இசை ஒவ்வொருவருக்குள்ளும் வெவ்வேறு அனுபவங்களை உருவாக்கலாம். எனக்குப் பேரானந்தத்தைத் தரும் இசை உங்களுக்குத் துக்கத்தைத் தரலாம். எனக்கு மன அமைதியைத் தரும் இசை உங்களுக்குள் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தலாம். அதில் தவறு ஒன்றுமில்லை. இசை என்பது எல்லோருக்கும் ஒரே அனுபவத்தைத் தரும் ஒரு சூத்திரம் அல்ல. ஒவ்வொருவரும் தங்களுக்கான இசையையும் அது தரும் அனுபவத்தையும் கண்டடைவார்கள்.  

ஷோப்பா(ங்) என்ற கவிஞன்

இந்த இடத்தில் ஷோப்பா(ங்) என்ற போலந்து இசைக்கலைஞரிடம் செல்லலாம்.  அவருடைய வாழ்க்கையின் பெரும்பகுதி பாரிஸில் கழிந்தது. அவர் எழுதிய இசைப்படைப்புகளில் பெரும்பாலானவை பியானோவுக்கானவை.

பீத்தோவன் ஒரு சிறிய இசைக்கருவிலிருந்து ஒரு பிரம்மாண்டமான இசையுலகத்தை உருவாக்குகிறார். ஷோப்பா(ங்) சில சமயங்களில் ஒரு சிறிய மெலடிக்குள்ளேயே ஓர் உலகத்தை அடக்கிவிடுகிறார்.

அவருடைய நாக்டர்ன்களைக் (Nocturnes) கேட்கும்போது இதை நீங்கள் உணரலாம்.

நாக்டர்ன் என்ற ஃப்ரெஞ்ச் சொல்லுக்கு இரவுடன் தொடர்புடையது என்று பொருள். இசையில் நாக்டர்ன் என்பது பொதுவாக இரவின் அமைதியையும் தனிமையையும் நினைவூட்டும் தன்மையுள்ள இசைப்படைப்பு. ஆனால் நாக்டர்ன் என்றால் அமைதியான இசை மட்டும்தான் என்று நினைத்துவிடக் கூடாது. அதன் உள்ளே கொந்தளிப்பும் இருக்கலாம்.

ஷோப்பா(ங்) எழுதிய Nocturne in C-sharp Minor என்ற இசைப்படைப்பைக் கேளுங்கள்.

முதலில் எந்த இசையியல் விளக்கத்தையும் தேட வேண்டாம். அதன் மெலடி உங்களிடம் என்ன சொல்கிறது என்பதை மட்டும் கவனியுங்கள்.

அந்த இசையில் துக்கம் இருக்கிறதா? ஏக்கம் இருக்கிறதா? அல்லது அவற்றையெல்லாம் தாண்டிய வேறோர் உணர்வு இருக்கிறதா?

எனக்கு முக்கியமானது அந்தக் கேள்விதான்.

ஏனென்றால் மேற்கத்திய செவ்வியல் இசையை ரசிப்பதற்கு முதலில் அதன் இசையமைப்பைப் புரிந்துகொள்ள வேண்டிய எந்த அவசியமுமில்லை.

அந்த இசை நமக்குள் என்ன செய்கிறது என்பதை உணர்ந்தால் போதும்.

எத்தனையோ கவிஞர்கள் பிறவித் துயர் பற்றிப் பாடியிருக்கிறார்கள். இந்தப் பிறவி வேண்டாம், வேண்டாம் எனக் கதறுகிறார்கள்.

ஆனால் பீத்தோவனையும், ஷோப்பானையும், மாலரையும் ரசித்துக்கொண்டிருக்கும் நான் திரும்பத் திரும்ப மனிதப்பிறவி எடுக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.