விபரீத ராஜயோகம் – இன்று முதல்

என் நண்பர் ஒருவர் ஜோதிட மேதை. அவரிடம் நான் கேட்டேன், என் வரம் என்ன? சாபம் என்ன?

ரிஷபத்தில் பிறப்பதே வரம்தான் என்றார். எனக்கே என் வாழ்க்கை வரம் என்று கணந்தோறும் தோன்றுவதால் அதில் எனக்கு ஒன்றும் ஆச்சரியம் ஏற்படவில்லை.

சரி, சாபம் என்ன என்றேன்.

Empathy என்றார். புரியும்படி சொல்லுங்கள் என்றேன். உங்களிடமிருக்கும் தயை, கருணையுள்ளம் என்றார். அது சாபம் அல்லவே, அதுவும் வரம்தானே என்று நினைத்துக்கொண்டேன். சொல்லவில்லை.

பிறகு சொன்னார், நவம்பர் இருபத்தேழிலிருந்து உங்களுக்கு அதிர்ஷ்டம் பிய்த்துக்கொண்டு அடிக்கப் போகிறது. விபரீத ராஜ யோகம். அப்படி நடக்கவில்லையென்றால், நான் என் தொழிலையே விட்டு விடுகிறேன்.

”ஆ, பெருமாள் முருகனைப் போலவா?” என்றேன்.

நாக்கால் கௌளி ஒலி எழுப்பியவர், ”அதெல்லாம் சும்மா, இது அதைவிட பெருசு” என்றார்.

இன்று மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். நாளை கார்வான் நிகழ்ச்சியில் பேச இருந்தேன். (ஆமாம், இருந்தேன்!) காலையில் எழுந்ததும் அவந்திகா ”காதிலிருந்து நீர் வருகிறது” என்றாள். இது ஏற்கனவே தீர்க்கப்பட்ட பிரச்சினை. காது, மூக்கு, தொண்டை, தலை போன்ற பகுதிகளின் நோய்மையைத் தீர்ப்பதில் நிபுணர் டாக்டர் வெங்கட் கார்த்திகேயன். என் நண்பர். என் வாசகர். மருத்துவர்களிடம் அவ்வளவாகப் பார்க்க முடியாத ஒரு குணத்தைக் கொண்டவர். அதாவது, எப்போதும் சிரிப்பு. எப்போதும் இனிமையான பேச்சு. நம் சித்த மருத்துவர் பாஸ்கரும் மருந்துகள் கொடுத்திருந்தார். இப்போது மீண்டும் காதிலிருந்து நீர். சரி, மீண்டும் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டியதுதான் என்றேன்.

”செய்யலாம், ஆனால் இப்போது எனக்கு ஒரு சந்தேகம். தலைக்குள் ஏதாவது பிரச்சினையா என்று சோதிக்க வேண்டும்” என்றாள் அவந்திகா.

செய்து விடுவோம், நான் திங்கள் கிழமை திரும்பியதும் பார்க்கலாம் என்றேன்.

சனி, ஞாயிறு நான் என்ன செய்வேன், பயணத்தை ரத்து செய்து விடு என்றாள்.

மறுக்க முடியாது. காதிலிருந்து நீர் வழிந்தால் சரி செய்ய மருத்துவர் உண்டு. நம்பி வந்த பெண்ணின் கண்ணிலிருந்து நீர் வழிந்தால் அது பெண் பாவம். அதனால் கார்வான் நண்பர்களுக்கு இப்படி ஒரு கடிதம் எழுதினேன். Respected friends, As my wife is suffering from fever, sorry, some sickness, I request you to kindly permit me not to attend the event, my sincere apologies.

இதுபோல் ”வருகிறேன்” என்று சொல்லி விட்டு டிமிக்கி கொடுப்பது இதுவே முதல் முறை என்பதால் எனக்குக் குற்ற உணர்ச்சி தாங்க முடியவில்லை. ஆனாலும் ஒன்றும் செய்ய இயலாது. ஒருத்தருக்குத் தன் தலை மேலேயே சந்தேகம் ஏற்பட்டு விட்ட பிறகு அதை விட முக்கியமானது எதுவுமில்லை.

ஜோதிட நண்பருக்கு ஃபோன் போட்டேன். அவர் எடுக்கவில்லை. இதோடு காலையிலிருந்து பதினைந்து முறை அழைத்திருப்பேன். பதிலே இல்லை.

பின்குறிப்பு: ஃபேஸ்புக்கில் என் போட்டியாளராக அறிவிக்கப்பட்டு அமளிதுமளிப்பட்டுக்கொண்டிருக்கும் எழுத்தாளர் நண்பரும் ரிஷபம்தான். என் மொழிபெயர்ப்பாளர் யசோதா குப்புஸ்வாமியும் ரிஷபம்தான். அவர்கள் இருவருக்கும் விபரீத ராஜயோகம் எப்படி வேலை செய்கிறது என்று விசாரிக்க வேண்டும்.

***