முன்னுரை
தியாகராஜா நாவலை எழுதிக்கொண்டிருக்கும்போதே பீத்தோவன் பற்றிய ஒரு நாவலை எழுதத் தொடங்கினேன். இரண்டு அத்தியாயங்களுக்குப் பிறகு ஒரு எண்ணம் தோன்றியது. ஒரு மகத்தான இசைக்கலைஞனைப் பற்றிய ஒரு பெரிய நாவலைக் கொடுத்த பிறகு உடனடியாக மீண்டும் ஒரு இசைக்கலைஞனை வைத்து இன்னொரு நாவல் சரியாக வராது என்று நினைத்தேன். ஆனால் மேற்கத்திய செவ்வியல் இசை குறித்த எண்ணங்களைத் தவிர்க்கவே முடியவில்லை. அதற்கு முக்கியமான காரணம், தமிழில் கலையுணர்வு கொண்டவர்களுக்கு சர்வதேச சினிமா தெரிந்திருக்கிறது. நவீன ஓவியத்தை ரசிக்க முடிகிறது. சர்வதேச அளவிலான வெகுஜன இசை மிக நன்றாகவே பரிச்சயமாகி இருக்கிறது. அப்படியிருந்தும், தமிழ்க்கலா ரசிகர்களுக்கு மிகவும் அந்நியமாக இருந்துகொண்டிருப்பது மேற்கத்திய செவ்வியல் இசை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், அதற்குப் பிறகு பிரம்மராஜன் போன்றவர்கள் மேற்கத்திய செவ்வியல் இசையின் ரசிகர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால் இன்று, எழுத்தாளர்களுக்கேகூட மேற்கத்திய செவ்வியல் இசை அந்நியமாக இருப்பதைக் காண முடிகிறது இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இதை ஓரளவாவது போக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்தத் தொடரைத் தொடங்கியிருக்கிறேன்.
ஹான்ஸ் ஸிம்மரிலிருந்து பீத்தோவனுக்கு
இன்று காலை The Best of Hans Zimmer என்ற இசைத்தொகுப்பைக் கேட்டுக்கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் என்னால் வேறு எதையும் செய்ய முடியவில்லை. இசையை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தேன். அசந்துபோனேன். இந்த மனிதர் என்ன செய்கிறார்? எப்படி இந்த இசை நம்மை இந்த அளவுக்கு ஆட்கொள்கிறது?
அப்போது எனக்கு ஒரு கேள்வி எழுந்தது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பீத்தோவனுக்கும் இன்று நம்மிடையே வாழும் ஹான்ஸ் ஸிம்மருக்கும் என்ன தொடர்பு?
ஹான்ஸ் ஸிம்மரை மேற்கத்திய செவ்வியல் இசையின் நவீன காலத் தொடர்ச்சியாகச் சொல்லலாமா?
சொல்லலாம். ஆனால் ஒரு சிறிய விளக்கம் தேவைப்படுகிறது.
மேற்கத்திய செவ்வியல் இசையின் மரபிலிருந்து வளர்ந்து, திரைப்படம் என்ற புதிய கலைவடிவத்தில் தனக்கென்று ஒரு இசைமொழியை உருவாக்கிக்கொண்டவர் ஹான்ஸ் ஸிம்மர். அவருடைய இசையை முழுக்க முழுக்க மேற்கத்திய செவ்வியல் இசை என்று வகைப்படுத்த முடியாது. ஆனால் அந்த இசையின் பல அடிப்படைக் கூறுகள் ஸிம்மரின் இசையில் இருக்கின்றன.
மேற்கத்திய செவ்வியல் இசையின் நீண்ட வரலாற்றில் ஆர்க்கெஸ்ட்ராவுக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. வயலின், வயோலா, செல்லோ, டபுள் பேஸ் (Double Bass – உச்சரிப்பு: டபுள் பாஸ் அல்ல) போன்ற தந்தி வாத்தியங்கள், புல்லாங்குழல், ஓபோ, கிளாரினெட் போன்ற காற்று வாத்தியங்கள், ட்ரம்பெட், ஹார்ன், ட்ராம்போன் போன்ற பித்தளை வாத்தியங்கள், தாள வாத்தியங்கள் ஆகியவை ஒன்றிணைந்து உருவாக்கும் இசையுலகம் அது.
இந்த ஆர்க்கெஸ்ட்ரா மரபை ஸிம்மர் தன்னுடைய இசையில் பயன்படுத்துகிறார். ஆனால் அதோடு நின்றுவிடுவதில்லை. எலக்ட்ரானிக் இசை, சிந்தசைஸர், நவீன ஒலிப்பதிவுத் தொழில்நுட்பம் ஆகியவற்றையும் இணைக்கிறார். இதன் மூலம் பாரம்பரிய ஆர்க்கெஸ்ட்ராவால் உருவாக்க முடியாத சில ஒலியனுபவங்களையும் உருவாக்குகிறார்.
அவருடைய இசையில் பாக்ஹ், மோட்ஸார்ட், பீத்தோவன் ஆகியோரின் இசைமரபின் தாக்கத்தைப் பார்க்க முடியும். அதே சமயம் ராக் இசை, எலக்ட்ரானிக் இசை, மினிமலிசம் போன்ற நவீன இசைப்போக்குகளின் செல்வாக்கையும் காண முடிகிறது.
ஆகவே, ஹான்ஸ் ஸிம்மர் மேற்கத்திய செவ்வியல் இசையின் நேரடியான வாரிசு என்று சொல்வதைவிட, அதன் மரபையும் நவீன இசையின் பல்வேறு சாத்தியங்களையும் இணைக்கும் ஓர் இசையமைப்பாளர் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.
ஒரு சிறிய இசைக் கருத்திலிருந்து உருவாகும் ஒரு பிரம்மாண்டமான இசையுலகம்
ஹான்ஸ் ஸிம்மரின் இசையில் என்னை மிகவும் கவர்வது அதன் பிரம்மாண்டம் மட்டுமல்ல. மிக எளிய ஒரு மெலடியை அல்லது இசைக் கருத்தை (Musical Theme) எடுத்துக்கொண்டு, அதைப் படிப்படியாக விரிவாக்கி, இறுதியில் நம்மை ஒரு மகத்தான உணர்ச்சிப் பெருக்கில் கொண்டுபோய் நிறுத்தும் அவரது திறமை.
இங்கே பீத்தோவனுக்கும் ஸிம்மருக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது.
பீத்தோவனின் ஐந்தாவது சிம்ஃபனியின் ஆரம்பத்தை எடுத்துக்கொள்ளுங்கள். நான்கு ஸ்வரங்களைக் (Notes) கொண்ட ஒரு சிறிய இசைக்கரு (Motif). ஆனால் அதிலிருந்து அவர் எவ்வளவு பெரிய இசையுலகத்தை உருவாக்குகிறார்!
அந்தச் சிறிய இசைக்கரு வெவ்வேறு வடிவங்களில் மீண்டும் மீண்டும் வருகிறது. அதன் தாளம் மாறுகிறது. அதன் ஸ்வர அமைப்பு மாறுகிறது. வெவ்வேறு இசைக்கருவிகள் அதை எடுத்துக்கொள்கின்றன. சில சமயங்களில் அந்த இசைக்கரு நமக்குத் தெளிவாகக் கேட்கிறது. வேறு சில சமயங்களில் அது இசையின் உள்ளே மறைந்திருப்பது போல் தோன்றுகிறது. ஆனால் அந்தச் சிறிய இசைக்கருவின் இயக்கம்தான் ஒரு பெரிய இசைக் கட்டமைப்பை உருவாக்குகிறது.
ஸிம்மரும் ஒரு சிறிய இசைக்கருவை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி அதன் உணர்ச்சித் தீவிரத்தை அதிகரிக்கிறார்.
ஆனால் இருவரும் ஒரே முறையில் இசையமைக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. பீத்தோவன் இசைக்கருவை மாற்றியும் வளர்த்தும் ஒரு பெரிய இசைக் கட்டமைப்பை உருவாக்குகிறார். ஸிம்மர் பல இடங்களில் திரும்பத் திரும்ப வரும் இசைத்தொடர்கள் (musical phrases), தாளம், ஒலியின் அடுக்குகள், வெவ்வேறு இசைக்கருவிகளின் ஒலிநிறம் ஆகியவற்றால் உணர்ச்சியை வளர்க்கிறார்.
(குறிப்பு: இசைக்கருவிகளின் ஒலிநிறம் — Timbre (டாம்பர்)
இசையியலில் Timbre என்பது ஓர் இசைக்கருவியின் தனித்துவமான ஒலிப்பண்பைக் குறிக்கிறது. உதாரணமாக, வயலினும் புல்லாங்குழலும் ஒரே ஸ்வரத்தை ஒரே சத்த அளவில் வாசித்தாலும் அவற்றின் ஒலி வேறுபடுகிறது. அந்த வேறுபாட்டைத்தான் Timbre என்கிறோம்.
Tone Colour (அமெரிக்க ஆங்கிலத்தில் Tone Color) என்பதும் இதற்கான மற்றொரு சொல்.)
இதற்கு ஒரு நல்ல உதாரணம் Inception திரைப்படத்தில் வரும் ஸிம்மரின் Time என்ற இசைத்துணுக்கு (musical piece).
மிக எளிய ஓர் இசைத்தொடரிலிருந்து அது தொடங்குகிறது. அந்த இசைத்தொடர் மீண்டும் மீண்டும் வருகிறது. ஒவ்வொரு முறையும் அதனுடன் புதிய ஒலிகள் சேர்கின்றன. இசையின் பரப்பு விரிவடைகிறது. அதன் தீவிரம் அதிகரிக்கிறது. ஒரு கட்டத்தில் அந்த இசை நம்மை முழுமையாக ஆட்கொள்கிறது.
இதைப் புரிந்துகொள்வதற்கு இசையியல் அறிவு தேவையில்லை. முதலில் அந்த இசையைக் கேட்டால் போதும்.
பிறகு பீத்தோவனின் ஏழாவது சிம்ஃபனியின் இரண்டாவது இயக்கமான Allegrettoவைக் கேட்டுப் பாருங்கள்.
இரண்டு இசைத்துணுக்குகளிலும் திரும்பத் திரும்ப வரும் தாள அமைப்புகளும் படிப்படியாக விரியும் இசையும் நம்மை ஆட்கொள்கின்றன. ஆனால் அவை இரண்டும் வெவ்வேறு இசைமொழிகளில் உருவாக்கப்பட்டவை.
இரண்டையும் அடுத்தடுத்துக் கேட்கும்போது அந்த ஒற்றுமையையும் வேறுபாட்டையும் நம்மால் உணர முடியும். அந்த அனுபவத்திலிருந்து மேற்கத்திய செவ்வியல் இசையின் கட்டமைப்பைப் பற்றிப் பேசத் தொடங்கலாம்.
ஹான்ஸ் ஸிம்மரிலிருந்து பாக்ஹுக்கு
ஸிம்மரின் Interstellar திரைப்பட இசையை எடுத்துக்கொள்வோம். அந்தப் படத்தின் இசையில் ஆர்கன் என்ற இசைக்கருவிக்கு மிக முக்கியமான இடம் இருக்கிறது. ஆர்கன் என்பது ஐரோப்பிய தேவாலயங்களுடன் நெருங்கிய தொடர்புடைய இசைக்கருவி. பல நூற்றாண்டுகளாக ஐரோப்பிய சமய இசையிலும் செவ்வியல் இசையிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பாக்ஹின் இசையில் ஆர்கனுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. அவர் சிறந்த ஆர்கன் இசைக்கலைஞராகவும் விளங்கினார்.
இப்போது ஒரு சுவாரசியமான விஷயத்தைப் பார்ப்போம். பதினெட்டாம் நூற்றாண்டில் பாக்ஹ் பயன்படுத்திய இசைக்கருவியை இருபத்தொன்றாம் நூற்றாண்டில் விண்வெளியைப் பற்றிய ஒரு திரைப்படத்துக்கு ஸிம்மர் பயன்படுத்துகிறார்.
Interstellar படத்தில் வரும் Cornfield Chase, No Time for Caution போன்ற இசைத்துணுக்குகளைக் கேட்டுவிட்டு, பாக்ஹுக்குப் பொதுவாகக் குறிப்பிடப்படும் Toccata and Fugue in D Minor என்ற ஆர்கன் இசையைக் கேட்கலாம். (இந்தப் படைப்பின் ஆசிரியர் பாக்ஹ்தானா என்பதில் இசை ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு இருப்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.)
இரண்டிலும் ஆர்கன் என்ற இசைக்கருவியின் பிரம்மாண்டமான ஒலியை அனுபவிக்க முடியும். ஆனால் இரண்டிலும் அந்த இசைக்கருவி பயன்படுத்தப்படும் விதம் முற்றிலும் வேறுபட்டது.
ஸிம்மர் ஆர்கனின் ஒலியை மற்ற இசைக்கருவிகளுடனும் நவீன ஒலியமைப்புகளுடனும் இணைத்து ஓர் உணர்ச்சியுலகத்தை உருவாக்குகிறார். இந்த ஆர்கன் இசையில் பல இசைக்குரல்கள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து ஒரு சிக்கலான இசைக் கட்டமைப்பை உருவாக்குகின்றன.
இங்கிருந்து பாக்ஹின் இசைக்குள் நுழையலாம். அதாவது, பாக்ஹைப் பற்றிய வரலாற்றுப் பாடத்திலிருந்து தொடங்காமல், நமக்குப் பரிச்சயமான ஒரு நவீன இசையமைப்பாளரின் இசையிலிருந்து பாக்ஹை நோக்கிச் செல்வோம்.
இசை என்பது இனிய மெலடி மட்டுமல்ல
ஹான்ஸ் ஸிம்மரின் இசையிலிருந்து நாம் அறிந்துகொள்ளக்கூடிய இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது.
இசை என்பது இனிய மெலடிகளை உருவாக்குவது மட்டுமல்ல. The Dark Knight திரைப்படத்தில் வரும் Why So Serious? என்ற இசைத்துணுக்கைக் கேட்டுப் பாருங்கள். அங்கே நம்மை ஆட்கொள்வது ஒரு இனிய மெலடி அல்ல. ஒலிகளின் வழியாக உருவாக்கப்படும் பதற்றம். அச்சம். அமைதியின்மை.
ஒரு நீண்ட ஒலி. அதன் உள்ளே மெதுவாக உருவாகும் மாற்றங்கள். ஒன்றோடொன்று உராய்வது போன்ற ஒலிகள். நம்மை ஏதோ ஒரு அபாயம் நெருங்கிக்கொண்டிருக்கிறது என்று உணர வைக்கும் இசையமைப்பு.
இப்படியும் இசையை உருவாக்க முடியும்.
மேற்கத்திய செவ்வியல் இசையிலும் இத்தகைய அனுபவங்கள் ஏராளமாக இருக்கின்றன.
இசை நம்மை மகிழ்விக்க மட்டுமே உருவாக்கப்படுவதில்லை. அது நம்மைத் துயரத்தில் ஆழ்த்தலாம். அச்சுறுத்தலாம். அமைதியிழக்கச் செய்யலாம். நம்முடைய மனதின் இருண்ட பகுதிகளுக்குள் அழைத்துச் செல்லலாம்.
பீத்தோவன், பெர்லியோஸ் (Hector Berlioz, 1803–1869), வாக்னர், ஸ்ட்ராவின்ஸ்கி போன்ற இசைக்கலைஞர்களின் படைப்புகளுக்குள் நுழையும்போது இதை நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
ஹான்ஸ் ஸிம்மர் மட்டும்தானா?
இல்லை.
திரைப்பட இசைக்கும் மேற்கத்திய செவ்வியல் இசைக்கும் இடையே பல தொடர்புகள் இருக்கின்றன. என்னியோ மோரிக்கோனே, ஜான் வில்லியம்ஸ் போன்ற திரைப்பட இசையமைப்பாளர்களின் படைப்புகளிலும் மேற்கத்திய செவ்வியல் இசையின் செல்வாக்கு இருக்கிறது.
ஜான் வில்லியம்ஸின் Star Wars இசையைக் கேட்டால் வாக்னரின் இசைநாடகங்களில் பயன்படுத்தப்படும் சில இசையமைப்பு உத்திகளை நினைவுபடுத்தும். குறிப்பாக ஒரு பாத்திரத்தையோ, ஒரு கருத்தையோ, ஒரு சூழலையோ குறிக்கத் திரும்பத் திரும்ப வரும் இசைக்கருக்கள்.
அதேபோல் மேக்ஸ் ரிக்டர், ஃபிலிப் கிளாஸ் போன்ற சமகால இசையமைப்பாளர்களையும் நான் உதாரணங்களாகச் சொல்ல முடியும்.
இவர்களில் கிளாஸ் மினிமலிச இசையின் முக்கியமான முன்னோடிகளில் ஒருவர். சிறிய இசைத்தொடர்களைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தி, அவற்றில் நுட்பமான மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் ஒரு புதிய இசையனுபவத்தை உருவாக்குகிறார்.
மேக்ஸ் ரிக்டரின் இசையில் மேற்கத்திய செவ்வியல் இசைமரபும் எலக்ட்ரானிக் இசையும் நவீன இசையமைப்பு முறைகளும் சந்திக்கின்றன.
இவர்களிடமிருந்து ஷோப்பா(ங்) (Frédéric François Chopin), ஷூபர்ட், பீத்தோவன், பாக்ஹ் என்று நாம் பயணிக்கலாம். இந்தப் பயணம் காலவரிசைப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை.
இசை வரலாற்றில் பாக்ஹ் முதலில் வருகிறார் என்பதற்காக அவரிடமிருந்துதான் நம்முடைய பயணத்தைத் தொடங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
இன்று நாம் கேட்கும் ஓர் இசை நம்மை இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு அழைத்துச் செல்கிறது. அங்கிருந்து இன்னொரு நூற்றாண்டுக்குப் பின்னால் செல்ல முடிகிறது. பிறகு மீண்டும் இருபத்தொன்றாம் நூற்றாண்டுக்குத் திரும்புகிறோம்.
இசை வரலாற்றை ஒரு நேர்கோட்டில் வாசிப்பதற்குப் பதிலாக, இசை அனுபவத்தின் வழியாக அந்த வரலாற்றுக்குள் பயணிக்க வேண்டும் என்பதே இந்தத் தொடரின் நோக்கம்.
புரிந்துகொள்வதா, ரசிப்பதா?
இந்தப் புத்தகத்துக்கு முதலில் ”மேற்கத்திய செவ்வியல் இசையைப் புரிந்துகொள்வது எப்படி?” என்று தலைப்பு வைக்கலாமா என்று யோசித்தேன். பிறகு அதை மாற்றினேன்.
மேற்கத்திய செவ்வியல் இசையை ரசிப்பது எப்படி?
இந்த இரண்டு தலைப்புகளுக்கும் இடையே ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது.
புரிந்துகொள்வது என்பது அறிவு சார்ந்தது. ரசிப்பது என்பது அனுபவம் சார்ந்தது. மேற்கத்திய செவ்வியல் இசையை ரசிப்பதற்கு முன்பே அதன் இலக்கணத்தைப் படித்திருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.
ஒரு சிம்ஃபனியை ரசிப்பதற்கு Sonata Form என்றால் என்ன என்று தெரிந்திருக்க வேண்டியதில்லை. ஒரு ஃப்யூகைக் (Fugue) கேட்டு வியப்பதற்கு Counterpoint என்றால் என்ன என்று தெரிந்திருக்க வேண்டியதில்லை. ஒரு நாக்டர்னைக் (Nocturne) கேட்டு நெகிழ்வதற்கு அதன் ஹார்மனி அமைப்பைப் புரிந்துகொண்டிருக்க வேண்டியதில்லை.
முதலில் இசையைக் கேட்க வேண்டும். அது நமக்குள் என்ன செய்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.
ஒரு இசைத்தொடர் ஏன் நம்மைத் திரும்பத் திரும்பக் கேட்கத் தூண்டுகிறது? ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏன் நம் மனம் நெகிழ்கிறது? சில இசைத்துணுக்குகள் ஏன் துக்கத்தை உருவாக்குகின்றன? வேறு சில இசைத்துணுக்குகள் ஏன் நம்மை ஒரு பிரபஞ்ச வெளியில் நிறுத்துகின்றன?
இத்தகைய கேள்விகளிலிருந்துதான் இசையைப் பற்றிய நம்முடைய புரிதல் தொடங்க வேண்டும்.
இசையைப் புரிந்துகொள்வதில் இரண்டு நிலைகள் இருக்கின்றன. முதலாவது, இசையைக் கேட்கும்போது நமக்குள் நிகழும் அனுபவம். இரண்டாவது, அந்த அனுபவத்தை உருவாக்கிய இசை அமைப்பைப் பற்றிய அறிவு.
முதல் அனுபவம் இல்லாமல் இரண்டாவது அறிவை மட்டும் வளர்த்துக்கொண்டால் அது இசையியல் பாடமாகிவிடும். ஆனால் முதல் அனுபவத்திலிருந்து இரண்டாவது அறிவை நோக்கிச் சென்றால் இசையைக் கேட்கும் நம்முடைய திறன் மேலும் மேலும் விரிவடையும்.
முதலில் ஒரு இசைத்துணுக்கைக் கேட்கிறோம். அது நம்மைக் கவர்கிறது. மீண்டும் கேட்கிறோம். அப்போது முன்பு கவனிக்காத ஓர் இசைக்கருவியின் ஒலி நமக்குக் கேட்கிறது. இன்னொரு முறை கேட்கும்போது ஆரம்பத்தில் வந்த ஒரு சிறிய இசைக்கரு பின்னால் வேறொரு வடிவத்தில் வருவதைக் கவனிக்கிறோம்.
இப்போது நம்முடைய கேட்கும் அனுபவம் மாறிவிட்டது. அதற்குப் பிறகு அந்த இசையின் கட்டமைப்பைப் பற்றித் தெரிந்துகொள்கிறோம்.
இசையைப் பற்றிய அறிவு நம்முடைய ரசனையை மேலும் ஆழப்படுத்துகிறது. ஆகவே, ரசனையும் புரிதலும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. ரசனையிலிருந்து புரிதலுக்குச் செல்லலாம். புரிதலிலிருந்து இன்னும் ஆழமான ரசனைக்குச் செல்லலாம்.
இதுதான் இந்தப் புத்தகத்தின் அடிப்படை நோக்கம்.
இசையைக் கேட்கும் கலை
மேற்கத்திய செவ்வியல் இசையை அறிமுகப்படுத்தும் ஒரு புத்தகத்தை எழுதும்போது இசையியல் சொற்களைக் குவித்துவிடுவது எளிது.
சிம்ஃபனி, சொனாட்டா, கான்செர்ட்டோ, ஃப்யூக், கவுண்டர்பாயிண்ட், ஹார்மனி, டெம்போ, டைனமிக்ஸ் என்று ஏராளமான சொற்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் முக்கியமானவைதான்.
ஆனால் இவற்றை ஆரம்பத்திலேயே வாசகரின் முன்னால் வைத்தால் மேற்கத்திய செவ்வியல் இசை என்பது மிகவும் சிக்கலான ஒன்று, அதைப் புரிந்துகொள்வதற்கு விசேஷமான பயிற்சி தேவை என்ற எண்ணம் ஏற்பட்டுவிடும்.
அதற்குப் பதிலாக முதலில் மேற்கத்திய செவ்வியல் இசையைக் கேட்கத் தொடங்குவோம். பிறகு அந்த இசையில் என்ன நடந்தது என்பதைப் பேசலாம். அதற்குப் பிறகு அந்த இசை நிகழ்வுக்கான இசையியல் சொற்களை அறிந்துகொள்ளலாம்.
உதாரணமாக, ஒரு இசைத்துணுக்கில் முதலில் வயலின் வாசிக்கும் ஒரு மெலடியைச் சிறிது நேரம் கழித்து செல்லோ எடுத்துக்கொள்கிறது என்று வைத்துக்கொள்வோம். முதலில் அந்த மாற்றத்தைக் கேட்டு உணரலாம். பிறகு ஒரே மெலடியை இரண்டு வெவ்வேறு இசைக்கருவிகள் வாசிக்கும்போது அதன் உணர்ச்சியில் என்ன மாற்றம் ஏற்படுகிறது என்பதைப் பேசலாம்.
அதற்குப் பிறகு ஆர்க்கெஸ்ட்ராவில் வெவ்வேறு இசைக்கருவிகளுக்கு இசைப்பகுதிகளை ஒதுக்குவதன் முக்கியத்துவத்தை விளங்கிக்கொள்ளலாம்.
இப்படி ஒவ்வொரு இசையியல் கருத்தையும் கேட்கும் அனுபவத்திலிருந்தே அறிமுகப்படுத்த முடியும்.
இந்தப் புத்தகத்தில் விவாதிக்கப்படும் ஒவ்வொரு இசைத்துணுக்கையும் வாசகர் உடனடியாகக் கேட்கும் வசதியும் இருக்க வேண்டும். அதற்காக ஒவ்வொரு அத்தியாயத்திலும் இசைத்துணுக்குகளுக்கான யூட்யூப் இணைப்புகளைத் தருகிறேன்.
புத்தகத்தைப் படிப்பதோடு இசையையும் கேட்கலாம். இசையைக் கேட்டுவிட்டு மீண்டும் புத்தகத்துக்கு வரலாம். அதாவது, இந்தப் புத்தகம் வெறுமனே மேற்கத்திய செவ்வியல் இசையின் வரலாற்றைச் சொல்லும் நூலாக இருக்கக்கூடாது. இசையைக் கேட்கும் கலையை அறிமுகப்படுத்தும் நூலாக இருக்க வேண்டும்.
ஒரு வாசகர் இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்த பிறகு Sonata Form என்றால் என்ன என்பதை விளக்க முடியாமல் போனாலும் பரவாயில்லை. ஆனால் பீத்தோவனின் ஏழாவது சிம்ஃபனியைக் கேட்கும்போது, இதற்கு முன்பு கவனிக்காத ஒன்றை அவர் கேட்கத் தொடங்கியிருக்க வேண்டும்.
அதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம்.
மேற்கத்திய செவ்வியல் இசையை ரசிப்பது எப்படி?
அதற்கான முதல் பதில் மிகவும் எளிமையானது.
கேளுங்கள். மீண்டும் கேளுங்கள். மீண்டும் மீண்டும் கேளுங்கள்.
ஒவ்வொரு முறையும் அந்த இசை உங்களிடம் புதிதாக ஏதோ ஒன்றைச் சொல்லக்கூடும்.
இந்த அத்தியாயத்தில் கேட்க வேண்டிய இசைத்துணுக்குகள்
Time – Inception — Hans Zimmer —