மேற்கத்திய செவ்வியல் இசையைக் கேட்க விரும்பும் ஒரு புதிய வாசகரிடம் எடுத்த எடுப்பிலேயே பாக்ஹின் The Well-Tempered Clavier அல்லது பீத்தோவனின் கடைசிக் கால String Quartets பற்றிப் பேச ஆரம்பித்தால் அவர் என்னிடமிருந்து நகர்ந்துவிடக் கூடும். அதனால் ”மேற்கத்திய செவ்வியல் இசையை ரசிப்பது எப்படி?” என்ற இந்தத் தொடரில் நான் எதையெதையெல்லாம் விட்டுவிட்டுச் செல்கிறேன் என்பதை இங்கே சொல்லி விடுகிறேன்.
அதற்கு முன்னதாக இந்தத் தொடரில் நான் பயன்படுத்தும் சில இசைச் சொற்களைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
சில இசைச் சொற்கள்
இசைக்கரு (Musical Theme / Motif): ஓர் இசைப்படைப்பின் அடிப்படையாக அமையும் இசைக்கருத்து. இதில் ஒரு சிறிய வேறுபாடு உண்டு. Theme என்பது ஓரளவு முழுமையான இசைக்கருத்து. Motif என்பது சில ஸ்வரங்களைக் (Notes) கொண்ட சிறிய, அடையாளம் காணக்கூடிய இசைக்கரு. பீத்தோவனின் ஐந்தாவது சிம்ஃபனியின் தொடக்கத்தில் வரும் நான்கு ஸ்வரங்கள் ஒரு Motif.
இசைத்தொடர் (Musical Phrase): இசையில் ஒரு கருத்தை வெளிப்படுத்துவது போல் அமைந்துள்ள ஸ்வரங்களின் தொடர். மொழியில் ஒரு சொற்றொடர் இருப்பதைப் போல இசையிலும் ஒரு இசைத்தொடர் இருக்கிறது.
இசைத்துணுக்கு (Musical Piece / Musical Excerpt): ஒரு தனிப்பட்ட இசைப்படைப்பை Musical Piece என்று குறிப்பிடலாம். ஒரு பெரிய இசைப்படைப்பிலிருந்து எடுத்த சிறிய பகுதி Musical Excerpt. திரைப்பட இசைத்தொகுப்பில் இடம்பெறும் தனிப்பட்ட இசைத்துணுக்கை Track என்றும் குறிப்பிடுகிறார்கள்.
இசைக்கருவிகளின் ஒலிநிறம் (Timbre / Tone Colour): வயலினும் புல்லாங்குழலும் ஒரே ஸ்வரத்தை ஒரே சத்த அளவில் வாசித்தாலும் அவற்றின் ஒலி வேறுபடுகிறது. அந்தத் தனித்துவமான ஒலிப்பண்புதான் ஒலிநிறம்.
இசைக்குரல் (Musical Voice): இசையில் தனித்துச் செயல்படும் மெலடித் தொடர். இது மனிதக் குரலாகவும் இருக்கலாம்; இசைக்கருவியின் மூலம் வெளிப்படுவதாகவும் இருக்கலாம். ஒரே பியானோவில் மூன்று தனித்தனி மெலடித் தொடர்கள் ஒரே நேரத்தில் இயங்கினாலும் அவற்றை மூன்று இசைக்குரல்கள் என்று குறிப்பிடலாம்.
இசைக்குரல்களின் பின்னல் (Counterpoint): இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனித்த இசைக்குரல்கள் ஒரே நேரத்தில் இயங்கி, ஒன்றோடொன்று இசைவாகப் பின்னிப் பிணையும் இசையமைப்பு முறை.
ஆர்க்கெஸ்ட்ரா (Orchestra): வயலின், வயோலா, செல்லோ, டபுள் பேஸ், புல்லாங்குழல், ஓபோ, கிளாரினெட், ட்ரம்பெட் போன்ற பல்வேறு இசைக்கருவிகளை வாசிக்கும் கலைஞர்கள் ஒன்றிணைந்த இசைக்குழு.
ஸ்ட்ரிங் குவார்ட்டெட் (String Quartet): நான்கு தந்தி இசைக்கருவிகளைக் கொண்ட இசைக்குழு. இரண்டு வயலின்கள், ஒரு வயோலா, ஒரு செல்லோ ஆகியவை இதில் இடம்பெறும். இந்த நான்கு கருவிகளுக்காக எழுதப்படும் இசைப்படைப்பும் ஸ்ட்ரிங் குவார்ட்டெட் என்றே அழைக்கப்படுகிறது.
ப்ரெலூட் (Prelude): பொதுவாக ஒரு பெரிய இசைப்படைப்புக்கு முன்னதாக வாசிக்கப்படும் சிறிய இசைப்பகுதி. ஆனால் அது தனித்த இசைப்படைப்பாகவும் இருக்கலாம். ப்ரெலூடுக்கு ஒரு குறிப்பிட்ட இசைக் கட்டமைப்பு இருக்க வேண்டிய அவசியமில்லை.
ஃப்யூக் (Fugue): ஒரு சிறிய இசைக்கருத்தை (Subject) ஓர் இசைக்குரல் அறிமுகப்படுத்த, அதை மற்ற இசைக்குரல்கள் ஒன்றன்பின் ஒன்றாக எடுத்துக்கொண்டு வெவ்வேறு விதங்களில் வளர்த்துச் செல்லும் இசையமைப்பு முறை.
இப்போது ஃப்யூக் என்பதை இன்னும் கொஞ்சம் விளக்குகிறேன்.
ஒருவர் ஒரு கருத்தைச் சொல்லத் தொடங்குகிறார். இன்னொருவர் அதே கருத்தை எடுத்துக்கொண்டு வேறொரு இடத்திலிருந்து பேசுகிறார். மூன்றாமவர் அவர்களுடன் இணைகிறார். மூவரும் ஒரே நேரத்தில் பேசினாலும் குழப்பம் ஏற்படுவதில்லை. மாறாக, அவர்களுடைய உரையாடலிலிருந்து ஓர் அற்புதமான ஒழுங்கும் அழகும் உருவாகின்றன.
பாக்ஹின் ஃப்யூகுகளைக் கேட்கும்போது இப்படியொரு அனுபவம் ஏற்படலாம்.
பாக்ஹின் ஐந்து மணி நேர இசையுலகம்
பாக்ஹின் The Well-Tempered Clavier என்ற மகத்தான இசைத்தொகுப்பு இரண்டு புத்தகங்களைக் கொண்டது. முதல் புத்தகம் 1722-இலும் இரண்டாவது புத்தகம் சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பிறகும் தொகுக்கப்பட்டவை.
ஒவ்வொரு புத்தகத்திலும் 24 ப்ரெலூடுகளும் 24 ஃப்யூகுகளும் உள்ளன. அதாவது, இரண்டு புத்தகங்களிலும் சேர்த்து 48 ப்ரெலூடுகளும் 48 ஃப்யூகுகளுமாக மொத்தம் 96 இசைப்பகுதிகள்.
ஒவ்வொரு ப்ரெலூடும் அதைத் தொடர்ந்து வரும் ஃப்யூகும் ஒரே ஸ்வரத்தளத்தில் (Key) அமைந்தவை. மேஜர், மைனர் ஆகிய இருவகைகளிலும் உள்ள பன்னிரண்டு ஸ்வரத்தளங்களையும் பாக்ஹ் பயன்படுத்தியிருக்கிறார்.
இரண்டு புத்தகங்களையும் முழுமையாகக் கேட்பதற்கு சுமார் நான்கிலிருந்து ஐந்தரை மணி நேரம் ஆகும்.
இவை அனைத்தும் தனி விசைப்பலகை இசைக்கருவிக்காக எழுதப்பட்டவை. பாக்ஹின் காலத்தில் ஹார்ப்சிகார்ட், கிளாவிகார்ட் போன்ற கருவிகள் பயன்பாட்டில் இருந்தன. இன்று இவற்றை ஒரு பியானோ கலைஞர் தனியாக வாசிப்பது மிகவும் வழக்கமானது.
மேற்கத்திய செவ்வியல் இசைக்குப் புதிய ரசிகராக இருப்பவரை எடுத்த எடுப்பிலேயே இந்த ஐந்து மணி நேர இசைத்தொகுப்பைக் கேட்கச் சொன்னால் அவர் மிரண்டுவிடக்கூடும்.
காரணம், அதன் நீளம் மட்டுமல்ல.
பீத்தோவனின் ஐந்தாவது சிம்ஃபனியில் ஆரம்பத்திலேயே நம்மைப் பிடித்து இழுக்கும் ஒரு வலிமையான இசைக்கரு இருக்கிறது. ஹான்ஸ் ஸிம்மரின் இசையில் பிரம்மாண்டமான ஒலியனுபவம் இருக்கிறது. ஆனால் பாக்ஹின் இந்தப் படைப்பில் பல இடங்களில் அத்தகைய உடனடி உணர்ச்சித் தூண்டுதல் இருக்காது. இசை மிகவும் நுட்பமாக நகர்கிறது.
மேலும், ஆர்க்கெஸ்ட்ராவில் வயலினிலிருந்து செல்லோவுக்கும், புல்லாங்குழலிலிருந்து ட்ரம்பெட்டுக்கும் இசை நகரும்போது ஒலிநிறம் மாறுகிறது. இங்கே ஒரே பியானோவில் வாசிக்கப்படும் நிகழ்த்தலில் அத்தகைய கருவி மாற்றங்கள் இல்லை.
ஆனால் ஒரே பியானோவிலேயே பல சுதந்திரமான இசைக்குரல்களை பாக்ஹ் உருவாக்குகிறார்.
ஃப்யூகுகளில் ஒரு இசைக்கரு வெவ்வேறு இசைக்குரல்களில் நுழைகிறது. ஒரு குரல் இன்னொன்றைத் தொடர்கிறது. அவை ஒன்றோடொன்று பின்னிக்கொள்கின்றன. புதிய ரசிகருக்கு இவை எல்லாம் வெறும் ஸ்வரங்களின் தொடர்ச்சியாகவே கேட்கக்கூடும். ஆனால் பழக்கப்பட்ட ரசிகர் அந்த இசைக்குரல்களின் உரையாடலைக் கேட்கிறார்.
இதில்தான் பாக்ஹின் மேதைமை இருக்கிறது.
ஆனால் இந்தத் தொகுப்பின் எல்லா இசைப்பகுதிகளும் சிக்கலானவை அல்ல. சில மிகவும் இனிமையானவை. சில ஆழமான துக்கத்தை உருவாக்கக்கூடியவை. சில நடனத்தின் துள்ளலைக் கொண்டவை.
முதல் புத்தகத்தில் இடம்பெறும் C Major ப்ரெலூட் (BWV 846) சுமார் இரண்டு நிமிடங்களே நீடிக்கிறது. மிகவும் எளிமையான இசை போலத் தோன்றும். ஆனால் அதன் உள்ளே ஓர் அற்புதமான அழகு இருக்கிறது.
முதலில் அந்த இரண்டு நிமிட இசையைக் கேட்கலாம். பிறகு அதைத் தொடர்ந்து வரும் ஃப்யூகைக் கேட்கலாம். ஒரே இசைக்கருவியிலிருந்து பல இசைக்குரல்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதை அப்போது கவனிக்கலாம்.
மேற்கத்திய செவ்வியல் இசையை ரசிக்கத் தொடங்குவதற்கு ஐந்து மணி நேரம் தேவையில்லை. சில சமயங்களில் இரண்டு நிமிடங்களே போதுமானவை.
பீத்தோவனின் இறுதிக்கால ஸ்ட்ரிங் குவார்ட்டெட்கள்
அடுத்து பீத்தோவனின் இறுதிக்கால ஸ்ட்ரிங் குவார்ட்டெட்களை எடுத்துக்கொள்வோம்.
ஸ்ட்ரிங் குவார்ட்டெட் என்பது நான்கு தந்தி இசைக்கருவிகளைக் கொண்ட இசைக்குழு என்று மேலே பார்த்தோம். இரண்டு வயலின்கள், ஒரு வயோலா, ஒரு செல்லோ. நான்கு இசைக்கலைஞர்கள். மூன்று வகையான இசைக்கருவிகள்.
இந்த நான்கு கருவிகளும் வெறுமனே ஒரே மெலடியை வாசிப்பதில்லை. அவை ஒன்றோடொன்று உரையாடுகின்றன. ஒரு வயலின் தொடங்கும் இசைக்கருத்தை மற்றொரு வயலின் தொடரலாம். வயோலா அதற்கு எதிரான இசைத்தொடரை வாசிக்கலாம். செல்லோ அவற்றுக்கிடையில் தனக்கான பாதையில் செல்லலாம்.
பிரபலமான Faust நாடகத்தை எழுதிய கதே, குவார்ட்டெட் இசையை நான்கு அறிவார்ந்த மனிதர்கள் நடத்தும் உரையாடலுடன் ஒப்பிட்டதாக ஒரு புகழ்பெற்ற கருத்து உண்டு.
பீத்தோவன் தனது வாழ்க்கையின் இறுதிக்காலத்தில் எழுதிய ஸ்ட்ரிங் குவார்ட்டெட்கள் மேற்கத்திய செவ்வியல் இசையின் மிக ஆழமான படைப்புகளாகக் கருதப்படுகின்றன.
இவற்றைக் கேட்கும்போது எனக்கு ஓர் இலக்கிய ஒப்பீடு தோன்றியது.
பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார் போன்றவர்களைப் படித்துப் பழகிய ஒருவர் அடுத்த கட்டத்தில் கல்கி, சுஜாதா போன்றவர்களை வாசிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். பிறகு திடீரென்று நகுலனையோ ஜேம்ஸ் ஜாய்ஸையோ படிக்க ஆரம்பிக்கிறார். அவருக்கு என்ன அனுபவம் ஏற்படும்?
பீத்தோவனின் இறுதிக்கால ஸ்ட்ரிங் குவார்ட்டெட்களைத் திடீரென்று புதிதாகக் கேட்கும் ஒருவருக்கு அப்படித்தான் இருக்கும்.
இது இலக்கியத் தரவரிசை அல்ல. ஒரு வாசிப்பனுபவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட இன்னொரு வாசிப்பனுபவத்துக்குள் நுழைவதைப் பற்றிய ஒப்பீடு.
பீத்தோவனின் ஐந்தாவது சிம்ஃபனியைக் கேட்பவருக்கு ஆரம்பத்திலேயே ஒரு வலிமையான இசைக்கரு கிடைக்கிறது. அதை அவர் பிடித்துக்கொண்டு இசையுடன் பயணிக்கலாம். ஏழாவது சிம்ஃபனியின் இரண்டாவது இயக்கத்தில் திரும்பத் திரும்ப வரும் தாள அமைப்பு நம்மை உள்ளே இழுத்துக்கொள்கிறது.
ஆனால் இறுதிக்கால ஸ்ட்ரிங் குவார்ட்டெட்களில் பீத்தோவன் வேறொரு உலகத்தில் இருக்கிறார். அங்கே இசை நம்மை மகிழ்விக்க வேண்டும் என்ற கட்டாயமே இல்லாதது போலத் தோன்றுகிறது. ஒரு மெலடி தொடங்குகிறது. அது நாம் எதிர்பார்க்கும் திசையில் செல்வதில்லை. திடீரென்று இன்னொரு இசைக்கருத்து நுழைகிறது. இசையின் ஓட்டம் தடைப்படுகிறது. ஒரு மௌனம். பிறகு முற்றிலும் எதிர்பாராத திசையில் இசை தொடர்கிறது.
இது ஜேம்ஸ் ஜாய்ஸின் Ulysses நாவலைப் படிப்பது போன்ற அனுபவம். வழக்கமான கதைசொல்லல் அங்கே இல்லை. மொழியே ஓர் அனுபவமாக மாறுகிறது.
நகுலனிடமும் இதைப் பார்க்கலாம். நிகழ்வுகளின் தொடர்ச்சியைவிட மனதின் இயக்கம் முக்கியமாகிறது. வாசகன் பழகியிருக்கும் கதைசொல்லல் முறைகள் கலைக்கப்படுகின்றன.
பீத்தோவனின் இறுதிக்கால குவார்ட்டெட்களிலும் இதேபோன்ற ஒரு சுதந்திரத்தை உணர முடிகிறது.
ஆனால் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு. இவை கட்டமைப்பற்ற இசை அல்ல. மாறாக, மிகவும் சிக்கலான, ஆழமாகச் சிந்தித்து உருவாக்கப்பட்ட இசைக் கட்டமைப்புகள்.
பீத்தோவன் இந்தப் படைப்புகளை இயற்றியபோது ஏறக்குறைய முழுமையாகச் செவித்திறனை இழந்திருந்தார். வெளியில் ஒலிக்கும் இசையைக் கேட்க முடியாத நிலையில், அவருடைய மனதுக்குள் உருவாகும் இசையுலகம் வேறொரு உச்சத்தை எட்டியிருந்தது.
இந்த இசையைக் கேட்டபோது எனக்கு ஏற்பட்ட உணர்வு குழப்பம் அல்ல.
ஆழம்.
அந்த ஆழத்தை உணர முடிந்தது. ஆனால் அதன் உள்ளே முழுமையாக நுழைய முடியவில்லை.
இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.
ஜேம்ஸ் ஜாய்ஸைப் படிக்கும்போது சில சமயங்களில் மொழி நமக்குத் தடையாக இருக்கிறது. ஆனால் நகுலனைப் படிக்கும்போது மொழி புரிந்தாலும், அந்த எழுத்தின் ஆழத்துக்குள் உடனடியாகச் சென்றுவிட முடிவதில்லை.
பீத்தோவனின் இறுதிக்கால குவார்ட்டெட்களிலும் அப்படித்தான்.
நான்கு இசைக்கருவிகள். ஆர்க்கெஸ்ட்ராவின் பிரம்மாண்டம் இல்லை. ஆனால் அந்த நான்கு கருவிகளுக்குள் அவர் உருவாக்கும் இசையுலகம் அளவற்றதாகத் தோன்றுகிறது.
பீத்தோவனின் ஆரம்பகால இசையில் பல இடங்களில் அவர் நம்முடன் பேசுவதுபோல் இருக்கும். இறுதிக்கால குவார்ட்டெட்களில் சில தருணங்களில் அவர் தனக்குத்தானே பேசிக்கொள்வதை நாம் ஒட்டுக்கேட்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
அதனால்தான் இந்த இசை உடனடியாக நம்மை அரவணைத்துக்கொள்வதில்லை. நம்மிடமிருந்து பொறுமையையும் ஆழ்ந்த கவனத்தையும் கோருகிறது.
ஆனால் இந்த இறுதிக்கால குவார்ட்டெட்களில் எல்லாமே சிக்கலானவை அல்ல. அவற்றுக்குள்ளேயே மிக எளிமையான, மனதை உருக்கும் மெலடிகளும் இருக்கின்றன.
குறிப்பாக, பீத்தோவனின் பதினைந்தாவது ஸ்ட்ரிங் குவார்ட்டெட் (String Quartet No. 15 in A Minor, Op. 132) என்ற படைப்பின் மூன்றாவது இயக்கமான Heiliger Dankgesang.
நோயிலிருந்து மீண்ட ஒருவர் இறைவனுக்கு நன்றி செலுத்துவதாக அமைந்த இசை அது. மிக மெதுவாக நகரும் அந்த இசையில் ஒரு பிரார்த்தனையின் அமைதியையும் ஆழத்தையும் உணர முடியும்.
இங்கே நாம் இன்னொரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். மேற்கத்திய செவ்வியல் இசையின் எல்லா மகத்தான படைப்புகளும் முதல் முறை கேட்கும்போதே நம்மை வசீகரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லாதவையாக இருக்கின்றன.
ஒரு நாவலை இரண்டாவது முறை படிக்கும்போது அதன் புதிய பரிமாணங்கள் தெரியவருவது போல, ஒரு குவார்ட்டெட்டை ஐந்தாவது முறையாகக் கேட்கும்போது அதுவரை நம் காதுகளுக்குப் புலப்படாத இசைக்குரல்களின் உரையாடல் கேட்கத் தொடங்கலாம்.
ஒரு இசையை முதல்முறை கேட்கும்போது அதன் ஆழத்தை உணர முடிகிறது; ஆனால் அதன் உள்ளே நுழைய முடியவில்லை என்றால், அந்த இசையை நிராகரிக்க வேண்டியதில்லை.
மீண்டும் கேட்கலாம்.
ஒருநாள் அது நமக்குத் திறக்கலாம்.
இதனால்தான் இந்தத் தொடரை பாக்ஹின் ஐந்து மணி நேர இசைத்தொகுப்பிலிருந்தோ, பீத்தோவனின் இறுதிக்கால குவார்ட்டெட்களிலிருந்தோ தொடங்கவில்லை.
முதலில் இசை நம்மை ஈர்க்கட்டும். நம்மை நெகிழச் செய்யட்டும். துக்கத்தில் ஆழ்த்தட்டும். மகிழ்ச்சியடையச் செய்யட்டும். வியப்பில் நிறுத்தட்டும்.
அதற்குப் பிறகு அதன் ஆழத்துக்குள் செல்லலாம்.
அதற்கு நமக்கு ஒரு வாழ்நாள் முழுவதும் இருக்கிறது.