சாருவின் கவிதைகளைப் படிக்கிறீர்களா?

அன்புள்ள சாரு,
பணிச்சுமையால் வழக்கமாகச் சந்திக்கும் சில நண்பர்களை சில மாதங்களாகப் பார்க்கவில்லை.
ஆனால், எப்போதாவது அவர்கள் போனில் அழைக்கும்போது, உங்கள் கவிதைகளைப் பற்றி “சாருவின் கவிதைகளை படிக்கிறீர்களா?” என்கிறார்கள்.  ஒன்றிரண்டைத் தவிர எல்லாவற்றையும் படித்திருப்பேன்.  சில கவிதைகளைப் படித்துவிட்டு (எசக்) கவிதைகளை எழுதி பார்ப்பதுண்டு.
ஆனால், என்னிடம் ஒரு தடுப்பாற்றல் இருக்கிறது.  நான் எல்லா கவிதைகளிலும் உட்புகுவதில்லை.  அதன் வாதையை, அல்லது இன்பத்தை வேண்டாம் என மறுத்து வெறும் வார்த்தைகளாக மட்டும் கடந்துவிடுவேன். அது லெளகீக வாழ்வில் சமநிலையைப் பேண உதவுகிறது.

இன்றும் ஒரு நண்பர் அழைத்து இதே கேள்வியை கேட்டார். நான் மாடர்ன் ஆர்ட், கிளாசிக்கல் மியுசிக் போன்றவற்றுடன் பரிச்சயம் கொள்வதில்லை.  அவை, ஒரு மனிதன் மேலோட்டமாக வாழ்வதையும், நுனிப்புற்கள் மேய்வதையும் கேலி செய்யக்கூடியவை.  அதனால், எதேனும் ஒரு விஷயம் என்னை கொஞ்சம் ஆழத்திற்கு வருகிறாயா என்று அழைத்தாலே அங்கிருந்து ஓடிவிடுவேன்.  இதைத்தான், கவிதைகளும் செய்கின்றன.
இருந்தும் கவிதைகள் குறித்து இன்று அழைத்த நண்பர்களிடம் விளக்க முற்பட்டேன்.  குறிப்பாக மற்ற கலைவடிவங்களில் இல்லாத ஒரு அந்தரங்கத்தன்மை கவிதைகளுக்கு உண்டு என்பதை, பொதுவில் பகிரபட்டாலும் கவிதை அது வாசகனிடம் அவனுடைய அந்தரங்கத்தைதான் பேசுகிறது என்று சொன்னேன்.
அத்தனை பர்சனல் என்றால் எழுதி தனிப்பட்டதாக வைத்துக்கொள்வதுதானே, ஏன் பொதுவெளியில் வெளியிடுகிறீர்கள் என்றார்.  கவிஞன், போர்னோ வீடியோ எடுத்து வெளியிடுபவன் என்று நான் சொன்னது போல ஆகிவிட்டது.

இந்தப் பிரபஞ்சத்திடம் பேச முற்படும் ஒரு மனம், அந்தத் தருணத்தை கவிதையாக ஆக்குகிறது.  இந்தப் பேச்சு பிரபஞ்சத்தின் அஃறினைகள், உயிர்கள், பிறழ்ந்த மனங்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கியது.  அதில் ஒருவருக்கு அல்லது பலருக்குப் புரியவில்லை என்பதால் அது அர்த்தமற்றதாகி விடுமா?  ஒருவருக்கு அல்லது பலருக்கு அது முக்கியமற்றது என்பதால் கவிஞனுக்கு முக்கியமற்றதா என்றெல்லாம் எண்ணினேன்.

உண்மையில், கவிஞனை இந்த உலகம் ஒவ்வொரு நொடியிலும் பாதிக்கிறது.  கவிஞன் எதிர்வினை செய்கிறான்.  மற்றவர்கள் பிரபஞ்சத்தின் பாதிப்பையும் அலட்சியத்துடன் நிராகரிப்பது போல கவிதையையும் நிராகரிக்கிறார்கள் என்று சமாதானமும் செய்து கொண்டேன்.

இவற்றை ஒரு கோர்வையாக சிந்தித்துப் பார்த்தால்
கவிதைகளை அனுபவிப்பது ஒரு மாடர்ன் ஆர்ட்டை ரசிப்பது போன்றது. கதை, சிறுகதையைப்போல் அதற்கான “பொது, இயல்பான வடிவம்” இல்லை.

எழுத்தாளர் ஏன் கவிதை எழுதுகிறார் என்ற கேள்விக்கு ஒரே பதில்: “அவனால் எழுதாமல் இருக்க முடியவில்லை.”

வாசகர் “இது நல்ல கவிதையா?”, “பொருள் என்ன?”, “யாருக்காக?” போன்ற கேள்விகளால் அதை உடனடியாக மதிப்பீடு செய்கிறார்கள். அவர்களுக்கு பதில் இல்லாமல் போவதால் கவிதைகளை நிராகரிக்கிறார்கள்; கவிதையின் தரத்தைத் தீர்மானிக்க விரும்புகிறார்கள். அது, வாசகர்கள் கவிதையில் ஆழமாய் லயிப்பதா?, மொழியின் வளமையா?, வடிவத்தின் நேர்த்தியா?, உணர்ச்சிப் பூர்வமான தருணத்தை கடத்துவதா?, தத்துவம், நகைச்சுவை, காதல், கோபம் ஆகிய உணர்ச்சிகளின் வெளிப்பாடா?
கவிதை கவிதைதான் என ஒவ்வொரு நொடியிலும்,  அனைவருக்கும் நிரூபணம் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. சற்றாவது ஆழம் தேடும் சில மனங்கள் மட்டும் கவிதையின் தன்மையை உணர முடியும்.
உணர்வுகள் ஆதியிலிருந்து இருந்தாலும், ஒரு மனம் உணர்வுகளை புதிதாகவே அனுபவிக்கிறது.  மகிழ்கிறது, துக்கிக்கிறது, பரவசம் கொள்கிறது.
ஏற்கனவே பலமுறை, பலவிதமாக சொல்லப்பட்ட உணர்வாகவே இருந்தாலும், மனதில் அந்தக் கணத்தில் அது உண்மையாகவே நடைபெறுகிறது — நான் ஒரு புத்தம் புதிய படைப்பு என்று சொல்கிறது அது, அதுவே கவிதையின் சத்தியம்.

ஆனால், கவிதைகளைக் குறித்து இப்படியெல்லாம் விளக்கிப் பேசிக்கொண்டிருப்பதை விட அந்த நேரத்தில் ஒரு கவிதை எழுத முடிந்தால் – கவிதை எழுதுவதே நல்லது.  விளக்கங்களால் எவரும் புதிதாக கவிதைகளை நாடப் போவதில்லை.
இதையெல்லாம் எதானாலோ உங்களிடம் பகிர்ந்து கொள்ளவேண்டும் என தோன்றியது
நன்றி சாரு.
– செல்வகுமார்