ஒவ்வொரு கவிதையும்
கடைசி கவிதை என்கிறேன்
இன்றுதான் வாக்களித்தேன்
இதோ வந்திருக்கிறது ஒரு மரணத்தின் கவிதை
மரணம் கூட கவிதையாக மாறுவது
விபரீத ஆட்டம்தான்
அவன் வயது இருபது
காதல், கல்யாணம் எல்லாம் முடிந்தது
ஒரு வருடத்தில் விலகி விட்டாள் மனையாள்
இன்று அவனிடமிருந்து வந்த கடிதத்தில்
மரணத்தின் மணம்
‘போதையில் செய்த பிழை
பிழை அல்ல
மரண தண்டனைக்குரிய குற்றம்
மன்னித்து விடு என்று கெஞ்சினேன்
குடியையே விட்டு விடுகிறேன்
என்று சத்தியமளித்தேன்
எதுவும் நடக்கவில்லை
ஒரு மாதம் பார்த்தேன்
இன்று மன அழுத்தத்துக்கான
மாத்திரைகள் உட்கொண்டு
நிறைய விஸ்கியும் குடித்தேன்
நினைவு மங்குகிறது
விடை பெறுவதற்குள்
உங்களுக்கு இதை அனுப்ப வேண்டும்
எவருக்கும் தீங்கு செய்ததில்லை
இவளுக்குப் பாதகம் புரிந்து விட்டேன்
குடியில் செய்தேன் என்பது மன்னிப்பு அல்ல
மரணம் ஒன்றே தண்டனை
நாய் எலும்பைத் தின்பது போல்
குற்ற உணர்வு தின்கிறது
மரணம் ஒன்றே வழி
விடை பெறுகிறேன்.’